இடிபாடுகளிடையே
காற்று ஒரு பண்ணை முணுமுணுக்கிறது
உடைந்த கற்களில் பிறந்த இசை,
ஒவ்வொரு விரிசலும், ஒவ்வொரு பிளவும்
காலத்தின் சுரங்கள்
மறக்கப்பட்டவற்றின் இசைக்கோர்வை
ஒருகாலத்தில்
பெருமிதமாய் நின்ற தூண்கள்
பேச்சின்றி இப்போது
உறைந்து போய் கிடக்கிறது
ஆனாலும் அவற்றின் நிழல்கள்
முடிவிலியை நோக்கி நீள்கின்றன
சிதறிக் கிடக்கும் ஒவ்வொரு கல்லிலும்
ஒரு கதை உறங்குகிறது
சிரிப்பின், காய்ந்துபோன கண்ணீரின்
எதிரொலிகள்
யார் இங்கு நடந்தார்?
யார் இங்கு அழுதார்?
யார் இங்கு காதலித்தார்?
காற்று கேள்விகளை வீசுகிறது
பதில்கள்
ஆண்டுகளின் இடிபாடுகளுக்குள்
புதைந்துள்ளன,
இடிபாடுகள் உண்மையின்
காவலர்களாய் இன்னும் நிற்கின்றன
உடைந்த உருவங்களெனினும்
அவை
விட்டுக்கொடுக்காதவை
தலைவணங்காதவை
வாழ்வின் நிலையாமைக்கு மட்டுமல்ல
வாழ்ந்த வாழ்வுக்கும் இது தான் சாட்சி
மெதுவாக நட,
ஒவ்வொரு அடியையும் பத்திரமாக வை
ஏனெனில்
இந்த நிலம் உன்னை நினைவில் கொள்ளும்
சுவர்கள் இடிந்திருந்தாலும்,
இடிபாடுகள் மூச்சுவிடுகின்றன
அவற்றின் பேரமைதியில்
வாழ்வு இன்னும்
பாடிக்கொண்டிருக்கிறது..
No comments:
Post a Comment