Friday, 8 August 2025

வசந்ததிற்கான காத்திருப்பு..

முற்றத்தில் இருந்த பறவைகள்

ஒவ்வொன்றாய்ப் பறந்து செல்வது போல

உடன் நடந்த தோழர்கள்

ஒவ்வொருவராய் மறைகிறார்கள்

அவர்களின் பெயர்கள்

இலையுதிர்காலத்தின் கடைசி இலைகளாய்

உதிர்கின்றன

-

நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்

என் நாவில் உறைந்த பனிக்கட்டியாய்

உருகாமல் நிற்கின்றன

அவர்களின் கண்களில் கண்ட

தாயகத்தின் வெயில்

இன்னும் என் தோலில் எரிகிறது

-

அவர்களது குரல்கள்

காற்றில் தொலைந்த பாடல்கள் அல்ல

என் செவிகளில் வாழும் ஆறு

மரணத்திற்கும் நினைவிற்கும் இடையே

இன்னமும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன

-

அவர்களின் கனவுகள்

விதைகளாய் மண்ணில் விழுந்தன

இன்னமும் முளைக்காமல்

மழைக்காகக் காத்திருக்கின்றன

எப்போது அந்த மழை வரும் ?

-

இந்த மேற்கின் குளிர்ந்த நாட்களில்

நான் ஒரு நிழல்

என் நிழலுக்கும் நிழல் தேடுகிறேன்

எங்கோ தொலைந்த தாயகத்தை நோக்கி

பனியில் நடக்கும் என் அடிச்சுவடுகள்

-

நான் யார்

இறந்தோர் நினைவுகளின் காவலனா

அல்லது வாழ்வோரது மறதியின் சாட்சியா

-

அவர்கள் இறக்கவில்லை

என்னுள் வாழ்கிறார்கள்

ஒவ்வொரு மூச்சிலும்

ஒவ்வொரு துடிப்பிலும்

நான் அவர்களின் தொடர்ச்சி

-

ஆனால் இந்த பனித்தீவில்

என் வேர்களை எங்கே ஊன்றுவது?

காற்றில் வேர் பெயர்ந்த மரம் போல

நான் எதற்கோ காத்திருக்கிறேன்

-

ஒருவேளை மரணம்

ஒரு திரும்புதலாக இருக்கலாம்

அவர்கள் சென்ற பாதையில்

நானும் நடக்கலாம்

அவர்களின் பாடல்களைப் பாடலாம்

-

இந்த குளிரில் கூட

என்னுள் எரியுமொரு நெருப்பு உண்டு

அது அவர்களின் கனவுகளின் சுடர்

அணைய மறுக்கிறது

-

நான் வாழ்வேன்

நினைவுக்கும் மறதிக்கும் இடையே

இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையே

நான் வாழ்வேன்

அவர்களுக்காகவும் வாழ்வேன்

ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்

-

விடைபெற்றுச் செல்லுமென் தோழர்களே..

உங்கள் மரணம் முடிவல்ல

எங்கோ எப்போதோ ஒரு வசந்தத்தில்

நாம் மீண்டும் சந்திக்கும் வரை

அது ஒரு காத்திருப்பு..

No comments:

Post a Comment