Tuesday 8 October 2013

அனுக்கிரகம்..

அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?

வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!

வீணையை வானம்பாடி
மீட்டினால் எழுந்துவரும்
கானந்தான் ஏதுமுந்தன்
காதுகளிற் கேட்கிறதோ!

இதழாற் காதுமடல்
இழுத்துக் கடித்தபடி
பிடரிக்குள் விரலூரும்
பெருஞ்சுகத்தின் கிறுக்கத்தில்
கண்ணிருட்டிப் போவது போல்
காய்கின்ற அந்தியிலே
ஊறுகின்ற நினைவுகள் தான்
உனைக்கரைத்து விட்டதுவா!

கடற்தொடுப்பின் கரையிலுள்ள
கற்தூணில் மெல்லமெல்ல
உடற்பாரம் முதுகினிலே
ஊன்றி, தேய்த்தபடி
குந்திவிட்டாய் வினாக்குறியாய்
கூனி, கொதித்தெரியும்
எந்த வலியெனினும்
இடியாமல் அதன் சுவையை
அனுபவித்துச் சுகிக்கின்ற
அனுக்கிரகம் உனக்குளது
தனித்துப் போனாயெனும்
தடுமாற்றம் ஏதுமில்லை

யாருமற்ற கடற்கரையும்
அரையிருளும்,குளிர்காற்றும்
தூரத்தில் எங்கிருந்தோ
துமிக்கின்ற ஓரிசையும்
தாழ்ந்துயர்ந்து மிதந்து செலும்
தனித்தனிப் பறவைகளும்
வாழ்வுக்குப் போதாதா
வழி நெடுக, கை நிறைய
கட்டியணை முழங்காலை
கண் கலங்கும், பிறகென்ன
அழகான தனிமையடா
அப்படியே செத்து விடு..

No comments:

Post a Comment