Monday 18 March 2019

கரங்களை நீட்டும் கனவு

இலை உதிர்ந்தாலென்ன நண்பா
பார்த்துக் கொண்டிருக்க
பருவம் மாறும் துளிர்க்கும்
கிளை உடைந்தாலும்,
இருக்கட்டும்,
இன்னொரு கிளையுண்டே,
போதும்,
மரமே பாறி வீழ்கிறபோதுதான்
உரஞ்சிதறிப் போகிறது
ஆயினும்
இப்போதும் கூட எழச்சொல்லி
கரங்களை நீட்டுகிறதென்
கனவு..


அவதானம்..

தோற்ற தன் நண்பனுக்கு
தோள் கொடுத்து அவன் மனசை
ஆற்றுப்படுத்துமோர் ஆறுதலைச் சொல்லாமல்
விழுந்தான் எனுங் கணத்தில்
விலத்தி மிகத் தந்திரமாய்
அத்துணை வேகமாய் கழன்ற அவன்
உமை நோக்கி
ஓடி வருகின்றான் ஒட்ட,
அவதானம்..


அப்படியே தான் இருக்கிறது..

வாழ முடிந்த வாழ்வையும்
இன்புறக் கிடைத்த இளமையையும்
எதன் பொருட்டு துறந்தாயோ

வெடித்துப் பறக்கும்
பருத்திப் பஞ்சின் கனம் தான்
உயிரென்பதுவாய்
இரெண்டு கைகளாலும்
அப்படியே வழித்தெடுத்து
எதற்காக உன்னையே நீ
தாரை வார்த்தாயோ

ஆண்டுகள் பல ஓடிப்போயிருப்பினும்
அதற்கான காரணங்கள்
இன்னும் அப்படியே தான் இருக்கின்றன
நண்ப..


விடுதலைக் கனவு..

எந்தைகள் முயன்றதை
நாங்களும்
நாங்கள் முயன்றதை
மகன்(ள்)களும்
மகன்(ள்)கள் முயன்றதை
பேரர்களுமென
எத்துணை இழப்பினும்
நனவாகுமெனும்
நம்பிக்கையை மட்டும் இழப்பதில்லை
விடுதலைக் கனவு..


Tuesday 5 March 2019

மறைவதெல்லாம் காண்பமன்றோ..

நாட்கள் ஓடி நரைத்தாலும்
இன்னும் கமழ்கிறது
நாசியில் காட்டின் வாசனை

எறிகணைக்கு பாதி முறிந்தாலும்
இன்னும் நிமிர்வாய் நிற்கிறது
மனசில் ஒற்றைப் பனை

வற்றிப் போனாலும்
இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது
நினைவில் வழுக்கை ஆறு

மெளனித்துப் போனாலும்
இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது
காதுகளில் விடுதலைக் குரல்..


Saturday 2 March 2019

சமதரை..

உலகைக் காணும் உயரத்துக்கோ
உலகு காணும் உயரத்துக்கோ
எப்படியேனும் செல்ல வேண்டியது
உண்மைதான்,
மலை உச்சி எனினும் நிற்பதற்கு
சமதரை வேண்டுமல்லவா..?
அங்கிருந்து நீ செப்பனிடு
இங்கிருந்து நான் செப்பனிடுகிறேன்
வரைபடத்தில் கூட
தேசம் எல்லைகளில் நடுங்கக் கூடாது

எந்தப் புயலும், வெள்ளமும் இனிமேல்
எதனையும் பிரட்ட முடியாத படிக்கு
அத்தனை தெளிவாய், ஆழமாய்க் கீறு
உயர ஏறி நிற்பதென்பது
நீயும், நானும் தனியாய் நுனியில்
அடையாளத்துக்காய் நிற்பது அல்ல
அதன் பின்னரும், பின்னரும் கூட
இனமாய் சேர்ந்து ஊழிவரைக்கும்..,

உலகைப்பிரட்ட உலகின் வெளியே
துண்டு நிலமும், நெம்பும் கேட்டதன்
அர்த்தம் உணர்வாய், ஆதலால்
வேண்டுமோர் சமதரை
மீண்டும் எழுவோம்..