Friday 23 September 2016

மடி குளிரும்..

எமக்கான கொடியை இன்னும்
ஏற்றுகிறேன், பக்கத்தில்
இணைந்து நிற்கத்தான் நீங்களிலை
அசைந்தெழுந்து
ஏறுகின்ற செம்பாடல்
பாடுகின்றேன், ஒன்றாக
இசைந்து பாடத்தான் எவருமிலை
தலை நிமிர்த்தி
அகவணக்கம் செய்துருகி
எண்ணுகிறேன், நிரையாக
அடுத்தடுத்து நிற்கத்தான்
ஆட்களிலை, இது போல

தனித்துப்போய் கண்டத்
தகடுகளின் கோடிகளில்
தங்களுக்குள் கொடியேற்றி
தங்களுக்குள் பாட்டிசைத்து
தமக்கான தேசத்தை
தம் அறையுள் வடிவமைத்து
தாகத்தோடின்னும்
தவமிருப்போர் ஆயிரம் பேர்

பொறுமையாய் இருந்தாலும்
பூசலாராய் இருக்கின்றோம்
மனசின் அகக் காட்சி
மலர்ந்து விடிந்தொரு நாள்
மண்ணின் யுகக் காட்சியாகும்
மடி குளிரும்.. 

Friday 2 September 2016

இதமான இரகசியங்கள்..

இளமழையில் துளிர்த்து
அழகுப் பசுமையாய் காற்றிலாடி
காயும், பூவுமாய் கண் நிறைந்து
பின்னோர் நாள்
பழுத்து காம்புடைந்து
சொல்லாத நினைவுடன்
மண் வீழும் இலையாய்

நீல வான் திரையில்
வெள்ளை ஓவியமாய் மிதந்து
கணமெனினும் வாழ்ந்து
பேசாத கதைகளுடன்
கலைந்து சென்றுவிடும்
முகிலாய்

கடலோடு கடலாகக் கிடந்து
காற்றணைக்க மெய்சிலிர்தெழுந்து
மூச்சிரைக்க
கரை நீவித் தழுவி அந்தக்
கதையெதுவுங்  காட்டாமல்
பின் வாங்கிச் சென்றுவிடும்
பேரலையாய்

வெளியில் சொல்லாமல்
விடைபெற்றுச் செல்கின்ற
எத்தனை கதைகளுண்டு எம்முள்?
கொடுப்புள் சிரிப்பாயும்
கண்ணோரம் கசியும்
கனநினைவுத் துமிப்பாயும்
மிண்டித் தொண்டைக்குள்
விழுங்குமுமிழ் நீராயும்
இதமான,கனமான
எத்தனை இரகசியங்கள்
எங்குமே தெரிதலின்றி
எம்மோடே முடிகிறது..