Wednesday 12 September 2012

தலையணை..


வீணீர் வழிகையிலும்
விம்மி உடைகையிலும்
ஏனின்னும் இறக்கவில்லை
என நொடிந்து முகம் புதைத்து
சூடாய்க் கண்ணீரைச்
சுவாசத்தைச் சொரிகையிலும்
ஓடாமல் என்னோடே
ஒட்டிக் கிடந்த படி
அத்தனையும் உன்னுள்
அகத்துறிஞ்சி நானாகி
எத்துணை அன்போடு
என் பிடரி வருடுகின்ற
மொத்தமாய் எனையறிந்த
முதற் பெண்ணே ! ஒரு வேளை
இயற்கையாகத் தான்
என் சாவு நிகழுமென்றால்
உன்னுடைய மடியிற் தான்
உயிரவிழும், தலை சரியும்

நாரி கொதித்தாலும்
நடந்து கால் வலித்தாலும்
ஆரிருக்கார் உனை விட்டால்
அமுக்கி விட, கைகளுக்குள்
அவளாக நீ தானே
அணைத்துச் சூடேற்றுகிறாய்
எவளாலும் உன்னைப் போல்
இத்தனை முத்தத்தை
வருடக் கணக்காக
வாய் வலிக்க வாங்கேலா

திருட்டுக் காமத்தை
தீர்ப்பதற்குத் தீராமல்
அருட்டி உன்னுடலை
அளைகையிலும் அசராமல்
உருட்டும் திசைக்கெல்லாம்
உடல் வளைப்பாய் என் அன்பே!

கலவி முடிந்த கணத்தில் மெதுவாக
விலகிப் படுக்காய் வேறு திசை பார்க்கமாட்டாய்
புலரும் வரை என் மேலே
பூத்திருப்பாய், காலையிலே
புன் சிரிப்பாயெனைப் பார்த்து
புதுப் புது அர்த்தத்தில்

என் வாழ்வு எனைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிப்பதுவும்
உன்னுடைய சிரிப்புக்குள்
ஒளிந்து கொண்டிருக்குதென்று
கண்ணோரம் வழிகிற நீர்
காதிற்குள் சொல்கிறது..

No comments:

Post a Comment