Thursday, 26 September 2013

வாழ மறுக்கப்பட்டவர்கள்..

அட்லான்டிக் பெருங்கடலை நோக்கி
விரைந்துகொண்டிருக்கும்
யாருமற்ற தொடுகடல் நீரோட்டக்கரையில்
இளமை அவனிடமிருந்து
விடைபெற்றுச் செல்கிறது

எந்தக் கண்கசக்கலும் இன்றி
ஒரு தலையசைப்போடு
வழக்கம் போலவே
வழியனுப்பி வைக்கிறது
முதிர் மனது

உன்னது மட்டும் தானா?
என்னிளமையும் கனவுகளும் கூட
இந்தக் கரையிற்தானே களவாடப்பட்டதென
இன்றவள் அங்கிருந்து அழக்கூடும்
இல்லை
இப்போதெல்லாம் அவள் அழுவதில்லை
இறுகி, ஒடுங்கி, இயல்பாகி
பழகிப் போயிருக்கலாம் அவளுக்கும்

இத்தனை காலமாயும் இன்னுமேனென
நீங்கள் எண்ணலாம்
வெற்றி மமதையில் ஆர்ப்பரிக்கும்
எகத்தாள அலைகளின் இரைச்சற் காதுகளுக்கு
நீதி வேண்டும் குரல்கள்
ஒருபோதுமே கேட்பதில்லை

இம்மியளவும் இடைவெளியின்றி
கடல்,நிலத்தால் கட்டி அணைத்தபடி
ஒட்டியிருக்கிறது பூமி
இடைவந்த அதிகாரமும், பலமும்
தாம் நினைத்தபடி வேலிகளைத்
தாட்டு நட
ஏதிலிகளாய் ஆக்கப்பட்ட
எத்தனையோ லெட்சம் பேரின்
படிமமாய் அவளும், அவனும்

நாளை
இவர்கள் குழந்தையும்
பெயரறியாக் கரையொன்றிலிருந்து
இது போலொன்றை
எழுதுதல் கூடும்..

3 comments:

  1. "நாளை // இவர்கள் குழந்தையும் // பெயரறியாக் கரையொன்றிலிருந்து // இது போலொன்றை // எழுதுதல் கூடும்.." என்ற எண்ணம், தேவையற்ற சுமையைக் கூட்டுகிறது, நம் மனதிற்கு. காலம் நிச்சயம் நீதி வழங்கும் என்று நம்பலாம். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
    Replies
    1. நீதி கிடைக்க வேண்டும், மனதுரைத்தமைக்கு நன்றிகள்

      Delete
    2. நீதி கிடைக்க வேண்டும், மனதுரைத்தமைக்கு நன்றிகள்

      Delete