Friday, 10 March 2023

கடலாகும் கணம்..

கடலை நோக்கித் தான் 
போகிறோமென நதி அறிவதில்லை 
இறுதியில் சேருமிடம் 
கடலாகிறது 

நாமும் கூட 
எதையும் நோக்கி போவதில்லை 
போய்க் கொண்டிருக்கிறோம் 

நெடிய பயணத்தின் இடையில் 
எத்தனையோ கனவுகள்  
குட்டைகளில் தேங்கி 
காய்ந்து விடுகிறது 

ஆயினும் 
நதி போலவே நாமும் 
நடப்பதை நிறுத்துவதில்லை 

ஒரு நதி 
வழி வழியே கிளைகளையும் சேர்த்து 
பெருகி நடப்பதைப் போல 
போகப் போக எம்மீதும் 
புதிய கனவுகள் ஏறிக் கொள்கின்றன 

தொடங்கும் போது 
இருந்த நான் 
இப்போது இல்லை 
எதிர்ப்படும் குன்றுகளில் இடித்து 
மோதிச் சிதறுவதில்லை
பள்ளங்களைப் பார்க்காமல் 
பாய்வதில்லை
மோதாமல் 
சுற்றி வருகிறேன்
பாயாமல் 
பெளவியமாய் இறங்குகிறேன் 

எவ்வளவு மாறிற்று இயல்பு 

பெருகி முதிர்ந்து வர 
கடலின் ஓசை 
நதியின் காதுக்கு கேட்குமாம் 
எனக்கும் கூட 
கேட்பது போல் இருக்கிறது 

இந்த பயணத்தில் இனி 
திரும்புதல் எப்போதும் இல்லை 
கனவு மூட்டைகள் கனக்கிறது 
இனிச் சுமக்க இயலாது 
கடலாகும் அந்த கணத்திற்கு 
காத்திருக்கிறேன்.. 

Monday, 6 March 2023

மெளனத்தில் நிகழும்..

 அருகில் இல்லை 

ஆனால் 

நாசியில் இன்னும் 

உன் வாசம் 


தொடுதல் இல்லை

ஆனால் 

விரல் நுனியில் இன்னும் 

உடற் சூடு


பேசுவதில்லை 

ஆனால் 

எங்கிருந்தோ கேட்கும் 

உன் குரல் 


பார்ப்பதில்லை 

ஆனால்

ஏதோ ஒரு கண் சிமிட்டலில் 

உன் முகம்


சுவைத்தலும் இல்லை 

ஆனால் 

உதட்டில் கசிகிறது

நினைவின் ஈரம்


இப்படித்தான் கண்ணம்மா 


உண்மை உறவு மெளனத்தில் நிகழும்..