Tuesday 10 October 2017

இதுதான் எங்கள் அழகிய தேசம்..

எத்தனை ஆண்டு,எத்தனை உயிர்கள்
எத்தனை வலிகள், எத்தனை இழப்பு

இத்தனை கண்டும்,இத்தனை பட்டும்
ஒத்துளைத்தோட முடியுமா அவரொடு?

மானம், ரோசம் வேண்டாம் மனசில்
மனிதம் கூட இல்லையா? அடிப்படை
உளவியலின் படி பார்த்தாலேனும்
கொன்றவனோடு கூட இருப்பது
ஒன்றாய் நடப்பது, உறங்கி எழுவது
எப்படிச் சாத்தியம்?

நல்ல ருசிக்கு
நாக்கு நரம்புகள்
சில்லிட்டிருக்கலாம் உனக்கு
அதற்காய்
பல்லுக் கூசும் படியாய் எப்படி
நரம்பே அறுந்து இப்படிப் பேசுவாய்?

எண்பதிலேயே யுகப்பிரிகோடு
இனப் பிரிகோட்டைக் கிழித்தது
அதன் பின்
'ஒண்டுக்கிருத்தல்' என்பதுவெல்லாம்
உடைந்த கண்டத்தகட்டை மீண்டும்
ஊம்புதல் மூலம் ஒட்ட நினைத்தலே

தனக்கு ஓர் காலம் தானே வரையும்
தனக்கெனப் பிறப்பை தானே எழுதும்
தன்னுடை வருகை தானே அறியும்
அதற்கொரு தலைமையை அதுவே தெரியும்
அதுவரை
விடுதலையென்னும் விதை தனக்குரமாய்
ஆண்டுகளாக அழுத கண்ணீரை
அதிசயிக்கின்ற போரியல் நெறியை
அதற்காய் பிள்ளைகள் கொடுத்த தம் வாழ்வை
அத்துணை இழப்பை, ஆசையை, தேவையை
சத்துள ஊட்டமாய் எடுத்துள் வளர்ந்து
கற்தரை பிளந்து விருட்சமாய் நிமிரும்

அதுவே விடுதலை
அதுவே கனவு
அதுவே எங்கள் அழகிய தேசம்..