எவருமே காப்பாற்ற முடியா
கையறு நிலையின் கைகள்
இறுதி வினாடியில் அதிசயமாய்
எவரேனும் வரக்கூடுமென்ற
கடைசி நப்பாசையில்
வானை நோக்கி அசைகிறது
நீரில் மூழ்குகின்ற ஒருவன்
தன்னைக் காப்பாற்ற வேண்டி
எழுப்பும் சைகையில் தெரிகின்ற
ஒற்றைக் கையின்
அதே அவலக் காட்சிதான் இங்கும்
கந்தகப் புகையின் வீச்சத்தில்
அபலக் குரல் எழுப்பியவாறு
கருகி வீழ்ந்த அந்த
கைகளின் வடிவம் தான்
இனப்படுகொலையின் சாட்சியாய்
எழுதப் பட்டிருந்தது
ஒவ்வொரு விரல் வழியாகவும்
ஓலம் எழுப்பி
கண்சிதறக் கதறிய
கைகளில் தெரிந்த அந்த முகங்களை
சிதைத்து எறிய முடிகிற
மனத்தின் குரூரத்தை எண்ணிப் பார்க்கிறேன்
வருடத்தின் நாளொன்றில் மட்டும்
வருவார்களெனக் காத்திருக்கும்
கல்லாய் இறுகிய நினைவுகளின் காட்சி
மண்ணாக்கப்பட்ட பின் தான்
ஒவ்வொரு மனதிலும் உறுதியாய்
ஊன்றப்படுகிறது
பூசலாரை இப்போது தான்
புரிய முடிகிறது
மனசின் அகக்காட்சி தான்
மண்ணின் யுகக்காட்சி
பூசலார் மனதில் கடவுளைக்கட்டியது போலத்தான் நாமும் கும்மிட வேண்டும்!
ReplyDeleteஉண்மை தான், நன்றி
ReplyDelete