வியாழன், 24 மே, 2018

எழும் காலம்..

தொடர் அடிகளால்
மூச்சுத் திணறிப் போயிருக்கும்
மக்களை நோக்கி
இதில் ஏதாவதொரு விரலை தொடுமாறு
கையை நீட்டியது அந்த மிருகம்

சென்றமுறைத் தெரிவுதான்
இன்றுவரையும் எம்மை இம்சை
செய்கின்றது என்றெண்ணி
அதற்கு முதல்முறை தெரிந்த விரலை
தொடுவதற்கு எண்ணிய போது
அதனைத் தெரிந்த ஐந்தாண்டுகளும்
பட்ட பாடு
அடிவயிற்றை முறுக்கி பிழிகிறது.

ஆயின் எந்த விரலைத் தொடுவது..?

எதைத் தொடினும்
விரல்கள் பிணைக்கப்பட்டிருக்கும்
கரம் யாருடையது?
எந்த மூளையின் உத்தரவுக்கு
அந்தக் கரம் இயங்கும்?

எமக்காய் இயங்கா மூளையின் கரங்கள்
எமக்காக இராது என்கின்ற போது
இதனுள் ஒன்றை எப்படித் தேர்வது?

இதற்குள் மட்டுமே உங்கள் தேர்வென
மிருகம் மூர்க்கமாய்
மிரட்டலாம், கொல்லலாம்

இவ்வளவு நாட்களாய்
எம்முடன் இருந்தாரா
என்றறியா எவரோ திடீரென
அந்த விரல்களை முறித்து
மக்களே
இதையெலாம் தாண்டும்
காலம் இது தான்
எழுக! என்றெழுவர்
அவருள் இருந்தே
நாம் தொடும் கரங்கள் உயரும்

நடக்கும்..

வியாழன், 17 மே, 2018

இந்த நாள் - மே 18

இறுதியில்
கூட்டாகக் குதித்து இழுத்திருக்கலாம்,
தூரத்தில் வானுயர வெடித்தெழுகிறது
தீப்பிளம்பு,
ஆழ ஊறிப்போயிருந்த
ஆத்ம விசுவாசத்தின் கண்களுக்கு
அந்த ஜோதியில் கலந்து
மேலெழும் ஆன்மாக்களைத் தெரிகிறது போல,

ஏதோ ஒன்றை புரிந்து விட்டதுவாய்
எஞ்சியிருந்த நம்பிக்கையும்
தன்னை மீறித் தகர்ந்துடைந்து
தொண்டை கட்டி நா வறள
கண்களால் வடிகிறது

செந் நாக்குகளாய் மேலெந்த உயிரோர்மம்
மெல்ல மெல்லக் கரும்புகையாகி
கண்முன்னே கலைந்து சென்ற நாளிது

நாள் மறுநாளாகி
வாரம், மாதங்களாகி
ஆண்டுகள் உருண்டோடியும்
வசந்தம் வரும்வரை
ஓரிழையில் தொங்கியபடி காத்திருக்கும்
ஏதோ ஓர் பறவையின் கூடாய்
எம் கனவும், வாழ்வும்..


வியாழன், 10 மே, 2018

மயான அமைதி..

கடற்கரையின் வல்வளையத்துள்
குடும்பம் கொன்றழிக்கப்பட்ட பின்
எஞ்சிப் போனவனின் அமைதியாய்

பசிப்பது வயிற்றுக்குப் பழகிப்போன
போரின் பின் புறக்கணிக்கப்படும்
போராளியின் அமைதியாய்

காணாமல் போனவரை
காண்பதற்காய்க் காத்திருந்து
ஏக்கம் மட்டுமே எஞ்சி
இறந்து போனோரின் அமைதியாய்

எறிகணையால் சிதறிப்போன கிராமத்தினது
தபால் பெட்டியின் அமைதியாய்

இன அழிப்பு செய்யப்பட்ட
தமிழினத்தின் நிலத்தில்
உருவாக்கப் பட்டிருக்கிறது அமைதி
மயான அமைதி


புதன், 2 மே, 2018

பறப்பெனும் பரவசம்..

அரவமற்ற அகண்ட பெருவெளி,
உயரமாய் ஒற்றை மரம்
காட்சி உறைந்து பேயறைந்து போயிருக்கிறது.
இதுதான் சூனியமோ என
எண்ணி விடுவதற்குள்
எங்கிருந்தோ ஓர் பறவை
சிறகை அடித்து வெளியுள் நுளைய
உறைந்திருந்த காட்சி உயிர்த்து
இருக்கிறாளா என
தெரியாமலிருந்த காதலியை
எதிர்பாராமல் கண்டுயிர்த்த பரவசமாய்
உலகின் அழகிய காட்சிகளில்
ஒன்றானது.

எல்லைகள் அற்று
எவருக்கும் பதிலுரைக்க தேவையற்று
எங்கும் பறக்க முடிகின்ற
கட்டற்ற சுதந்திரத்தின் அழகில்
எல்லாமே உயிர்த்து விடுகிறது.

பறப்பைப் போல் பேரழகு
பாரினிலே இல்லையடி..