சனி, 29 ஜூலை, 2023

நித்திய நிலவு..

விடியலின் முதல் ஒளியை 
முத்தமிட்ட மலரிதழில் இருந்து 
மெதுவாய் அவிழ்ந்துருளும்
நீர்த்துளியின் அழகிய காட்சியாய் 
தென்னை இளம்பாளைச் சிரிப்போடு 
உன் முகம் எனக்கின்னும் 
நினைவிருக்கிறது

பழகும் காலத்தில் 
எம்மைத் தாண்டிச் சென்ற 
ஏதோ ஒரு வாசனை  
எதிர்பாராமல் இன்று 
நாசியில் படுகிறபோது 
கடந்த காலம் 
விம்மியபடி விம்பமாய் 
முன்னே எழுகிறது
களத்தில் கேட்ட கானங்களை
புலத்தில் கேட்கிற போது 
காட்டு மணம் அறைமுழுதும்
நிறைவதில்லையா 

அன்றொரு மாலை 
கால் நனைக்கவுமென 
கடற்கரை போயிருந்த போதில் 
குருதிச் சிவப்பாய் 
கடலுள் சூரியன் இறங்கும் கணங்களில் 
கடந்து கொண்டிருந்த படகும் 
பறந்து கொண்டிருந்த பறவையும் 
சூரிய வட்டத்துள் பொருந்திவிட 
உலகின் அந்த அழகிய காட்சியில் 
நாமெம்மை மறந்து 
கைகளை இறுகப் பிணைத்தோம் 

அட்லாண்டிக் கடற்கரையில் 
அப்படி ஒரு காட்சியை  
இன்றைய நாளில் 
காண நேர்ந்த பொழுது 
காற்றில் பிசைந்த கையில் 
என்றோ பிணைத்த கையின் 
கணச்சூடு 

கடலும் மலையும், பாம்பாக
இடையில் நீண்டு கிடந்தாலும்
இங்கிருந்து நான் பார்க்கும்
அதே விண்மீனைத் தான் 
அங்கிருந்து நீயும் காண்கிறாய் 
மனவான் ஒன்று தான் 
அதில் மின்னியபடி 
எண்ணற்ற நினைவுகளும்
அன்பெனும் நித்திய சந்திரனும்..


சனி, 22 ஜூலை, 2023

பிரசவம்

வெப்பக் காற்றுக்கு 
ஈர முத்தம் கொடுத்தபடி 
சாளரத்தால் 
சாரலடிக்கிறது மழை
கவிதையொன்று வர எத்தனிக்கிறது போல
வந்தால் சுகம்
அமுத நிலை வடியும் 
வராவிட்டால் 
அதைவிடச் சுகம் 
அமுத நிலை ஊறும்.. 

நினைவின் துமி..

அரைத்தூக்கத்தில் புரள்கின்ற 
ஆழ்அமைதி இரவில் 
தூரத்தில்  எங்கோ கேட்கின்ற 
ஒற்றைப் பறவையின் குரலுக்கு 
திடுக்குற்றுப் பார்க்கிறது 
மனசு, 

உறவி ஊர்ந்தூர்ந்து 
உண்டான தடமாய் 
மனப்பாறைமேல் 
நினைவுகள் 
ஊர்ந்த தடங்கள் 
இன்னும் அப்படியே  சுவடுகளாய், 

உதட்டைப் பிரிக்காமல் 
வாய் சிரிக்கிறது 
ஏனோ நீரூறி 
கண்கள் துமிக்கிறது..

அளவு..

அளவோடென்பது அன்புக்குமாகும் 
அலை கரையைத் தழுவல் அளவு, 
தாண்டிவிடல்
இழவு, இம்சை, இருக்கேலா வருத்தமென 
இளக்காரமாகும் உன்னிருப்பு 
ஆதலினால்
அளவோடென்பது அன்புக்குமாகும்.. 


வியாழன், 6 ஜூலை, 2023

களிகொள் தேசக் கனவு..

ஒளிவர வழியே இல்லையெனும் 
ஆழ் இருட்டு, ஆயினும் 
நடந்தே தான் ஆகவேண்டும் 

வழிகாட்டிய குயவரி 
பெளவக் கரையில் 
மெளனித்த பிற்பாடு 
அவரவர்க்கு அவரவர் 
அறிந்த முறை

அவர் நம்பும் முறையை 
நம்பாத இவரும்
இவர் நம்பும் முறையை 
நம்பாத அவரும் 
ஆளாகுக்கு எறிய 
கைநிறையக் கெளவை 

அருசமத்தில் இழந்தது 
ஐந்தாறல்ல ஐம்பத்தையாயிரம் 
இத்தனை கொடுத்தும் 
எதுவுமற்றிருக்கும் 
ஒற்றை இனம் உலகில் 
நாம் தான்

கண்முன்னே படைகட்டிக் 
காத்த இனத்திற்கு 
கைக்குண்டெறியவே ஆளில்லை 
எப்படித் தான் ஆயிற்று இப்படி? 

ஞாட்பில் நடுகல்லாய் 
தம் வாழ்வை நட்டுச் சென்ற
ஆன்மாக்களின் அமைதிக்காயினும் 
ஆழிருட்டில் இருந்து 
நாம் மீண்டே  தான் ஆகவேண்டும்

விழுப்புண்ணை வரித்த 
வாழ்வின் எவ்வத்தை 
பரிகசிக்கும் காலமிது 
எப்படித் தடை வரினும் இடியாதே 
நட, நடக்கச் சொல்லு 
மேலும் நட 
ஒரு தருணத்தில் 

விடுதலையின் கலங்கரை விளக்கம் 
கண்ணுக்குத் தென்படும், 
அப்போது  
விலங்குகள் தாமே விலக 
நளி தளி பொழியும்
தெள்விளி கரைந்து 
தெருவெலாம் வழியும்

களிகொள் தேசக் கனவு
கை வசமாகும் 
கனவு மெய்ப்படும்..