Monday, 23 December 2024

வானமெனும் ஞானம்..

வானமென நாம் வழங்குவதன் கீழ்

முடிவற்ற திரை அதில்

கனவுகள் சிறகுகளாய்

சிதறிப் பறக்கின்றன

-

விண்ணும் மண்ணும் கலக்கும்

தொடுவானம்

மாந்தக் கண்ணறிந்த எல்லையின்மை,

அதன் கீழ் ஊரும் வளி

நிலைத்திருக்கும் மென்கதைகளைக்

காவுகின்றது

-

விண்மீன்கள் இரவுகளின்

விளக்குகளாய் தொங்குகின்றன,

மின்னி மின்னிச் சைகை செய்யும்

அவை ஒவ்வொன்றும்

சொல்லப்படாத மறைகளின் காப்பாளர்கள்

-

நிலவு

தனிமையான பயணி

உலகை வெள்ளித் தூரிகையால்

வண்ணம் தீட்டுகிறது

-

மேகங்கள்

நீலவீதிகளில் அலையும் நாடோடிகள்,

அவற்றின் வடிவங்கள்

இறையின் நிலையற்ற மொழி.

ஒவ்வொரு பார்வையின் கனத்தையும்

வியப்பையும், ஏக்கத்தையும்,

விடையற்ற கேள்விகளையும்

அவை சுமக்கின்றன இல்லையா?

-

இந்த வானம்

எல்லையற்ற எண்ணங்களின் கண்ணாடி

பார்க்கத் துணிபவர்களின்

ஆன்மாவை பிரதிபலிக்கிறது.

அதன் ஆழங்கள்

பயத்தையும் பிரமிப்பையும் கொண்ட பாதாளம்

ஆயினும் அஃது

நம்பிக்கையின் மெல்லிய ஒளியையும் தாலாட்டுகிறது.

-

அசையாது நில்

விண்ணகம் பேசட்டும்,

ஏனெனில் அதன் அமைதியில்

பிரபஞ்ச உண்மை உறைகிறது.

-

வானம் காலத்தால் உடைக்கவும்

அளக்கவும் முடியாத திரை

மண்ணுலக மாந்தரை எல்லையின்மையுடன்

பிணைக்கும் ஏதோ ஒன்று

வெளிக்கப்பால் வெளியாய்

விரிந்து விரிந்து..

-திரு

No comments:

Post a Comment