Friday 3 August 2012

வீழ்ந்தாலும் வாழ்வேன்..

கையைக் கூடக் காட்டாமலும்
தலையைக் கூட ஆட்டாமலும்
எதற்கென்றே புரியாமல்
என்னிலிருந்து
நீ போன பின்னாலும் கூட
கருக்கட்டிய மேகங்கள்
வானத்தில் கூடும்
ஊழி உடுக்காகும் இடி
என்னை வெட்டி வீழ்த்திய
உன் இமை வெட்டாய்
மின்னல் வெட்டி மழை பொழியும்
நிலம் நனைந்து ஈரலிக்கும்
ஆனால் அதில் குளிர்ச்சி இருக்காது

இன்றைய நாட்களில்
பனிப்புகையின் நடுவே
உனக்கு மங்கலாகத் தெரிகின்ற
என் உருவம்
நாளுக்கு நாள் கூடுமுன்
தேகச் சூட்டின் தகிப்பில்
ஆவியாகி அகன்று போகலாம்
போகும்,
கால அலை அடித்து
உன் மனக்கடற்கரையில் இருக்கும்
என் நினைவுச் சுவடுகள்
அரிக்கப்பட்டு விடலாம்
விடும்,
ஒன்றாக இருந்துடைந்த
லெமூரியாக கண்டம் போல்
சிதையுண்டு போன
ஓர் புராதன நினைவாய்
நான் உனக்கு ஆகி விடலாம்
ஆகும்

காலுதைத்து
தலை கொண்டு பிளந்து
ஏதோ ஓர் நிலப்பிதிர்வில்
ஊற்றின் ஓர் துளியாக
உயிர்கொண்ட நான்
ஓடி ஓடிச் சிற்றாறாகி
அனுபவக் கிளைஆறுகளையும்
அணைத்தபடி பேராறாய்
இனியும் ஓடிவிட முடியாத
ஓர் மலையுச்சிக்கு வந்துவிட்டேன்
கீழே அதலபாதாளம்
எந்த நொடியும்  இதிலிருந்து
நான் உருண்டு வீழ்ந்து விடக் கூடும்
வீழ்வேன்
ஆனாலும் என் வீழ்ச்சி
விழும் போதும் அழகாகும்
நீர் வீழ்ச்சி போலத்தான்
அழும் படியாய் ஏதும் இருக்காமல்
நிலம் மலர
அழகாகத்தான் வீழும் அறி..

வற்றிய கடல்..

இதற்குமேலும் உன்னால்
எதுகுமினித் தாங்கேலா
எதற்கு மனமே நீ
இன்னும் இழுத்தடிக்கின்றாய்?

உயிருக்குச் சொல் உடலில்
ஓடியது காணுமென்று
மயிரளவும் மதிப்பில்லா
மண்ணான வாழ்வொடு வீண்
மல் வேண்டாம் போதுமென
மதி உரை நீ, ஆறுதலாய்
சொல்வது போற் சொன்னால்
உயிர் கேட்கும் சொல்லிப் பார்

ஓய்வில்லாப் பயணியாய்
உட் சென்றும் வெளி வந்தும்
தேய்மானம் இல்லாமல்
தீராமல் திரிகின்ற
மூச்சோடு பேசி முடிவைக் கேள்
முயன்றாலும்
வீச்சற்று விழப்போகும்
வீணுடலின் பாதைகளில்
காலத்தைத் தாழ்த்தாமல்
கலையச் சொல், வீழ்ந்தாலும்
எவருமே எடுத்தேந்த
இல்லாத இவ்வுடலில்
அவமாகக் காலத்தை
அழிக்காமல் போகச் சொல்

தினமும் மடிப்படைந்து
தீவிரமாய் எண்ணி எண்ணி
கனவும் கண்ணீரும்
கண்களுக்குள் வடிக்கின்ற
மூளைக்குச் சொல்
முட்டாள்த் தனத்தை எல்லாம்
வேளைக்குக் குறைத்து
வெறுந் துடிப்பை நிறுத்தி விட்டு
புலன்வதைக்கும் பொறிமுறையைப்
போட்டுறைந்து போ என்று,
கலங்கடிக்கும் கட்டளைகள்
காணும் என்று சொல்லி விடு

வற்றிய கடலாக
வறண்டுடைந்த நிலமாக
இற்று வீழ்ந்து விட்ட மரமாக
இயல்பறுந்து
செத்துயிர்த்துச் செத்துயிர்த்துச்
சிதைவானேன்? என் மனமே
இத்தனைக்கு மேல் பிறப்பால்
ஏலாது சீக்கிரமாய்
முற்றுப்புள்ளி வைத்திதனை முடி..

அப்படியே போ..

விம்மி அழுதென்னை
வீழ்த்தாதே, மூக்கிழுத்து
கம்மிய குரல் செருமிக்
கதைக்காதே, உனைவிட்டு
எப்படியென் வாழ்க்கையென
ஏதுமினிச் சொல்லாதே
முப்பொழுதும் உன் நினைவே
மூச்சென்று முனகாதே

எப்பொழுதோ எம் வழிகள்
எழுதப் பட்டாயிற்று
இப்பொழுதே எம் இருப்பு
எமக்குத் தெரிகிறது
தப்பான காலத்தின்
தாள் திறந்து இவ்வளவும்
எப்படி நாம் வாழ்ந்திருந்தோம்
எனுமுண்மை புரிகிறது

போகப் போவதென்று
புறப்பட்ட பிறகென்ன
தாக நினைவும் தவிப்பும்?
தள்ளாடும்
மோக நினைவை
முழுதும் எரித்து விடு
ஆக வேண்டியதில்
ஆயத்தப் படுத்துன்னை

சிவப்பு நரம்பூறிச்
சிந்தும் விழிகளினால்
தவிப்பொழுகப் பார்த்தென்னைத்
தள்ளாட வைக்காதே
நெஞ்சுயர்த்திப் பெருமூச்சை
நெரிப்பது போல் விட்டெந்தன்
கொஞ்ச உறுதியையும்
குலைக்காதே, சாவீட்டுக்

காரியத்தை முடித்த
காடாற்றுப் பூசாரி
வாரிச் சுருட்டி
வந்த இடம் பார்க்காமல்
நேரே பார்த்தபடி
நிம்மதியாய்ச் செல்வது போல்
அப்படியே போ
அணுவளவும் திரும்பாதே
இப்படியே என் பாட்டில்
ஏதோ நான் போகின்றேன்..

உயிர் வினா..

நிலம் பிளந்தூறுகின்ற
நீரூற்றைப் போல, மாறும்
உளம் இருக்கும் உடலினுள்ளே
ஊறுவதா உயிர் அருவம்?

வீசலுறும் விந்தோடி
விளை சூலில் நுளைந்த பின் தான்
கேசமுறும் உயிர் முளையும் தோன்றுதென்றால்,
உயிரென்ன
இரெண்டின் சேர்க்கையினால்
எழுகின்ற ஒன்றா? இல்லை
உயிர் தான் விந்தாமோ? உடல் சூலோ?
ஆயின்
ஒரு கோடி உயிர் கொன்றா
உயிர் ஒன்று வருகிறது?

மின்சாரம் உயிர் என்றால்
மின் கடத்தி உடல் என்றால்
மின்குமிழ் தான் ஐம்புலனும்
மெய்ம்மைதான், அதைப்பாய்ச்சும்
ஆழியினைப் போடுவதார்?
அந்த விரல் எந்தவிரல்?

இப்படியாய்
எந்தப் பதிலும்  எதுமுயன்றும் புரியாத
வந்த வழி தெரியாத வாழ்வில் வீணாக
நொந்து குமைவானேன்? நொடிவானேன்?
பிறப்பென்னும்
விந்தை உதிப்பெண்ணி விய..