திங்கள், 14 ஜூலை, 2025

வீரச்சாவு..

ஆனாலும் சாகும் வரை

சண்டையிட்டார்கள்

கடைசித் தோட்டா தீரும் வரை,

-

மரணம் என்பது

பார்த்துப் பார்த்துப் பழகிப்போன

பழைய நண்பன்

எப்போதும் விலகாமல்

பக்கத்தில் நிழலாக வந்திருக்கிறான்

-

அதனாற் தான்

அவர்களின் மரணம் என்பது

அவமானத்தின் மரணமாக இல்லாமல்

வீர மரணமாக இருந்தது

-

கைப்பிடியளவு காற்று

அவிழ்ந்து கரையும் வரை

கைவிடாத கொள்கையை

பக்கத்தில் இருந்து பார்த்த மரணம்

விடைபெறும் அவர் கதையை

வெறும் சாவாக விடாமல்

வீரச்சாவு என்றழைத்தது

-

பாவிகள் நமக்கந்தப்

பாக்கியம் இல்லை

——

சித்தம் கலங்கிக் சிதைந்து

ஆளாளை நோக்கி

அவரவர் அறிவறிந்த

ஒற்று அமைப்புகளின்

பெயர் சொல்லிச் சொல்லி

இற்றுப் போய்ப் புழுத்து

இறப்பதா எமது விதி.. ?

சனி, 12 ஜூலை, 2025

முகிலெனக் கலையும்..

அன்பாகப் பேசிக் கொண்டிருந்த

அந்த உதடுகள்

திடீரென்று கல்லாகிவிட்டன

உறைந்த குளிர்காற்றைப் போல

மௌனம் எங்களுக்கிடையே வந்து அமர்ந்தது

-

நான் ஏனென்று கேட்கவில்லை

அவளும் தான்,

தூரமான, வெறுமையான, அழகான

மௌனம் எம்மிடையே

விண்மீனைப் போல ஒளிர்ந்தது

-

பழகிய இத்தனை ஆண்டுகளும்

மழையைப் போல

என் முகத்தில் வீழ்ந்தன,

ஒவ்வொரு துளியிலும்

காத்திருப்பின் கனமும்

நினைவுகளும்,

இப்போது அவை அனைத்தும்

மேகம் போல கலைந்து செல்கின்றன

அன்பு இவ்வளவு குறுகியதா

மறதி இவ்வளவு நீளமானதா..

-

காதல் என்பது பறவையைப் போன்றது

வந்தபோது தெரியவில்லை

போகிறபோது தெரிகிறது

-

அவளுடைய மௌனம் என்னைச் சுற்றி

பரந்த கடலைப் போல விரிந்தது

அலைகள் இல்லாத கடல்,

வானத்தில் மறைந்த விண்மீன் போல

தூரத்தில் இருப்பதாய்த் தோன்றுகிறது

இன்னும் ஒளிவீசுவதாய் தெரிகிறது

ஆனால் அது எங்குமில்லை

-

இரவின் காற்று எங்கள் வீட்டைச் சுற்றி

தனிமையின் பாடல்களைப் பாடுகிறது

நாம் இல்லாத இடங்களில்

இருந்த அடையாளம்

மௌனம் பேசும் இடமெல்லாம்

நாம் பேசிய வார்த்தைகளின்

எதிரொலி,

-

காதல் மேகம் போன்றது

வரும்போது பூமியை நனைக்கிறது

போகும்போது

வானத்தை வெறுமையாக்குகிறது..

-திரு

சனி, 5 ஜூலை, 2025

கருப்பு..

நான் என் தோலை உரிக்க முடியாது
வரலாற்றை மறக்க முடியாது
பிறப்பை மறுக்க முடியாது

நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் நான் சாம்பலாக மாறவில்லை
விடுதலையின் தீபமாக
எரிந்து கொண்டிருக்கிறேன்

என் உடலில் தாயகத்தின் கனவு துடிக்கிறது
என் நெஞ்சில் ஈழத்தின் மண் வாசம்
என் கண்களில் விடுதலையின் நீலக் கனவு

நான் மூண்டபின் 
வான் நோக்கி எழும்
கந்தகப் புகையின் நிறத்தில்
என் அடையாளம்

நான் சாகும் நேரத்தைத் 
நானே தேர்ந்தெடுத்தேன்
அது எனது பலவீனம் அல்ல
அன்பு, 
எல்லோரும் சுதந்திரமாக
வாழவேண்டுமென எண்ணும்
கனிவு ததும்பும் 
எல்லையற்ற அன்பு 

கருப்பெனும் நெருப்பில்
கனவு நிறைகையில் 
விடுதலைக்கான விதையானேன்
ஒரு நாள்
நிலம் பிளந்து 
முளைக்கலாமென் கனவு
அதுவரையில்
நீரூற்றி நினைதல் 
நின் கடன்..

வியாழன், 3 ஜூலை, 2025

பறவையெனும் ஞானம்..

பறவையின் இறகுகள் 

புவியின் கனவுகளைச் சுமக்கின்றன

அது பறக்கும்போது

வான வெளிகள் அதன் உடலாகின்றன

அமரும்போது

மரங்கள் அதன் குரலில் பேசத் தொடங்குகின்றன

மறையும்போது

ஞாபகங்கள் அதன் இறகுகளைப் பூண்டு 

காற்றில் மிதக்கின்றன.

-

ஒரு பறவைக்குள் உறங்குகிறது கடல்

ஒரு பறவையின் கண்களில் 

ஒளிர்கின்றன நட்சத்திரங்கள்

ஒரு பறவையின் இதயத்தில் துடிக்கிறது காலம்.

-

நான் பறவை அல்ல 

நான் அதன் பறத்தலின் சாட்சி

நான் வானம் அல்ல 

நான் நீலத்தின் பேரழுகை

நான் மரம் அல்ல 

நான் காலத்தின் தசைநார்கள்

நான் நினைவு அல்ல 

நான் மறதியின் கருப்பறை

நானென்பது இவையெல்லாம் பிறந்த 

பிரசவ வலியின் எதிரொலி

பிரபஞ்சத்தின் பெருமூச்சில் கரைந்த துளிகள்..