Sunday, 22 December 2024

வான்பெருந் திரையின் வண்ணம்..


அகல்வான் பரப்பின் அவிர்திரை கீழ்வைத்து

கனவுக் குருவின் கதிர்சிறை பறக்கும்

உயர்வான் நிலனொடு ஒன்றிய வரைப்பு

மருளாய்க் கானல் மறைந்தனை யோடும்!

-

மாண்மலர் வானின் மறுகிய பரப்பில்

பொன்துகள் போலப் பொலிமீன் மிளிரத்

தென்றிங்கள் ஒருதனி தெருவினிற் செல்ல

வெண்கதிர் பரப்பி வியன்நிலம் புல்லி

பால்வெண் ஒளியால் படர்ந்துயர் மூடும்!

-

பெருநில உலகின் பேரெலாம் எங்கும்

தொடிமுகில் திரிதரத் தோற்றமும் உணர்வும்

நோக்குநர் உள்ளம் நொய்தினி லுருகப்

பல்கேள்வி எழுப்பிப் பதிலின்றி நிற்க

பொருளுணர் கனவும் புலனெலாம் தேக்கி!

-

நினைப்பெனும் பெருக்கின் நீள்வரை யோங்கி

கண்ணாடி யனைய கருநீல வானம்

அச்சுறு ஆழம் அகன்றுநின் றாலும்

பேரொளி யினிதிற் பிறங்கியே தாங்கும்!

-

அசைவற நிமிர்ந்து அமைதியிற் கேட்க

ஊமை மொழியால் உண்மையே உரைக்கும்

வரையிலா வானம் வழிவழி நின்று

நிலனும் வானும் நெடுங்காலம் கூடும்..

No comments:

Post a Comment