Monday, 23 June 2025

உறங்க முடிகிறதா..

நீதி தேடும் ஆன்மாக்களின்

அழுத்தம் மண்ணைப் பிளக்கிறது

ஒவ்வொரு மண்வெட்டியும்

நினைவின் அடுக்குகளை உரிக்கிறது

இந்தச் சிவந்த மண்ணில்

காலம் உறைந்து நின்றுவிட்டது

குழியிலும்

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு

அருகிலேயே இருக்கிறார்கள்

-

நொருங்கிய ஒவ்வொரு விலா எலும்பும்

ஒரு கதையைச் சொல்கிறது,

உடைந்த ஒவ்வொரு மண்டை ஓடும்

கடைசி அலறலை நினைவுபடுத்துகிறது

-

வதையின் வலி தாங்க முடியாத

குழந்தைகளின் சிறிய கைகள்

இன்னும் தங்கள்

தாயின் கையை நோக்கி நீண்டிருக்கின்றன

-

செம்மணி என்ற பெயர்

இன்று வேறொரு அர்த்தம் பெறுகிறது

இரத்தத்தால் சிவந்த மண்,

கண்ணீரால் நனைந்த மண்,

நீதியற்ற மரணங்களின் சாட்சியாக

நிற்கும் மண்

-

ஒவ்வொரு அகழ்வும்

உலகின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது

எவ்வளவு காலம் நாம் கண்மூடித்தனமாக

இருந்திருக்கிறோம்?

எவ்வளவு குரல்கள்

நம் காதுகளை எட்டாமல்

இந்த மண்ணில் புதைந்துவிட்டன ?

-

தமிழீழ மண்ணின்

ஒவ்வொரு துகளிலும்

இப்படியான கதைகள் மறைந்திருக்கலாம்

காணாமல் போனவர்களின் கனவுகள்

நிறைவேறாத ஆசைகள்

சொல்லப்படாத காதல் கடிதங்கள்

-

இந்தக் கல்லறை

உலகின் கவனத்தைக் கோருகிறது

செம்மணி வழியாக வரலாறு பேசுகிறது

எப்படிக் கொடூரமான மனிதர்களெல்லாம்

இந்த மண்ணில் வாழ்கிறார்களென்பதை

தங்களின் எலும்புகளின் வழியாக

குழந்தைகள் சொல்கிறார்கள்

-

இந்த எலும்புகளைப் பார்த்த பின்னாவது

நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களா..?

இதுவெல்லாம் நடக்கும் போது

நீங்கள் எங்கே இருந்தீர்களென

என்றோ ஒருநாள்

குழந்தைகள் உங்களை கேட்க மாட்டார்கள்

என்று நம்புகிறீர்களா..?

-

நாம் அனைவரும் பொறுப்பாளிகள்

மௌனம் காத்தவர்களும்,

கண்மூடித்தனமாக இருந்தவர்களும்,

உண்மையை

மறந்தது போல் இருப்பவர்களும்,

-

இந்த மண் நம்மை விட்டுப் போகாது

இந்த எலும்புகள் நம்மை மன்னிக்காது

எதுவும் அறியாத இந்தக் குழந்தைகள்

நம் மனசாட்சியை விட்டு

ஒருபோதும் வெளியேறமாட்டார்கள்

-

என்னால் முடியவில்லை

உங்களால் முடிகிறதா உறங்க.. ?

No comments:

Post a Comment