Friday 3 August 2012

அப்படியே போ..

விம்மி அழுதென்னை
வீழ்த்தாதே, மூக்கிழுத்து
கம்மிய குரல் செருமிக்
கதைக்காதே, உனைவிட்டு
எப்படியென் வாழ்க்கையென
ஏதுமினிச் சொல்லாதே
முப்பொழுதும் உன் நினைவே
மூச்சென்று முனகாதே

எப்பொழுதோ எம் வழிகள்
எழுதப் பட்டாயிற்று
இப்பொழுதே எம் இருப்பு
எமக்குத் தெரிகிறது
தப்பான காலத்தின்
தாள் திறந்து இவ்வளவும்
எப்படி நாம் வாழ்ந்திருந்தோம்
எனுமுண்மை புரிகிறது

போகப் போவதென்று
புறப்பட்ட பிறகென்ன
தாக நினைவும் தவிப்பும்?
தள்ளாடும்
மோக நினைவை
முழுதும் எரித்து விடு
ஆக வேண்டியதில்
ஆயத்தப் படுத்துன்னை

சிவப்பு நரம்பூறிச்
சிந்தும் விழிகளினால்
தவிப்பொழுகப் பார்த்தென்னைத்
தள்ளாட வைக்காதே
நெஞ்சுயர்த்திப் பெருமூச்சை
நெரிப்பது போல் விட்டெந்தன்
கொஞ்ச உறுதியையும்
குலைக்காதே, சாவீட்டுக்

காரியத்தை முடித்த
காடாற்றுப் பூசாரி
வாரிச் சுருட்டி
வந்த இடம் பார்க்காமல்
நேரே பார்த்தபடி
நிம்மதியாய்ச் செல்வது போல்
அப்படியே போ
அணுவளவும் திரும்பாதே
இப்படியே என் பாட்டில்
ஏதோ நான் போகின்றேன்..

No comments:

Post a Comment