Tuesday 6 March 2018

வளவொன்று வாசல் இரெண்டு..

ஓர் வளவில் குடியிருந்தோம்
எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே
பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

உங்கள் ரகசிய நடமாட்டங்களின்
காலடிச் சத்தங்கள்
எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க
எதேச்சையாகத் தான் கவனித்தோம்
விசாரிக்கத் தொடங்கிய வேளை
அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது
எமை நீர் அறுப்பதற்கு தயாரான
ஆயிரம் தடையங்கள்

கிழக்கிலும் நீரெம்மை
கிழித்துத் தொங்கவிடும்
மரணத்தின் சாக்குரல்கள்
அடிவயிற்றில் புரளத் தொடங்க
வேறுவழியெதுவும் இருக்கவில்லை

கீறோ, கிழிதலோ இன்றி
அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய்
விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம்
அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது
குலை குலையாய் எமையழித்து
அதைக் கொண்டாடும் அளவுக்கு
நிகழ்த்திக் காட்டினீர்கள்
எதிரியிடம் கூடக் காணாத வன்மமது

ஆயினும்
இப்பாலிருந்து மன்னிப்பும் இணக்கமுமென
எத்தனை முறை, எத்தனை பேர்
பலமாயிருந்த போதுகூட பல தடவை கேட்டோம்

அப்பாலிருந்தோ
ஓர் வார்த்தை, ஓர் வருத்தம்
ஒப்புக்குக் கூட ஓர் சொல்தானும்
என்றும் எழுந்ததில்லை,
இருக்கட்டும்.

எமக்கிடையே விருட்சமாகி நிற்கும்
இந்த பெருமரத்தின் விதையில்
எவரால் குரோதம் பதியம் செய்யப்பட்டது..?
எங்கள் கனிகள் உங்களுக்கும்
உங்கள் கனிகள் எங்களுக்கும்
எப்படி விடமாகிப் போனது..?

இவ்வளவின் பின்னரும் கூட
பற்றி எரிவதைப் பார்க்கிற போது
ஓடி வந்து தோள் கொடுப்போமென்று
உன்னிய போது தான் தெரிந்தது
எதிரியுடன் சேர்ந்து
எங்கள் கால்களையும்
நீங்கள் முடமாக்கி விட்டீர்கள் என்பது..


No comments:

Post a Comment