Monday, 23 June 2025

உறங்க முடிகிறதா..

நீதி தேடும் ஆன்மாக்களின்

அழுத்தம் மண்ணைப் பிளக்கிறது

ஒவ்வொரு மண்வெட்டியும்

நினைவின் அடுக்குகளை உரிக்கிறது

இந்தச் சிவந்த மண்ணில்

காலம் உறைந்து நின்றுவிட்டது

குழியிலும்

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு

அருகிலேயே இருக்கிறார்கள்

-

நொருங்கிய ஒவ்வொரு விலா எலும்பும்

ஒரு கதையைச் சொல்கிறது,

உடைந்த ஒவ்வொரு மண்டை ஓடும்

கடைசி அலறலை நினைவுபடுத்துகிறது

-

வதையின் வலி தாங்க முடியாத

குழந்தைகளின் சிறிய கைகள்

இன்னும் தங்கள்

தாயின் கையை நோக்கி நீண்டிருக்கின்றன

-

செம்மணி என்ற பெயர்

இன்று வேறொரு அர்த்தம் பெறுகிறது

இரத்தத்தால் சிவந்த மண்,

கண்ணீரால் நனைந்த மண்,

நீதியற்ற மரணங்களின் சாட்சியாக

நிற்கும் மண்

-

ஒவ்வொரு அகழ்வும்

உலகின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது

எவ்வளவு காலம் நாம் கண்மூடித்தனமாக

இருந்திருக்கிறோம்?

எவ்வளவு குரல்கள்

நம் காதுகளை எட்டாமல்

இந்த மண்ணில் புதைந்துவிட்டன ?

-

தமிழீழ மண்ணின்

ஒவ்வொரு துகளிலும்

இப்படியான கதைகள் மறைந்திருக்கலாம்

காணாமல் போனவர்களின் கனவுகள்

நிறைவேறாத ஆசைகள்

சொல்லப்படாத காதல் கடிதங்கள்

-

இந்தக் கல்லறை

உலகின் கவனத்தைக் கோருகிறது

செம்மணி வழியாக வரலாறு பேசுகிறது

எப்படிக் கொடூரமான மனிதர்களெல்லாம்

இந்த மண்ணில் வாழ்கிறார்களென்பதை

தங்களின் எலும்புகளின் வழியாக

குழந்தைகள் சொல்கிறார்கள்

-

இந்த எலும்புகளைப் பார்த்த பின்னாவது

நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களா..?

இதுவெல்லாம் நடக்கும் போது

நீங்கள் எங்கே இருந்தீர்களென

என்றோ ஒருநாள்

குழந்தைகள் உங்களை கேட்க மாட்டார்கள்

என்று நம்புகிறீர்களா..?

-

நாம் அனைவரும் பொறுப்பாளிகள்

மௌனம் காத்தவர்களும்,

கண்மூடித்தனமாக இருந்தவர்களும்,

உண்மையை

மறந்தது போல் இருப்பவர்களும்,

-

இந்த மண் நம்மை விட்டுப் போகாது

இந்த எலும்புகள் நம்மை மன்னிக்காது

எதுவும் அறியாத இந்தக் குழந்தைகள்

நம் மனசாட்சியை விட்டு

ஒருபோதும் வெளியேறமாட்டார்கள்

-

என்னால் முடியவில்லை

உங்களால் முடிகிறதா உறங்க.. ?

Thursday, 19 June 2025

அறியாத பாதைகள்..

நொடிகள்

என் கண்களில் துளிர்க்கும் முன்னர்

காணாமல் போகின்றன

காற்றில் கரைந்த உப்புப் போல்

வாழ்வின் சுவை மறைந்து போகிறது.

-

எழுத்துகள்

என் விரல்களில் இறந்து கிடக்கின்றன

புத்தகங்கள்

அமைதியான கல்லறைகள் ஆகிவிட்டன

ஒவ்வொரு பக்கமும் ஒரு கண்ணீர்த்துளி

ஒவ்வொரு வரியும் ஒரு பெருமூச்சு.

-

போரில் தோற்ற இனம் என்கிறீர்கள்

ஆம், நான் என் சொந்தப் போரில்

தோற்றுவிட்டேன்

கனவுகளின் கொடிகள் கிழிந்து பறக்கின்றன

நம்பிக்கையின் கோட்டைகள்

இடிந்து கிடக்கின்றன.

-

விருப்பங்கள் வாடிய பூக்கள் போல்

என் மனதின் தோட்டத்தில்

உதிர்ந்து கிடக்கின்றன

காலம் ஒரு கொடிய தோட்டக்காரன்

அனைத்து வண்ணங்களையும்

சாம்பலாக்குகிறான்.

-

அறியாத பாதைகளில் நான் நடக்கிறேன்

ஒவ்வொரு அடியும் ஒரு கேள்விக்குறி

இருள் என் நிழலின் வடிவமாகி விட்டது

தனிமை என் மூச்சுக்காற்றாக மாறிவிட்டது.

-

ஆனால் இந்த வேதனையிலும்

ஓர் அழகு இருக்கிறது

தோற்ற இனங்கள் மட்டுமே

உண்மையான துக்கத்தின் இசையை அறிகின்றன

மூழ்கியவர்கள் மட்டுமே

மேற்பரப்பின் மதிப்பை புரிந்து கொள்கிறார்கள்.

-

என் இதயத்தில் ஒரு சிறு விளக்கு

இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது

சீக்கிரம் அணைந்துவிடும் என்று நினைக்கிறேன்

ஆனால் இன்னும்

ஒளிர்ந்து கொண்டிருக்கிறது..

Sunday, 1 June 2025

காதலின் அழகியல்..

ஆயிரம் பெண்கள் வீதியில் நடக்கிறார்கள்

மனதிற்கு நெருக்கமானவள் மட்டும் 

அவ்வளவு அழகாய்த் தெரிகிறாள் 

-

காதல் என்பது அழகை உருவாக்கும் சிற்பி,

அது சாதாரண முகத்தில் 

விண்மீன்களை விதைக்கிறது,

கூந்தலில் கடலின் அலைகளை பின்னுகிறது

குரலில் பறவைகளின் கீதங்களை கலக்கிறது

-

அவள் அவ்வளவெல்லாம் அழகி அல்லவென 

உலகம் சொல்லலாம் 

ஆனால் என் காதல் பதில் சொல்கிறது

அழகு என்பது என் பார்வையில் பிறந்து 

காதலில் வளர்வது 

-

மழையில் நனைந்த பூமி அழகானது,

ஏனெனில் அது வானத்தின் முத்தங்களை 

ஏற்றுக்கொண்டது.

-

அதுபோல் என் காதலில் நனைந்த பெண்

அழகின் இராணியாகிறாள்

காதல் கொண்ட கண்கள் பொய் சொல்வதில்லை,

உண்மை தான் தோழி 

அழகிகள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை 

ஆனால் 

காதலிக்கப்படுகின்ற ஒவ்வொருத்தியுமே 

அழகிதான்..