Wednesday, 31 May 2017

வாழ் கனவு - சிறுகதை

எங்கள் வானில் விமானங்கள் எந்த நேரமும் வந்து குண்டு மழை பொழியும், பலாலி இராணுவ முகாமில் இருந்து அடிக்கின்ற ஷெல் வீட்டுக்கு மேலால் கூவிக்குகொண்டு போய் விழுந்து வெடித்து அதன் சிதறல்களால் வீட்டுச் சுவர்களில் காயம் வரும், சில வேளை வீட்டிலேயே ஷெல் விழுந்து சமையலறையும், சாமி அறையும் சிதறிப் போய்க் கிடக்கும், உலங்கு வானூர்த்தி வானுக்கு மேலே வட்டமிட்டு தன் கண்ணுக்கு தெரிகின்ற ஆட்களை எல்லாம் 50 கலிபர் ரக துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளும். எல்லாம் சிறிது நேரத்தில் ஓய்ந்த பின்னால் அடி விழுந்த இடங்களைப் பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடுவோம். நடந்த சம்பவத்தை நேரே பார்த்தாலும் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்திலும், பி.பி.சி தமிழ் சேவையிலும் என்ன சொல்கிறார்கள் என சைக்கிள் டைனமோவைச் சுற்றி எல்லோரும் சுற்றி இருந்து சாயத் தேனீரோடு பனங்கட்டிக் குட்டானைக் கடித்தபடி கேட்டுக் கொண்டிருப்போம்.  இதுவே வாழ்வாகப் பழக்கப்பட்டுப் போனதால் மிக இயல்பாக நாமெம் நாளாந்தக் கடமைகளில் ஈடுபடுவோம்,  அப்போதெல்லாம் இவ்வளவு ஆபத்துக்கள் எமைச் சுற்றி இருந்த போதும் எங்களுக்குள் எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்துகொண்டே இருந்தது.  அடிமைத் தனத்தையோ, யார் வேண்டுமானாலும் வந்து  எம்மை எதுவும் செய்து விட்டுப் போகலாம் என்ற ஒருநிலையையோ நாம் ஒரு போதும் உணர்ந்ததில்லை. 

 இலங்கை அரசே வடக்கை ஒரு தனி நாடாகக் கருதி பொருளாதாரத் தடை விதித்திருந்த காலமது. புலிகள் வெடிமருந்து செய்வதற்கும் தம்முடைய இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்துவார்கள் எனச் சாட்டுச் சொல்லி  சீனி, சவர்க்காரம், பெற்றோல் முதலான மக்கள் நாளாந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் பெரியதொரு பட்டியலை இலங்கை அரசு தடை செய்திருந்தது. இதனால் குளிப்பதற்கோ, ஆடைகள் தோய்ப்பதற்கோ சவர்க்காரம் கிடையாது, மில்க்வைற் கனகராசா ஐயாவின் அதி - கார சவர்க்காரத்தைப் பெறுவதற்கே நீண்ட பிரயத்தனம் எடுக்க வேண்டி இருந்தது, சவர்க்காரத்தை விடப் பனங்காய்தான் திறமென யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகள் சிலர் கண்டு பிடித்து சொல்லி இருந்ததால் அனேகம் பேர் பனங்காயைத் தான் பயன்படுத்தினோம். இதனால் பனங்காய்க்க்கு, தேங்காயைப் போல் சரியான கிராக்கி நிலவியது, கேட்பாரற்றுக் கிடந்த பனங்கூடல் வைத்திருந்தவர்கள் எல்லாம் அதைச்சுற்றி வேலி அடித்து செல்வாக்கானவர்களாவும் சின்னப் பணக்காரர்களாவும் உலாவந்தார்கள். 

ஒரு அவுன்ஸ் பெற்றோல் 500 ரூபாவுக்கு விற்றதால் மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் அந்தக் காலத்து கரிக்கோச்சிகள் போல புகை கக்கியபடி மண்ணெண்ணையில் தான் ஓடித்திரிந்தது, ஜப்பான்காரன் மோட்டார் சைக்கிளை பெற்றோலில் ஓடுவதற்கு ஏற்றவாறு தான் வடிவமைத் திருந்தாலும் யாழ்ப்பாணத்தான் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி எஞ்சினையும் ஜப்பான் காரனையும் ஏமாற்றுவதற்காக ஆட்டின் தலையில் குளையைக் கட்டி ஓடவிடுவது போல் ஒரு சூப்பியில் மட்டும் கொஞ்சம் பெற்றோலை எடுத்து எஞ்சினின் மூக்கில் ஒரு துளியை சும்மா மணக்க கொடுத்து விட்டு அடித்து ஸ்ராட் பண்ணிவிடுவான், எஞ்சினும், தான் பெற்றோலில் தான் ஓடுகிறேனாக்கும் என்று நினைக்கும் போல! மிகுதித் தூரத்தை மண்ணெண்ணையிலேயே ஓடிக்கடக்கும், அந்த மண்ணெண்ணை வாங்குவதற்காக அதிகாலை எழுந்து சங்கக்கடையில் வரிசையில் நிற்பதும் அதற்கு பெரிய இடத்துச் செல்வாக்கெல்லாம் பயன்படுத்துவதும் பெரியகதை.மோட்டார் வண்டி ஓடுவது மண்ணெண்ணையிலாக இருந்தாலும் லீற்றருக்கு நீண்ட தூரம்  ஓடுவதுடன் இடையில் நிற்காமல் பெற்றோல் கொடுக்கின்ற வேகத்திலும் ஓட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்ததால் அதற்கு மோட்டார்சைக்கிள் எஞ்சின் காபரேற்றருக்குள் ஏதோ செற்றிங் செய்கிற மெக்கானிக்குகளின் முன்னால் வயசு, பதவி வேறுபாடில்லாமல் எல்லோரும் கைகட்டி நிற்க வேண்டி இருந்தது, ஒரு இறுக்கமான பாடசாலை அதிபர் எப்படி மாணவர்களைப் பார்த்துச் சிரிக்காமல் ம்..என்று மட்டும் தலையாட்டி நேரியபார்வையில் கடந்து போவாரோ அதே போலத்தான் அந்த நாட்களில் மெக்கானிக்குகள் எல்லாம் திரிந்தார்கள். அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்கள் கூட நாளை எஞ்சின் பழுதானால் அவர்களிடம் தான் போய் நிற்க வேண்டும் என்பதால் அவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார்கள், சாகப் போகும் தறுவாயில் உள்ள நோயாளிக்கு செலைன் கொடுப்பது போல்  மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறவர்களும் அதே செலைன் ரியூப்பை எடுத்து மோட்டார் சைக்கிளுக்கு எண்ணை போகும் குழாய்க்குள் செருகி அதற்குள்ளால் பெற்றோலை துளித் துளியாக விட்டு வாயால் ஊதிய படி ஓடுவார்கள், அந்தக் காட்சியை முதன் முதல் பார்க்கின்ற யாருக்கும் யாழ்ப்பாணத்தான் வாயால் காற்றூதியே மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போல ஒரு பிரமை ஏற்படும்.  இப்படிப் பட்ட வாழ்வுக்குள்ளும் எமது அருமை பெருமைகளை எல்லாம் பறை சாற்றும் பொருட்டு கவியரங்கங்களில்
”பாக்களவு இலங்கையதன் பரப்பளவில் ஒரு சிறிய 
மூக்களவு தானெங்கள் முதுச நிலம் ஆனாலும் 
நிலா வரை போய் மண்கொணர்ந்த விண்ணர்களை 
நிலாவரையடியில் மண்கவ்விப் போக வைத்த 
விலாசம் எமக்கு வேறும் பல இருக்கு”  என்று
எமக்கு நாமே 'சபாஷ்' என்று தட்டிக் கொடுத்து பெருமைப் பட்டுக்கொள்வோம்.

 இப்படி ஆயிரம் இன்னல்கள் எமைச் சுற்றி இருந்த போதும் எதுவென்றே புரியாத ஒரு திருப்தியிலும், நிறைவிலும் ஓடிக்கொண்டிருந்த வாழ்வில் 1995 அக்டோபர் 30ம் திகதி இடி விழுவது போல ஒரு செய்தி நெருப்புப் போல் யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. பனிப்புலத்துக்குள்ளால ஆமி இறங்கீற்றான் உடனடியா யாழ்ப்பாணத்தி விட்டு வெளியேறுங்கள் என்று புலிகள் ஒலி பெருக்கிகளில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.நீ எங்கே போகப் போறாய் என்று பக்கத்து வீட்டுக்காரனைக் கேட்கக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. நாங்களே எங்க போகப் போகிறோம் என்று தெரியாத போது அதற்கெல்லாம் எங்கே நேரம். சிலர் உடனே திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையில் தங்களது வயோதிபத் தாய் தந்தையைக் கூட வீடுகளில் விட்டு விட்டே வெளியேறினார்கள். பத்தடி அகலம் உள்ள வீதியால் 5 லெட்சம் பேர் ஓரிரவில் கடப்பதென்பது சாத்தியமானதில்லைத் தான், ஆனால் மக்கள் கடந்து கொண்டிருந்தார்கள். ஒரு அடிவைப்பதற்கே ஒரு மணி நேரமானது. இதற்குள் சகடை விமானம் வேறு பீப்பாய் குண்டுகளைப் போட்டுத்  தொலைக்கும். ஆறுதலுக்கு நாரியைக் கூட நிமிர்த்த முடியாத அந்தப் பயணத்தில் அவசர நோயாளிகள், கற்பிணிகள், வீதியிலேயே குழந்தையைப் பெற்றவர்கள், பருவம் அடைந்த பெண்கள், மாதவிடாயால் அந்தடித்தவ்ர்கள் என அந்த மாபெரும் இடப்பெயர்வு வடமராட்சி, தென்மராட்சி நோக்கி மக்களைத் தள்ளியது, அத்தனை இலெட்சம் மக்களுக்கும் யார் யாரென்றே தெரியாத மக்கள் தங்கள் வீடுகளில் இடம் கொடுத்தார்கள். 

இடம்பெயரச் சொன்ன நாளில் செங்கண்மாரி வந்து நிமலன் எழும்ப முடியாமல் படுத்திருந்தான். ஏழெட்டு நாட்களாகவே நீராகாரம் மட்டுமே உணவு என்பதால் கையில் கிடைத்ததை சைக்கிளில் கட்டிக் கொண்டு புறப்படு என எதற்கும் பயப்பிடும் சகோதரியும் பெற்றோர்களும் கத்த வேறு வழி இல்லாமல் கால்களும் கைகளும் நடுங்க நடுங்க சைக்கிள் பின் கரியரில் இரெண்டு பெட்டிகளையும், கான்டிலில் சூட்கேசையும் வைத்துக் கொண்டு மெதுமெதுவாக உருட்டத் தொடங்கினான், நாலைந்து மணி நேரத்தில் அரியாலைக்கு வந்து விட்டான், மக்கள் கூட்டம் நகர முடியாமல் நெரிபட்டுக் கொண்டு நிற்கிறது, மழை வேறு பொழிகிறது தொடர்ச்சியாக காலையில் இருந்து மாலைவரை ஒரே இடத்தில் நின்ற அசதியும் தாகமும் போல அவனது பாடசாலை அதிபர் முன்னுக்கு நிற்பவரின் குடையால் வழிந்த நீரை கைகளால் ஏந்திக் குடித்துக் கொண்டிருந்தார். இப்படியே நின்றுகொண்டிருந்தால் இப்போதைக்கு போக முடியாது என்று நினைத்த நிமலன் நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து தண்ணீரால் நிறைந்து கிடந்த அரியாலை வயலுக்குள் சைக்கிளை இறக்கினான் எங்கிருந்து அவனுக்கு அப்படி ஒரு பலம் வந்ததோ தெரியாது ஒரு கையில் பெட்டியையும் மறுகையில் Bar ல் பிடித்து சைக்கிளையும் தூக்கிக் கொண்டு கண்ணுக்குத் தெரிந்த வரம்பை நோக்கி கிறுகிறென நடக்கத் தொடங்கினான் அவனைப் பார்த்து விட்டு பல இளைஞர்களும் பின்னால் குதித்து நடந்தார்கள், முழங்கால் அளவு நீரில் முன்னால் போய்க்கொண்டிருந்த பலர் திடீர் திடீரென தண்ணீருள் தாண்டு போயினர், தோட்டக் கிணற்றை தண்ணி மேவி நிக்குது விலத்திப் போங்கோ என்று பெரியவர் ஒருவர் கத்திக் கொண்டு வந்தார், ஒரு அடி முன்னுக்குப் போயிருந்தாலும் நிமலனும் தாண்டு போயிருப்பான், ஒருவாறு வரம்பில் போய் ஏறி சைக்கிளை இறக்கி அதன்மேல் பெட்டியை வைத்து வேகமாக உருட்டிக் கொண்டு நாவற்குழிப் பாலம் வரை போய் விட்டான், கடலோடு தொடுக்கப்பட்ட பாலத்திற்குள் நீர் நிறைந்து கிடக்கிறது. ஆழம் பற்றி எல்லாம் யோசிக்க இனி நேரமில்லை என்று நினைத்தவனாய் நீருள் இறங்கினான், இறங்க இறங்க நீர் மட்டம் கூடி கழுத்தளவுக்கு வந்துவிட்டது, ஒரு கையால் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு கால்களால் முன்னுக்கு பள்ளம் ஏதும் இருக்கிறதா என தடவித் தடவிப் பார்த்து அடியெடுத்து வைத்தான், திடீரென கால் வழுக்க  இவ்வளவு தூரமும் கஸ்ரப்பட்டு காண்டிலில் வைத்து பிடித்துக்கொண்டுவந்த பெட்டி கடலில் நழுவி விட்டது, பெட்டியை எட்டி பிடிப்பம் என கையை மெதுவாக எட்டி தலையைத் திரும்புகிறான், தண்ணீருக்குள் தவறி விழுந்து இறந்து விட்ட தன் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறும் தாயும், மூழ்கிப் போன வயோதிகப் பெற்றோரைத் தேடி அழும் பிள்ளைகளுமாக ’கண்ணீரில் கடல் மிதந்து கொண்டிருந்தது’
எல்லாவற்றையும் பார்த்து விட்டு பெட்டியும் மயிரும், தாண்டாத் தான் என்ன என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனாய் எதையும் சட்டை செய்யாமல் நடந்தான், கழுத்தளவு நீர் மெதுமெதுவாக இறங்கி காலுக்கு வர பாலத்தால் மேலே ஏறினான். பிரதான வீதியில் மக்கள் கூட்டம் ஐதாகவே இருந்ததால் மெதுவாகச் சைக்கிளை வெட்டிவெட்டி ஓடி அன்று மாலைசாயும் வேளையே சாவகச்சேரியில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கு தான் வருவார்கள் என எதிர்பார்த்த அவனுடைய சகோதரியோ பெற்றோரோ இன்னும் வந்து சேரவில்லை, சரியான பசி வேறு, செங்கண்மாரி பத்தியம் எல்லாம் பார்க்காமல் கிடைத்ததை கொட்டி வ்யிற்றை நிரப்பிக் கொண்டு  களைப்போடு களைப்பாக தன்னுடைய குடும்பத்தவர்களைத் தேடி சாவகச்சேரிச் சந்தையைத் தாண்டிப்போக,  மக்கள் அங்கிருந்து சாரிசாரியாக வந்துகொண்டிருந்தார்கள். இனி எதிர்த்திசையில் சைக்கிள் ஓட்டிப் போவது வாய்ப்பில்லை என்பதால் பக்கத்தில் இருந்த கடைக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தி விட்டு வருகிறார்களா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  

சற்றுத் தூரத்தில் தனியே நிற்கின்ற ஒரு பெண் இவனையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றாள். பார்த்த முகம் போல இருக்கிறதே என எண்ணிக் கொண்டு சைக்கிளை மெதுவாக உருட்டிக் கொண்டு கிட்டப் போனான்,  செருப்பில்லாமல் வெறுங்காலோடும், அழுக்காய்ப் போன சட்டையோடும், தலைமுடி எல்லாம் சேறும் பாசியும் படிந்து, ஓ.. நிலா! வீட்டிற்கு முன்னிருக்கும் கடைக்குப் போவதற்கே உதட்டுச் சாயம் போடுகின்ற நிலா. அவளும் இவனுடைய வகுப்புத்தான் ஆனால் வேறொரு மகளிர் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தாள். நாவற்குழிப் பாலத்துக்குள்ளால் இறங்கி வந்திருக்கிறாள் போல, முகமெல்லாம் சேறு படிந்து கோலம் மாறிப் போயிருந்தாள். நீரால் கண் நிரம்பி இருந்தது, ஆளாளை இருவருக்கும் நன்கு தெரியும் என்றாலும் முன்னர் எப்போதுமே பேசி இருந்ததில்லை. நிமலனின் குறும்புத்தனம் காரணமாக நிலா மட்டுமல்ல மற்றைய பள்ளித் தோழிகள் கூட அவனோடு பேசப்பயப்படுவார்கள். பேசுவாளா மாட்டாளா என்ற தயக்கத்தில் அம்மா, அப்பா எங்க? வரவில்லையா? மெதுவாகக் கேட்டான், மேலுதட்டை பற்களால் கவ்வி கீழுதட்டை வெளியே பிதுக்கி யாருமே வரவில்லை என்பது போல் தலையாட்டினாள். வெளியே வழுக்கி விடாமல் கண்ணுள்ளேயே அவள் பிடித்துவைத்திருந்த கண்ணீர் அவள் தலையாட்டலில் உள்ளிருக்க முடியாமல் கண்ணின் இருகரையாலும் தெறித்து கன்னங்களில் வழிந்து ஓடியது.  ஓய்வில்லாத இரெண்டுநாள் பயணம், தெரியாத இடம், பெற்றோரைக் காணவில்லை என்பதை விட வேறெதற்கோ தான் இவ்வளவு சங்கடப்படுகிறாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. வீடு பக்கத்தில தான் வாங்களன், சரியாகக் களைத்துப் போய் இருக்கிறீங்கள் வந்து முகம் கைகால் கழுவி தேனீர் ஒன்று குடிச்சீங்களெண்டா கொஞ்சம் ஆறுதலா இருக்கும், எனக்கு உங்கள் பெற்றோரைத் தெரியும் தானே எப்படியும் தேடிப்பிடித்து இங்கே கூட்டி வந்து விடுகிறேன், போவமா என்று கேட்டான். அவள் எதுவுமே சொல்லாமல் தலையைத் திருப்பி தன்னுடைய குடும்பத்தவர்கள் வருகிறார்களா என்று தேடினாள், இவனுக்கு செமக்கடுப்பாகி விட்டது. சரி நிலா அப்ப நீங்க நிண்டு பாருங்கோ நானும் என் குடும்பத்தைத் தேட வேண்டும் போய்ற்றுவாறன் என்று சைக்கிளை மெதுவா எடுத்தான். அவளது இமைகள் இரெண்டும் இருகரங்கள் போல மேலிருந்து கீழாக அசைந்து எங்கை என்னை விட்டிட்டுப் போறாய் நில் என்று சொல்வது மாதிரி சிமிட்டி இமைத்தது. ஒருகையால் அவனது சைக்கிள் கான்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் குனிந்து நின்றாள். வரச்சொன்னா வாறாளும் இல்லை போக வேண்டாம் எண்டும் சொல்லுறாள், நிமலனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பதினைந்து நிமிடம் மெளனமாக ஓடியது, உங்கட வீட்டில.. அவள் மெதுவாக ராகம் இழுத்து ஆரம்பித்தாள், ஐயோ நிலா நான் தனிய இல்லை 40 பேருக்கு மேல இருக்கீனும், கொடுப்புக்குள் ஒரு சிரிப்போடு போவமா என்பது போல தலையாட்டினாள், சைக்கிளை வீட்டை நோக்கித் திருப்பி ஒரு ஐந்து நிமிசம் ஆகியிருக்காது, அங்கால எங்கட பள்ளி நண்பர்கள் யாரும் இல்லைத்தானே அடுத்த கேள்வியைப் போட்டாள், இதற்கு பதில் சொல்ல வாயைத் திறந்தால் தூசணம் தான் வரும் எண்ட பயத்தில் தெரியாது என்று கையை விரித்து திருப்பினான். வீட்டிற்கு வந்து அங்கு நிறைய ஆக்கள் இருப்பதைப் பார்த்த பிறகு தான் முகம் மலர்ந்து தாங்ஸ் நிமலன் என்று நிம்மதி கலந்த பெருமூச்சோடு வாயைத் திறந்து சிரித்தாள். 

கால்கடுக்க வீதியில் நின்று அன்றிரவே அவளது குடும்பத்தை ஒருவாறு தேடிக் கண்டுபிடித்து தானிருந்த வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தான், அவனுடைய குடும்பத்தினரும் வந்து விட்டார்கள். அடுத்தடுத்த நாட்களிலேயே அங்கிருந்த பலர் தத்தமது உறவினர்கள் வீடுகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் போகத் தொடங்கினார்கள், நிலா குடும்பத்துக்கு தென்மராட்சியில் வேறு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் நிமலன் தன்னுடைய வீட்டிற்குப் பின்னாலேயே இருந்த ஒரு சிறிய வீட்டைத் துப்பரவு செய்து கொடுத்தான், 
அந்த வளவில் நான்கு குடும்பங்கள் இருந்தார்கள், தனித்தனியே சமையல் இருந்தாலும் எல்லோரும் சேர்ர்ந்திருந்து தான் பகிர்ந்துண்பார்கள். உணவுக்கு மிக நெருக்கடியான அந்தக் கால கட்டத்தில் பெரும்பாலும் பாண் தான் காலை, இரவுணவாக எல்லோருக்கும் இருந்தது, அண்மையில் உள்ள பேக்கரியில் பாண் வாங்க வேண்டுமெனில் அதிகாலையிலேயே போய் வரிசையில் நிற்க வேண்டும், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பாண் தான் பேக்கரிக்காரர் போடுவார் என்பதால் பாண் வாங்குவதென்பது மிகவும் கடினமான வேலையாகவே இருந்தது. நிமலன் தான் அதிகாலையே எழுந்து வரிசையில் போய் நின்று பெரிய பையில் அங்குள்ள அனைவருக்கும் சுடச்சுட பாண் வாங்கி வருவான். அவன் வாங்கி வரும் போது எல்லோருக்கும் பசி எடுத்து, தினமும் வருகின்ற மீன்காரனுக்காகக் காத்திருக்கும் பூனைகள் போல வாசலில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எப்படியோ சுழித்து இவன் தினமும் பாண் வாங்கி வந்து விடுவதால் வளவில் இருந்த எல்லோருக்கும் இவன் ஒரு குடும்பப் பொறுப்பான பிள்ளை என்று தனிப்பிரியம் ஏற்பட்டிருந்தது. நிலாவின் அம்மம்மா இவனை பாண் தம்பி என்று தான் கூப்பிடுவார். மாலை வேளைகளில் எல்லாம் நிலாவும் இவனும் இவர்கள் வயதொத்த சிலருமாக பலாமரத்துக்குக் கீழ் போடப்பட்டிருக்கும் பனங்குத்தியில் இருந்து வறுத்த அரிசிப்பொரியைக் கொறித்தபடி சைக்கிள் றிம்மில் பொருத்த்தப் பட்டிருக்கும் டைனமோவைச் சுற்றி ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். 
நாள் செல்லச் செல்ல நிலாவுக்கு அவன் மீதிருந்த இடைவெளி நீங்கி சகஜமாகப் பழகத் தொடங்கினாள். கல்லூரியில் படிக்கும் போது உங்களைப் பற்றி உலவிய கதைகளுக்கும் நேரே பழகும் போதும் எவ்வளவு வித்தியாசம், ஏன் வெளியில் சும்மா குளப்படிப் பெயர் எடுத்தீர்கள்?  எனக்கு திரும்ப யாழ்ப்பாணம் போக முடிந்தால் நண்பிகளுக்கெல்லாம் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நன்னடத்தைச் சான்றிதழ் கொடுப்பாள். சில நேரங்களில் இப்படி அவள் மனசில் இருந்து  பேசும் போது முகம் ரெத்த ஓட்டம் கூடி மினுங்குவதை நிமலன் அவதானித்தான் ஆனாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்று விட்டுவிடுவான். 
நிமலனின் உதவி செய்யும் குணத்தாலும் வெளிப்படைத்தன்மையாலும்  நிலாவின் தந்தைக்கும் அவனை நன்கு பிடித்திருந்தது, இரவில் அவன் வெளியில் எங்கும் சுற்றப் போகாவிட்டால் நிலாவின் அப்பாவுடன் தான் இருந்து அரசியல் பேசிக்கொண்டிருப்பான். ஊரெல்லாம் சுற்றி விட்டு சாமம் தடவித்தான் இவன் வீட்டுக்கு வருவதால் இந்த வயதிலும் வீட்டில் நல்ல  திட்டும் அடியும் வாங்குவான், சில நேரம் அவன் வரும் போது வீட்டில் எல்லாரும் தூங்கிப் போய் இருப்பார்கள், சாப்பாடும் இருக்காது, ஒரு நாள் காலையிலேயே எங்கேயோ வெளிக்கிட்டவன் மதிய உணவுக்கும் வரவில்லை, இரவாகி விட்டது இயக்கத்துக்குத் தான் போய் விட்டானோ என்று வீட்டில் பயம் தொற்றிக் கொண்டு விட்டது, எல்லா இடமும் அவனைத் தேடிக் களைத்து என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது எங்கேயோ சுற்றித் திரிந்து விட்டுக் கூலாக சீழ்க்கை அடித்தபடி அவன் வீட்டில் வந்திறங்க, நாங்கள் எவ்வளவு யோசித்துக் கொண்டிருக்கிறம் அவனைப் பார் என்று கத்திக் கொண்டு அருகில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து ஆத்திரம் தீரும் வரை தகப்பன் அவனை விளாசித் தள்ள, இளந்தாரிப் பெடியனை ஆக்களுக்கு முன்னால வச்சு இப்பிடியே அடிக்கிறது எண்டு சொல்லி நிலாவின் அப்பா தான் விலக்குப் பிடித்து தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். வெளியில எங்கையும் சாப்பிட்டேல்லைத்தானே என்று கேட்டுக் கொண்டே பாணையும் சம்பலையும் கோப்பையில் போட்டு அவனிடம் நீட்டினாள். எல்லோருக்கும் முன்னால் அடி வாங்கிய அவமானத்தால் அவளை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை, அரிக்கன் விளக்கையும் ஒரு கையில் பிடித்தபடி கைகழுவ அவள் தண்ணி ஊற்றும் போது தான் அவன் லேசாகத் திரும்பிப் பார்த்தான், அழுதிருக்கிறாள் போல கண்கள் லேசாகக் கலங்கிச் சிவந்திருந்தது , ஏதும் பேச முடியாமல் ஏன் என்பது போல் நாடியை உயர்த்திக் கேட்டான், ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள், மணிக்கட்டால் கண்ணைத் துடைத்துக் கொண்டு தயவு செய்து இனி எனக்கு முன்னால அடி வாங்காதீங்கோ என்று சொல்லி விட்டு வேகமாக உள்ளே நடந்தாள், அதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா பாத்தியே உவளை! என்பது போல் தாய்க்குக் கண் காட்ட அதைக் கவனித்த அப்பா, நிமலன் பார்வை தன் பக்கம் திரும்ப தெரியாதது போல் தலையைக் குனிந்து கொண்டார். எல்லாவற்றையும் அவதானித்த நிமலன் எதுவும் சொல்லாமலே வெளியே வந்து பலாமரத்தின் கீழ்  பாயை விரித்து கையை தலைக்கு முண்டு கொடுத்தபடி படுத்துக் கொண்டான்

காலை எழுந்து எல்லோருக்கும் பாண் வாங்கிக் கொடுத்து விட்டு அவன் வெளியில் புறப்படத் தயாரான போது, இண்டைக்கு வெள்ளிக் கிழமை சோலை அம்மன் கோயிலுக்குப் போகோணும் அம்மாக்கு வரேலாதாம் அதான், நீங்க வாறீங்களா ஒருக்கா போய்ற்று வருவம், இல்லையென்று சொல்லி விட முடியாத படி கண்களை இமைக்காமல் அவன் கண்களை உற்றுப் பார்த்துக் கேட்டாள், இப்ப ஒரு நண்பனைப் பாக்கத்தான் வெளிக்கிட்டனான், சரி அது நான் பின்னேரம் போறன், ம்..இப்ப  போகலாம் என்றான் 
முழுகிய ஈரம் சொட்டும் தலை முடியை விரித்து விட்டபடி நெற்றியில் ஒரு மெல்லிய திருநீற்றுக்குறியும் சின்னப் பொட்டும் தெத்திப்பல் சிரிப்புமாக பாரதி சொன்னது போல ”புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலமாக” அவன் கண்களுக்குத் தெரிந்தாள். இனி எங்கையும் போகேக்கை உங்களுக்கு வீட்டை சொல்லக் கஸ்ரம் எண்டா எனக்காவது சொல்லீற்றுப் போங்க சரியா, என்ன நிமலன் விளங்குது தானே, அவளன்று கேட்ட எல்லாத்துக்கும் ’ம்’ தான், இல்லையென்று அவன் எதுவுமே சொல்லவில்லை, கோயிலுக்குள் போய்  கும்பிட்டு விட்டு வெளியில் வந்த போது சோலையில் வெட்டிய மரக்குற்றிகள் வாசலில் போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள், நல்ல அமைதியா இருக்கென்ன, கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவமா நிமலன்,பிரச்சனை இல்லைத் தானே, கையில் இருந்த திருநீற்றை நீட்டியபடியே கேட்டாள். அதற்கும் அவன்  ’ம்’ தான். சிறிது நேரம் பேச்சு, சிறிது நேரம் மெளனம் இப்படியே இருபது நிமிடம் ஓடி இருக்கும். சோலைக்குள் இருந்து குரங்குகள் கொப்புகளில் ஊஞ்சலாடியபடியும், கத்தியபடியும் கூட்டம் கூட்டமாக பாய்ந்து வந்தது, அதில் நாலைந்து குரங்குகள் மரத்தில் இருந்து நிலத்துக்கு தொம் தொம் எனக் குதித்து மீண்டும் மரத்துக்கு தாவியது, அப்போது  நிலா உண்மையாகவே பயந்தாளோ என்னமோ இரெண்டடி தள்ளி இருந்த நிமலனோடு சடாரென வந்து செருகிக் கொண்டு அவன் கையை இறுகப் பிடித்தாள், அவள் கை அனலாகக் கொதித்தது, என்ன காய்ச்சலா நிலா? இப்பிடிக் கொதிக்குதென்று கேட்டபடி அவள் முகத்தைப் பார்த்தான், கண்கள் சிவப்பேறிக் கிடந்தது, அவனைப் பிடித்திருந்த கை மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது, அப்ப தான் நினைவுக்கு வந்தவள் போல கையை அவனில் இருந்து சடக்கென எடுத்தாள், அவன் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமலே தலையைக் குனிந்து உதட்டைத் திறக்காமல் சிரித்தபடி சற்று அரக்கி இருந்தாள், இவன் ஒரு பேக்கு என்று நினைத்திருப்பாள் போல, சரி நேரமாகுது போவமே என்று அவளே எழுந்தாள், வீடு போகும் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை, வாசலில் வைத்துத்தான், நிலா நான் ஜெகன் வீட்டை போறன் இரவு வர சிலவேளை நேரமாகும் என்றபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான், வந்ததும் வராததுமாய் எங்கடா போறாய்? உள்ளே இருந்து நிமலனின் தாய் கத்தினார், ஏன் நீயும் வரப் போறியே என்று கேட்டுக்கொண்டே அவன் வேகமாகப் போய் விட்டான். 

வழமை போலவே அவன் வீட்டுக்கு வர 12 மணி ஆகி விட்டது, எல்லாரும் படுத்து விட்டார்கள், நித்திரை கொள்ளாமல் இருந்திருப்பாள் போல சைக்கிள் விட்ட சத்தத்தைக்கேட்டு அரிக்கன் விளக்குடன் நிலா தான் வெளியே வந்தாள், அங்கை எல்லாரும் படுத்திட்டினம், இருட்டுக்க திரிஞ்சிற்று வாறீங்க கையையும் காலையும் அலம்பீற்று சாப்பிட வாங்க என்றபடி  தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள், அப்பாடா என்று காலை நீட்டி பலகையில் இருந்துகொண்டு உங்கட வீட்டில எல்லாரும் படுத்திட்டினுமா? மெதுவாகக் கேட்டான், இவ்வளவு நேரமும் பாத்துக்கொண்டு இருந்திட்டு இப்ப தான் படுத்ததுகள், நான் தான் கறி வச்சனான் எப்பிடி இருக்கோ தெரியாது, அவனுக்கு சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்து விட்டு தானும் ஒரு கோப்பையில் போட்டுக் கொண்டு வந்து  திருவலையை இழுத்துப் போட்டு அவனுக்கு முன்னால் தானும் சாப்பிடக் குந்தினாள், என்ன நிலா இவ்வளவு நேரம் நீங்களும் சாப்பிடாமையே இருந்தனீங்கள்?, மத்தியானம் பிந்தித் தான் சாப்பிட்டனான் நிமலன் அது தான் பசி இல்லை, இப்ப சும்மா உங்களோட கொம்பனிக்காகத் தான், சொல்லி முடிப்பதற்குள் அவளது அம்மாவின் அடக்கிய சிரிப்பொலியும், அப்பாவின் நக்கலான செருமலும் கேட்டது. பூநாகம் போல் கன்னத்தில் தொங்கிய முடியை இடது கையால் எடுத்து காதின் கரையில் ஒதுக்கி விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்துபவள் போலக் குனிந்து கொண்டு மண்டைக் கண்ணால் அவனுடைய முகத்தை ஒருகணம் பார்த்து விட்டு, நிமலன் கறி கொஞ்சம் போடட்டா என்று அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தாள், இனம் புரியாத பரவசநெகிழ்வில் தடுமாறியபடி நிமலன் வேகவேகமாகச் சாப்பிட்டான், மூச்சையும், பார்வையையும் ஆளுக்காள் உரை பெயர்த்தபடி அன்றைய இரவுணவு மறக்கமுடியாததொன்றாய்க் கடந்து போனது.

காலையில் எழுந்து பாண் வாங்குவதற்கு நிமலன் தயாரான போதே சூட்டுச் சத்தங்கள் தூரத்தில் கேட்கத் தொடங்கி இருந்தது. வெளியே போன போது சாவகச்சேரி காலையிலேயே கொஞ்சம் பதட்டமாக இருந்தது, இராணுவம் புத்தூர்ச் சந்தியால் ஊடறுத்து கொடிகாமம் பிரதான வீதிச் சந்திக்கு வர வாய்ப்பிருப்பதாக பலரங்கு பேசிக்கொண்டார்கள், அன்று பாண் வாங்க வந்தவர்கள் குறைவாக இருந்ததால் விரைவாகவே பாணை வாங்கிக் கொண்டு  நிமலன் வீட்டுக்கு வந்த போது வன்னிக்கு போவது குறித்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள், தங்களுக்கு கனகராயன் குளத்தில் சொந்தக்காரர் இருப்பதாகவும், பொம்பிளைப் பிள்ளையை வச்சுக் கொண்டு இராணுவத்துக்குள்ள இருக்கிறது பயமெண்டும் அதால இண்டைக்கு பின்னேரமே கிளாலிக்குப் போய் இரவோடிரவா கடல்கடந்து வன்னிக்குப் போவம் எண்டு யோசிக்கிறம் என்று நிலாவின் அப்பா சொன்னார், நிமலன் வீட்டில் யாரும் வன்னிக்குப் போகத் தயாரில்லை என்பதுடன் கிளாலிக் கடலுக்குள்ளால் வன்னிக்குப் போகும் மக்களை இலங்கைக் கடற்படை சுட்டும், வெட்டியும் கொல்வதாகவும் போன கிழமையும் கடலுக்குள்ள ஆறு படகுகளை நூற்றைம்பது சனத்தோடை வரிசையா அடிச்சு கடலுக்கையே தாட்டிட்டான், அதால தான் ரிஸ்க் எடுக்க யோசிக்கிறம் எண்டு நிமலனின் அப்பா சொன்னார். 
பேச்சுகளின் முடிவில் நிலாவும் குடும்பமும் மாலையே புறப்படுவது என்று தயாரானார்கள், அவர்கள் கொண்டு செல்வதற்கான பொருட்களை நிமலன் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான், இனம் புரியாத வெறுமையும், தன்னில் இருக்கிற எதையோ இழந்து விட்ட உணர்வும் அவனுள் உடுக்கடித்து தாண்வமாடியது.  நேரத்தைப் போல இரக்கமற்ற வேறெது தான் இந்த உலகத்தில் இருக்கிறது? பொருட்களைக் கட்டி வைத்து விட்டு நிலாவோடு ஆறுதலாக பேசுவோம் என்று யோசித்திருந்தான் நிமலன் ஆனால் மாலை மிகவேகமாகவே வந்துவிட்டது. அவர்களை ஏற்றிச் செல்வதற்குத் தயாராக வாகனமும் வந்து நின்றது. சத்தம் கிட்டக் கிட்டக் கேக்குது பிரதான வீதிக்கு ஷெல் போடத்தொடங்கினாங்கள் எண்டா பிறகு போகேலாது கெதியா ஏத்துங்கோ, வாகனஓட்டி கிடந்த கொஞ்ச நேரத்தையும் பரபரப்பாக்கிக் கொண்டு நின்றான். நிலாவின் அம்மம்மா, அம்மா, அப்பா ஒவ்வொருவராக வாகனத்தில் ஏறி விட்டார்கள், கண்கலங்கிக் கொண்டு நின்றவள் வாகனத்துக்குள் ஏறத் தயாரானவுடன் விம்மி வெடித்து குலுங்கிக்குலுங்கி அழுதூத்தத் தொடங்கி விட்டாள்.நிமலனால் எதையும் வெளிக்காட்ட முடியவில்லை, நிலா அழாம ஏறுங்கோ என்று கூடச் சொல்ல முடியவில்லை, எதையாவது சொல்ல வாய் திறந்தால் கண்ணிரெண்டும் சிதறக் கதறி அழுதுவிடுவேன் என்ற பயத்தில் எச்சிலைக் கூட  விழுங்க முடியாமல் அந்தக் கணத்தைச் சமாளித்துக் கொண்டு நின்றான். நாங்களெல்லாம் உன்னோடதானே வாறம் பிறகென்னத்துக்கடி இப்பிடி அழுகிறாய்? வாகனத்துக்கு உள்ளே இருந்து அம்மம்மா சத்தம் போட்டார். அவள் தனது தகப்பனைப் பார்த்தாள் அவர் ஓம் என்பது போல் தலையாட்ட அவள் நிமலனிடம் என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் கைவிரலைச் சும்மா வைத்திருக்க முடியாத யாரோ ஆமிக்காரன் துப்பாக்கி விசையை அழுத்தி இருக்கிறான் போல, சன்னங்கள் விண் கூவிக்கொண்டு சடசடத்தபடி மாமர இலைகள் மேல் வந்து விழத்தொடங்கியது. தங்கச்சி கெதியா ஏறுங்கோ இனி என்னால நிக்கேலாது வாகனஓட்டி பலமாகக் கத்திக் கொண்டு வாகனத்தை மெதுவாக உருட்டத் தொடங்கினான். வாய் திறந்தும் வார்த்தை வருவதற்குள் வேறு வழி இல்லாமல் அவள் வாகனத்துள் ஏறினாள், வாகனம் மெதுவாக நகரத்தொடங்கிற்று, அவளுக்கு கை காட்டி விடை சொல்லும் அளவுக்கு நிமலன் நெஞ்சழுத்தக்காரன் இல்லை என்பதால் தலையை மட்டும் ஆட்டிபடி வாகனத்துக்குப் பின்னாலேயே நடந்தும் ஓடியும் படலைவரை வந்தான். வாகனம் மெதுவாக ஓடி ஒழுங்கையால் திரும்பி மறையும் வரை பசுவைக் கன்று பார்ப்பது போல் தலையைச் சரித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளே வரமனமில்லாமல் வேலியில் கிடந்த கிளுவங்காயை புடுங்கிச் சப்பிக்கொண்டே வீதியிலேயே கொஞ்ச நேரம் நின்றான். திரும்பி உள்ளே வந்த போது பிணமெடுத்த வீடுபோல் எல்லாமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. அவள் எப்பவுமே குந்தி இருக்கும் திருவலைப்பலகை இருப்பதற்கு அவளில்லாமல் மூலையில் சாத்தப்பட்டுக் கிடந்தது. அதற்குள் இனியும் நின்றால் பைத்தியம் பிடித்து விடும் என்று வீட்டை அடித்துச் சாத்திவிட்டு அவன் வெளியே வந்தான். 

அடுத்தடுத்த நாளே சாவகச்சேரியில் இருந்தும் இடம்பெயரவேண்டி ஆயிற்று, குடும்பத்துடன் கிளாலிவரை ஓடிய நிமலன் அதுவும் இராணுவத்தினர் வசம் விழுந்து விட  எங்கும் போக முடியாமலும், வேறெதுவும் செய்ய முடியாமலும் மக்களோடு மக்களாக யாழ்ப்பாணத்துக்கு திரும்பினான், அதன் பிறகு வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் முற்றாகத் தொடர்பறுந்து போனது.அதனால் அவளைத் தொடர்பு கொள்வதற்கு எந்த வழியுமே அவனுக்குக் கிடைக்கவில்லை, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் விமானத்தாக்குதல்,ஷெல்லடி இல்லாவிட்டாலும் அச்சம் நிறைந்த அடிமைச் சூழலுக்குள் வாழ்வதென்பது அவனுக்குப் பழைய நிம்மதியைத்  தரவில்லை, அடக்குமுறையைத் தாங்கமுடியாமல் அவன் தெரிவு செய்த பாதையால் அவன் வாழ்க்கையிலும் இன்றைக்கு என்னென்னவோ எல்லாம் நடந்து போயிற்று, நேற்றுத்தான்  தான் அவளோடு பழகியது போலஅவனுக்கின்னும் நினைவுகள் பசுமையாக இருந்தாலும், பதினேழு வருடங்கள் ஓடிப் போய் விட்டது. வாழ்க்கைக் காலம் முடிந்து போவதற்குள் ஒருமுறையாவது அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற தவிப்பில் அவன் இன்னமும்  அவளைத் தேடிக்கொண்டிருக்கிறான். ஒருவேளை அவளும் கூட இவனை எங்காவது தேடிக்கொண்டிருக்கலாம்..

தி.திருக்குமரன்

1 comment:

  1. நினைவுகளை மீட்டிய அருமையான சிறுகதை. வாழ்த்துக்கள்.
    ஒரு சில சிறிய தர்க்கரீதியான தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete