புதன், 26 பிப்ரவரி, 2014

பறந்திடு போ..

உன்னைப் புரிந்தோர்க்கு
உனை விளக்கத் தேவையில்லை
உனையறியா மனங்களுக்கோ
உனை விளக்கிப் பயனுமில்லை

சின்ன வாழ்க்கையடா
சீக்கிரம் முடிந்து விடும்
வண்ணங்கள் கனவுகளில்
வற்றி, வெளுப்பதற்குள்
என்ன மனம் சொல்கிறதோ
ஏறி நட, அப்பொழுதில்

மனப் பறவைக் குஞ்சுக்கு
மயிர் சிலிர்க்கும், இறகு வைக்கும்
இனம் புரியா இதமொன்று
எங்கிருந்தோ உனைத் தழுவ
சிறகடிக்கும், மென்காற்று
சிலிர்ப்போடு உனைத் தழுவும்
பறவைக்கு இனியேன் சொல்
மனப்பாரம்? பாதை அதோ
பற, திரும்பியினிப் பார்க்காதே
பறந்திடு போ..

புதன், 12 பிப்ரவரி, 2014

நடைப்பிணம்..

நீதியே பேசிப் பேசி
நீதிக்காய் வாழ்ந்து வாழ்ந்து
ஏதுமே அற்று மற்றோர்
இகழுதற்குரியனாகி
வீதிக்கு வந்து முற்றி
விசரனும் ஆகி, கேட்க
நாதியே அற்று நாறி
நடைப்பிணமாகி மாண்டேன்

இயங்குதல் செத்து வெற்றாய்
இருப்பதும், மூச்சு நின்று
இயங்குதலற்று மூளை
இறப்பதும் ஒன்று தானே

அகதியாய் ஓடியோடி
அலைவுற்று நொந்து வாழ்வை
சகதியிற் கீழாய் ஆக்கிச்
சரிந்த பின் திரும்பிப் பார்த்தால்
எதுவுமே இல்லை, பக்கம்
எவருமே இல்லை, அன்றே
அவர்களோடொன்றாய் நானும்
அடியுண்டு போயிருந்தால்
இத்தனை கீழ்மையின்றி
இன்னும் நான் வாழ்ந்திருப்பேன்..