என் சிரிப்பு ஓர் திரையிட்ட பொய்யுரை,
பூத்துக்கிடக்கும் ரோஜாவின்
முட்களை மறைக்கும்
செயற்கை வெளிச்சம்
-
நீங்கள் கேட்கும் குளிர்ச்சியான
இசையில் கரைந்துவிட்ட
என் கண்ணீர் துளிகளை
நீங்கள் அறியமாட்டீர்கள்
-
இந்த நான்கு சுவருக்குள்
மறைந்திருக்கும் போர்க்களத்தில்
என் சொந்தப் பேய்களுடன்
தினமும் போராடுகிறேன்
-
என் கரங்களில்
பதிந்திருக்கும் காயங்களின் முன்
கல்வாரியின் சிலுவைகள்
வெறும் நாடகக் கம்பங்கள்
-
இந்த நகங்களின் கீழ்
நொருங்குண்ட இதயத்தின் குருதி
இந்தத் தோலின் கீழ்
அழுத்தப்பட்ட அழுகைகள்
-
நான் செதுக்கித் தீர்த்த
என் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள்
ஆனால் செதுக்கப்பட்ட
சதையையும் எலும்பையும்
நீங்கள் பார்க்கவில்லை
-
ஒவ்வொரு காலையும்
உடைந்த கண்ணாடிகளை
சிரிக்கும் முகமாக
ஒட்டிவைத்துக்கொண்டிருக்கிறேன்
-
இந்தச் சிரிப்பு
ஒரு முகமூடி மட்டுமே
அதன் பின்னால் மறைந்திருக்கும்
உண்மையான நான்
ஆழ்கடலில் மூழ்குவதை
கத்திச் சொல்ல முயலும்
ஓர் ஊமை..