Saturday 17 May 2014

புதுவை இரத்தினதுரை - எங்கள் கவிஞன்

பூவரசம் வேலிகளைப்
புலுணிகளைப் பற்றியெல்லாம்
நாவரசன் ஒருவன்
நம்மிடையே பாடி வந்தான்

கதியாற் கால்மரத்தைக்
கல்மதில்கள் தின்றது போல்
அதிலிருந்த பறவையெல்லாம்
அலமலந்து எங்கேயோ
விதியை நொந்தபடி
வேறுதிசை சென்றது போல்
ஈரலிப்பைப் பேணி நின்ற
எத்தனையோ குளங்களினை
கோரமாய்க் கட்டடங்கள்
குதறிவிட்டு எழுந்தது போல்

எம் வளத்தைப் பாடி நின்ற
எம்முடைய பாடகனின்
உம்மென்ற குரல் கூட
உலகிற்குக் கேட்காமல்
இல்லாத கடவுளரின்
இருப்பைப் போலவன் நிலையை
பொல்லாத காலத்தோர்
புதைத்தெங்கோ வைத்து விட்டார்

கறுப்பன் நெல்லினத்தைக்
கலப்பினங்கள் வந்திறங்கி
அறுத்தழித்து மெல்ல மெல்ல
ஆக்கிரமித்திருப்பது போல்

இயற்கையுரச் செழிப்புதனை
இன்று வந்த செயற்கையுரம்
பயன்பாடு அழகென்ற
பகட்டாற் தள்ளி விட்டு
விளைநிலத்தை, நல்
விதை முளைக்காத் தரிசாக்கி
களைநிலமாய் மாற்றியெங்கள்
கனவுகளை அழித்தது போல்

எமக்குவக்கும் மண்மொழியில்
எம்முடைய கனவுகளை
அமைத்தெமக்காய் ஆக்கி வைத்த
அற்புதப் பாடகனை
பருவப்பிழை பொழிந்த
பாழான சூறையொன்று
தெருவில் பலர் பார்க்கத்
தேடியள்ளி இன்று வரை
உருவமே தெரியாமல்
உள்ளிருட்டில் எங்கேயோ
கருகி உயிர் கசிகின்ற
கம்பிகளுள் வைத்துளது?

கண்ணாலே பாடகனைக்
காண்கின்ற வரமெமக்கு
எந்நாளில் வாய்த்திடுமோ?
என் செய்வோம்? அது வரையில்
முன்னாலே இருக்கின்ற
முற்றத்தில் வளவுகளில்
அவன் நினைவில் மரமொன்றை
அன்போடு நட்டிடுங்கள்
ஒவ்வொரு கெட்டும்
ஒவ்வொரு கவியாக வந்து
பச்சைப் பசேலென்ற
பசுங்குளிரில் அவன் பெயரை
இச்செகமெங்கும் வீசி எழுதட்டும்
அவன் வாழ்வான்..

1 comment:

  1. சிறந்த கவிஞரை அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete