Saturday 17 May 2014

அழுவதற்கேனும் அனுமதியுங்கள்..

ஆண்டுகளாய் நாமின்னும்
அடக்கியுள்ளே வைத்துள்ள
மீண்டெழுந்து விடமுடியாச் சோகத்தை
தொண்டைவரை
குமுறி உள்ளேயே குமைந்தெரிந்து கிடக்கின்ற
வார்த்தைகளுள் அடக்கேலா வலியை
வாய் விட்டு
கத்தி அழுதெங்கள் கண்ணீரைப் பூவாகச்
செத்தழிந்து எம் சனங்கள்
சிதைவடைந்த மண்மீது
பெய்து எம் மனசின்
பெரு நெருப்பைத் தணிப்பதற்கு
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்

நிழற்படங்கள் இல்லையிங்கே
நினைத்தவுடன் பார்ப்பதற்கு
நினைவிடமும் இல்லையெங்கள்
நெஞ்சிறக்கி வைப்பதற்கு
கண்முன்னே அவர் வீழந்த
கதை சுமக்கும் நிலமொன்றே
இன்னும் கிடக்கிறது ஏதிலியாய்
அதன் மேலே
ஒரே ஓர் மெழுகுவர்த்தி
ஊன்றி, ஊர் கூடி
உள்நெஞ்சக் கதையெல்லாம்
ஊற்றி, மனம் தணிக்க
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்

வயிற்றிற் சுமந்தபடி
வாய்க்கால்கள் ஒவ்வொன்றாய்
உயிரைக் கை பிடித்தபடி ஓடி
பெற்றெடுத்து
ஆசையாய்ப் பெயரிட்டு
அவர்கள் போய் விட்டார்கள்
என்ன பெயர் வைத்திருப்பார்
எமக்கென்று தினம் கேட்டுக்
குடைகின்ற இந்தக்
குழந்தைகட்கு உம் பெற்றொர்
கடைசியாய் உம்மோடு வாழ்ந்ததென
வாய்க்காலை
கைகாட்டி விடலன்றிக் காத்திரமாய் எம்மாலே
என்ன தான் பதில் சொல்ல இயலும்?

அவரார்வம்
மண்ணைப் பிளந்தேனும்
மறைந்துள்ள தம் பெயரைக்
கண்ணிற் கண்டுவிடும்
காட்டாறாய் இருக்கிறது
கரையை அது உடைக்கும்
காலமிப்போ உம் கையில்,
திரைபோட்டுக் கிடக்கின்ற
தீராத வெஞ்சினத்தின்
வேகத்தைக் குறைப்பதற்கு
வேறுவழியில்லை அதால்
நாமழிந்து போன மண்ணில்
நடந்துருண்டு அழுவதற்கு
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்..

1 comment:

  1. அழுவதற்கேனும் அனுமதியுங்களா
    அதற்குமுன்
    ஒண்டுக்கோ இரண்டுக்கோ போக
    அனுமதியுங்களேன் என
    ஈழத்தமிழர் நிலை பாருங்கள்

    ReplyDelete