புதன், 29 அக்டோபர், 2025

வாழ்வெனும் வட்டம்…

மணல்மேட்டில் வட்டமொன்று வரைந்தேன்

விரல்நுனியில் உதிர்ந்த மணல்

காயங்களின் வடுக்கள் போல் சிதறியது

இரவெல்லாம் அழுத கண்ணீரின்

உப்புக்கரிப்பு படிந்த மண்

-

அந்த வட்டத்தின் நடுவே

பச்சிளங் குழந்தையின் முதல் அழுகுரல்

முதியவனின் இறுதி மூச்சு

ஒரே நொடியிற் கேட்கிறது

பிறப்பும் இறப்பும்

இடைவெளியற்ற வட்டத்தின்

இரு முனைகள்

-

என் தாத்தாவின் தாத்தா விதைத்த

மாமரத்தின் பழுத்த விதை

என் பேரன் பேத்தியின் கையில்

முளைவிடும் வரை

எத்தனை வட்டங்கள்

எத்தனை பிறப்புகள்

எத்தனை சாவுகள்

-

நேற்று இன்றாகி

இன்று நாளையாகி

நாளை மீண்டும் நேற்றாகும்போது

காலம் என்ற சக்கரத்தில்

நாம் அனைவரும்

அரைக்கப்படும் தானியங்கள்

-

வட்டத்தின் விளிம்பில் நின்று

உள்ளே எட்டிப் பார்க்கிறேன்

கருவறையில் துடிக்கும் சிசுவின்

இதயத்துடிப்பும்

மயானத்து வெடிமரத்தின்

இலையுதிர்வும்

ஒரே வட்டத்தின்

இரு பக்கங்கள்

-

மழைத்துளி விழும் குளத்தில்

வட்டம் வட்டமாய் பரவும் அலைகள் போல

ஒவ்வொரு துயரமும்

ஒவ்வொரு மகிழ்ச்சியும்

ஒவ்வொரு பிரிவும்

ஒவ்வொரு சேர்க்கையும்

வட்டமிட்டு வட்டமிட்டு

விரிந்து கொண்டே போகிறது

-

இந்த வட்டத்தின் மையப்புள்ளியில்

நான் ஒரு துரும்பு

என் பிறப்பும் இறப்பும்

என் கண்ணீரும் சிரிப்பும்

என் காதலும் வேதனையும்

என் கனவும் நினைவும்

எல்லாமே அந்த வட்டத்தின்

எல்லையற்ற சுழற்சியில்

கரைந்து போகும் புள்ளிகள்

-

ஆனால்...

வட்டம் மட்டும் நிலைத்திருக்கிறது

காலத்தின் கருக்குழியில்

கருவாகி பிறந்து இறந்து

மீண்டும் பிறக்கும்

முடிவற்ற பயணத்தின்

முதலும் முடிவும்,

வட்டம் கீறிய வழியிற் தான்

புதிராகக் கிடக்கிறது

வாழ்வின் உதிர்வும்

துளிர்ப்பும்..

செவ்வாய், 21 அக்டோபர், 2025

இலையும் மழையும் - வாழ்வு..

மரத்தின் விரல்நுனியில் நடுங்கும்

ஈர இலைகளை

இறகுகள் கொண்டு வருடுகிறது 

காற்று 

அவை தங்கள் தனிமையின்

கதைகளை கசியவிடுகின்றன 

-

பனித்துளி போல் மிதந்து

பவள நிறத்தில் பிரகாசிக்கும்

விடைபெறும் கணங்கள்,

நீர்த்திவலைகளாய் நெகிழ்ந்து வீழும்

நேற்றைய நினைவுகள்

-

கிளையின் கைவிரல்களில் இருந்து

கீழே நழுவும் ஒவ்வொரு இலையும்

கரைந்து போகும் கனவின்

கண்ணாடித் துண்டுகள்,

காலம் அவற்றை முத்தமிடுகிறது.

-

மரத்தின் பழைய வலிகளை

மழைத்துளிகள் கழுவிச் செல்கின்றன

வண்ண இலைகளின் வழியே

வானத்தின் கருணை கசிகிறது 

-

பனிக்கூட்டில் இருந்து பிரிந்து வரும்

பால்வெளி ஒத்த பனித்துளி போல

பிரிவின் வலி மென்மையானது 

விடுதலையின் சுவை இனிமையானது 

வீழ்தலின் சுவை அலாதியானது 

-

இலைகள் விழும் ஒலியில்

இசைக்கப்படுகிறது வாழ்வின் கீதம்..

அதன் அர்த்தம் தெளிகிறது இப்போது 

காற்றின் கரங்களில் கரைவதே

காலத்தின் கனிவான மொழி..

வெள்ளி, 17 அக்டோபர், 2025

நதியின் யாத்திரை..

குளிர்ந்த பனிக்காற்றில் 

உறைந்துபோன விரல்களால்

என் நினைவுகளை 

எழுதிக்கொண்டிருக்கிறேன்

-

காலத்தின் நீண்ட விளிம்பில் 

கண்ணாடி போல உடைந்து சிதறும் 

அலைகள் கரைகளின் நெஞ்சை 

அரித்தெடுக்கும் வலியோடு பாய்கின்றன

எத்தனை யுகங்களாய் இந்த ஓட்டம்

எத்தனை கண்ணீர்த் துளிகள் 

எத்தனை எத்தனை காதல் கதைகள்

-

மலைச்சிகரங்களின் உச்சியில்

மௌனமாய் உறங்கும் பனிப்படுக்கையில்

முதற் காலடி வைத்த நாளின் நினைவுகள்

இன்னுமென்னுள் உறைந்து கிடக்கின்றன.

பாறைகளின் எலும்புக் கூடுகளை

என் நீர்க்கரங்களால் தடவி

பல்லாயிரம் ஆண்டுகளின் கதையைப் படிக்கிறேன்

-

ஒவ்வொரு பள்ளத்தாக்கும்

ஒரு காதல் கடிதம்

ஒவ்வொரு சிற்றருவியும்

ஒரு கண்ணீர்த் துளி

-

மரங்கள் தங்கள் வேர்களால்

என்னை அணைத்துக்கொள்ள முயலும்போதெல்லாம்

என் உடலில் சிலிர்ப்பு பரவுகிறது

அவை விரித்த விரல்களில்

என் நீர் உறிஞ்சப்படும்போது

நான் தாயாகிறேன்

-

மீன்கள் என் மார்பில்

எழுதும் வண்ணக் கோலங்கள்

கரைந்து போகும் முன்னரே

புதிய வண்ணங்கள் பிறக்கின்றன

நான் கலைக்கூடமாகிறேன்

-

சூரியன் என் மேனியில் விழும்போது

நான் வானவில்லாகிறேன்

நிலவு என்னை முத்தமிடும்போது

நான் வெள்ளி விளக்காகிறேன்

இரவின் கருமையில்

நட்சத்திரங்களை மீட்டெடுக்கும்

கண்ணாடியாகிறேன்

-

காற்று என் முடியைக் கலைக்கும்போது

அலைகள் நடனமாடுகின்றன

பறவைகள் என் முகத்தில் 

தங்கள் நிழலைப் பதிக்கும்போது

நான் கண்ணாடியாகிறேன்

-

வழியில் சந்தித்த

ஒவ்வொரு உயிரையும்

என் நினைவுகளில் சுமந்தபடி

எங்கோ ஓர் துளியாய் பிறந்து

எல்லையற்ற பெருங்கடலை நோக்கி

அலைந்து கொண்டிருக்கிறேன்

-

கரைகளுக்குள் அடங்க மறுக்கும்

என் சுதந்திரத்தின் பாடல்

காலத்தின் செவிகளில் ஒலிக்கிறது

நான் ஓர் அனந்த யாத்திரை

முடிவில்லா பயணம்

முற்றுப்பெறாத காதல் கதை

-

கடலின் மார்பில் கரைவதற்கு முன்

இந்த உலகத்தின் அத்தனை வண்ணங்களையும்

என் நீரில் கரைத்து

கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்..