Tuesday 24 April 2012

நானெனும் ஓரலை..

ஆண்டுகளாய் வாழ்ந்தின்று
அடி பெயர்ந்து வீழ்ந்துள்ள
நீண்ட பெருமரத்தின்
நினைப்பில் படாதின்னும்
உயிர் தக்கவைத்துள்ள
ஓர் கிளையின் இளந்தளிர்
நான்

ஆழ்ந்தடங்கிப் போயுள்ள
அடரிரவில் எங்கேயோ
பாழ்விதியை நொந்தழுது
பதைபதைப்பிற் கூவுகின்ற
பறவைக் குரலலையின்
படபடக்கும் ஓரிழை
நான்

முட்டுகின்ற தொடுவான
முடிவிலிருந் தெழும்புகின்ற
வட்டச் சூரியனில்
வழிகின்ற விடியலின் மேல்
பட்டுவிட எத்தனித்துப்
பறக்கின்ற ஓரலை
நான்

எதற்குள்ளோ எங்கோ
எப்போதோ இட்ட முட்டை
அதற்கான காலத்தில்
அவிழ்ந் துயிர்க்கும் அந்நாளும்
எப்போது வருமென்று
எண்ணி அந்த வானத்தைத்
தப்பாமற் தினமேங்கித் தவிப்போடு பார்த்தபடி
அப்பாலே கடலில்
அசைகின்ற ஆமையைப் போல்
இப்பாலே காத்திருந்து
இயங்குகிற ஓர் மனம்
நான்..

தேற்றும் நினைவுகளின் தோற்றம்..

ஓட்டுக்குள் நத்தை போல்
ஒழித்திருந்த உன் நெஞ்சம்
பாட்டமாய்ப் பெய்கின்ற
பருவ மழை ஈரத்தில்
மூசித் தீப்பிடித்து
மூச்செல்லாம் மோக அலை
வீசி அடித்துள்ளே
விண் கூவ, விரக மணம்
நாசிக்குள் படர்தெங்கும்
நனைக்க, என் மனசின்
வீட்டுக்குள் மெல்ல
விரைந்தூரத் தொடங்குதடி

உந்தனது மன ஆசை
ஊர்ந்து வரும் வழியெங்கும்
சிந்துதடி வீணீராய் இழுபட்டு
சிலிர்த்த மன
எண்ணச் சுவர்தனில் நீ
ஏறுகையில் ஈரலிப்பு
திண்மைக் கர்வத்தின்
தீராத வெம்மையினை
தண்மைப் படுத்தித்
தணிக்குதடி, நாடிகளை

கவ்விக் கவ்வி நீ
கடக்கையிலே சூடாக
இவ்வளவும் இருந்த
ஏதேதோ கோபமெல்லாம்
அவ்வளவு அழுக்கும்
அகன்று குளிராகி
தவ்வுகின்ற குழந்தை போல்
தவழுதடி உன் முன்னே

உணர் கொம்பை நீட்டி
உண்மை மனசு தனை
உணர்ந்திட்ட உன் நெஞ்ச
உறவின் நினைவலைகள்
என்றைக்கு மீண்டும்
ஏறும் முருங்கை மரம்?
என்றைக்குத் தன்னை
இழுத்தடக்கும் ஓட்டுள்ளே?

என்றைக்கு என்னால்
உனையறிய முடிகிறதோ
அன்றைக்கே நானுலகை
அறிவேன், அதுவரையில்
சென்று வா நினைவே
சீக்கிரமாய், என் எழுத்து
நின்று விட வேண்டாமா
நிலைத்து..

உரமாக்கப் போகின்றாய் உனக்கு..

உன்னினைவுப் பார்வையினில்
ஒழிப்பதற்காய் விரைவாக
என்னால் இயன்றளவும்
இழுத்தோடி தெருத்தெருவாய்
பாய்ந்து கடந்து படபடக்கப்
பதுங்கி மெல்ல
எனைத் தொடர்ந்த படியா நீ
இன்னும் வருகின்றாய்
எனத் திரும்பிப் பார்த்தால்
என் முதுகின் பின் அப்படியே
பார்த்தபடி தொடர்கின்ற
பாழ் நிலவினைப் போல்
வேர்வை மணம் சொட்ட
விம்மலுடன் உடல் சிதைந்து
படிம உருவாக என் முன்னே
படர்ந்து, நானும்
ஊரைத் தேசத்தை
உப கண்டம், கண்டத்தை
ஓடிக் கடந்தும்
ஒற்றன் போல் என் பின்னால்
தேடி வருகின்ற என்
தேசப் பளிங்கே பார்..!

தூரம் கடந்தோடத்
துடிப்பின்னும் கூடுவதை
ஆரிதயம் இப்படியாய்
அடிக்கிறது? நெஞ்செரிந்து
ஊரெரிந்த வெக்கை
உள்ளே கொதிக்கிறதே
என் பின்னால் ஓடி நீ
இவ்வளவும் வந்து விட்ட
களைப்பா இப்படியாய்
கடகடென்று அடிக்கிறது
ஒருவேளை
உன் துடிப்பா என்னுள்
ஒலிக்கிறது இல்லையெனில்
என் துடிப்பா உன்னுள்
ஏனெனிலோ துடிப்புகளுள்

கையறு நிலையில்
கையறுந்து வீழ் நிலையின்
ஒப்பாரி கூச்சல்
உடைந்தலறி விழுகின்ற
உயிர் கதறும் ஓசை
உஸ்ணப் பெரு மூச்சு
வார்த்தைகளில் வர முடியா
வதையின் கொடுமைகளை
கையிரெண்டால் மண்ணள்ளிக்
கசக்கி முனகுகின்ற
காதுச் சவ்வறுந்து
கலங்கடிக்கும் ஈனஸ்வரம்
நெஞ்சின் செவிப்பறையில்
நெருப்பூற்றி கருக்கிறதே
காலிரெண்டும் நடுங்க
கட்டறுந்த கை நரம்பு
ஓலத்தில் உதறுகின்ற
உயிர் வதையைத் தாங்காமல்
நெஞ்சு முடி பிய்த்து
நெடுஞ்சாணாய் வீழ்கிறதே

ஒற்றைக் காலூன்றிச்
சிவர் மேலே சாய்ந்து நின்று
உள்ளிழுத்துப் புகையை
ஊதி, பெண்களினை
ஓரத்தால் பார்க்கின்ற
ஊன் தேவை அறுந்தின்று
பால் வேறு பாடெரிந்து
படர்கிறதே பார்வைகளும்
என்னைக் கடக்கின்ற
எவரேனும் எனக்கிப்போ
ஓர் நிழல் உருவாய்த் தான்
உள்ளே தெரிகின்றார்
பைத்தியமா எனக்கென்று
பார்க்காதே என் மண்ணே!
உந்தனது நடையின்
ஒவ்வோர் அடி வைப்பும்
எந்தனது காலுக்குள்
இப்பொழுதும் அதிர்க்கிறது

உன்னைப் பிரிந்தென்று
ஓரடியை வேற்றிந்த
மண்ணில் நான் வந்து
மரித்துப் போய் வைத்தேனோ
அன்றிருந்து உறவெல்லாம்
அறுந்தறுந்து ஒவ்வொன்றாய்
என்னைத் தனியாக
எறிந்து விட்டுப் போகிறது
முதல் வீழ்ச்சி கொஞ்சம்
மூச்சடங்க வைத்தாலும்
அதுவே அடிக்கடியும்
ஆவதனால் பழகிப் போய்
பொது வாழ்வே எனக்குப்
பொருத்தமென்று ஆகிறது

மரமெனில் நிழலாய்
மனமெனில் நினைவாய்
கரமெனில் விரலாய்
கவியெனில் பொருளாய்
புகலிட மண் பனிப்
புகையாய் என் முனே
பூத்து மணக்குமென்
பூர்வீக தேசமே!
மரமாகப் போகுமென்
மனந்தனை மாற்றி நீ
உரமாக்கப் போகிறாய்
உனக்கு..

நிசம் உணர்ந்தணிந்த நெருப்பாடை..

நீறாவாய் என அறிந்தே
நெருப்பாடை தனை அணிந்தாய்
மாறாமல் நீள்கின்ற
மண்ணின் விதி இதனால்
தேறி விடும் எம்
திசையெங்கும் ஒளி சுடரும்
பாறி அடியோடு
படுகுழியில் வீழ்ந்துள்ள
விடியல், உனையெரித்தால்
வெளிக்கும் என உணர்ந்தே
வாழ்வை வசந்தத்தை
வழிந்தூறும் காதலினை
ஊழ்வினை எனச் சொல்லி
ஒதுக்கி குழந்தைகட்காய்
தகிக்கும் என் அறிந்தும்
தரித்தா யிவ்வாடையினை

என்றோ ஓர் நாளில்
எமக்கான கிழக்குதிக்கும்
அன்றைக்கு, அதன் முன்னே
ஆருயிரை நீ துறந்து
சென்றிடலாம், வெற்றிச்
சிறப்பதனைக் காண்பதன் முன்
கண் மூடி உன் காலம்
காலம் ஆயிடலாம்
என்றறிந்தும் எதற்காக
இதைத் தரித்தாய்? மகிழ்வாக
ஓடைக் குளிர்மலரின்
உணர்வொத்த ஆடைகளை
உன்னுடைய சந்ததிகள்
உடுக்கட்டும் எனத்தானே!

காலி முகத்திடலின்
கடற்கரையில், பூங்காவில்
வேலிக்கரையோரத்தில்
வீட்டிற்குப் பின் புறத்தில்
காது மடலுரசி
கன்னத்தை நனைய வைத்து
பாதி விழி செருகப்
பார்த்து இரு விரலால்
முதுகூசி தன்னை
முனகலுக்குள் கழற்றி விட்டு
எதுவோ சாதித்த
இறுமாப்பில் பல்லிளித்து
சுதி வாழ்வை உந்தனுக்கும்
சுகித்துவிடத் தெரியாதா?

வெடித்த குண்டுகளின்
வீச்சில் சிதறிப் போய்
துடித்துக் கொண்டிருக்கும்
துண்டுத் தசைகளிடை
சாதியினை மட்டும்
சரியாகப் பிரித்தெடுத்து
நாலு சொல்லு
பெண்ணியத்தை அதற்குள்
பிரட்டிக் குழைத்து விட்டு
மாற்றுக் கருத்தாளன்
என்கின்ற மறைப்புக்குள்
மாற்றானின் திட்டத்தை
மறைத்து மேட்டிமையில்
ஏட்டில் சுரக்காயென்றெழுதி
இது எங்கள்
நாட்டுக்குரிய நல்ல கறி
என்று சொல்லி
ஓட்டத் தெரியாதா
உந்தனுக்கும் வாழ்வதனை?

வாழ்வதற்கு உனக்கிங்கே
வழி இருந்தும் அதற்கான
வாழும் முறை தெரிந்தும்
வளையாமல் உன் வாழ்வை
சுளையாக இம் மண்ணின்
சுக விடிவுக்காகவென்று
பிழைக்காய் என அறிந்தும்
பெருங்கொடையாய்த் தந்து சென்றாய்

கழுத்தில் நஞ்சணிந்த சிவனாய்
களத்தில் நீ
எழுதி விட்டுச் சென்றதிங்கே
ஏராளம், சுய விருப்பில்
நெருப்பாடை தன்னை
நீயணிந்து கொள்ளவில்லை
உருப்படா நீசர்கள்
உனையணிய வைத்தார்கள்
கொம்புக்கு மண்ணெடுக்கும்
குணமில்லை உந்தனுக்கு
அம்புக்கு எதிரம்பு
அடித்தாய் அவ்வளவே

உன்னுடைய காலத்துள்
உய்யும் என எண்ணி
உன்னாலியன்ற வரை
உழைத்தாய் ஆனாலும்
தன்னுடைய காலமின்னும்
தாண்டவில்லை காலத் தீ
அடுத்து வரும் சந்ததியின்
அழகொழுகும் மேனிகளில்
உடுத்தி விட நினைக்கிறது
உன் உடையை, அவர்களுக்கும்
அதையணிந்து செல்வதற்கு
ஆசையில்லை, எதிரிகளாய்
அதையணிய வைத்தால்
அவர்களுந்தான் என்ன செய்வார்...?

கண்ணாடி முன்னின்று கதைத்தல்..

உனைச் சுற்றி இருந்தோர்கள்
ஒவ்வொருவராய் மெல்ல
தனக்கான வேளை வந்துவிட சிரித்தபடி
தலையாட்டி விடைபெற்றுப் போய்விடவும்
இப்போதில்
நீயும்,கவிதைகளும் நெடுமூச்சு வளர்கின்ற
நினைவுகளும் மட்டும் எஞ்சிக்கிடக்கின்றீர்

எல்லோரும் போய் உன்னை
ஓர் புறத்தில் தனியாக
சொல்லாட விட்டு விடும்
சுகம் உனக்கும் பிடிக்கும் தான்

எதை நினைத்துக் கொண்டிப்போ
இருக்கின்றாய் என்பதுவோ
இதையிப்போ ஏன் நினைத்தாய்
என்பதுவோ இப்போதில்
உந்தனுக்கு ஏனோ ஒன்றும் புரிவதில்லை

எதுவோ ஒன்றை நீ
எண்ணுதற்குள் விரைவாக
அது உன்னைக் கடந்து
அப்பாலே செல்கிறது

எதற்காக நீ இப்போ
இரங்குகிறாய் என்பதுவோ
எதற்காகச் சிரிக்கின்றாய்
இடிகின்றாய் என்பதுவோ
உனக்கிப்போ ஒன்றும்
உறைப்பதில்லை, உன்னுடைய
கவலைதானென்ன? ஏன்
கலங்குகிறாய் என்பதுவும்
உனக்கே நிசமாக
ஒன்றும் தெரியாது

கண்கள் நிலைக்குத்தி
ககனத்தில் அலைகிறது
உன்னிதயத் துடிப்பை நீ
உணருகிறாய், தலைகோதும்
அன்பான ஓர் வார்த்தை
ஆறுதலாய்ச் சாய்ந்து விட்டு
தெம்பாக எழுந்திருக்கத்
தெய்வீக மடி ஒன்று
என்பாலும் வாராதா
என்றெண்ண அலைஅலையாய்
தன் பாலம் கடந்தவையும்
தாண்டி எங்கோ போகிறது

வெடித்தது போலுள்ளே
வீணிதயம் வலித்தாலும்
உடைந்து விடாதென்ற
உறுதி உனக்குள்ளே

உனக்கான ஓர் நாடு
உயிர் நீத்த வீரர்கள்
தனக்கான வாழ்வைத்
தவிர்த்து அவர் கொடுத்த
விலைகள், அதற்கின்னும்
விடையில்லை என்பதுவும்
உலைபோல ஒரு பக்கம்
உருகிக் கொதிக்கையில் நீ
மலை உடைந்து வீழ்வது போல்
மனம் வீழ்வாய், உனக்கிப்போ

வழங்கப்பட்டுள்ள வாழ்வினையும்
நீ கண்ட
வலிகள் நிறைந்தூறும்
வழிகளையும் என்னாலே
வாழ்க்கை என்ற சொல்லாலே
வரைந்து விட முடியவில்லை
வாழ்க்கை என்கின்ற
வலிமை நிறை சொல்லுக்குள்
போக்கறுந்த உன் வாழ்வு
பொருந்தாது ஆதலினால்

உன் போக்கைச் சொல்லுதற்கு
உரிய தகு சொல்லொன்றை
எனக்கான மொழியெங்கும்
இயன்றவரை தேடுகிறேன்
எப்படியும்
வார்த்தையை வனைந்தெடுத்து
வருவேன் அதற்குள் நீ
சோர்ந்துந்தன் ஆயுளுக்குச்
சோரம் போய் வீழாதே
சேர்ந்து வருவேன் நான்
சிந்தாதே அது மட்டும்
ஊர்ந்து போகும் உன்
உயிரை விரைவாக
ஓடிப் போவதற்குத் தூண்டாதே
வருவேன் நான்..

மனத்தின் பயணம்..

சாகாவரை மனதிற்
சஞ்சலங்கள் சஞ்சரிக்கும்
போகாது உயிரின் முன் புறப்பட்டு
நோகாமல்
இருந்தால் மனமில்லை அதன் பெயரும்
விட்டு விடு
வருந்திப் பின் வழிக்கு வரும்

வரும் நேரம் வாழ்க்கை
வசந்தத்தின் சாவிதனைத்
தருமென்று எண்ணிடுதல் தவறு
உருவழிந்து
வந்த தடம் கூட வழிகளிலே
இருக்காது
இந்த நிமிடந்தான் இனி

இனிக்காலம் எம்மை
எம்மை எதற்கும் தயாராக
தனிக்காட்டின் நடுவிற் தள்ளி விடும்
நுனிப் புல்லில்
பனித் துளியாய் வாழ்வு பழகி விடும்
தன் வாழ்வை
தனித்துணையாய் கொண்டு தான்

தானென்ற தன்மை
தாண்டு விட இவ்வருகை
ஏனென்ற கேள்வி எழுகையிலே
வானென்ற
அகண்டவெளி வீடாகும்
ஆகும் மனமது போல்
இகம் பரமொன்றாகும் இதம்

இதத்தை இன்மையினை
எதனையுமே உணராத
பதத்தில் மனமான பருத்திப் பூ
மிதந்தபடி
வெளிக்கப்பால் வெளிகடந்து விரைய
அன்பென்ற
ஒளிக்கப்பல் உனையேற்றும் உள்

உள்ளே ஒளி கசிய
உணர்வெழுந்த சித்தார்த்தன்
தள்ளி அரியணையைத்
தவிர்த்தான் தான் ஆனாலும்
அரசவையின் பொறுப்பை
அதன் சுவையை உணர்ந்திட முன்
தெரிந்தவன் சொல்லி வைத்த
தெளிவான சொல்லை விட

ஆண்டு அனுபவித்து
அதன் சுவையை உணர்ந்து வெற்றி
பூண்ட பின்பும் அதைப்
புறந்தள்ளிப் போட்டு விட்டு
பேசாமற் சென்று விட்ட
பேரரசன் அசோகனவன்
பேசாத வார்த்தைகளே
பேருண்மை வழியாகி
ஓருண்மையாய் உள்ளே
ஒளிரும்..

Saturday 21 April 2012

சன்னம் வரைகிற வட்டம்..


விரலொன்று விசை ஒன்றைத் தட்ட
விர் என்று
விரைகின்ற குண்டொன்று மார்பொன்றை
துளைத்துப் பாய்கின்ற
துவாரத்தின் வட்டத்துள்
ஓர் வாழ்வு மட்டுமா
உடைந்து போய்க் கிடக்கிறது..?

பெயரற்றுக் கிடக்கின்ற
பிள்ளையைப் பெற்றவளை
பெயர் சொல்லப் பெற்ற
பெற்றவரின் பெருங்கனவும்,
கையொன்றில் அவளைக்
கவனமாய்ச் சேர்க்கும் வரை
கண் துஞ்சாதவர் உழைத்த
கடின உழைப்பதுவும்,
அதன் பின்னவழும் தன்
அன்பான துணையோடு
வாழ்ந்துணர்ந் தனுபவித்த
வசந்த காலங்களும்,
அழகிழந்து போனாலும்
அது தான் தன் அழகென்று
உள மகிழ்ந்து இவனும் உள்
உதைக்கச் சுமந்ததுவும்,

பெறப்பட்ட பாடும்
பின்னே வளர்ப்பதற்கு
இரவுத் தூக்கத்தை
இழந்ததுவும், அனுதினமும்
தசை வளர்வைப் பார்க்க
தவித்த மகிழ்வதுவும்,
தனக்கு மேல் வளர்ந்து
தளிர்க்க, மாப்பிளையாய்
மனக் கண்ணால் பார்த்து
மகிழ்ந்ததுவும், எல்லாமே

ஓர் குண்டு பாய்ந்து
உள் நுளைந்து சென்று விட்ட
மார்பின் வட்டத் துவாரத்துள்
மரித்துப் போய்
அர்த்த மற்ற ஒன்றாகி
அலறித் துடித்த படி
பெரும் புண்ணாய் மார்பில்
பிளந்த வட்டக் கரை மேலே
அலைந்து அதைச் சுற்றி
அனுங்கித் திரிகின்ற
ஈக்களைப் போல
இவருலகும் அதைச்சுற்றி
சாக்களை கொண்டதிலே
சரிகிறது, இதுவெல்லாம்

விசையழுத்தும் அந்த
விரல்களுக்குப் புரியாதோ
ஒரு வேளை
மூளையும் மனமதுவும்
முழுதாகத் தூங்குகிற
வேளையைப் பார்த்துத் தான்
விரல் விளையாடுகுதோ?

இன்னொன்று

வீழ்ந்த இவன் இனிமேல்
விழிக்கான் என்றறியாமல்
விளையாடித் திரிகின்ற
இவன் குழந்தை ஓரத்தில்
ஆழ்ந்த பெரு மூச்சோடு
அழுவோரைப் பார்த்த படி
அனாதை என்கின்ற
அநாதரவு வட்டத்தை
தானறியாமலேயே
தனைச் சுற்றி வரைந்த படி
எனைச் சுற்றிச் செல்கிறது
என்பதனை இப்போதில்
இதிலே எழுதிவிட
இயலவில்லை என்னாலே..

இருப்பேன் நான் இறந்து போகேன்..

வார்த்தைக் கைகளினால்
வளமாக என்காலை
சேர்த்துப் பிடித்தெந்தன்
சித்தம் மனமெல்லாம்
நீர்த்துப் போம்படியாய்
நினைவறுந்து விழும் வரைக்கும்
துணியொன்றைத் தூக்கி
துவைப்பதற்கு அடிப்பது போல்
எந்தன்பைத் தூக்கி
இயன்றவரை பலம் சேர்த்து
உறவுக் கல் நடுவே
ஓர் வெடிப்பு விழும் படியாய்
கரவுத் தோள் சுழற்றி அடி
கலங்கேன் நான்

பொத்தல்களாய் நான்
போய்விடுவேன் என்றுந்தன்
சித்தத்தில் யாரோ
சீற வைத்த விடப்பாம்பின்
நச்சுப் பற்களினால்
நானான கீரியினை
உச்சத் தந்திரத்தால்
ஓங்கி அடி, அப்போதும்
காலமெனும் மூலிகையில்
கால் பிரட்டி உருண்டு விட்டு
வேழம் போலெழுந்து நிற்பேன்
வீழ்ந்து விடேன்

என்னுடைய உயிரணுவில்
இருந்துதித்த சூரியனை
உன்னுடைய வைக்கோலுள்
ஒழித்துவைக்கப் பார்க்காதே
தன்னுடைய காலம்
தளிர்த்து வர அது எழுந்து
தான் வந்த மூலத்தைத்
தேடும், கோபத்தில்
ஏனென்று கேட்டுன்னை
இருட்டுக்குள் போட்டெரிக்கும்
உன்னுடைய கள்ளத்தை
உரிக்கும், தன் கதிரால்

என்னுடைய கவி மனசின்
இயல்பறியும், புரிகையிலே
விண்ணுயர எழுந்தெங்கும்
வியாபிக்கும் எந்தனது
இருப்பு நீரூற்றாய்
எழுந்து நிறைந்தோட
உருப் பெற்றுயிக்குமென்
ஒண் கவிகள் இறவாத
வரம்பில்லாக் கால
வானத்தை வடிவமைக்கும்

நரம்பறுந்து நாடி வீழ்ந்தன்று
நாதியற்று
வரம் தர வேண்டி
வருவாய் நீ அன்றைக்கு
பரம் இகம் தெரியாப்
பக்குவத்தில் நானிருப்பேன்
உருக்குலைந்த உறவை
ஒட்டுகின்ற மனசென்னுள்
எரிந்தவிந்து போயிருக்கும்
என்பதனால் உன் பின்னால்
திரும்பி வர மாட்டேன்
திரும்பி நீ பார்க்கின்ற
திசையெல்லாம் ஒளி சிந்தும்
திசையாவேன் ஊழிவரை
இசை சொட்டும் பாட்டாக
இருப்பேன் இறந்து விடேன்..

நமக்கான விதி நதிக்கும்..

எங்கேயோ நிகழும்
ஏதோவோர் சேர்க்கையினால்
இங்கே வந்திறங்கி
இழுபட்டு இறுதி வரை
ஓயாமல் ஓடி
ஓர் நாள் முடிகையிலே
கடந்த பாதைகளும்
கனவுகளும், நினைவுகளும்
உடன் வராமலேயே
ஒன்றுமற்றுப் பேரிழந்து
வேறொன்றாகும்
விதி ஒன்றே இப்பாரில்
வேறொன்றே இல்லாத
விதியாய், நிரந்தரமாய்
நமக்கென்றும்
நதிக்கென்றும் நல்கியது,
அப்படியே
நதிக்கான வாழ்வும்
நம் வாழும் ஒன்றே தான்

ஒரு சிறிய முளையாக
ஒவ்வோர் துளியாக
கரு அசையும் படியாக
கசிந்தூரும் வடிவாக
உரு பின்னர் எப்படியாய்
உருவாகப் போகுதென்று
தெரியாத நிலையிற் தான்
திசையின்றி அவராகத்
தெரியாத வாழ்வொன்று
தெரிவாகும், பயணங்கள்
உடல் பிரட்டி மெல்ல
உருண்டு, தவண்டோடி
மடலொத்த பாதங்கள்
மண் தொட்டுத் தத்தி
முடிவிடத்தைத் தூரத்தை
முற்றிலுமே அறியாமல்
அடியெடுத்து வைக்கும்
அறியாத பயணத்தில்,

ஓடும் வழி இதுவென்று
ஒரு போதும் இருவருமே
கோடொன்றைப் போட்டந்தக்
குறிப்பு வழி செல்வதில்லை
கட்டிக் காவிவந்த
கனவுகளின் மூட்டை எல்லாம்
முட்டி எதிர் மோதும்
முரட்டு வழித் தடைகளிலே
தட்டுப்பட் டொவ்வொன்றாய்த்
தவறி விழும்,வீழந்தவைகள்
திட்டுகளாய் அதிலேயே
தேங்கி உலர்ந்து விடும்

எஞ்சி இருப்பவற்றை
இயன்றவரை மோதாமல்
அஞ்சுவதாய்க் காட்டாமல்
அஞ்சி, தடைகளின் மேல்
பட்டும் படாமலுக்குப்
பக்குவமாய் மெதுவாக
வேகத்தைக் குறைத்து
விலத்தி, கரைகாணும்
மோகம் தருகின்ற
முனைப்பில் இன்னமுமே
தெரியாத முடிவிடத்தின்
திக்கை அறியாமல்
புரியாத பாதை வழி
போகின்றோம்,இறுதியிலே

இந்த இடத்தை நாம்
எட்டுதற்கா இவ்வளவும்
நொந்து வழி நெடுக
நொடிந்தோம் எனுமெண்ணம்
கண்ணுள் இமைப்பதற்குள்
கரைந்து நாம் வேறொன்றாய்
மண் வாழ்வை விட்டெங்கோ
மறைவோம், அதன் பின்னே
வந்த வழித்தடத்தில்
வரலாறில் எம்பெயர்கள்
எந்தப் புகழ்த் தூசாய்
எழுந்தாலும் அது எங்கள்
கண்களிலே விழுமோ
கலங்கத்தான் வைத்திடுமோ
எண்ணச் சுவாசத்தில்
ஏறிப் புரக்கடித்திடுமோ
ஒரு மண்ணும் மிஞ்சாத
உயிர் வாழ்க்கை பூமியிலே
நமக்குத்தான் மட்டுமல்ல
நதிக்கும் தான்...

இது நடக்கும்..

தமக்கென்றோர் மொழி
தமக்கென்றோர் கலாச்சாரம்
தமக்கென்றோர் வாழ்வு முறை
தன்னை வடிவமைத்து
தன் போக்கில் வாழ்கின்ற
இனக் குழுமம் ஒன்றை
இடையிட்டுப் பெருகிவந்த
இன்னோர் இனம் வந்து
இடித்துத் தன் காலுள்
கண் முன்னே போட்டுக்
கதறக் கொழுத்தையிலே
அமுக்கம் தாளாமல்
அதை எதிர்க்க அவ்வினத்தின்
உள்ளே இருந்தொருவன்
எழுதல் உலக விதி
அவனின் பின்
முழு இனம் திரண்டு
மூச்சைக் கொடுத்திடுதல்
எழப் போகும் ஓரினத்தின்
இருப்பின் வரலாறு

நீண்ட போராட்ட
நெடு வெளியில் மண்ணுக்காய்
மாண்ட வீரர்கள்
மன வலிமை ஓர்மத்தை
தூண்ட, துவளாமல்
தொடர்கையிலே அவன் பற்றி
இடைவெளியில் மனம் சோர்ந்து
இடிந்தோர் விதையற்று
வடிக்கின்ற விமர்சனங்கள்
வாய் நாற்ற வீணீர் தான்
தவிர்க்கேலாதெனினும் ஓர்
தடையல்ல, படிக்கற்கள்
இதையெல்லாம் தாண்டியவன்
எடுத்தாண்டு நகர்கையிலே
இடைவெளியில் ஏதேனும்
இடர்கள் நேர்ந்திடலாம்
விடை கூடச் சொல்லாமல்
விம்பம் மறைந்திடலாம்
உடைந்துருகிச் சிலகாலம்
ஒடுங்கிடலாம் அவன் படைகள்

ஆனால்
நாடென்றால் இது தான்
நாமிதனை அடைவதற்கு
நாடிய வழிமுறைகள்
நம்பிக்கை இவைகள் தான்
தேடி உலகெல்லாம்
திரிந்தாலும் இறுதியிற் கை
கூடும் வழி இது தான்
என்கின்ற குறிப்பெங்கள்
நாடி நரம்புகளில்
நாளாந்தம் வளர்தசையில்
ஓடித் திரிகிறது உள்ளே,
அவன் இருப்பு
இறுகிய பாறை அல்ல
இயங்காமல் இருப்பதற்கு
திறந்த குபுகுபுக்கும்
நீரூற்று, அதிற் தோய்ந்த
சிறந்த மன வேர்கள்
சிந்தனைகள் எல்லாமே
உகந்த ஓர் நாளில்
ஒன்றாகும் அன்றைக்கு
திறந்த வானிருந்து
வருவது போலொருவன்
பிறந்து வருவது போல் வருவான்
அவனடுத்த
படை நடத்திச் செல்வான்
பார்த்துணர்ந்த மாதிரி யை
உடைய வழியாலே
ஒழுங்கமைப்பான் அவனொன்றும்
வேற்றுக் கிரகத்தின்வாசியல்ல
விழிப்படைந்த
நேற்றுவரை எம்மோடு
நிமிர்ந்து தோள் கொடுத்த
நம்முள் ஒருவன் தான்
நமக்காக வாழ்பவன் தான்

காலம் அவன் பெயரைக்
கட்டமைக்கும், அவனுடைய
வானத்தில் நிற்பதற்கு
வடிவமைத்த அவன் மேகம்
கானகப் பரப்பினைக்
கடக்கும், ஓர் நாளில்
நாமெல்லாம் அதனை
நம்தேச மேகம் தான்
ஓம் என்று சொல்லி
ஒன்றாய்க் கை கோர்க்கையிலே
மேகம் திறந்து
விடியல் மழை பொழிந்தெங்கள்
தாகம் தணிந்து தளிர்க்கும்
இது நடக்கும்..

Tuesday 10 April 2012

ஈர்ப்பில் துடிக்கின்ற இயக்க விசை..

வசந்த காலத்தி்ன்
வண்ணத்தில் தோய்த்தெடுத்து
வாழ்வு ஒரு மரத்தை
வரைகிறது,அதிலடர்ந்த
பச்சை இலைகளிலும்
பரந்த கிளைகளிலும்
இச்சை ஊறுகின்ற
ஈரமன வண்ணத்தில்
உணர் கொம்புள்ள உயிர்த்
தூரிகையால் கரையாமல்
காதலும் ஓர் கூட்டைக்
கட்டியதாய் வரைகிறது
போத உணர்வுடனே
பொங்க மீண்டுமந்த
வாழ்வு வசியத்தைத் தடவி
உயிர்ப்பாக
அன்பூறும் பறவை ஒன்றை
அக் கூட்டுள் வரைகிறது

இப்படியாய்
ஒவ்வொரு வாழ்வும் தம்
உள்ளளவுக் கேற்றபடி
ஒவ்வொரு மரத்தை வரைய
உயிர்க் கூட்டை
காதலும் அம்மரத்தின்
கனதிக்கு ஏற்றபடி,
வாழ்வும் அதற்கேற்ப
பறவை ஒன்றை,
விகிதங்கள்
ஊறும் உயிரளவில்
உயர்ந்திறங்கி இருந்தாலும்
ஈர்ப்பென்ற ஒன்று
எதன் மேலோ இருப்பதனால்
இன்றும் உயிர் நீட்சி
இயங்கி தொடர்கிறது..

பனிப்புகை மனசுக்குள் படர்கிறது..

புகையாய்ப் பனி படர்ந்து
பூத்திருந்த காலையதன்
மிகையான குளிரலையில்
மேனிபட்டு வெடவெடக்க
சதையைக் குறைக்கவெனச்
சகித்தபடி மெதுவாக
நதிக்கரை ஓரத்தால்
நான் நடந்து கொண்டிருந்தேன்

அப்போதவிழந்த மொட்டின்
அங்கத் தளதளப்பில்
எப்போதும் தெவிட்டாத
இளவேனில் ரூபத்தில்
பனிப்புகையைக் கிழித்தபடி
பெளவியத்தின் உடல் மொழியில்
இனிக்கின்ற தென்னை
இளம்பாளைச் சிரிப்போடு
எனைக்கடந்து போனாள்
இங்கொருத்தி, அவளுடலைத்
தொட்ட பனிப்புகையின்
தோற்றம் அவளகன்று
விட்டுப் போயிடினும்
விலகாமல் என்முன்னே
அப்படியே அவளுவாய்
ஆகி, பார்த்ததெனை!

ஆசியப் பெண்களது
அழகான முகவெட்டில்
பூசிய செந்தளிரின்
பூரிப்பாய் முகம் மின்ன
கன்னத்தில்
தாளம்பூ நாகம் போல்
தவள்கின்ற முடிதன்னை
கோலமிடும் விரல்களினால்
கோர்த்து மேல் செருகி
மச்சாளின் கண்களெனை
மருட்டுகின்ற பார்வையினால்
உச்சித் துடிப்புணரவைத்து
உள் விழுங்கி், காந்த அலை
வீசும் இமைச் சாமரத்தை
வீசி எனை அழைத்தாள்
அதிலிருந்து
அடித்த அனற்காற்றில்
அடியோடென் நிகழ்காலம்
உடைந்து எனைத் தூக்கி
எறிய முன் சென்று
வாலிபத்தின் வசந்தத்
தொட்டிலிலே வீழ்ந்து விட்டேன்!.

பனிப்புகையாய் நிற்கின்ற
பருவப் பவித்திரமே
எனையும் ஓராளாக
எண்ணி இம் மண்ணில்
ஏறெடுத்துப் பார்த்த
இங்கிதமே முதல்ப் பெண்ணே!
நீ என்னை அழைத்த
நினைப்பில் இப்போது

விறைத்த குளிர் விலகி
வியர்கத் தொடங்குதடி
சிறை மீண்ட பறவைச்
சிறகு மன உடலில்
அடித்துப் பறந்தெழுந்து
ஆர்ப்பரிக்க, மிகக் கூடித்
துடித்த இதயத்துள்
தூலத் தீ பற்றுதடி!

பேரறிஞன் என்றாலும்
பெரும் வீரன் என்றாலும்
ஊரே போற்றுகிற
உத்தமனே என்றாலும்
நேரே அவர் முன்னால்
நிலைகுலைக்கும் அழகோடு
ஈர மொழி பேசும்
இளம் பெண் வந்து நின்றால்
மூழ்காதோ அவர்களுடை
முழுத்திறனும் அவள் கடலில்!
ஓர் நொடியேனும்
உள்ளே மனந்தடக்கி
பேர் பெருமை இல்லாத
பிண்டம் போலாகாரோ!
அழகான பெண் முகத்தின்
அசைவுக்கு ஓர் கப்பல்
விலகித் துறை விடுத்து
வேறு திசை போகுமென்றால்
பேரழகி நீ உன்
பெரு மூச்சுப் பட்டாலே
போர்க் கப்பற் தளமே
புறப்பட்டு வாராதோ!
கப்பல்களுக்கே இந்தக்
கதி என்றால் எண்ணிப்பார்
அப்பாவிக் கவிஞன் நான்
ஆடிவிட மாட்டேனா!

போதும் பனிப் பெண்ணே
போய் விடு நீ கலைந்து விடு
ஏதோ என்பாட்டில்
இருந்து விட்டுப் போகின்றேன்
இனியும் நீ போகாமல்
இப்படியே நின்றிருந்தால்
கனிந்து மனமுருகி
நானேதும் கதைத்து விட
வெள்ளைக்காரியோடும்
வெளிக்கிட்டான் என்றெந்தன்
உள்ளக் கமலம் ஊரில்
ஒப்பாரி வைப்பதற்குள்
பனியோடு பனியாகப்
படந்திடு நீ, மீண்டொரு நாள்

நாவறண்ட தாகத்தில்
நான் நடக்கும் பாதை ஒன்றில்
ஓடி வரும் நதி நீரில்
உன்னைக் கரைத்து விடு
தேடி அதற்குள் நான்
தீர்த்தமாய் உனை மட்டும்
அள்ளி என் கையில் எடுத்து
அப்படியே
ஆன்ம தாகத் தீ
அடங்கக் குடிக்கின்றேன்..

நினைவின் வாசம் நிசமாகும்..

செம்பாடாய் வெண்துகளாய்
செங்கறுப்பு நீலமதாய்
எம் பால்யக் காலத்து
மேனிகளில் இருக்கையில் நீ
எம்மோடு கொண்டிருந்த உறவை
இறக்கையிலும்
இறுதிச் சேடமதாய்
எழப்போகும் உன் நினைவை
அன்றுன்னில் வெய்யில் மண்
அடித்துத் திரிகையிலே
என்றைக்கும் நானன்று
இன்றளவுக் குணரவில்லை
ஒவ்வொரு மைல்மைலாய்
உனைப் பிரியப் பிரியத்தான்
அவ்வளவுக் கவ்வளவாய்
ஆவியில் நீ ஊறுகிறாய்

ஊரே உறங்கி உள்ள
ஓசை அற்ற ராத்திரியில்
தூரத்தில் எங்கோ
துணைதேடும் பறவையொன்றின்
பாசம் நிறைந்த மனப்
பதைபதைப்பின் குரல் போல,
மூலத்தைப் பிரிந் திடையில்
முடங்கி உள்ள நீர் நிலையில்
கூளாங்கல் எறியக்
குதிக்கின்ற நீர்த் தெறிப்பாய்,
அதிலிருந்து அகண்டு
அகண்டகண்டு விரிகின்ற
விதியின் நீர் வளைய
விரிவைப் போல்,
விசை அழுத்த
எங்கோ துப்பாக்கி வாயாற் புறப்பட்ட
அங்கம் பிளக்கவந்த குண்டு
அரங்கிப் போய்
உய்ங் கென்றென் காதை
உரசிச் செல்வது போல்,
தாகத்தில்
ஒட்டி உலர்ந்துள்ள வாய்க்கு
கிடைக்கின்ற
ஓடைக் குளிர்நீரின்
ஒரு மிடறாய், காலுரஞ்சி
குர்குர்ரென்று குளைகின்ற
பூனையென,
விபத்தொன்றில்
முழங்காலின் கீழே கால்
போனாலும் மூளைக்கு
பாதம் கடிப்பதுவாய்ப்
படுவது போல்,
இப்போதில்
உந்தன் நினைவெந்தன்
உயிருள்ளே மணக்கிறது

இன்றைக்கோ
விடியல்க் கனவோடும்
விழுப்புண் ரணத்தோடும்
அடைபட்டுக் கிடக்கின்றாய்
அன்பே, பொறுத்திரு நீ

கைகளை விலங்கினால்
கட்டினால் கால்களால்
கால்களை வெட்டியே
வீசினால் இமைகளால்
இமைகளை இழுத்துப்
புடுங்கினால் பற்களால்
பற்களை உடைத்தும்
பறத்தினால் மூச்சினால்
எப்படியேனும் எழுந்து நாம்
எம்முடை
இப்பிறப் பறுந்து செல்லுமுன்
உன்னிலே
அப்பனே நாம் எழுதுவோம்
விடுதலை..

எல்லாம் நன்மைக்கே ..

வீட்டின் விருப்பம் போல்
விளங்கத்தான் முடியவில்லை
நாட்டின் விடியலுக்கு
நம்மவர்கள் செய்கின்ற
கூட்டு முயற்சிக்கேனும்
கொடுப்போமெம் தோளை என
நன்றாகப் பட்டுணர்ந்து
நடை முறையை உள் வாங்கி
வென்றாக வேண்டும் எங்கள்
விடுதலையை என்பதற்காய்
சென்றிருந்த காலங்கள்
சில ஓட ஊரெல்லாம்

போரின் கறுத்த மேகங்கள்
பொழிந்திறுக, பொறி தாண்ட
நீருள்ளால் நெருப்பை
நிசப்தமாய் நனையாமல்
நீந்திப் போவதொத்த
நெடும்பாதை என்பதனால்
அத்தனை காலமாய் சேர்த்துவைத்த
அத்தனையும்
மொத்தமாய் தூக்கிப் போட்டுவிட்டு
வெறுங்கையாய்
செல்வதற்கு மனமின்றி நிற்கையிலே
என் அம்மா
எல்லாம் நன்மைக்கே
எழும்பு எனஅனுப்பி வைத்தார்

ஊர் விட்டுப் போன பின்பும்
உழுதல் தொடர்ந்திடவும்
நார்நாராய் நகம் நகமாய்
நம்மை அவன் கிழித்தெறிய
நாட்டை விட்டு அயல்
நாட்டுக்கு நடைப்பிணமாய்
செல்லும் விமானப் பாதையிலும்
அம்மா தான்
எல்லாம் நன்மைக்கே
ஏறென்று ஏற்றி விட்டார்

நாட்டை விட்டு விட்டு
நாம் நகர்ந்து போனாலும்
போட்டிடலாமோ எம்
பொறுப்பை எனப் புறப்படவும்
நாடி நரம்பாகப் பிரித்தெடுத்து
நம்மை அங்கும்
போட்டுள்ளே பூட்டி வைத்திருக்க
எப்படியோ
தொலைபேசித் தொடர்பெடுத்த
அம்மா பெருமூச்சோடு
அலைபோல எனையடித்த வார்த்தை
‘அப்பாடா
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தாய்
என் பெருமான்
எல்லாமே நன்மைக்கே இடியாதே’
என்பது தான்

எப்படியோ அங்கும் இழுத்துச் சுழித்தோடி
தப்பி ஒரு கண்டத்தைத் தாண்டிவிட
எல்லையிலே
அப்படியே பிடித்தென்னை
அந்தக் களைப்போடே
அடரிருட் சிறைஒன்றுள்
அடைக்க அதனாலும்
தப்பி வரும் சட்டங்களூடு
தாள் திறந்து
இப்போது பொது வெளியில்
இருந்தாலும் எனைச் சுற்றி
அந்த நிழற்படிவு
அகன்ற பெருந்தனிமை
இந்த நாட்டின் வெளிகளிலும்
இன்றுவரை
என்னை விட்டகல முடியாமல் இருக்கிறது
காலநீட்சி தந்த
களைப்பில் கலக்கத்தில்
ஏலும்வரை சொல்லி வந்த
அம்மாவும் இப்பொழுதில்
எதுவுமே எனக்குச் சொல்வதில்லை
என்றாலும்
எதிர்காலம் என்கின்ற
ஏதேனும் ஓர் கீற்றும்
இனி முன்னே எழும்பாது
என்பதனை உணர்ந்தாலும்

காலம் மிகப்பெரிய
கடப்பாரை தன்னாலே
கீலம் கீலமாய் எனைக்
கிழித்துப் பார்ப்பதெல்லாம்
ஏதோ நான் வருந்தி
எழுதுதற்கோ? என்றபடி
எனக்குள்ளே நானிப்ப
எப்பொழுதும் சொல்லுகிறேன்
எல்லாம் நன்மைக்கே
எழுதடா நீ எழுதி நட..

Friday 6 April 2012

மழையும் நினைவும் மனசளையும்..

கருக்கட்டி விட்ட
மேகங்கள் வானத்தில்
உருக் கொண்டலைய
உள்ளத்தில் நினைவென்னும்
கருவும் உள் வளர்ந்து
காலுதைக்கத் தொடங்கி விடும்

மேகம் பிரண் டிருண்டு
மிதந்திணைய நினைவலைகள்
மோகம் கொண்டுவிட்ட
முரட்டாண் யானையைப் போல்
ஏகமாய் உள்ளிரைந்து
இயலாமல் உடல் பிரட்டும்

ஏதோ ஓர் வகையான
இத இருளில் ஈரத் தீ
மோதி உரசி விட
மொய்த்தூரும் காற்றினிலே
போதி மர நிழலீரம்
பொழிய நினைவு வலி
ஆதிப் பிறப்பொன்று
அவதரிக்கப் போவதெண்ணி
வேதனையின் இன்ப
வெப்பத்தில் குளிர்ந்துருகும்

மெள்ளத் தூவான
விழுதிறங்கி மண் மணக்க
உள்ளே இருக்கின்ற
உயிர்க் குழந்தை வருவதற்காய்
வெள்ளை கறுப்பாக
விழத் தொடங்கும் நினைவுகளும்

பெருந்துளியாய் மேகம்
பிறப்பிக்கும் ஒவ்வொன்றும்
அறுந்தவிழ்ந்து மண்ணை
அடைகின்ற போதிலங்கு
தெறிக்கின்ற சின்னத்
துளிகளாய் என் நினைவு
பறந்து ஊர்க் கோடிப்
பக்கத்தில் வீழுகையில்

நீண்ட நினைவின் நோ
நேரமும் கூடி வர
மாண்டு பிறப்பது போல்
மன யோனி திறந்து விட
ஆண்டு அனுபவிக்க
அழகான கவிக் குழந்தை
தோன்றி வெண் தாளில்
துள்ளி விழுந்திடுவான்

மேகம் பெற்றெடுத்த
மென் குழந்தை மழையாலே
யோகம் பெற்றுவிட்ட நிலமும்
அதனாலே
தாக நினைவெழுந்து
தான் பெற்ற கவியாலே
போகும் வழி அறிந்த மனமும்
இப்போது
ஏகம் அகமாகி
இரண்டற்ற ஒன்றாகி
ஈக மனம் போல
ஈரலிப்பாய்க் கிடக்கிறது..

ஏழுகடல் ஏழுமலை தாண்டி..

தூக்கத்தில் வந்தென்னைத்
தொட்ட கனவுக்குள்
தூங்கி ஓர் கனவைக் காண்பதுவாய்க்
கனவொன்று

நிரை நிரையாய் மரங்கள்
நிழலைச் சொரிந்த படி
உரையும் கொப்புகளின்
உயிரோசை கிரீச் என்று
கரையும் குருவிகளின்
காந்தக் குரலோசை
புரியாவிட்டாலும்
புல்லரித்துச் சிலிர்க்கிறது
பல முறை நான் சென்று
பழகிய இடம் போல
அழகிய குளக்கரை
அப்பாலே மணற்கும்பி
மன வெளியை நிரப்புகிற
மணல் வெளிகள் வெளிதாக
ஆத்ம சரீரத்தில்
அதன் மணத்தை நுகருகிறேன்
ஆளரவம் இல்லாத
அமைதி ஒலி எங்கணுமே

ஆண்டாண்டு காலமாய்
அனுபவித்துத் திளைத்திருந்த
பூண்டு எனைப்போற்றி
பூக்க வைத்த மண்ணுக்கு
மீண்டு நான் வந்துவிட்ட
மிதப்பில், புழுகத்தில்
உங்காலும் அங்காலும் ஓடி
உடல் வேர்த்து, களைத்துப் போய்
எங்காலும் மரத்தடியில்
இருப்பமெனக் குந்தி விட
அப்படி ஓர் தூக்கம்
அதற்குள்ளும் ஓர் கனவு

இப்போது நான் பார்த்த
இதே போன்ற நிலக் காட்சி
எப்போதோ நான் கண்ட
என் பால்ய நண்பர்கள்
தென்னங் குரும்பைத்
தேரோடும்,உருட்டுகிற
சின்னப் பனை நுங்குச்
சில்லோடும் அப்படியே
அப்படியே நிஜமாக
அதே அந்தக் காலத்தில்,
அப்பன் வந்துள்ளே
சாப்பிட்டு விளையாடு
எப்போதும் எனை அதிரப்பேசாத
என் அப்பா
அப்பாலே நின்று அழைக்கின்றார்
இப்போது
கனவுக்குள் வந்த கனவென்னுள்
கலைகிறது, இன்னும்
கலையாத கனவுள்
கண் விழித்துப் பார்க்கின்றேன்
கனவின் கனவுள்ளே
கண்டவைகள் கலையாத
கனவின் கண்களுக்கு
காட்சி தர மறுக்கிறது

அப்பன் எழும்பிச்
சாப்பிட்டுப் படனப்பன்
அப்பாதான் மீண்டும்
இப்போதும் அழைக்கின்றார்..

ஓம் என்று சோம்பல்
உதறி முழிக்கின்றேன்
ஒருத்தருமே இல்லை!
உலகொன்றின் மூலைக்குள்
தரித்திரம் பிடித்துப் போய்த்
தனியே நான் கிடக்கின்றேன்

கனவுக்கு அதன் கனவு
கலைந்து விட்ட பின்னாலே
காட்சியாய் அதை மீண்டும்
காணக் கிடைக்கவில்லை
இரு கனவும் கலைந்து விட்ட
இப்போதில் நனவினிலே
ஒரு காட்சி கூட இப்ப
உயிர்ப்பாகத் தெரியவில்லை
நினைவுகள் மட்டுமே
நெடுஞ்சாணாய்க் கிடக்கிறது

காமம் கடுங்கோபம்
காழ்ப்புணர்வு காசீட்டம்
வெற்றி வேட்கை என்ற
வெறித்தன்மை படிந்துள்ள
மூளை, விழித்திருந்து
முழுதாக எம்மைத் தன்
ஆளாக நடத்தும் போதினிலே
எம்மாலே
காலங்களைக் கடக்க முடியாது
அது சோர்ந்து
கண்ணயர்ந்து போகும்
கட்டத்தில் ஆழ் மனது
விண்ணுயர எழுந்து விரிந்து காலத்தை
மண்ணளவாய்த் தன் கையுள்
மடக்கும், அதனாலே

பசிய நினைவுகளும் பாசங்கில்லாத
பாச உறவுகளும் பால்யமும்
முன்போல
கசிந்து வழிந்தோடும்
காலத்தின் காட்சிகளைக்
கண்டுணர்ந்து வாழ்ந்தெந்தன்
காலத்தைக் கடப்பதற்காய்
ஆழ் மனதை அது தோன்றும்
ஆழுறக்க நிலைதன்னை
அப்படியே கட்டி அணைத்தபடி
அசராமல்
ஏழுகடல் ஏழுமலை கடந்து
எழுந்துள்ள
காலத்தைப் பிளந்து கடக்கின்றேன்
இதை விடவும்
ஏதும் வழி தெரிந்தால்
எந்தனுக்கும்  சொல்லுங்கள்..

பல்லுள்ள போதே பறை..

எவ்வளவு சீக்கிரமாய்
இயல்கிறதோ முடிந்தளவு
அவ்வளவு சீக்கிரமாய்
எழுதி விடு, கவி மனதை

எங்கிருந்தோ வரும்
அழைப்பொன்று, மீண்டோடி
மங்கலாய்த் தெரியும்
முகமொன்று, எண்ணாமல்
நண்பன் உனை வைத
வரி ஒன்று, தலை சுற்றி
கண் முன்னால் வெண் பூச்சி
கடக்க நினைவின் மேல்
எதிர்காலம் பற்றி
ஏதேனும் ஓரெண்ணம்
எழுந்து கவி மனதை
எட்டிட முன் விரைவாக
வழிந்தோடி விழுகின்ற வரியை
வரைந்து விடு, உன் பழைய
 காதல் பற்றி ஏதும்
கரைந்துருகிக் கிறுக்கிடு முன்
மோதல் குடும்பத்துள்
முட்டி வெடித்திட முன்
விசாரணைக்கு நீ விளக்கம்
வீழ்ந்தடித்துச் சொல்லிட முன்
விளக்கத்தைக் கேட்காமல்
விவாகம் ரத்தாயிடு முன்
எதுவுமே எழுதி விட
இயலாமல் நீ முடங்கி
நான் விரும்பும் பெரியார்
நம்முடைய ஆசிரியர்
சீலை,நகைக் கடைகள்
செருப்பழகு பற்றி எல்லாம்
மாலை மாற்றிய அம்
மாதுன்னைக் கேட்ட படி
ஏதேனும் நீ எழுதித்
தொலைத்திடு முன்
இப்போதே
பக்கத்தை நிரப்பி
மறு பக்கம் தொடங்கி விடு

வறுமை உனை வளைத்து
வலைக்குள்ளே இறுக்கிடு முன்
இறுக்கம் தாங்காமல்
இதயத்தூண் தகர்ந்திட முன்
தகர்ந்து உடல் நலிந்து
தள்ளாடிப் போய்விட முன்
தள்ளாட்டம் தாங்காது
தளிர் மனது சோர்ந்திட முன்
சோர்ந்தது கண்டுந்தன்
சொந்தங்கள் விலகிட முன்
விலகிப் போய் உன்பாதை
வெறிச்சோடிப் போய்விட முன்
போய் விட்ட வாழ்வெண்ணிப்
பொறி கலங்கி வீழந்திட முன்
வீழந்து விட்டான் இவன் வாழ்வு
விழல் என்று தூற்றிட முன்

சொல்லுள்ளே வாழ்வின் சூட்சுமத்தை வாயிற்
பல்லுள்ள போதே பறை

ஆண்டுகளை ஊடறுக்கும் அவள்..

மார்மேலே சாய்ந்திருந்து
மலரிதளின் விரல்களது
கூர் நிகத்தால் மெல்லக்
கிழித்தும் கிழிக்காமல்
ஒவ்வொரு முடியாக
எண்ணுகிறேன் என்றபடி
இவ்வுலகு எனக்கீந்த
இன்பத்தின் நாட்களினை
எவ்வள வெவ்வளவோ
எனக்காகத் தந்தவள் தான்

வரச்சொன்ன நேரத்தில்
வந்திடுவாள் என்றெண்ணி
இருந்த வேலை எல்லாம்
எறிந்து விட்டுப் போய் நின்றால்
காலிரெண்டும் நோவெடுக்கக்
கால்மாற்றிக் கால்மாற்றி
ஏலாதினி என்ற நிலையினிலே கடுப்பேறி
இவளோடினி என்ன பேச்சென்று வைதபடி
இறங்கிப் போவமென நினைக்க
சிரித்தபடி
எங்கிருந்தோ வீதி கடந்தோடி வந்தெந்தன்
விரல்களுக்குள் விரல்களினைக் கோர்த்து
என் கண்ணை
இமைக்காமல் நோக்கி ஏதேதோ சொன்னபடி
சொண்டிரெண்டைக்
குவித்துச் சுழித்திடவும்
சுர் என்ற கோபமெல்லாம்
தணிந்திறங்கிச் சுழன்றவளின்
முன்விழுந்து சரணடைந்து
கர்வத்தை இழந்து
கால் பிடிக்க வைத்தவள் தான்

வெற்றி என நினைத்த
விளையாட்டில் தோற்றுவிட்டு
குற்றம் செய்தவன் போல்
குனிந்தடங்கித் தலை கவிழ்ந்து
பெற்றவர்கள் சோதரங்கள் எத்தனையோ
மற்றுமெந்தன்
உற்ற நண்பர்கள் சூந்து நின்று
எந்தனுக்கு
எத்தனையோ ஆறுதல் சொல்லியும்
முடியாமல்
இற்று நானுடைந்து போயிருந்த வேளையிலே
சற்றுமெதிர் பாராமல் வந்துள்ளே
என்னுடைய
பிடரிமுடி தன்னுள் விரலோடி
சொண்டீரம்
காதின் கரை நுனியைக் கவ்வ
மெதுவாக
விடடா எழுந்திடடா
வா வெளியே போவமென
அடடா! ஓர் மொழியிற் சொன்னாள்
அப்பொழுதில்
இன்னொருக்கால் தோற்றால்
என்னவென என் மனது
தன் நிலை விட்டுத் தவிப்பதற்கு
வைத்தவள் தான்

சொன்னதெல்லாம் செய்து
சுகம் வளர்த்து விட்டவள் தான்
சொல்லாத பல செய்தும்
சுழன்றாட வைத்தவள் தான்
என்னுடலின் வாசம்
இதுவென்று இழுத்துள்ளே
தன்னுடலின் வாசச்
சுவையோடு தந்தவள் தான்
என்னுள்ளும் கவி மனது
இருக்குதென்று நானுணர
பன்னூலாய் நான் படித்த
பாட்டாக இருந்தவள் தான்

நீண்ட வழி நடந்து
நிறை காட்டின் அடர்வுக்குள்
பூண்டான திசைப்புல்லில்
மிதித்தவர்கள் எப்போதும்
மீண்டுவர இயலாமல்
மீண்டும் மீண்டுமந்த திசைப்
பூண்டினைச் சுற்றித்
திரிவது போலென் மனசை
ஆண்டு தன் கையுள்
அடக்கி வைத்திருந்தவள் தான்

இப்படியே
எப்படியோ எல்லாம்
எனையாக்கி வைத்து விட்டு
தப்பான காலப் படகில் காலூன்றி
எப்படியும் வருவேன்
இரு என்று சொல்லி விட்டு
போகின்றேன் என்றன்று
புறப்பட்டுப் போனவள் தான்

இன்றைக்கும்
ஏதோ விதி ஒன்றால்
எனை வழியில் சந்தித்து
என்னோடு சேர்ந்து நடந்தவர்கள்
இடைவெளியில்
காரணங்கள் ஏதுமற்ற
காரணத்தைச் சொன்னபடி
கை காட்டி விலகிக் கடக்கையிலே
அவள் அன்று

போகின்ற போதில் என்
புறக் கண்ணில் உடற் தோற்றம்
பாகம் பாகமாக மறைந்திடவும்
பொறி கலங்கி இதயத் தூண்
அறுத்தெறிந்த பல்லி
வாலாக ஆகி எந்தன்
அடி வயிற்றுள் அவள் இதயம்
அதிர்ந்தது போல் இன்றைக்கும்
ஆண்டுகளை ஊடறுத்து
அவள் நினைவு மீண்டுயிர்த்து
தோண்டி அத் துடிப்பை
துடி துடிக்க வைக்கிறது..

Sunday 1 April 2012

நேரம் உறைகின்ற காலம்..

இரவென்ற ஓர் நிலையும்
இருட்டறுந்து கிழிந்து விழும்
ஒளி வண்ணம் போற் தோன்றும்
ஓர் பகலும் அது படர்ந்து
ஆயிரம் சந்ததியைக் கடந்தும்
ஆழ் மனதில் அழியாமற் படிந்து
மயக்கம் வழிகின்ற
மாலை சாய்ந்து விழும்
மருள் நிலையும் என் வாழ்வின்
காலக் கணக்கின் கண்களுக்கு
எந்த விதக்
காட்சிகளும் அதன்
கலங்கல் நிறமுமற்று
சாச் சொரியும் போது விழும்
சாயை மட்டும் தெரிகிறது

நிமிடங்கள் அறுந்து
மணி நாட்கள் அறுந்தறுந்து
மாதம், வருடங்கள் அறுந்து விழ
என் வாழ்வு
நேரங்கள் அற்ற
நிலை உறைந்து போயுள்ள
காலங்கள் நோக்கிக் கடக்கிறது

ஏனெனிலோ
உணவுண்ண வருவாயா
உறங்கி எழுந்தாயா
ஏனிரெண்டு நாளாக
எழும்பாமல் படுத்திருந்தாய்
நாளைக்குப் பின்னேரம்
நாலரைக்கு மேலாக
நானுன்னை வந்து பார்க்கட்டா
இல்லையெனில்
நீ என்னைப் பார்க்க வருவாயா
இப்படியாய்
எனை நோக்கிச் சும்மா
ஏதேனும் ஓர் வார்த்தை
ஏறெடுத்தும் கேட்பதற்கு
இங்கே யாருமில்லை

எல்லோரும் தூங்குகையில்
என் கண்கள் விழிக்கிறது
அவர் விழித்தெழுகையிலே
அயர்ந்துறங்கிப் போகின்றேன்
உணவுண்ணல் மற்றும்
எல்லாமே இப்படித் தான்
என்னோடிருக்கின்ற மனிதர்கள்
இயங்குகிற இயல்பு வழமைக்கு
எதிர்மாறாய் என் போக்கு
தலை கீழாய் நடந்து செல்கிறது

தினந்தினமும்
அடித்துடைந்த கால்கள்
அணு அணுவாய்க் கொதித்தாலும்
உடைத்துத் தெறிப்பது போல்
உள் நெஞ்சுள் வலித்தாலும்
எனக்கிங்கு துணையாக நானே தான்
அதனாலே
எனைச் சுற்றி இருப்பவைகள்
எனக்குத் தெரிவதில்லை
காலக் கணக்கெல்லாம்
மனக் கண்ணில் புரிவதில்லை
காட்டில் வளர்கின்ற மரம் போல
என் வாழ்க்கை
நாட்டில் நடந்து திரிகிறது

இப்படியே
எல்லைகள் ஏதுமற்று
இயல்பாய்க் கிடக்கின்ற
பிரபஞ்சப் பெருவெளியின்
பெயரற்ற வீதிகளில்
மனிதர்கள் தங்களது
மனம் கொண்டு போட்டிருக்கும்
புறத் தடையை எந்தன்
புறங்கையால்த் தட்டி விட்டு
நேரம் காலமற்ற
நிகழ்கால வெளி நெடுக
மூளை மனம் நின்றுவிடக்
கால் நடந்து செல்கிறது...

தப்படா இந்தப் பிறப்பு..

பிரிவுத் தீயின் வெறுப்புத் தழலில்
பிறக்கும் விரக்தித் தணற்ப் படுக்கை

உடலாய் ஆகி உயிரைக் கருக்கும்
உயிரின் உள்ளம் உருகி விழும்

மழலைப் பேச்சை மயக்கும் சிரிப்பை
மைல் பல தாண்டி வைத்து விட்டு

உழலும் வாழ்வில் ஓர்மம் சிதற
உறவின் பாசம் ஓங்கி அழும்

எப்படா வருவாய் என்றவள் கேட்ட
இமைப்பில் நெற்றிப் பொட்டுடைந்து

ஆக்ஞை திறந்து அன்பின் சுனையால்
ஆவி வழிந்து பறந்து சென்று

என்பை உருக்கும் படியாய் இறுக்கி
இயன்ற வரைக்கும் உயிர் அணைக்கும்

இங்கே உடலோ அந்தச் சுகத்தை
எண்ணிப் பிதற்றி மனம் பிறழ்ந்து

தற்கொலை செய்யவும் எண்ணும் ஆனால்
தளிரின் சிரிப்புத் தடுத்து விடும்

எப்படா அந்தச் சிரிப்பும் அணைப்பும்
எந்தனைச் சேரும் சொல் முருகா!

தப்படா இந்தப் பிறப்பு மேலும்
தவறடா இத்தகை வாழ்வு எங்களை

எப்படா சேர்ப்பாய் என்னுயிர் தன்னை
எப்படா மீட்பாய் வேலா..

காலம் ஆகினீர்.. - பேராசிரியர் கா.சிவத்தம்பி

யோகர் எனும் சித்தன்
யூகித்துணர்ந் துரைத்த
பாகுத் தமிழ் மொழியின்
பதிவே!  கால நடை
ஆகி அதற்கேற்ப
அசைந்தோடிச் சூசகமாய்
சொல்லும் வகை உணர்ந்த
சுவையே! தமிழ்ச் சிந்தனையை
ஆங்கிலத்தில் அசைபோடும்
அறிஞ! நாம் அறிய
அற்றைத் தமிழிருந்து
அருங்கலைச் சொற்கள் வரை
இற்றைப் படுத்துகின்ற
எமதிருப்பே! எமை விட்டு
வானேகிப் போய் விட்டீர்
வரலாறாய், எம் பாடு
தேனில்லா அடையாகத்
தேம்பிக் குமைகிறது

என் வாழ்வுக் காலத்துள்
இனி என்றும் உங்களைப் போல்
அன்புளமும் அறிவும்
அரவணைப்பும் நிறைந்தூறும்
எந்த ஒரு மனிதனையும்
இனிக் காண முடியாது
நீங்கள் போய் விட்ட
நெடு வெளியை நிரப்புதற்கு
நாங்கள் அறிந்த வரை
நம்மினத்தில் யாருமில்லை
உங்கள் காலத்தில்
உமைத் தெரிந்து உம்மோடு
எங்களுக்கும் வாழக் கிடைத்ததென்ற
ஓர் நிறைவே
உள்ளே மூச்செங்கும் எழுகிறது
பிதாமகரே..

எங்கள் செல் நெறியை எமக்கான வழித் தெளிவை
உங்களது உரையாலும் உணர்ந்தோம் - எங்களது
வரலாற்றின் மைல் கல்லே வாழ்வீர்  நும் புகழை
உரையாற்றும் எங்கள் உலகு..