Sunday 26 February 2012

பசுந்தரையாகப் படருவேன்..

நாட்களின் நீளமும்
நம்மிடை இடையெழும்
வாட்களின் நானுனி
வார்த்தையின் கீறலும்
கெளரவம் பார்க்கின்ற
காதலும் இற்றையில்
பேச்சறுந்த ஓர்
பெருவழிப் பாதையில்
மூச்சறுந்த ஓர்
முரண் நிறை வாழ்க்கையும்
வீச்சறுந்து வீழ்
விந்தினைப் போலவே
பாச்சொரிந்த வாழ்(வு)
பலமிழக்குதோ..?

என்னுடை
முள்ளுடல் தன்னிலே
முன்பெலாம் உன்னிதள்
முட்டினால் மொக்குகள்
தோன்றிடும், இன்று ஏன்
செவ்விதள் தன்னிலே
சிந்திடும் சொற்களில்
மொக்குகள் முட்களாய்
ஆகுது..?

கட்டிலில்
இன்னுமாய் இன்னுமாய்
என்னிலே உன்னுடல்
பின்னடா என்று நீ
மின்னையில் உன்னிமை
ஒவ்வொன்று மொவ்வொரு
உயிருடற் கைகளாய்
கவ்வி அழைத்தது கட்டி
இன்று பார்!
உன்னிமை வெட்டிடும்
ராவண வெட்டிலே
என்னுயிர் முண்டமாய்
வீழுது, ஒவ்வொரு
இமைகளாய்த் தொங்கிடும்
கத்திகள் எந்தனை
கனவிலும் தள்ளுதே
ஏனடி..?

கலவியில்
உன்னை நான் தயிரெனெ
என்னை நீ மத்தென
உருட்டி உணர்ந்துமே
கடைகையில் திருப்தியின்
அமிர்தமாய் ஓர் துளி
உன் கடை விழிதனில்
உருள்கையில் தெரிகிற
வானவில் பிரிகையின்
புதிர் நிறை முடிச்சினை
புன் சிரிப்பவிழ்த்திடும்
கதிர் நிறை காலமும்
கடந்ததோ..? இன்று உன்
கண்களை எண்ணினால்
கண்களை நிறைக்கிற
தன் களை இழந்திடும்
தாப நீர் முட்டியே
விண் களை இழந்ததாய்
விரக்தியாய், பார்க்கையில்
வெண் களை இழந்துபோய்
வெறுங்கரு நீலமாய்
கண் முழிக்கறுப்பதாய்
காட்சிகள் அற்றதாய்
என் விழி அறியுதே
ஏனடி..?

அன்பினால்
ஆசை நரம்பினை
இழுத்தெடுத் திருவரும்
பாச நரம்பினை ஒட்டிய
பதியமும்
வீசி வளர்ந்தது விருட்சமாய்
இடையிலே
மோசம் மிகுந்தவோர்
காலம் எழுந்தெமை
முக்கிப் பிரிப்பதைக் கண்டியோ..?
அறிவிலாய்!
பாச நரம்பினைப் பற்றியுன்
கைகளால்
கூசுதலின்றி முட்சுவரிலே
தேய்துமே
வாச நினைவினை அறுக்க
நினைக்கிறாய்
தேய்த்து தேய்த்து நீ
அறுக்க முயல்கையில்
தெறித்தெழும் கீச் ஓசையில்
பல்லெலாம்
கூசி உடைந்து சிதறுது
குழந்தையே!

பாலைவனமதாய் நிற்பதாய்
எண்ணி நீ
பதைப்பதை இங்கு நான்
பார்க்கிறேன், ஒரு முறை
கைகளை நீட்டி நீ
கண்களைக் காட்டினால்
எம்மிடை வீசிடும்
பெருமணற் புயலினை
என் மனமலையினால் தடுத்துமே
உன்னை நான்
பசுந்தரையாக்கிப் படருவேன்
பாரடி..!

துயரப் பெருவெளி..

துப்பாக்கி வேட்டுகளுக்குப் பயந்து
ஐம் பூதங்களும் அன்று
அடங்கியிருந்தன

நீரின் ஆவி போதாதென்று
குண்டு துளையிட்ட
துவாரத்தின் வழியால்
மேலே மேலே தொடர்ந்தெழும்
வீரனின் ஆவிதனையும்
ஆசை மிகுந்து
அள்ளி அள்ளிக் கையால் வழிய
கொள்ளை விருப்பில் குடித்தது
வானம்

ஈரம் ததும்பி வழிந்தும் நிலமோ
இன்னும் அடங்காத் தாகம் நிறைந்து
ஓடிய குருதி வெள்ளம் முழுதும்
ஓவென திறந்த வாயால் குடித்தும்
அவா நிறைந்து இன்னமும் தேடி
குருதியை உறிஞ்சிக் குடித்தது

காற்றும்
உலகச் செவிகளிலே
உரத்துப் படும்படியாய் எங்கள்
அவலக் குரல்களை
அள்ளிச் செல்லவில்லை
வெடியின் அதிர்வில் காற்றுக்கும்
வெடித்துச் செவிப்பறை
கிழிந்தொழுகி
குழந்தை கதறும் அழுகை ஒலி
வழுகிக் காதால் விழுந்ததுவோ..

உள்ளே கனென்று எரிந்த தீயில்
நாடே அல்லவா எரிந்திட வேண்டும்
பாடை கூடப் பற்றிடவில்லை
சாம்பல் பூத்துக் கிடக்கலாம் உள்ளே..
ஊதி வளர்த்த ஓர்மக் காற்று
வாயே திறக்க மறுத்ததால் தீயும்
ஆர்வமற்று அடங்கிக் கிடந்ததோ..?

தேவை அற்ற பொழுதின் போது
தென்னை அளவு கிளரும் கடலும்
மூசிப் பேசும் வழக்கம் நிறுத்தி
மூச்சை நிறுத்திக் கிடந்தது
அலை தான்
கையைச் சுழற்றி எறிந்தால் அந்த
கரையில் வீழும்
கல்லெறி தொலைவில்
இருக்கும் எங்கள் தொப்புள் கொடிகள்
எத்தனை கோடி ஆயினும் அவர்கள்
கிராமக் கோடி ஒன்றில் தினமும்
அடி உதை வாங்கும் குடியன் மனைவி
எதுவும் பேசத்திராணி அற்று
அழுதும் தொழுதும்
விதியினை நொந்தும்
அறைக்குள் சுருண்டு படுப்பதைப் போல
எதற்கும் துணியா பழக்கம் வந்து
கடலும் தனக்குள் அழுது கொண்டு
அவர்களைப் போல கிடந்தோ
அறியேன்..?

உண்மையில்
நடந்த கொலைகளின்
வன்ம அழுத்தம்
மூச்சை அழுத்தி முழிகள் பிதுங்கி
பொறியும் சிதற ஐம் பூதமும்
கிளர்ந்து
புயல் அடித்தும் நிலம் பிளந்தும்
அதன் நடுவால் தீ எழுந்தும்
ஊடறுத்துக் கடல் புகுந்தும்
வானுடைந்து நிலம் விழுந்தும்
நாடே இரு துண்டாய்ப்
பிளந்திரண்டு நாடாக
ஆகி இருக்கோணும் அம்மாணை
ஆனால் எதுவும் நடக்கவில்லை..!

எந்த மண்ணிலே பிறந்தாரோ
எந்த மண்ணிலே வளர்ந்தாரோ
எந்த மண்ணினை ஒவ்வொரு துளியாய்
விரும்பிப் போரிட வந்தாரோ
எந்த வானினைப் பார்த்துத் தங்களின்
திசையினை அறிந்திடத் தெரிந்தாரோ
அந்த மண்ணில் ஒரு பிடி தன்னும்
கைகளால் தொட்டிட முடியாமல்
அந்த வானின் அழகு முகத்தை
ஆவி பிரிகையில் பார்க்காமல்
எங்கிருந்து மரணம் வருகுது
என்பதும் கூடத் தெரியாமல்
இருண்ட கண்களில்
எல்லாம் இருண்டிட
சுருண்டு வீழ்ந்ததை எண்ணுகையில்
ஒவ்வொரு மயிர்த் துளைக்
கண்களும் கண்ணாய்
அழுது துடிக்குது ஆற்றாமல்..

அவளின் வாழ்வோ
வார்த்தைகள் அற்ற துயரப் பெரு வெளி
இறுதிக் கட்டப் போரின் வெடிப்பில்
கடலின் களத்தில் கணவனை இழந்தாள்
அவனின் நினைவாய்  கையில் குழந்தை ,
பச்சை உடம்புப் பத்திரம் துறந்து
கண்ணைத் துடைத்து நடந்தாள்
குழந்தையும்
மாத்தளன் மண்ணில் சிதறி விழுந்தது
எல்லாம் போன நிலையிலும்
மண்ணை எண்ணி இன்னமும்
ஏறி நடந்தாள், இறுதியில்
கயவனின் பிடியில் காயம் வருந்தி
சிதைந்து சிதைந்து வருந்தி மடிந்தாள்

கொத்தாய் குலையாய்
குடும்பமாய் இன்னும்
எத்தனை கொடுத்தும்
விடியா மண்ணே..
என்ன தான் கேட்கிறாய் இன்னமும்..?

ஆனால்
இறந்த வீரரின் ஆடையைக் கழற்றி
பிறந்த உறுப்பினைப் பார்த்து ரசிக்கிற
அறுந்த கேவலச் சாதியே நீங்களும்
திறந்த மேனியாய் எங்களின் வீதியால்
பறந்து ஓடலைப் பார்த்ததன் பின்னரே
இறக்கும் என்னுடல் அன்றுதா னுடலினைத்
துறக்கும் என்னுயிர்த் தூசு.

கால நதிக்கரையில்..

வாங்கிய புதுப் பேனா
வரைகிறதா எனப் பார்க்க
ஏதோ சும்மா ஒன்றைக் கிறுக்கினேன்
இரவு வந்து
நாக்கில் விரல் தொட்டுத்
தாள் தட்ட கிறுக்கலதாய்
காலங்களைக் கடந்த
கனவான உன் பெயர்
விக்கித்துப் போனேன்!

எனக்கே தெரியாமல்
எப்படி நான் உன் பெயரை
மன மூளை சொல்லாமல்
வரைந்தேன்! ஒரு வேளை
காலம் அரித்து விட்ட
காதல் நினைவெல்லாம்
விரல் நுனியில் தானிருந்து
விம்மிடுமோ..!

இல்லையெனில்
எண்ண வலை பின்னும்
மனச் சிலந்தி ஓர் இளையை
விரல்க் கரையில்
ஒட்டிவிட்டுப் போயுளதோ?
விளங்கவில்லை!

என்னை நீ பிரிந்து
இன்னொருவன் கை தொட்ட
இந்த நீண் டாண்டுகளின்
இடைவெளியில் சில முறை நான்
உன்னை நினைத்ததெல்லாம்
உண்மை, மனஞ் சிதைந்து
காதல்க் கொடும் பிரிவின்
முற்காலப் பகுதியிலே
கத்தி அழுததுவும் உண்மை

அது பின்னர்
வற்றி வழிந்தோடி
மெளனமாய் நிழல் தேடி
எச்சில் விழுங்கையிலே
இறுகுகின்ற தொண்டை என்ற
இயல்பளவில் மெல்ல இறங்கி
பழகிப்போய்
நாளாந்த வேலைகளுள்
நலிவடைந்து போயிற்று

எனக்கென்றோர் துணை
வந்த முதல் நாட்களிலே
உனைக் கண்டால் எப்போதும்
ஊறித் ததும்புகிற
மனக் காட்டாற்றின்
மயக்கும் இசை ஓரத்தில்
புறாவின் குறு குறுப்பைச்
சுமந்தபடி என் உடலில்
கிறு கிறுக்கும் நினைவுகளாய்த்
திரிந்ததனை மறுக்கவில்லை

அதுவும்
துணை தந்த அன்பின் முன்
நாளடைவில்
விலகித் தன்பாட்டில் போயிற்று
மகன் பிறக்க
எல்லாமே அவனாய் ஆன பின்னர்
உன் நினைவு
ஒரு போதும் எனைச் சுற்றி
வந்ததில்லை

இன்றென்ன..
ஆண்டு பல கடந்தும்
அடியோடு மறந்திருந்தும்?
எப்படி எங்கிருந்து
என்னறிவுக் கெட்டாமல்
விரல் வழியாய்த் தாளில்
விழுந்தாய்! ஒரு வேளை
நீ கூட என்னை
நினைத் தாயோ?

எதுவேனும்..
என் புலனுக்கறியாமல்
தாள் மீது ஒரு கவியாய்
விழுந்த உன் பெயர்
வியப்பூற உயிர் பெற்று
விம்பமாய் என் முன்னெழவும்
உன் வாசம்
நாசிதனில் ஏறிப் புரக்கடித்து
கண்ணோரம்
ஆசைக் கனவாக வழிகிறது

வாழ் கனவே..!

கால நதிக்கரையில்
நாம் நடந்த காற் தடத்தை
ஆண்டுகளின் ஆற்றோட்டம்
அரித்தாலும் எஞ்சியுள்ள
சுவட்டுக் கரைக் குருதிச்
சுற்றோட்ட வெப்பமென்னில்
இறக்கும் வரை வாழ்வாய்
என் காலம் கடந்தவளே..

நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்..

தலைப் பயணியே எங்கள்
தாற்பரிய வேர் முடியே
அலைக் கரத்தில் அவதரித்த
உலைக் கரமே  யாராலும்
விலைக்கென்றும் வாங்கேலா
வித்தகமே எம் மண்ணில்
போர்க்குணத்தைத் தோற்றுவித்த
பொருள் முதலே!  கனவிலும் நாம்
கட்டுவதை எண்ணிப் பார்க்கேலாக்
கட்டமைப்பை உன்னுடைய
சுட்டு விரல் அசைவாலே
சூழந்து நிற்க வைத்தவனே..!

உலக வரை படத்தின்
எங்கோ ஓர் மூலையிலே
பெயரின்றிக் கிடந்த ஓர்
பேரினத்தின் பேண் தகவை
அகில உலகத்தின்
அன்றாடப் பார்வைகளில்
பெரும் பிம்பமாக்கி வைத்த
பெரும..! மண்ணின்று

நீ வந்த நாளின் நினைவில்
நின் இருப்பை
சோகங் கலந்திருந்தும்
சுமை நிறைந்து நெஞ்செரிந்தும்
தாகம் தீர்ப்பதற்கு வந்திடுவாய்
என ஏங்கி
பாலைவன ஒட்டகமாய்ப்
பார்த்துளது, காலத் தீ

உலகே சேர்ந்தொன்றாய்
ஊதி விட்ட காற்றினிலே
எம் காட்டை
எரித்து விட்டுப் போனாலும்
அதனுள்ளால்
நினை ஏந்திப் போயிருப்பார்
நிச்சயமாய் என்கின்ற
வானேந்தும் வார்கடலின்
வற்றாத உறுதியைப் போல்
நாமேந்திக் கொண்டிருக்கோம்
நம் நெஞ்சில், ஆகவனே..

எம்முடைய வாழ்வும்
எதிர்கால வழித் தெளிவும்
உன் பயணச் சுவடெங்கும்
உயிர் நிறைந்து கிடக்கிறது
எம் பயணம் எதுவென்றும்
எது அதற்கு வழி என்றும்
உன் பயணச் சாராம்சம்
உரத்திங்கே சொல்கிறது

கண்ணின் கதிராடி போன்றவனே
உன் வரவை
எண்ணி இமைக் கரங்கள்
எட்டுகின்ற திசைகளெல்லாம்
அண்ணா எனத்தேடி அழைக்கிறது
விழிச் செவியும்
பார்வைச் செவிப் பறையில்
படும் உந்தன் குரல் என்று
ஆர்வங் குலையாமல்
அலைகிறது, போதுமினி

ஓர்மம்
தான் பெற்ற ஒரு மகனே
எம் முன்னால்
இருக்கின்றாய் இல்லையென
இழுபடுமோர் கதை நிலவும்
இழிகாலம் வந்த நிலை
எண்ணுகையில் என்பெல்லாம்
உருகி வெடித்தொழுகிக்
கருகி உயிர் போவதற்குள்
தெரிய நீ வருவாயோ?
தெரியாமற் போவாயோ?
அறியேன் நான்!, ஆனாலும்
அழியாமல் எம் நெஞ்சுள்
ஒளிகாட்டும் வரலாறாய்
உயிர்த்திருப்பாய்
உரந் தருவாய்..

கட்டி அழுதது காமம்..

செழித்து மதாளித்து நெளிந்த படி
கொளித்துப் போய்க் கிடக்கிறதுன்
உடல்ச் செடி

இருளாய்ப் படர்ந்திருக்கும்
உன் பிடரி முடி அடிவேரில் என்
பத்து விரல் நுளைத்து பற்றவும்
ஒளி நிறைந்து
அல்லியாய் அவிழ்கிறது
உன் முகம்

நெற்றி கண்களென
நீளுகிற முத்தம், உதடுகளைப்
பற்றி உண்கையில்
பட படக்கும் நாடிகளைச்
சுற்றித் தெறிக்கிறது வெப்பம்

தகிப்பதனால் தான் தேகமோ
மயிர்க்காலின்
ஒவ்வோர் துளை வழியும்
ஊறுகின்ற உயிர்க் கனலில்
ஆவி உயிர்க்கிறது வியர்வை

மண்ணை மழை தொடவும்
மதர்த் தெழும்பும் வாசம் போல்
சின்னப் பூப் பூவாய்
சிந்துகிற என் வியர்வை
வண்ண மிகு உன் உடலில் வடிய
எழுகின்ற
ஆத்ம தாகத்தின் வாசத்தை
உயிர் குடிக்கும்

தோலின் நிறம் மாறும்,
துடித்தாடும் ஆசைக்கு
அடிக்கின்ற தவிலாய்
இமை ஆடும்
மென் தண்டின்
இளந்தளிரின் சிவப்பு
விழி ஏறும்

கண மொன்றில்
கூடு விட்டுக் கூட்டுக்குக்
குதிப்பது போல் மின்சாரம்
ஓடிப் பாய்கின்ற உணர்வொன்றில்
உன் கண்கள்
கூடி எங்கே தான் ஒழிந்ததுவோ..?
தீராத
ஆசைகளைத் தீராமல்
அடைவதற்கு மேற் செருகி
தியானித்திருக்கிறதோ
அருள் வேண்டி..
உடலுள்ளே
தீ வடிவாய் இருக்கும் அத்
தெய்வத்தைக் காண்பதற்கு
காவடி எடுத்தாடிப் போயிற்றோ

உடலிணைவின்
உச்ச நிலையில் மன மலையில்
ஊற்றெடுத்த
அமுத நீர் வீழ்ச்சி
அளைவதற்கு ஓடிற்றோ

எங்கே சொல்லடி உன்
கண்ணெங்கே என்ற படி
கட்டி அணைத்திடவும்
கைகளுக்குள் வெறும் பஞ்சாய்
முட்டுப் பட்ட தெந்தன்
தலையணை தான்
அவள் இல்லை..
திட்டுத் திட்டாய்க் கண்ணில்
நீர்த் திவலை, தாங்காமல்
கட்டி அழுததென்னைக்
காமம்..

எனது நீ..

அலை போல மனது நான்
கரை போல உறவு நீ

இமை போல பறவை நான்
எழுகின்ற நினைவு நீ

கரை தேடும் படகு நான்
துறையாகும் நிறைவு நீ

இலையான கீற்று நான்
கிளையான காற்று நீ

நிழலாக உனது நான்
நிஜமாக எனது நீ

எதுவான போதிலும்
அகலாத நண்பனே..!

விழி உள்ள மட்டிலும்
விலகாத விம்பமே

மொழி போல வாழ்விலே
ஒளியான பந்தமே

உயிர் விட்டுப் போகினும்
உதிராது நண்பனே
அயராது நாம் கொண்ட
நேசம்

உடல் விட்டுப் போயினும்
மறக்குமோ உயிருக்கு
உடல் மீது தான் மொண்ட
வாசம்..

ஓடிப் பறக்கிறது காலம்..

கண் முன்னே காலம்
ஓடிப் பறக்கிறது
நேற்றுத்தான் பள்ளியால்
வந்தது போல் இருந்தாலும்
பதினைந்து வருடங்கள்
பறந்தோடிப் போயிற்று,

துப்பாக்கிக் குண்டாயும்
ஷெல்லாயும் எமைக் கடந்தும்
நிக்காமல் வீசும் நிகழ் காற்றில்
எம்மோடு
ஒன்றாய் உடன் வந்த
எத்தனையோ தோழர்கள்
விடை கூடச் சொல்லாமல்
விதையாகிப் போனார்கள்
காற்றுக்குள் சிக்காத காற்றாக
எப்படியோ
கூற்றுவனைச் சுழித்தோடித்
திரிந்தோம், இதற்குள்ளே

நீர்வேலி அரியாலை மீசாலை இப்படியே
ஊர் வேலி எல்லாம் உரஞ்சிக்
கை நிறைய
காதல் வழிந்தோடத் திரிந்திருந்த
காலமெல்லாம்
கைகளுக்குள் சிக்காத காற்றாகப்
போயிருச்சு

மண்ணுக்காய் இப்படியோர்
மல்லாட்டம் நடக்கையிலே
சிண்ணுக்காய் வாழ்ந்து
சிதழூறிச் சாகாமல்
புண்ணாகிப் போயெங்கும்
புரையோடிப் போய்க்கிடக்கும்
மண்ணுக்கு நாமும்
மருந்திடுவோம் என எண்ணி
அவன் கண்ணுக்குள் அகப்பட்டு
கதி கலங்கிப் பொறி சிதறி
விண்ணுக்கு அவன் என்னை
அனுப்பியும் விண்ணோர்கள்
உள்ளே விட என்னை ஏற்காத
காரணத்தால் தமிழ் நாட்டு
மண்ணுக்கு வந்து
தவண்டோடிச் சிறை இருந்து
எப்படியோ..
அரை றாத்தல் பாண் வாங்க
ஆறு கிலோ ஆடையினை
சிரைச்சிழுத்துக் கட்டிப் போம்
சிங்கார தேசமொன்றின்
நரை பிடித்த தீவொன்றில்
நானொதுங்கிக் கிடக்கின்றேன்..

விறைக்கக் காற்றடிக்கும்
அட்லாண்டிக் கடலலை போல்
விறைத்துத் தலை இறுக
அடிக்கிறது நினைவலைகள்

ஐந்தாண்டோ இல்லை அதன் பிறகும்
ஐந்தாண்டோ
எப்போது ஊர் போவேன்
என்பதுவே எனக்கிருக்கும்
இப்போதைக்கான ஓர் கேள்வி
என்றாலும்
எப்பேனும் ஓர் நாளில் நான்
போகையிலே ஓடி வந்து
வா தம்பி என்று வாசலிலே
கொஞ்சுதற்கு
அப்போது யார் இருப்பார்
என்பதனை எண்ணுகையில்
மூச்சுத் தீப்பற்றி முட்டி உள்ளே
மூசுகுது..!

விமான நிலையத்தில்
விடை சொல்ல வாயெடுக்க
அம்மா அழுதழுது சொல்லிற்று!
சரி தம்பி
எனக்கும் நல்ல வயசாச்சு அப்பாவும்
தனக்கும் ஏலாம இருக்கெண்டு
சொல்லுகிறார்
இனி எப்ப பாப்பேனோ தெரியாது
ஏதுமெண்டால்
கொள்ளியினை வைப்பதற்கும்
கூட யாரும் இல்லையடா..!
பிள்ளையப் பாப்பம்
நாம் இருக்கு மட்டும், நீ கவனம்!
போய் வாடா என்றன்று
போதித்த வார்த்தை எந்தன்
தொண்டைக்குள் முள்ளாக
இன்னும் துளைக்கிறது,

இனி மேலின் ஓர் நாளில்
ஊர் போனால் அப்போது
பணப்பையைப் பார்க்காமல்
பசிக்கிறதா எனக்கேட்டு
பிடரியினை வருடிவிடும்
பேரன்பு இருக்காது

இருந்திருந்து பார்த்தவளும்
இளைத்திளைத்து மனம் களைத்து
இவனோடு வாழ்வில்லை
என்றெண்ணிப் போயிருப்பாள்
செழித்து வளர்ந்திருக்கும்
மகனுக்கும் என் நினைவு
புழித்துப்போய் மெல்ல
மறைந்திருக்கும்!

மற்றபடி
நண்பர்கள் பெரும்பாலும்
திக்கொன்றும் திசைக்கொன்றும்
கண் பார்த்துப் பேசேலாக்
காலத்தில் இருப்பார்கள்
நல்லூர் நம்முடைய செனற் இன்றி
வெறித்திருக்கும்
எங்கேனும் கள நண்பர்
வீடென்று கண்டு விட்டால்
அங்கேயும் படமும் மாலையுந்தான்
மீந்திருக்கும்
பெற்றோரின் துணையின்
பிள்ளைகளின் பெரு மூச்சே
சுற்றி வந்து என்னைச் சூழும்
சூக்குமமாய்
அவனோடு நான் நின்ற
அழகான காலங்கள்
எனைச் சுற்றி அப்போது ஓடும்
இயலாமல்
தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழ்வேன்
சொல்லேலா..!

காதலியோ
பிள்ளை குட்டிகளைப்
பெற்றாலும் ஊனுடம்பு
பெருத்துத் தசை போட்டுக்
கொழுத்தாலும் அப்பொழுதும்
அழுத்தம் நிறைந்த மனசோடு
இப்பொழுதும்
முகம் கூடக் காட்டமுடியாது
என்றிடுவாள்

பேரின்றி
கல்லாலும் மண்ணாலும்
கட்டி இருந்தாலும்
கனிவோடும் வாழ்கையினால்
உயிர் பெற்ற வீடின்று
சொல்வதற்கும் சுகிப்பதற்கும்
யாருமின்றி வெறித்திருக்கும்

சொல்லாத கவி ஒன்றின் சுவையாய்
ஊர் நினைவை
என்னுள்ளே எக்கி வைத்தபடி
போய்ப் பார்த்தால்
நில்லாத நீள நதியாய் எல்லாமே
சொல்லாமல் நெடுந்தூரம் ஓடி
மறைந்திருக்கும்!

எல்லாமே இழந்தாலும் இறைவ!
எந்தனுக்கு
பிறந்த இடத்திலே இறந்திடக்
கிடைக்குமோர்
அருந்தவ வாழ்வினை
அருளிடக் கேட்பேன்
அதையும் ஆண்டவன் விதி என
மறுத்தால்
ஏது தான் செய்குவேன்
என்னுயிர்த் தோழா..?

மாலைச் சிவப்பும் மனசும்..

வன்னிப் பரப்பின் நிலமெங்கும்
வாய்க்காலிட்ட குண்டுகளின்
சின்னச் சிதறல்த் துண்டொன்று
சிதறிப் பறந்து சூரியனின்
கன்னம் உடையப் பட்டதனால்
கக்கும் சிவப்புக் குருதியிதோ..!

கொத்தாய் குலையாய் எம் மக்கள்
குடலை அறுக்கக் குருதி நதி
அத்தால் உள்ள கடல் நோக்கி
ஆறாய்ப் பெருகி ஓடியதன்
பத்தா வானநிறத்தைத் தான்
பருக சிவந்த கடல் மீது
இத்தால் மறையும் சூரியனும்
இறங்கச் சிவப்பாய் ஆனானோ..!

கொல்லக் கொல்ல தினங் குமையும்
கொதிக்கும் மனசின் தீ மூச்சாய்
செல்லக் காற்று அதைச் சுமந்து
சேர்த்த முகிலின் தீ குடித்து
உள்ளே பரிதி உடல் அவிய
ஒழுகும் நிணத்தின் நிறமீதோ..!

போரின் பின்னே பிள்ளைகளும்
போன இடத்தை அறியாமல்
ஆரும் இன்றி அணைப்பின்றி
அழுதே சிவந்த கண்ணெல்லாம்
ஊரைப் பார்க்க முடியாமல்
உற்றுப் பார்க்கும் வானத்தில்
ஏறி இந்தச் சிவப்பூறி
எங்கும் கண்ணாய்த் தெரிகிறதோ..!

கேட்பார் இன்றி இம் மண்ணில்
கிழிந்து கிடக்கும் விடுதலையை
மீட்பார் என்று தினமேங்கும்
மிகுந்த குருதி அழுத்தத்தால்
வாட்டம் மிகுந்து மனம் சோர்ந்து
வலிந்த விதியை நம்புகிற
ஊட்டம் குறைந்த எம்மினத்தின்
ஊழித் தீயும் இது தானோ..!

கண்ணைத் திறந்தால் எங்கணுமே
கல்லின் அறைகள் மீந்திருக்கும்
மண்ணில் பிறந்த மனமெல்லாம்
மாலை நேரச் சூரியனை
எண்ணும் விதமும் இது தானோ
இல்லை ஏதோ எனக்கு மட்டும்
கண்ணில் நோயோ கற்பனையோ
காட்சி மாயைக் கவிதையிதோ..!

கத்தி நீ சொல்லுவாய்..

வேலிகள் தானும் வேய்ந்திடா வண்ணம்
எங்கள் தென்னையைப்
பனையைத் தலையால்
அப்படியே நீர் அறுத்தெடுத்துளீர்
ஆயினும் இன்று
முட் கிழுவையும் முன்னரே வேய்ந்த
ஓலை வேலியும் கொண்ட
சராசரி
ஈழமக்களின் இளகிய
இதயமாய் ஏதோ வாழ்கிறோம்
இன்னமும், நாங்களும்
நல் ஒழுக்கமும்
வீரமும் கொண்ட ஓர்
சொல்லப்பட்ட
இனத்தைச் சார்ந்தவர்
பயத்தம் உருண்டையைச்
செய்யினும், இறுக்கி
ஒட்டி, ஒட்டியே
பணியாரமாக்கிடும்
உறவுகள் அன்புணர்வுகள் உள்ளவர்
காதல் செய்வதில்
கரை பல கண்டவர்
காம வெற்றியைக்
கடவுளாய்க் கொண்டவர்

பாவாடையும் மேற் சட்டையும்
அருவியில் குறுக்குக் கட்டுக்
குளியலும், சாரமும்
கட்ட சம்பலும் சோறும்
கருப்பணித் தயிருமென்றிருக்கும்
சராசரிச் சமூகமே!

வீட்டைக் கொழுத்தி, நீர்
வீதியில் போட்டெமை
நாட்டினில் சேர்ந்து
வாழ்ந்திடச் சொல்கிறீர்,

எங்கள் அழுகையும்
உயிர்களும் தியாகமும்
எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல
ஆயினும் நாமுமைக்
கேட்பது சாந்தியே..
மீண்டும் கந்தக
விளைச்சலை வெறுக்கிறோம்
வெறுப்பினும் நாம்
வீரமாய் இருக்கிறோம்..

ஆதலால் சொல்கிறோம்
ஆதிக்க வாதமே..!

இனக்கொலை புரிந்த நும்
அச்சுறுத்தல்கள்
சனக் கொலை மட்டுமே
செய்திட முடிந்தது
பிணங்களாய் நீர் தினம்
ஆக்கிடும் எம்மவர்
நிணங்களில் எரிந்திடும் தீயது
எங்களின்
மனங்களில் தினம் தினம் மூண்டிடும்
தீயினுள்
அனுங்கியே சன்னமும் உருகிடும்
உடல்களைத்
துளைத்திடா தென்பதுன்
தூண்களிற் கேட்கையில்..

உழைப்பும் ஓர்மமும் கொண்ட
ஓர் விடுதலை, தளைக்கும்
அதைத் தடுத்திடல் என்பது
மலைக்கு மேல்
மண்ணள்ளிப் போட்டதை
மறைக்க நினைத்தலுக் கொப்பதே
என்பதை
கத்தி மேல் நடக்குமுன் கால்களும்
கிழிகையில்
கத்தி நீ சொல்லுவாய் காதுகள்
கிழி பட
கத்தி நீ சொல்லுவாய் காதுகள்
கிழி பட..

வேரென நீ இருந்தாய்..

உன்னைப் பிரிந்திருந்து சிலதை
உற்றிட நேருகையில்
என்னமோ தெரியவில்லை
இதயம் இறங்கித் துடிக்குதடி!

மூர்ச்சையாய்ப் போம் பயத்தில்
இமையை மூட நினைத்திடிலோ
ஆச்சர்யப்படும் வகையில் விழி நீர்
ஆவியில் உயிர்க்குதடி!

என்னை மறைக்க எண்ணி அடக்கி
எச்சில் விழுங்கையிலே
உந்தன் உமிழ் நீரே சுவையாய்
உதட்டினுள் ஊறுதடி!

தூக்கெனச் சொல்லிப் பிள்ளை தனது
தாயினைக் கெஞ்சுகையில் வரும்
ஏக்கமும் முகக் குழைவும் எனை நீ
இரப்பதாய்த் தோன்றுதடி!

ஏதோ நினைக்குதடி மனசு
எதற்கும் கலங்குதடி
பாதி இறந்து விட்டேன் முடிவினைப்
பார்க்க நீ வருவாயோ..?

Thursday 23 February 2012

எங்களை மறந்து விடாதீர்..

நேற்றந்த நிலவினிலே
இருந்த ஈரம்
இன்றிந்த நிலவினிலே
இல்லை, பூக்கள்
எதனிலுமே உயிரில்லை
வாசமில்லை
புன் சிரிப்புக் கூட
பூக்க முடிவதில்லை

போரின் பின்
மயானம் போல் மனசு
மதகுடைஞ்சு கிடந்தாலும்
ஏன் எரிந்தார் தினமும்
என்கின்ற கேள்வியிலே
தான் எரிந்து கொள்கிறது
தன்னுள்ளே..

விடுதலைப் போராட்டம்
நெடிதென் றறிந்திருந்தும்
இடை நடுவில் விடை பெற்றும்
போய் விடலாம் என உணர்ந்தும்
கடைசி வரை விலகாமல்
கை கொடுத்தார், ஏன் கொடுத்தார்?

புகழ் வேண்டும் போற்றட்டும்
வருகின்ற சந்ததிகள்
புழுகட்டும் என்ற புனைவிற்கா
இல்லையடா
போரிட்டு ஏன் மாய்ந்தோம்
என்பதை நீர் புரிவதற்கும்
ஏன் மண்ணில் போராட்டம்
எழுந்ததென்று வருங்காலம்
தானுணர்ந்து தாகத்தின்
தாற்பரியம் அறிவதற்கும்
வானுணர்ந்து போனார்கள்
வல்லவர்கள், போகையிலே
ஒன்றை மட்டும் தான்
உங்களிடம் கேட்டார்கள்

வேறொன்றும் அல்ல அது
நீங்கள் ஒரு போதும்
’எம்மை மறக்காதீர்’ என்பது தான்
எம்முயிரை
ஏன் கொடுத்தோம்? என்பதனை
மறக்காதீர் என்பதுதான்
தியாகத்தை செந்நீரை
வாழ்விருந்தும் துறந்ததனை
ஏன் துறந்தோம்? என்பதனை
மறக்காதீர் என்பது தான்,

காப்புக் கழன்ற கைக் குண்டாகக்
கடக்கிற காலம் மீதிலே வாழ்கிற
வாய்ப்பும் தொலைந்து வளமும் சிதைந்து
வரண்டு போயுள என்னின மக்களே!

நார் நாராய்க் கிழிந்துள்ள
நம் மண்ணும், தினமிங்கே
சாவடிந்தே ஊர் விடியும்
சந்திகளும், மனம் விம்மி
வீங்கிச் சிவந்துள்ள கண்களையும்
மகன் வளர்ந்து
ஏன் என்று கேட்டெழுந்து
நிற்கையிலே சொல்லுதற்கு
மறக்காதீர் எம் கதையை
என்பது தான், வேறெதற்கு?

நடந்து விடாதென்பதையும்
நடத்துவித்துக் காட்டுதலே
உடைந்தும் உயிர் கொள்ளும்
உயிர்த் தினவு செறிந்தவொரு
திடம் மிகுந்த விடுதலைப் போராட்டத்
திருக் கீதை, மனஞ் சோரேல்!

வலி இன்றி ஒரு போதும்
வரும் கதவு திறக்காது
சுதந்திரமும் இலவசமாய்
ஒரு போதும் கிடைக்காது..

பயணத்தின் நாட்கள்..

கண்ணிருட்டி வெண் பூச்சி
பறக்கிறது, கை கால்கள்
பல மற்று நடு நடுங்கித்
துவள்கிறது, மெதுவாக
எழுந்தெழுந்து வரும் மூச்சும்
இடையிடையே நின்று விட்டு
எழுவதுவும் வீழ்வதுமாய்
இருக்கிறது, விறைக்குமிந்த
குளிரினிலும் வேர்த்தொழுகி
நனைகிறது, உள்ளிழுத்து
மூச்சு விட இயலாமல்
எலும்பெல்லாம் விறைத்திறுகி
கொதித்துக் குடைந்தென்னைக்
கொல்கிறது

கால் வலிக்க
இழுத்திழுத்து நடந்தாலும்
எப்பேனும் ஓர் நாளில்
துளிர்ப்பேன் எனுமெண்ணத்
தூவான முகில்களெல்லாம்
கலைந்தென்னைக் கடப்பதனைக்
காணுகிறேன், இல் வாழ்வில்
அன்பும் அறனுமின்னும்
அப்படியே இருந்தாலும்
தெம்பும் திறனும் என்னில்
தீர்வதிப்ப உணருகிறேன்

வதை வீட்டில்
கூரிரும்பை ஆண்மைக்
குறிக்குள்ளால் அடிவயிற்றில்
இழுத்திழுத்துத் தள்ளி
இடிக்கையிலும், வாய் திறந்து
ஓர் வார்த்தை தன்னும் நான்
உதிர்க்காத கோபத்தில்
கன்னப் பூட்டுடைத்து
வாய் கிழித்துக் கேட்கையிலும்
என்னமோ தாங்க முடிந்தது தான்

இப்போது
பட்ட இடமெல்லாம்
பற்றிக் கொதித் துயிரை
வெளியேறு எனக்கெஞ்சி
விம்முவதும், பொறுக்காமல்
உடலின் கால்கள் முன்
உயிர் விழுந்து கும்பிட்டு
போக விடு என்னையென்று
புலம்புவதும் கேட்கிறது

காற்று வீசுவதாய்
கடல் அலைகள் எழுவதுவாய்
வீற்றிருந்த வாழ்வு
மிக இயல்பாய் பூ மலர்வாய்
தூக்கத்தில் என்னைத்
துறந்தால் மகிழ்வுடனே
திருப்பிப் பார்க்காமல்
செல்வதற்கு ஏற்றபடி
எண்ணப் பைகளெல்லாம்
எடுத்தடுக்கி வைத்துவிட்டு
பார்த்துக் கிடக்கின்றேன்
பயணத்தின் நாட்களுக்காய்..

சுதந்திரத்தின் பின்னான சோகம்..

நேற்றையைப் போலவே
இன்றுமோர் காலையும்
மாற்றமே இன்றி விடிந்தது
ஆயினும்
தேற்றவோ அன்றித்
தேம்பி நின்றுருகவோ
வெற்றியைப் பற்றி
விளக்கவோ விடுதலை
வென்றமை பற்றி
விண்ணாணங்கள் பேசவோ
நாட்டிலே யாருளார்
நம்முடன்..?

பெற்றதைப் போற்றுதல்
யாருடன்? பீற்றுதல் யாருடன்..?
காற்றினில் சுதந்திர
கானங்கள் கேட்பினும்
வீற்றுளார் யாரினி
எம்மிடை..? இச்சுவை
சாற்றிட ’சம காலத்திலெம்முடன்
போற்றிட வாழ்ந்தவர்
போரிடை போன பின்”

பூத்தான் வளர்ந்தென்ன ?
புல் தான் மலர்ந்தென்ன ?
ஆர் தான் ஆண்டென்ன
அடுத்தென்று ஓர் வெறுமை
போர்வைக்குள் என்னைப்
புதைத்தாலும், மறு நொடியே
ஏர் பூட்டி இன்னும்
உழுவதற்கும், பாத்தி கட்டி
நீர் பார்த்து உள்ளே விடுவதற்கும்
இளம் பயிர்கள்
எந்தத் தடையுமின்றி எழும் வரையும்
உந்தனுக்கு
சொந்தச் சுகமுமில்லை ஓய்வில்லை
என்றன்று
போனவர்கள் சொன்ன கதை
போர்வையினை இழுத்தெறிய
நானிரவைக் கிழித்தபடி
நகருகிறேன்.. நகருகிறேன்..

காலந்தான் எல்லாம்..

நாய் நக்கிப் போட்ட
பூவரசங் குளையாலே
வாய் உள்ள தேவாங்கு
சிற்சிலது புரியாமல்
எனது தலையெழுத்தை
எழுதி விடப் பார்க்கிறது

தனது நிலையறியாத்
தாழ்வாரப் பூச்சி எல்லாம்
என் மேலே ஏறி
ஓடி விட்டுப் போவதிலே
கண்ணும் கருத்துமாக
இருக்கிறது

உணர்வதால்
மழைக்கு மட்டும் உணவெடுத்து
வாழுகின்ற போக்குள்ள
பிழை சரி தெரியாப்
பிள்ளையார் எறும்பு கூட
எனை
தான் வரும் போது
எழுந்து நிற்க வேண்டும்
என்று
உரத்த கட்டளை இடுகிறது
இல்லாட்டால்
திரத்தப் படுவேனாம்
’அவருலகால்’
எனதுணவின்
எல்லா வாயில்களும்
இனி அடைக்கப் படுமாம்!
சொல் ஏர் உழவனின்
சொற் பிறப்பைத் தடுப்பாராம்!

காலந்தான் எல்லாம்
கடவுளே என் தலை எழுத்தை
ஏனப்பா
எச்சிற் குளையால் எழுதுகிறாய்..?!

காற்றுக்களும் காலமும்..

காற்றாகி நெஞ்சக் கனவுக்குள்
பல பூக்கள்
நேற்றோடு சருகாகிப் போச்சு
வரலாறு
தேற்றிக் கொள்ளவெனத்
திசை காட்டும் இடை வெளியில்
ஆற்றுப்படுத்தி
மன ஆறுதலை நாளைக்கும்
வான் பாய்ந்துடைக்கா
வழி சமைப்போம்
ஏனெனிலோ
எம் மண்ணில் பருவங்கள்
பல காற்றை உற்பவிக்கும்

தெற்கின் மேலிருந்தும்
வடக்கின் கீழிருந்த
கிழக்கிருந்தும் தேவை எனில்
வங்காள விரிகுடா தாண்டி
வலுப் பெற்றும்
காலச் சுழல் காற்று
எம் வாழ்வுக் காலத்தின்
கோலத்தையே மாற்றி
ஆச்சரியம் கேள்வி என
குறிகளென்ற அளவினிலே
குறித்திருக்கு, மனசொன்றி
வசனத்தைப் போட்டு
வரி வடிவம் தருவதுவும்
பந்திகளாய் ஆக்கி
பக்கங்கள் கூட்டுவதும்
காற்றடித்த இடம் காலம்
சரி பிழைகள் பற்றி எல்லாம்
விதி என்ற சொல்லாலே
விலகாமல் அளப்பதுவும்
போடுவதைப் போடுவதும்
இடுவதனை இட்டு நிரப்புவதும்
வரலாற்றை
வடிவான ஓர் நூலாய்
வார்ப்பதுவும் எம் கடமை.

ஆனாலும் ஓர் கவலை
உரைப்பன் யான்!

நேற்றெல்லாம்
வீட்டுக்கு வீடு வந்து
விடுதலைக்காய் பா பாடி
சாப்பாட்டுப் பாசல் பெற்று
சரிக்குச் சரி எம்முடனே
ஒன்றாய் இருந்து, உறவுணர்ந்து
மென்காற்றாய்
வேர்வைக் குரு குளிர வீசி
ஆழ் மனதுள்
அசைக்கேலா இடம் பெற்றமர்ந்து
அன்புச் சோலையினில்
கிளியாய்  மாங்குயிலாய்
மனசு தொட்ட காலமெல்லாம்
இன்றைக்கு
இருக்கின்றார், இல்லையென்ற
பேச்சிடையே இடறுண்டு
வியாபாரக் காற்றாக வீசும்
கொடுமையினை
கண் முன்னால் கண்டு
கலங்கலன்றி என் செய்வோம்!

ஆற்றுப்படுத்த இங்கு
யாருமற்ற வேளையிலே
சோழகம் எழ
உங்கள் சுய ரூபம் மேலெழுந்து
காலெழுந்த படிக்குக் கடக்கிறது
நில்லுங்கள்..!

தேசத்துக் காற்றின்
திசைக்கன்று ஏற்றபடி
கட்டி அமைத்திட்ட
பாய் மரங்கள் மேலெழும்பும்
உலகத்துக் காற்று
ஒழுங்கின் மாறலுக்கு
ஈடு கொடுத்திழுத்தோடும்
இயல் வலுவை அடைந்திடு முன்
சூறைக் காற்றொன்று
சுழன்றடித்து எம்முடைய
வீடும் நாடும்
வெறிச்சோடிப் போயிற்று!

பாய் மரம் அறுந்தாலும்
படகெல்லாம் மூழ்கவில்லை
தோணிகள் அங்கங்கே
துணை அற்றுக் கிடந்தாலும்
துறை இன்றும் மூழ்காமல்
துடிப்புடனே இருக்கிறது!

எல்லோரும் கை கொடுத்தால்
வசம் இழுத்துக் காற்றொழுக்கை
வேராக மட்டும் மீந்திருக்கும்
மண்ணுயிர்க்கு
நீராக ஊற்றி நிறைப்போம்
விருட்சம் எழும்!
பிறகென்ன
தென்றல் தெருத் தெருவாய்
வீசும்!

குஞ்சு பறந்த முட்டைக் கோது..

பரந்த வானத்தின் கீழே
இராணுவ வண்டிகளும்
குண்டுச் சிதறல்களும்
பிணங்களுமாய்க் கிடக்கின்ற
வீதியின் நடுவே
நமக்கு வழங்கப் பட்ட
வாழ்க்கை
நடந்து செல்கிறது..
பழைய நினைவுகளும்
கவிதைகளும், சில பாடல்களும்
பின்னிருந்து தள்ள
அப்பழுக்கற்று
நெஞ்சால் சிரிக்கிற
பல்லின்னும் முளைக்காத
பால் வாயின் புன்னகையில்
கிறங்கி
முன்னால் அடி எடுத்து வைக்கிறது
பாதம்
குஞ்சு பறந்த முட்டைக் கோதாய்
திரும்பலுக்கான
சாத்தியங்களற்று வழுகிப்போன
வாழ்க்கை
ஆயிரம் அவலங்களின்
நடுவிலும்
சிலிர்க்க வைக்கிற இப்படியான
சின்னச் சின்ன
உணர்வுகளுக் காகத்தானோ
இன்னமும்கூட
சீவித்துக் கொண்டிருக்கிறது..?

இருக்கின்றான் என்பதுவே..

வாழ்வே சோர்ந்தொடுங்கி
வதங்கிப் போய்க் கிடக்கிறது!

வாசலிலே வரும் போதே
வயிறு தட்டிப் பசிக்குதென்று
ஆசையாய்க் கேட்கின்ற
அருமை மகன் நேற்றிரவு
வீடு வரவில்லை!
ஏனென்றே புரியாமல்
வீதி எல்லாம் அழுதபடி
திரிகையிலே மூலை ஒன்றில்
சைக்கிளும்  செரும்பும் அவன்
கைவார் அறுந்த மணிக்கூடும்
கண்டெடுத்தோம் மற்றபடி
ஓர் முடிவும் தெரியாமல்
உறைந்திருந்தோம்..

போக்கறுந்த
சாத்திரத்தின், சகுனத்தின்
சாப்பிழைப்பு வாழ்விடையே
நெஞ்சினிக்கும் சேதி ஒன்று
நிகழ்ந்த தின்று!

பற்றை ஒன்றில்
உருக்குலைக்கப்பட்டு
உயிராடிக் கொண்டிருக்கும்
இருதயம் மட்டும்
இழுத்திழுத்துத் துடிக்கின்ற
இன்னும் உணர்வறுக்கா
இளம் பெடியன் சாட்சியத்தில்

இரண்டு நாள் முன்பாக
இன்னாரின் வதை வீட்டில்
காற் குதிகள் வெட்டுண்டும்
கை முறிந்தும் மூக்காலே
கொப்பளித்துக் குருதி வர
குளறி விழும் என் மகனை
தப்பிக்க முன்னர்
தான் கண்டதுண்மை
உண்மையென
ஒப்பித்தான் என்னிடத்தில்
உயிர் சிலிர்த்தேன்
உலகமெலாம்
என் வசமென்றானதுவாய்
உணர்ந்தேன்,

வேங்கடவா!
வைத்த நேத்தி வீண் போகவில்லை
வருடங்கள்
பொய்த்தோடி நான்கைந்தாய்ப்
போனாலும், புத்திரனை
கண் முன்னாற் காணாத
கவலை எனைச் சுட்டாலும்
தலை பிடித்து மூக்கிழுத்து
எண்ணைக்குள் தோய்த்தெடுத்து
பார்த்துப் பார்த்து நான்
வளர்த்து விட்ட மகன் உடலம்
கீலம் கீலமாய் கிழிந்து
சிதைவடைந்து
அம்மா! என அவன் அலறும்
குரல் உணர்ந்து என் வயிறு
உள்ளுக்குள் சிதறி
ஒன்று மற்றுப் போனாலும்

யாரேனும் எங்கும்
என் மகனை
அவர்கள் இன்னும்
நார் நாராய்க் கிழித்துப்
போடுகின்ற செய்தியினை
எந்தனுக்குச் சொல்லுங்கள்
மகிழ்ந்திடுவேன்! ஏனென்றால்

’இருக்கின்றான்’ என்பதுவே
இப் பிறப்பில் எந்தனுக்கு
அப்பாவித்தனமான
ஆறுதலாய் ஆகட்டும்..

காலமானார்..

கால்வாரிக் கழுத்தறுத்து
கண்டபடி விமர்சித்து
இருக்கும் போதில்
எம்மால்
இயன்றளவும் விலக்கி வைத்து
நேற்றோர் பெருங் கலைஞன்
நினைவு தப்பி இறந்து விட்டான்.

எல்லோரும் கூடி
ஒரு நிமிடம் மெளனித்து
பல் வேறாக அவன்
பெருமைகளைப் பறை சாற்றி
’எமக்குள்ளே பிரச்சினைகள்
ஆயிரந்தான் இருந்தாலும்
என்றிழுத்துக் குரல் நடுங்கச்
செருமலுடன் கண் துடைப்போம்!’

வெறுஞ் சொண்டால்
எம்முடைய
விளக்கமில்லாக் குழந்தைகட்கும்
விளக்குவோம்
அவன் பெரிய மனிதனென்று!

இறுதிவரை
’எந்தக் கொள்கைக்காய்
இயன்றவரை நடந்தானோ
அந்தக் கொள்கை வெறும்
கொள்கையாக இருந்தாலும்’

எந்தக் கனவுக்காய்
அவன் வாழ்ந்திறந்தானோ
அந்தக் கனவு
வெறுங்கனவாக மட்டுமல்ல
’இறந்தவனின் கனவாக
இருக்குதென் றறிந்தாலும்’

எங்களது பெருமைக்காய்
அவன் பெருமை பேசிடுவோம்
இறந்தவன் மீண்டு மென்ன
எழுந்தா வரப் போறான்..?
எங்களது பெருமைக்காய்
அவன் பெருமை பேசிடுவோம்..!

வழமைக்குள் வராத வர்ணங்கள்..

அண்மித்ததாய் தெரியும்
வெகு தொலைவில்
இறுதியாக
சூரியன் பூமியை நோக்கும்
மங்கலான பார்வையில்
சிறிய படகுகள்
கரியனவாய்..
கடைசி நேரச் சூரியனைத்
தாண்டும்,

சின்னச் சின்னதாய்
நான் உன்னிற்
சேட்டை விட்ட
தும்மல் நிகழ்வெல்லாம்
என் மனசை வாட்டுகிற
விம்மல் நிகழ்வாக
விஸ்ரூபம் எடுக்கையிலே
உன்னிதயம் என்னுள்
அதிரும்..

உனக்குப் பிடிக்கும்
அந்தப் ’பச்சை நீலம்’
வானமெங்கும்
தேடிப் பார்க்கிறேன்
வருவதே இல்லை!
ஆனால்
எனக்குப் பிடிக்கும்
அந்தச் சிவப்பு
சூரிய மரணத்தின் போதுவரும்
வழமை போலத்தான்
இப்பவும்..

Monday 20 February 2012

மனைவி எழுதிய கடிதங்கள்..

வாழ்க்கைப் பயணத்தில்
ஒரு
வாழ்க்கையில் பயணம்.

விமான நிலைய விடை கூறலில்
இறுதியாக
கை காட்டும் தினவற்று
மகனின் கையைப் பிடித்து காட்டி
உன்னை வழி அனுப்பியது
எனக்கின்னும்
ஞாபகம் இருக்கிறது.

வீடு திரும்பிய போது
நீ நாளாந்தம்
போட்டுத் திரிகிற செருப்பு
அப்படியே இன்னும்
வாசலில் கிடந்தது
போடக் கால்கள் இன்றிப்
போனதை எண்ணுகையில்
வாடிச் சொரிகிறதென் கண்ணீர்.

இப்போது
உங்கள் மகன் அதை
கொண்டோடித் திரிகிறான்
மேசையில் வைக்கிறான்
கட்டிலில் வைக்கிறான்
சாமித் தட்டில் கூட
ஒரு நாள் வைத்திருந்தான்
செருப்பை ஏன் இங்கெல்லாம்
வைக்கிறாய் எனக் கையோங்கினால்
அப்பா எனக் காட்டி
அழவைத்து விடுகிறான்.
வாழ்ந்து சென்ற தடங்களின்
வெறுமையை வீசும்
கொடுமையைச் சொன்ன
பரதன் என்கிற
பாத்திரத்தைக் கூட
இவன் மூலம் தான்
நான்
இன்னுமின்னும் விளங்குகிறேன்.

உள்ளிருக்கும் உன்னுயிரின்
நினைவெண்ணி
எனக்கு நானே ஊட்டிக் கொண்டிருக்கும்
சோறிலும்
மார்பிலும் கழுத்திலும்
முகம் தேய்த்து
குறுகுறுக்கும் உன் மகனின்
கணகணப்பிலும் தான்
இன்னமும் கூட
என்னுடைய காலங்கள்
ஏதோ.. தவறி விழாமல்
தன்னுடைய காலத்தைக்
கடக்கிறது.

உனைப் பற்றிய நினைவுகளோடு
உறங்கப் போகையில்
சாமம் தாண்ட, வழமை போலவே
என்புகள் உடையும் படியாய்
என்னை
இறுகக் கட்டி அணைப்பாய்!
நானும் உன் மீது
காலைத் தூக்கிப் போடுவேன்
கட்டிலின் மீது
படாரெனக் கால் விழும்.
திடுக்குற் றெழுந்தால்
வெறிச் சோடிப் போய்க் கிடக்கும்
வெறுமையைப் பார்த்தெந்தன்
விரகப் பிரமை வீறிட்டழும்!

இனியும் வரா விட்டால்
”முலைகளைக் கிழங்கோடு பிடுங்கி
உன் மார்பில் பட வீசி எறிந்து
என் வெம்மையைத் தீர்ப்பேன்
முடியா விட்டால்
அவன் கட்டி இருக்கும் கோவணத்தை
கணச்சூட்டோடே கழற்றி வாருங்கள்
அதை ஒற்றியாவது
என் அழலைத் தீர்க்கிறேன்”
என்று
வாழ்ந்துணரா ஆண்டாளே
வாய் விட்டுக் கதற முடியுமென்றால்
ஒவ்வொரு அணு அணுவாய்
உணர்ந்துணர்ந் துன்னோடு
எவ்வளவு வாழ்ந்து பழகிய நான்
எத்தனை எத்தனை
கேட்டுக் கேட்டென்னுள்
'பித்தேறித் தாபம் பிதுங்க
வெடித்திருப்பேன்
செத்துயிர்த்து சாகின்ற வாழ்வு!
எனினும்
அத்தனையும் உனக்காக
அடைகாத்து வைத்துள்ளேன்'

நேற்றைக்கும் கூட
வழி அனுப்பல் ஒன்றுக்காய்
போயிருந்தேன்
நீ இருந்து போன
நீலக் கதிரை எல்லாம்
வேண்டுமென்றே எனக்காக
வெறிச் சோடிக் கிடந்ததடா !
துயர் நிறைந்த
பிரிவின் சொற்களைக் கொண்டு தான்
விமான நிலையத்தை
கட்டித் தொலைத்திருக்கிறார்கள் போல!
வந்து கொண்டிருக்கும்
ஆயிரமாயிரம் பயணிகளில்
நீ ஏன் ஒருவனாய்
இருந்திருக்கக் கூடாது..?

பூசை, பரிகாரம், விரதங்கள்
என்றெல்லாம்
ஓடித் திரிந்தலைந்து
அலுத்து விட்டேன் இதுவரையில்
சொன்ன கதை ஒன்றும்
சுவறவில்லை..
ஆனாலும்

நீ
வந்து போன பாதைகளின்
தடயங்களைப் பார்த்த வண்ணம்
ஏங்கிக் கிடக்கிறேன் நான்
இங்கு.

திரும்பலுக்கான சத்தியம்..

எம்முடைய பறப்பின்
கதை என்பது
சத்தியத்தின் கதை
அல்லது
திரும்பலுக்கான சத்தியம்

எமக்கெதிரே மோசமான
பருவங்கள் உருவாகின்ற போது
சுதந்திரமாய் வாழ்தல் என்ற
ஒற்றைக் காரணத்துக்காக
பல்லாயிரக் கணக்கான
மைல்களையும்
பல லெட்சம் இடர்களையும்
ஊடறுத்துப் பறக்கிறோம்

புறப்படுவது என்று
முடிவாகி விட்ட பிறகு
இறுதியாக ஒரு முறை
நாம் வாழ்ந்த இடங்களை
கண்ணில் பதித்தபடி
பறக்கத் தொடங்குவோம்

இலக்கை அடையும் வரை
இராப்பகல் பாராமல்
எங்கள் பயணம் தொடரும்
நிலா,விண்மீன்,மழை,மின்னல்
காடுகள்,மலைகள்
எத்தனையோ எத்தனையோ
அழகும் ஆபத்தும் நிறைந்த
இடங்கள், எல்லாம் கடந்து
இலக்கை அடையும் வரை
இராப்பகல் பார்க்காமல்
எங்கள் பயணம் தொடரும்

எங்கள் வாழ்வின் மீதான
போராட்டம் தான்
இந்த நெடும் பயணம்

எமக்கு முன் சென்ற
தோழர்களிற் சிலர்
எல்லைச் சிறைக் கூடுகளில்
அடைக்கப் பட்டிருப்பதையும்
எம்மைக் கண்டவுடன்
சிறைக் கம்பிகளில் முட்டி
விடுதலை வேண்டி அவர்கள்
ஈனஸ்வரம் எழுப்புவதையும்
கண்ணீர் சிந்தலுடன்
கடந்திருக்கிறோம்

எம் பறப்பின் நெடிய துயரும்
சாக்களையும் அறியாப் பலர்
வழிகளில் எம்மையும்
சிறை வைக்கலாம்
பசி எனில் சுட்டு வீழ்த்தவும் கூடும்
ஒரு வேளை இது
பொழுது போக்காகவும் கூட
அவர்களுக்கு இருக்கலாம்

ஆயினும்
நாம் கடந்து வந்த
பாதையின் சுவடுகள்
காற்றில் வாசமான ஓவியங்களாக
வரையப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில்
நாம் பறந்து கொண்டே இருக்கிறோம்

வாழ்வதற்கான
நிறைந்த ஆசைகளோடு கூடிய
பறப்பின் இடைவெளியில்
நாம் கொல்லப் படுகிறபோது
வானிற் சிதறிய
வண்ணம் நிறைந்த பறப்பின்
கனவுகள் தான்
முகில்களாக அங்குமிங்கும்
அலைந்தோடிக் கொண்டிருக்கிறதோ
தெரியவில்லை!

கண்டங்களும் கடல்களும்
கடக்கக் கடக்கத் தான்
திரும்பிச் செல்ல வேண்டும்
என்ற எண்ணம்
எம்முள் தீவிரமாகிறது
பூமிப் பந்தின்
ஒவ்வொரு மூலையில் இருந்தும்
எத்தனை எத்தனையோ தோழர்கள்
திரும்பி விடுவோம் என்ற உறுதியில் தான்
துருவங்களைக் கடக்கிறார்கள்

எம் பயணக் குறிப்புகள்
கடற்கரைகளிலும் காடுகளிலும்
இறகுகளாயும்
இறந்து போய் விட்ட
எம் தோழர்களின் என்புக் கூடுகளாயும்
எம் நெடு வழிப் பயணத்தின்
கதைகளைப் பேசிய படி
கிடக்கும்,

இங்கேயும் வாழலாம்
என்றுணர்கிற போது
அங்கே இறங்குவோம்
கூடிக் குலவுவோம், ஆடிமகிழுவோம்
ஆயிரம் இங்கு நடந்தாலும்
எங்கள்
வயல் வெளிகளின் வாசனையும்
மரங்களின் சுவாசமும்
இன்னமும் எங்கள் மூக்குகளில்
மணத்துக் கொண்டே தான்
இருக்கிறது,

நாளாந்த வாழ்க்கையில்
வாரிசுகள் எமக்கிங்கு வாய்த்தாலும்
சொந்த மண்ணின் சுகந்தத்தை
அவர்கள் எங்கள் மூக்குகளில்
இருந்து உணர்ந்தறிவார்கள்.
ஒரு வேளை
இந்த இடங்களிலேயே நாங்கள்
இறக்க நேர்ந்தாலும்
வந்த வழி நெடுக வரையப் பட்டிருக்கும்
எங்கள் வாழ்வுக் கனவுகளின்
தடம் அறிந்து பிள்ளைகளும்
சொந்தக் கூடடைவர் என்கின்ற
நம்பிக்கை
இன்னும் இருக்கிறது எங்களுக்கு,
இதுவும் கூட
திரும்பலுக்கான சத்தியம் தான்.

எமக்கான பருவம் என்று
ஒரு நாள் வரும்..!
அன்று
கூட்டம் கூட்டமாய் நாங்கள்
கூடு திரும்புவோம்

எங்கள் மண்ணும், காற்றும்
வயல் வெளிகளும், மரங்களும்
எங்களுக்காகத்தான்
தோழர்களே !
காத்துக் கிடக்கின்றன.

விடை பெறும் வேளை..

உனது
தூரப் பயணமும்
நீண்ட பிரிவும்
கடைசி மணிக்கு வந்தவுடன்
என்று மில்லாத பதட்டம்,

இறுதி ஆட்டத்தில்
பனால்ரி அடிக்கத்
தயாராகும் போது
உள்ளங்கையாலும்
அடி வயிற்றிலிருந்தும்
அடிக்கடி ஏறுமே
ஒரு வகை மின்சாரம்..
அதே.. போல்
இப்பொழுதும்,

பிரமை இல்லை
வேகமாகச் சாப்பிடுகிறேன்
ரெத்தம் கசிய
நகம் கடிக்கிறேன்,
விரும்பாத பாடல்களை
விளங்காமற் கேட்கிறேன்
உன்னை
நான் எடுத்தெறிந்து பேசிய
நாட்களை எண்ணிக்
கவலைப் படுகிறேன்

எல்லாமே பரிசுத்தமாகி
தெளிந்து போய்
நீயாகி
அத்வைதம் உணரும் வேளை
விடை பெறுகிறாய்...

அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்

இம் மண்ணின் விடிவுக்காய்
எழுந்துரத்த கரங்களுக்குள்
உன்னுடைய கையும்
ஓர் திருக்கை

எம்முடைய விடுதலையை
பெற ஆர்த்த குரற் சேர்வில்
உன்னுடைய குரல் நாணும்
ஒன்று

உன் பற்றி
ஏராளம் வீரக் கதைகளெல்லாம்
பெடியளிடை
பேசப் பட்டதுவாய் நினைவுண்டு
அதற்குள்ளே
ஏதோ சனி பிடிச்சாட்ட
நீ வழி மாறி இப்பொழுதில்
காதாற் கேக்கேலா வகையில்
உன் கதைகள்

உன் தரப்பு நியாயங்கள்
ஒரு பக்கம் இருக்கட்டும்
உண்மை யதார்த்த நிலை
என்ன..?
வான் கோள்கள்
ஒன்றின் ஈர்ப்பிற்தான்
வலம் வருது அதிலொன்று
சற்று நிலை மாறி
ஒழுக்குடைத்துத் தடம் புரளின்
எரி கல்லாய்த் தான் போகும்
ஈதுலக நியதியடா

எல்லாம் சொல்லி உனை வளர்த்த
பெருந் தலைவன்
எரிகல்லைப் பற்றி மட்டும்
ஏனுனக்குச் சொல்லலையா?

போராட என்று
புறப்பட்டு வந்திட்டு
வீரச் சாவின்றி
வீண் சாவாய் ஏன் போறாய்?

மண்ணுக்காய் பல காலம்
மார் தந்து நின்றிட்டு
மாவீரர் படுக்கையிலும்
மண்ணற்று ஏன் போறாய்?

சுத்தி உனை நிற்கும்
காரணத்தால் சுடப்படுவோர்
தறுதலைகள் என்றாலும்
தமிழ்த் தலைகள் அல்லோடா?

வேண்டாம் வீண்சாக்கள்
ஒதுங்கி விடு வெடி விழுந்தால்
தமிழ்த்தாயின் மகனெல்லோ
தலை சிதறிச் சாய்கின்றான்!

பின்னால் நிற்கின்ற
பெடியள் வீண் என்பதன்றி
உன்னால் இனி ஒன்றும்
ஆகி விடப் போவதில்லை,

பசை இருக்கும்வரை
பயன்படுத்தி வேசையினை
கசக்கிப் பிழிந்தெடுத்து,
காய்ந்தவுடன் கழற்றி விடல்
நீ அறியாததல்ல
நின் வாழ்வும் அப்படியே!

மாற்றுக் கருத்தெண்டும்
மயிரெண்டும் கதையளந்தே
காட்டிக் கொடுத் தழித்தோர்ஒரு பக்கம்,
நீ வேறு
கூட்டிக் கொடுத்தெம்மைக்
கொல்லுகிறாய்!

நாளைக்கே
விதை பிளந்து நாற்றுக்கள்
வீரியத்தோடெழும் போது
களை எடுத்தே தம் கதையைத்
தொடங்கும் அப்பொழுதும்
விலை கொடுக்கப் போவது யார்
விளங்கு,உன்னுடைய
இப்போதைக்கான
எழுமாற்று இருப்புக்காய்
தப்பாக பெடியள் போர்க்குணத்தை
உனக்காக
அப்படியே மாற்றி நசுக்காதே,

ஒரு வேளை
நீ இறந்து போனாலும்
உன் எலும்பை, பரம்பரையை
கட்டாயம் வரலாறு
காறித் தூக்கிலிடும்!
எட்டப்பர் எனச்சொல்லி
இகழும் மறவாதே!
வெடிபட்டு மண் வீழும்
வீரம் உனக்கில்லை
அடிபட்டுச் சாகாதே
அரக்கு ஒதுங்கி விடு..!

நானழுத கண்ணீரில்..

கோபமோ குறையோ
கொடுக்கல் வாங்கல்களால்
மனத்தாபமோ இல்லை
தவிர்க்கேலாச் சூழ்நிலையோ

எதுவாக இருந்தாலும்
என் நண்பன் எனச் சொன்னால்
பொதுவாக மூஞ்சைக்கு
நேராவே சொல்லிடுவேன்

நண்பன் போற் பழகும்எதிரி
எது செய்தாலும்
நேராவே பேசி அடித்திட்டால்
அவனும் பின்
உடை மாற்றும் அறைக்குள்ளே
உள் நுழைந்து படமெடுக்கும்
கடை கெட்ட காவாலி
என அறிவேன்
அதனாலே முன்னாலே சிரித்து
கை கொடுத்து வழி அனுப்பி
பின்னாலே தடம் போட்டு
வீழ்த்தி விட்ட நண்பனிடம்
மெல்ல விடை பெற்றேன் புன்னகைத்து..

அன்று முதல்
என்னை அறியாமல் அடி நெஞ்சுள்
விதை ஒன்று மெள்ள
முளை விட்டுப் பிளக்கிறது,

நாட்போக
ஆணிவேர் வன்மம்
தன்னை நினைப்படுத்தி
நன்றாகத் திட்டமிட்டு
கிளை அகட்டிப் பூப்பூத்து
நெஞ்சுள் இருந்த என் நஞ்செல்லாம்
அப்படியே பிஞ்சு பிடித்துப் போய்த்
தொங்கிற்று..
என்னை அவன்
அறுத்த கதை எண்ணி
நானழுத கண்ணீரில்
செழித்து வளர்ந்த மரம் பழுக்கிறது..

அதற்குள்ளே
எத்தனையோ வடுக்கள்
எல்லாமே கொதிப்படைந்து
இரத்தச் சிவப்பு பழமாகத் தொங்கிற்று
'உரிச்சுக் கழட்டி'
பழம் அவனைப் போலத்தான்
வெளியில் அழகாவும் உள்ள நஞ்சாவும்
'தோற்று வித்தோன் போற்தானே
தோன்றுவதும் இருக்கோணும்'

பழத்தின் மினுமினுப்பில்
அழகில் உருப்படியில்
அவ்வழியே வந்த எதிரி நண்பன்
வினைப்படியே
நானென்றறியாமல்
நாடகத்தைப் புரியாமல்
பழம் புடுங்கி நாவால் நீரூற
மென்று மென்று
அப்படியே விழுங்கி விட்டான்
சில நொடியில்
வாயாலும் மூக்காலும்
நுரை கக்க வாசல்கள்
எல்லாமே அடைக்க
என் முன்னே துடித்திறந்தான்..!

கண் முன்னே இறந்த
கவலை எனைச்சுட்டாலும்
எண்ணி நான் வருந்த மாட்டேன்
ஏனென்றால்
தோற்றுவித்தோன் தானே
தோளிற் சுமக்கோணும்..
மற்றபடி இப்போதும்

நல்ல ஓர் நண்பனாய்த் தான்
நான் இருக்க விரும்புகிறேன்
உமைப் பொறுத்து
மிகக் கெட்ட எதிரியாயும்
முடிகிறது..!

வாழ்வனடி..

கொஞ்சி சிரிச்சு
சொண்டால காது கவ்வி
நெஞ்சு மயிரில நீந்தி
விரலுக்கு சொடுக்கெடுத்து
கொஞ்சம் கொஞ்சமா
என்னை குடிச்சிட்டு
நீ போட்டாய்..

உனக்கென்ன இப்ப
புது வாழ்க்கை புதுப்பாஷை
எடுத்தெறிந்து வாழுகிற
இயல்புள்ள சமூகம்
இனி நான் உனக்கேன்..?
நடை பயில,

இப்பொழுதில்
ஆயிரம் கைத்தடிகள்
அறிமுகங்கள் கிடைச்சிருக்கும்
ஆனாலும் நானுனக்கு
ஒன்று சொல்வேன்
என்ரை செல்லம்!

’ஆரைத்தான் ஆர் உலகில்
அடைவமெண்டு நினைக்கேல்லை
எல்லாம் நடக்குமெண்டால்
காதலெண்டு எதுவும் இல்லை’

என்னோடு இருக்கையிலே
எனைப் பிடித்து நடக்கையிலே
உண்மையாத்தான் நீ
உயிர் வைத்தாய்
உடல் தொட்டாய்
என்னாயுள் போகு மட்டும் இது போதும்
வாழ்வனடி..!

வேரறுந்த சோக வலி..

எம்முடைய இரவுகளில்
எழுகின்ற வேட்டொலியில்
அம்பிட்டிருக்காது
அவன் வாழ்வென்கின்ற
நம்பிக்கை தடுமாறும்
நாதி அற்ற வேண்டுதலை,
விம்மி வெடித்தழுது
வீங்கி உள்ள முகங்களினை,
துண்டுகளாய்ச் சிதறியதால்
திறக்கேலாப் பெட்டிகளை,
எட்டாம் நாள் முடிந்து
எல்லோரும் போய் விடிய
எமக்கே எமக்கான
ஏதுமற்ற வெறு வெளியை,

இவை தவிர யுத்தம்
வேறெதனை நமக்கென்று
இயைபாக்கி விட்டு
வைத்துப் போயுளது..?
வெற்றிவரின்
வீரத் தமிழ்க் கதைகள்
பேசுவதும், வேளைகளில்
மற்றவனின் காற்று
மாறி அடித்திடையில்
பெற்ற மனம் பற்றிப்
புலம்புதலும் வழக்காச்சு!

’போரின் அகோரப்
பொறிக்குள் உணராத
வேரறுந்த சோக வலி எல்லாம்
விண் என்று
போரோய்விற் பொங்கி
வெடிக்கும், அப்பொழுதில்
பெற்ற சுதந்திரத்தின்
பெருமை இதன் முன்னால்
குற்றவாளியைப் போல்
குறுகிவிடும்’
உண்மையுந்தான்..

வீடே வெறிச்சோடிப்
போய் விட்ட பொழுதொன்றில்
நாடே தான் வந்தென்ன
நமக்கிங்கு, என்பதுவாய்
காடே அதிரும் படி
கதற மனம் சொன்னாலும்
ஆடிய தசைகளின் ஆட்டம்
அடங்குதில்லை
நாடிய வாழ்வும் நமக்கான
விடுதலையும்
தேடி அடையும் வரை
தீராதோ இவ்வுணர்வு..?
பாடையிலே போம் பொழுதும்
பற்றிடுமோ விடுதலைத் தீ..?

Thursday 16 February 2012

மெய்ம்மை..

றோஜா இதழில் இருந்து
மிகக் கவனமாக
அழகாக
வழுக்கி விழும்
ஒரு மழைத்துளியைப் போல
உன் உதடுகள் வழியே
ஜென்ம மெடுக்கின்ற
ஒவ்வொரு சொற்களையும்
சிலிர்ப்போடு
இரை மீட்டுக் கொள்கிறேன்
தினமும்
நாம் சந்தித்தாலும்
எனக்குச் சொல்வதற்கென்றே
நீ வைத்திருக்கிற
ஆயிரம் புது விடயங்களைக்
கேட்கும் போதுதான்
புரிகிறது..
”பேச்சிற்கு எப்பவுமே
தீர்வு கிடையாது”

நிச்சயமற்ற காலமும் நினைவுகளும்..

யாழ்ப்பாண இடப்பெயர்வின்
துயர் நிறைந்த நாள் ஒன்றில்
ஆளாளைப் பார்த்து
அனுதாபம் சொன்னபடி
மீளேலாத்துயர் தோய்ந்து
மிகும் மாலைப் பொழுதிடையே
வீதிக் கரையோரம்
உனைப் பார்த்தேன் பக்கத்தில்
யாரும் உன் ஆட்கள் இல்லை
நீயோ தனியாக
போகுமிடம் புரியாது நின்றிருந்தாய்
நான் மெதுவாய்
ஏதும் உதவி..? எனக் கேட்க
பேச்சில்லை
சரி நகர்வோம் என எடுக்க
என் சைக்கிள் தனைப் பிடித்தாய்
நான் புரிந்து நின்றேன்
நாலைந்து மணி நேரம்
பேச்சேதுமில்லை
பிறகுன் வீட்டார் வர
அழைத்து வந்தெந்தன்
வீட்டினிலே இருக்க வைத்தேன்
ஆயிரம் நன்றி என்பதுவாய்
உன் கண்ணால்
பாயிரம் ஒன்று பாடாக் குறையாக
சிமிட்டி வைத்தாய்,

மாலைகளில் எல்லாம்
மாமரத்தின் கீழிருந்த
தென்னங் குத்திகளில் இருந்து
தேனீரை என்ன ருசி என்று
குடிப்பதுவும் இடைக்கிடையில்
கண்ணால் கண்ணுண்டு
களித்துருவிப் பார்த்தபடி
பேசிக் கொண்டிருந்தோம்
எத்தனை நாள்..

சைக்கிளிலே டைனமோ சுற்றி
வயரிழுத்து வானொலியில்
பூட்டி பெடல் சுத்த பாட்டு வரும்
நேரடியாய்
பேசேலாச் செய்திகளை
அதனூடு பேசிடுவோம்
செங்குருவி எனும் பாடல்
நான் போட நீ அடுத்து
கொஞ்ச நாள் பொறு தலைவா
எனும் பாடற் பதில் போட
சோகப் புலப்பெயர்வின் சுமை வலியும்
இடைக்கிடையில்
கொஞ்சம் மறந்தோடிப் போனதுவும்
நினைவிருக்கு,

சாமம் தடவி நான்
வீடு வரும் வேளைகளில்
பசிக்கேல்லை அதுதான்
எனப் பெரிய பொய் சொல்லி
என்னோடிருந்தே உணவுண்பாய்
உன் அப்பா
மெல்லச் சிரித்திருமி
திரும்பிப் படுத்ததனை
பல முறை நான் கூர்ந்து
பார்த்திருக்கேன்,

கோயிலுக்கு
ஒன்றாகத்தான் சென்றோம்
பல முறை நாம்
ஒருதடவை
கும்பிட்டுவிட்டு வந்து
பனங்குத்தியினில் இருந்தபடி
பேசிக் கொண்டிருக்க
இடை நடுவால் குரங்கொன்று
பாய்ந்தோட
நீ பயந்தடித்து ஓடிவந்து
பற்றினாய் என் தோளை
அப்போதில் உன் கைகள்
அனலாய்க் கொதித்ததையும்
உடம்பும் வரும் மூச்சும்
தணல் போல வீசித் தகித்ததையும்
பார்த்துவிட்டு
காய்ச்சலோ எனக்கேட்க
நீ சிரித்தாய் கண்ணிரெண்டும்
சிவப்பேறி நீ மாறிப் போயிருந்தாய்
கை மெதுவாய்
நடுங்கிக் கொண்டிருந்ததையும்
கவனித்தேன், மறு திங்கள்

அடுத்த இடப் பெயர்வின்
அரங்கேற்றம் தொடங்கிற்று
வன்னிக்குப் போவதென நீங்களும்
இன்றைக் கேலாதென நாங்களுமாய்
அந்தக் கடைசி மாலையும் வந்தது..!
வாகனம் கூட வந்தாயிற்று
நீங்கள் புறப்பட
பிணமெடுத்த வீட்டின்
பேரமைதி எங்கும்,
எல்லாரும் ஏற நீ மட்டும் ஏறவில்லை..!
‘சொல்லேலா வார்த்தைகளின் சோகத்தை
அப்படியே
அள்ளி அழுதூத்தத் தொடங்கிவிட்டாய்’
என்னாலும் ஒருவார்த்தை
தன்னும் இயலவில்லை முடியாமல்
இறுகிப் போய் நின்றிருந்தான் அசையாமல்
வாய்திறந்தால்
’கண்ணிரெண்டும் சிதறிக்
கதறி அழ வேண்டிவரும்
விண் தின்ற வெவ்வழலை விஞ்சி
என் நெஞ்செரியும்’
என்கின்ற பயத்தில் நான்
இறுகி நின்றேன் அசையவில்லை
நீயோ நிறுத்தவில்லை
அழுதழுது கொண்டிருந்தாய்
ஓமோம் என்பதுவாய்
உன் தந்தை தலை அசைக்க
ஏதோ சொல்லவென வாயெடுத்தாய்
நானுந்தான்,

அதற்கிடையில்
சன்னங்கள் சிதறிவிழ
மாமரத்து இலைகளெல்லாம்
சடசடத்து
பயமுறுத்தத் தொடங்கிற்று!
ஓட்டியுமோ
இனியும் நிக்கேலா
எனக் கத்தத் தொடங்கிவிட்டான்
’வாய் திறந்தும் வார்த்தை
வருவதற்குள்.. முடியாமல்
நீ ஏற வேண்டி ஆயிற்று
வாகனத்துள்,

கை காட்டி விடை சொல்லும்
நெஞ்சழுத்தம் எனக்கில்லை
தலை ஆட்டி மட்டும்
விடை கொடுத்தேன்
நீயுந்தான்
வாகனம் போக வாசல் வரை
ஓடி வந்து
ஒழுங்கையால் அது போய்
திரும்பு மட்டும் படலையிலே
பசு பார்த்த கன்றாய்
நின்றிருந்தேன்,

மறு நாளே
வன்னிக்கும் யாழுக்கும்
தொடர்பறுந்து போயிற்று
இன்றைக்கு பதினாறு
ஆண்டுகளும் ஓடிற்று..!
‘இதுவரையும் எந்தத் தொடர்புமில்லை’
ஆனாலும்
ஏதோ.. நான் இருக்கேன்
எங்கே நீ உள்ளாயோ..?
சூதோ சூழ் வினையோ போகட்டும்

நண்பர்காள்..!
எங்கேனும் என் உறவைக்
காண்பதற்கு நேரிட்டால்
ஒரே ஒரு தகவல் சொல்லிடுங்கள்
எனக்கிப்ப
“மகன் ஒருத்தன் பிறந்திருக்கான்”
என்று மட்டும்.. என்று மட்டும்

இடைப்பட்ட காலம்..

இயன்ற வரை முயன்றாகி விட்டது
எங்கோ ஓர் துருவத்தில்
எடுத்தெறியும் மன நிலையில் நீ
இதற்கு மேலும்
இறங்கி வர முடியாமல் நான்

உனது பாதை
பணத்தாலும் உடலாலும்
கட்டப் பட்டிருக்கும் போது
மனத்தாலும் விசுவாசத்தாலுமான
எனது பாதை
வேடிக்கையாகத்தான்
இருக்கும் உனக்கு

மன முறிவுப் பயணத்தின்
நீண்ட தொலைவிற்கு
வந்தாயிற்று
இனித் திரும்ப முடியாது
இந்த நிலையில்..

இறுதியாக ஒருதடவை
நாம் வாழ்ந்த
கடற்கரைக்குப் போயிருந்தேன்
எல்லாம்
புதுப்புது முகங்கள்
எல்லைக் கற்கள் கூட
உடைந்த நிலையில்
வெளி நாட்டு மோகத்தின்
தலை தெறிப்பில்
இயல்பு சிதறிப்போய் இருந்தது
உண்மையில்
நிரம்பவே மாறிப் போயிருக்கிறது
கடற்கரையும்
உன்னைப் போல..

கண்ணீர் அஞ்சலி..

ஆரெண்டெனக் குன்னைத் தெரியாது
ஆனாலும்
பேரோட, பிறப்பிறப்பும்
கண்ணீர் அஞ்சலியும்,
ஏதோ கவர்ச்சி உள்ள
முக அமைப்பும் ஒரு சிரிப்பும்
’காதோரமாய்ப் போன கதையும்’
மதில் மீது
ஒட்டப் பட்டிருந்த
உன்னைப் பார்த்தவுடன்
கிட்ட வந்து பார்க்கத் தோன்றியது
அவ்வளவே

பார்த்த உடன் நெஞ்சில்
ஏதோ ஓர் பார அலை
நீர்த்த என் நெஞ்சை
நெக்குருக வைத்ததடா..!

தொண்டை இறுகிக்
கட்டிப்போய் கண்ணீராய்
எண்டைக்கும் இல்லாமல்
இயல்பாக வழிந்ததடா..!

என்ன.. எனக்குள்ளே
இப்படியாய் மாற்றங்கள்..?
உன்னைத்தான் எனக்குத் தெரியாதே
ஒரு பொழுதும்,

அருவரியில் பார்த்தேனா
இல்லை பொஸ்கோவின்
தெருக்கரையில் உள்ள
குளத்தடியில் பார்த்தேனா..?
கோயில் முடக்கில்
அன்னதான மண்டபத்தில்
பெண்கள் கல்லூரி
வாயில்களில், காற்
பந்தடிக்கும் திடற்கரையில்,
புவியை நாம் நெம்பும்
நீர்வேலித் தவறணையில்..?

சாதாரணமாப் பெடியள்
உலவுகின்ற இடமெல்லாம்
தீதோ நன்றோ
உனைப் பற்றி ஒரு துளியும்
எந்த ஞாபகம் கூட எனக்கில்லை
ஆனாலும்..

அந்தப் பொழுதில்
பார்த்த ஒரு கணத்தில்
சத்தியமா நான் உடைஞ்சு போனன்
எனக்குள்ளே
எத்தனையோ ஆண்டு
உறவாய் உன் உருவம்
பாக்காமலே இவ்வளவு
பதட்ட மென்றால்
பாத்திருந்தா..!
கேக்கவே தேவை இல்லை
நான் கெழிச்சு விழுந்திருப்பன்

ஒன்று மட்டும்
உனக் குறுதியாகச் சொல்லுவன்ரா
சாக முதல் உன்னப் பாத்திருந்தா
நானுனக்கு
நல்ல ஒரு நண்பனா
நாடியா இருந்திருப்பன்

பெருவாழ்வின் திருநாள்..

வானம் தான் பூப்பூத்த
வைரங்கள்தனைக் காட்டும்

தேன் ஏறி நிலவூற
நிலம் மஞ்சள் நிறமாகும்

மோனத்தில் காற்று
முழு ஞான வேதத்தை
தென்னங் கீற்றினிலே தெரிவிக்கும்

கோணத்தில்
கானங்கள் பாடிப் பூ அவிழும்
தன் மணத்தால்
ஞானங்கள் கொண்டுவரும்
நற் காற்றினுக்கு உயிர்ப் பூட்டும்

ஊனமாய்ப் போன
உளமெல்லாம் இவ்விரவில்
விழித்திருந்தால் விடை தெளிந்து
மகிழ்வொழுகும்

லேசாக
மழை பெய்து ஓய்ந்து
வருகின்ற இரவொன்றில்
குளை ஆடும் ஒலியோடு
குளிர் காற்றை உடலெங்கும்
அளையாது அதிராது
மரம் வீச, மனதெங்கும்
இளையாத உணர்வூறும்,
சுடர் ஞானம் மெருகேற
கிடையாத கவி ஒன்று
உருவாகும், இரவொன்றே
உலகின்ப பெரு வாழ்வின்
திரு நாளாம்..

இப்படியாகத்தான் தோழர்களே..

திடீரென்று ஒரு நாள்
மம்மல் பொழுதொன்றில்
எல்லைப் பிரதேசத்தில் உள்ள
என் வீட்டு வேப்ப மரத்தில்
பறவை ஒன்று வந்து
குந்தி இருக்கத் தொடங்கியது
அதன் ஈனஸ்வரமான
பசிக்குரலைக் கேட்டு
என் உணவில் சிறிதளவை
அதற்கு நான் வழங்கியும்
இருந்தேன்,

மறுநாள் கூடு கட்டவும்
குடும்பமாயும் குழுமமாயும்
வந்திருக்கவும் தொடங்கியது,
என் நாளாந்தச் சமையலுக்காக
வைத்திருந்த விறகுகளை
குச்சிகளாய்ப் பிரித்தெடுத்து
கூடு கட்டுவதை நான்
கவனித்தேன்,

சில நாட்களில் முட்டை இட்டுக்
குஞ்சும் பொரித்தது,
அதன் பின்னர் ஒரு போதும் அது
உணவு கேட்டுக் கத்தியதில்லை
எனக்குத் தெரியாமலும்
தெரியவும் கூட
என் சமையற் கட்டுக்குள்
புகுந்து உணவுகளை
எடுக்கத் தொடங்கியது
அதில் பலவந்தம் இருந்ததை
நான் அவதானித்தேன்
சொந்தம் கொண்டாடுவதையும்,

குஞ்சு பொரித்த காலங்களில்
மரத்தின் கீழே எமைப்போக விடாமல்
கொத்தியும் கலைத்தது
பயத்தால்தானோ என எண்ணி இருந்தேன்
பொரிக்காத காலங்களிலும் கூட
இது தொடர்வதை
மரம் பறவைக் கூட்டத்தின்
கட்டுப்பாட்டில் வந்த
சில காலங்களின் பின்னர் தான்
உணர்ந்தேன்,

இப்பொழுது
என் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமல்ல
ஊரில் உள்ள அத்தனை மரங்களிலும்
பறவைகள்
திட்டமிட்டுக் குடியேறி இருந்தன,
ஆனாலும்
கேக்கிற பெடியள்
கேக்கத்தான் செய்தார்கள்
தட்டியும் முட்டியும்,
ஆயிரம் நியாயங்கள் இருந்தும்
ஏனோ..? காலம்
அவர்களையும் வீழ்த்திவிட்டது.

அதன் பின்னர்
கதவற்ற வீடாய்ப் போன
எம் வாழ்வில்
அவைகளின் இரைச்சலும்
கழிச்சலும் புகைச்சலும்
தாங்கொணாது
ஊரினைப் பெயர்ந்து
அவைகளால் வரையறுக்கப்பட்ட
மரங்களின் கீழே
அதே ஈனஸ்வரத்தில் முனகியபடி
கலங்கிய கண்களோடு
காலம் கடக்கிறோம்..

இருக்க இடந்தேடி
ஒண்ட வந்த பறவைக்கு
ஒரு மரம் மட்டுமல்ல
பெரிய கானகமும் ஊருமே
இப்படியாகத்தான் தோழர்களே..!
சொந்தமாக்கப்பட்டது..

ஒரு கணம்.. ஒரு தருணம்..

ஆக்கிரமிக்கப் படுகின்றன
எம்முடைய நிலங்கள்,
எதிர்த்தெழும்
குரல்கட் கெதிராக
வடிவமைக்கப் படுகிறது
மரண முற்றுகை.
மூச்சான சுவாசங்களை
மணந்து பிடித்து
பட்டியலிடப் படுகிறது
பேச்சறச் செய்யவுள்ளோர் பெயர்கள்,

கால நீட்சியிலும் கந்தக மழையிலும்
களைத்துப் போனதெம் மனசு,
எந்தவழி சென்றாயினும்
இருப்பைக் காப்பதும்
ஏதோ..வாழ்ந்தியற்கையாய்
இறப்பை எய்தலும்
கொள்கை விளக்கமாய் ஆனது,

போகப் போக
சிறுக்கும் துண்டு நிலமும்
பெருக்கும் போர் அழுத்தமும்
கேள்விக்குறி ஆக்குகின்றன
சகல விலை கொடுப்புகளையும்,

ஒரு கணம்..
ஒரு தருணம்..
மாற்றி விடப்போகிறது
சகலவற்றையும்..!

நம்ப முடியாதவையாய்
எமைச் சுற்றி நின்ற எல்லாமே
நம்பும் படியாய்
நம் முன்னே வீழ்ந்துடையும்..

அவலக் குரல்களாய்
அலைந்தெங்கும் திரிகின்ற
அத்தனை தியாகக் குரல்களுமே
சாந்தியுற்று
ஆசீர்வதிக்கின்ற அசரீரி
எம் கண்ணில்
ஆனந்தக் கண்ணீராய் ஒழுகி
நிலம் நனைக்க
இனிப்பான மண்ணுண்ணும்
எறும்பெல்லாம்,

கருக்கல் பொழுதொன்றில்
வானம் எம் வசமாகும்

விடிகின்ற அதிகாலை
துயரங்களாலும்
இழப்பின் விம்மல்களாலும்
நிறைந்திருப்பினும்
சுவாசத்திற்கான காற்று
திருப்தி நிறைந்ததாக
எமைச்சுற்றி வரும்,

கூச்சல்களாக ஒலித்த
அதி காலைக்குருவிகளின்
கீச்சிடல்கள்
சுகானுபவம் மிக்க
இனிய சங்கீதமாகத் தோன்றும்,

இவை எல்லாம் அமைந்து விடப்போவது
எதிர் பார்க்கப்பட்ட
பெரியதொரு போர்முடிவில் அல்ல
மிகச்சிறிய சம்பவத்தில்
தனி மனிதனொருவனின்
வீழ்ச்சியிலும் கூட,

உண்மைதான்..
உலகெங்கணுமே இப்படித்தான்
சாத்தியமாயிற்று
ஓர்மத்துக்கும் மெய்ம்மைக்குமான
பரிசு.

யாசிக்கிறேன்..

உன்னுடைய வார்த்தைகளால்
குண்டடிபட்ட
பறவையைப் போல
குப்புற வீழ்ந்து கிடக்கிறேன்
சன்னங்கள் கூட
இந்தளவிற்கு என்னைச்
சேதப் படுத்தியதில்லை,

பல முறை ஏமாந்தாலும்
எந்த நன்றியும் செய்யாத
கால்களின் பின்னால்
வாலாட்டியபடிசென்று திரும்பும்
அனாதை நாய்க்குட்டியைப் போல
ஏக்கம் நிறைந்த விழிகளுடன்
பழைய நினைவுகளை
மட்டுமே பார்த்தபடி
காயங்களை ஆற்றாமல்
காலங்களைத்
தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறேன்,

ஏனெனில்
உன் முத்தங்களால்
மட்டுமே அதனைக்
குணப்படுத்த முடியும்..

புல் ஆகிப் பூடாய்..

கடவுளினைக் கண்டவர்கள்
கண்டு கண்டுகுத்தபடி
திட மனமாய்ச் சொன்ன
தீர்வறியா முதற் பிறப்பே..!

காரணத்துள் இருக்கும்
காரியமே! கடவுளிற்கு
ஈர மனமுண்டென்று
சொன்னகதை உண்மை என்றால்..

பூடாய்ப் பிறப்பெடுக்க
புல்லே நீ என் செய்தாய்..?
மாடேறி மிதித்ததற்கு
மாறிற்றுத் தண்டமென்றால்
பூடென்ன செய்ததுவாம்
புழு ஆகிப் போவதற்கு..?

காடாய் மரமாகி வரும் வரையில்
உன் செயல்கள்
ஏதேனும் கன்மம் செய்ததுவா..?
இல்லையெனில்
ஏதும் செய்யாததனால்
என் போன்ற இழி பிறப்பா..?

தேவர்வரை போகும் திருவே
உனை நினைத்தால்
ஆகுமோ பிறப்பிற்கு
ஆமான காரணங்கள்..?

உன் பிறப்பை நினைத்தால்
ஒரு நொடியிற் சித்தாந்தம்
சின்னா பின்னமாகிப் போகுமென்றால்
விதை பிளத்தல்
உண்ணானை உனக்கு
ஒரு பெரிய வேலை இல்லை

ஆனால்
உன்னை நேர் பார்க்கையிலே
ஒரு மிதியில் முடிக்கையிலே
என் மண்ணான மூளைக்குத்தான்
இந்த மயிரொண்டும்
விளங்குதில்லை..!

காத்திருத்தும் கிட்டாக்கனவு..

காற்தசை சிதறிக்
கட்டடத்தின் மேற்கிடக்க,
நாற்புறமும் குருதி
நாளங்கள் கிழிந்தோட
நெஞ்சு விலாப்பக்கம்
நிணத்துண்டாய் நிலைமாற
அஞ்சாத கையிரெண்டும்
அறுந்து விழ, இலக்கின் முன்

தலை ஒன்று தனியாகத்
’தலை நிமிர்ந்து கிடக்கிறது’
முலை இடித்து நீ குடித்த
வாய்ப்பக்கம் வெடித்தபடி

உள்ளே பல்லில்லை வெறும் முரசாய்
ஓ குழந்தாய்!
கொள்ளிக் கட்டைகளாய்க்
கொட்டிண்டு கிடக்கின்றாய்

தன்னை இழந்து
தவமிருந்து உள்வாங்கி
என்னென்ன நினைவெல்லாம்
நினைத்தபடி சுமந்திருந்து

உனக்காச் சாப்பிட்டு
உனக்காக முலை பெருத்து
உனக்காக உடையவனை
ஒதுக்கி விட்டும், பலவேளை
தனக்கான விருப்பங்கள்
தவிர்த்திருந்து, கண்விழித்து
உனக்காகப் பார்த்திருப்பே
உயிர் வாழ்க்கை என்றிருப்பாள்

எண்ணைக்குள் தோய்த்தெடுத்து
இழுத்திழுத்துப் பிடித்துவைத்த
சின்னக் கூர் மூக்கு,
சிரட்டைபோல் உருண்டதலை
ஆசையில அவள் நுள்ளும்
சதை பிடித்த பின் பக்கம்
கூசி நீ சிரிக்க
விரல் தடவும் கீழ் வயிறு

எல்லாம் வளர்ந்து
எடுப்பான ஆம்பிளையாய்
நல்ல ஒரு மாப்பிளையாய்
அவள் பார்க்க நீ போனாய்..

அடையாளம் தெரியாமல்
நீ சிதறிப்போயிருக்க
கடைவாயிற் பூவரசு
வைரவரில் பூ வைத்து
உன்னை எதிர் பார்த்தபடி
உயிர் பிடித்துக் காத்திருப்பாள்
மண்ணும் தற்கொடையை
மனசுக்குள் அஞ்சலிக்கும்..


நோய்க் காலை..

மஞ்சட் காமாலை
பிடித்துப் போய் அதிகாலை
நெஞ்சுச்சழி கக்கிச்
சூரியனும் எழுந்துவர

ரெத்தச் சோகை பிடித்தது
போற் தாமரையும்
சத்தில்லாச் சிவப்பாய்
மொட்டவிழ்ந்து இதழ்விரிக்க

ஊரே சேர்ந்து
ஒப்பாரி வைப்பது போல்
நேரே மரக்கொப்பில்
குயில்க் கூட்டம்
கூச்சலிட

காமக் கடுப்பால்
கட்டிழந்த உயிரொன்று
சாமம் முழுவதுவும்
கடித்தறுத்த முலைகள் எல்லாம்
தென்னங் குரும்பைகளாய்ச்
சிதறி மண் மீது
இன்னும் விசாரணைக்காய்
இயல்பறுந்து தவங்கிடக்க

அர்த்த மின்றி
இயற்கை எல்லாம்
ஆடி அடங்கிப்போய்
உனைப்பிரிந்த இரவெனக்கு
உயிர் போய் உயிர் வந்து
நினைவிழந்து விடிந்ததடி
நீண்டு...

எமக்கான சூர்யோதயம்..

மணற்பூமியில் முளைப்பதே
இயலாததாய் இருந்த காலம் அது
ஆனால் நாம்
வளர்வதற்கென முடிவெடுத்ததோ
கருங்கல் நிறைந்த தரைகளில்,

ஓர்மம் உடலில் மட்டுமல்ல
உயிரிலும் நிறைந்திருந்ததால்
கற்களைப் பிளந்து நிமிர்தல்
ஓர் காரியமாய்த் தெரியவில்லை,

ஒருமித்த கரங்களின் உதைப்பே
பிளந்து வருதலுக்கான
சாத்தியம் என்பதையும்
அப்போது
நாம் உணர்ந்திருக்கவில்லை,

கற்களைப் பிளந்த கைகள்
வெளி வந்தமைக்கான
உரிமையை வேண்டி
தனித்தனியாகிவிட்ட காலமிது,

முழுவதுமாக நிமிர்வதற்கு
இன்னும் எஞ்சி இருப்பதோ
வெறுமனே ஓர் ’மரப்பலகை’
தனித்தனியாகி விட்ட
கைகளினால் இப்போது
தட்டத்தான் முடிகிறதே அன்றி
ஓர் இஞ்சிதானும்
உயர்த்தக்கூட முடிவதில்லை,

உடைத்தெழலிலும் பார்க்க
வருவதற்கான சத்தமெழுப்பல்
எவ்வளவு ஆபத்தானதென்பதை
வெட்டப்படும் ஒவ்வொரு கைகளும்
இப்போது விளங்கிக் கொள்கின்றன,

இப்போதும்
எஞ்சி இருக்கிற
ஒன்றிரெண்டு கைகளின்
ஒருமித்தலை வேண்டி
கெஞ்சி அழுகிறது
எமக்கான சூர்யோதயம்..

இறுதிக்கால இரவுகள்..

கனதி நிறைந்த
அன்பின் ஏக்கங்களிலிருந்தும்
இடை நடுவிலேயே
விடை பெறப்போகிற
கூப்பிடு தூரத்து
சாதனைக்கான வாழ்விலிருந்தும்
எழும்
மின்னற் கணப்பொழுதுகளில்
இறுதிக்கால இரவுகள்
எச்சிலின்
ஓர் துளியைத்தானும்
தொண்டையுள் இறங்க விடுவதில்லை

பகற்பொழுதுகளில் வீசுகிற
அதே காற்றுத்தான்,
படபடென அடிக்கிற
அதே ஜன்னல்கள் தான்,
கூரைகளிற் பாய்ந்திறங்கும்
பூனைகளின் ஓசைகள் தான்

ஈழத்து ராத்திரிகளில்
எல்லாமே
திரிபு வாதமாய்
திடுக்கிடுத்தும் பேரொலியாய்
திருகி மூச்சமத்தும்
திட்டமிட்ட கொலைக்கரமாய்
ஓ...
இறுதி ராத்திரிகள்
ஓ..லம் நிறைந்த
இறுதி ராத்திரிகள்

நாய்க்குரைப்பும்  விழித்திருப்பும்
நமக்குப்புதியதல்ல
ஆனால்
கால நீட்சியின்
கவனம் மிகுந்த சந்திகள் தாண்டியும்
சுவரிற் பல்லியாய்
மிக இயல்பாகவே தொடருகிற இந்த
அவல ஓசைகள்
மரணப் பிராந்தியமாக மாறப்போகும்
அபாயத்துக்கான உள்ளுணர்வை
என்றும் இல்லாதவாறு
என்னுள் அதிரவைக்கிறது

மற்றபடி
அதிகாலை விழித்தலுக்கான
நிச்சயத்தையும்
ஆழ்ந்துறங்கலிற்கான
அற்புத வரத்தையும்
எங்களுக்கான இரவுகள்
எப்போதோ இழந்தாயிற்று..

ஒரு வேளை
இறுதிக்கால இரவுகள் என்பது
உலக முழுமைக்கும்
இப்படியாகத்தானோ...?

நிறுத்தல்..

சூடாய், கடுங்குளிராய்
சுகமான இத உணர்வாய்,
வாட்டேலுமட்டுமெனை
வாட்டி,மிகக் கனத்த
பூட்டாத பூட்டிற்குள்'
எனைப் போட்டுப் போயிருக்கும்,
என்னோடு நடைபயின்ற
இருபத்தைந்தாண்டுகளே!

'கண்முன்னே எனைக்கடந்து போனீர்!
அதற்குள்ளேஎத்தனை மாற்றங்கள்,
இழுபறிகள்,திருப்பங்கள்
நெஞ்சே வெடித்து
நினைவழிந்து போவது போல்
இன்னும் நான் நம்பாத
எழும் பேலாச் சறுக்கல்கள்
எல்லாம் அனுபவமாய்
என் நெற்றிப் பரப்பெங்கும்
புள்ளிகளாய், சுருக்குகளாய்
விழுந்துளது, காலத்தீ
என்னைப் பொசுக்கிப்
பதப்படுத்தி  உலகோடு
மெல்ல நசிந்தோட
இயை பாக்கி வைத்துளது,
இந்தக் காலத்துள்
அடிபட்டுதை வாங்கி
நானுணர்ந்து கொண்ட
ஞாயங்கள், எனக்குள்ளே
போதி மரமாய் வளர்ந்து
அடிக்கடியும்
ஆயிரம் கதைகளினைச் சொல்லும்.
நான் கேட்பதில்லை
இன்றேனோ மனசு இளகிக் கிடக்கிறது
வேரடியிற் சாய்ந்து விம்முகின்ற நினைவுகளை
பாரமனதோடு பார்க்கின்றேன்.

கல்லூரி
ஈரங்குறையாமல் அப்படியே நிழற்படமாய்
கொடுப்புள் சிரிப்பாக மலர்கிறது
ஞாபகங்கள்
எத்தனையோ இருந்தாலும்
மதிற்பாய்வும், அடிதடியும்,
தண்டனைகள் பெற்ற
வேளைகளுந்தான் இன்றும்
நினைத்துச் சிரிப்பதற்கு முடிகிறது.
என் ஆசான்
இப்பொழுது கண்டாலும்
என் முதுகு தட்டி மற்றவர்க்கு
இவன் செய்த குழப்படியள்
எனப் பெருமை பேசுதற்கும்
அவை தான் பொருளாக இருக்கிறது.
சாதனையும், பரிசும் பெரிய
சந்தோசம் தருவதில்லை
கல்லூரிக் காலத்தில்
நான் பெற்ற பிரம்படியும்,
தண்டனையும், தலைகுனிவும்
காலத்தின் வெள்ளத்தில்
எப்படி நிலைமாறாய்,
மகிழ்வுப் பெருஞ்சிரிப்பாய்
உரு மாற்றம் பெற்றுயிர்த்துளது.
புரிகிறது

காலத்தின் கதைப்போக்கில்
பலமாறும், பலமருவும்,
புளிச்சுவைகள் இனிக்கும்.
இனிச்சவைகள் எண்ண
நினைவுகளிற் கெட்டாது
இப்படியே சிலவேளை
கதைப் பொருளே தடம் மாறும்.
இதில் 'காதல் மிகப் பெரிய பாடம்
அது சொன்ன ஆழ அனுபவமும்
அவதார உணர்வுகளும்,
நீளுகின்ற வாழ்க்கைப்
பாதையிலே, நிச்சயமாய்
தடைபலவும் தாண்டுதற்குதவும்.
பருவத்தில்
நாம் போன கடற்கரையும்
குச் சொழுங்கை முடக்குகளும்,
கோயிற்கரை மதிலும், குளிர்பானக் கடைகளுமே
புராதன வரலாற்றுச் சின்னங்களாய்,
சரித்திரத்தில்முக்கியத்துவம் வாய்ந்த
இடங்களுமாய் மாறிவிடும்.

'காதலிக்கு எப்பவுமே
வளர் இளமைப் பருவந்தான்'
மனைவியைப் போல் வயசு ஏறாது,
தலை நரைச்சு நாரிப்பிடிப்பும்
நடைத்தளர்வும் இருக்காது,
உப்புறைப்புப் பிரச்சினையிற்
தொடங்கி, முகம் நீண்டு,
உறவினர்கள் உபசரிப்பில்
கதை முற்றி, மனம் வெந்து
ஏன்ரா முடிச்சம் என்று
எண்ணுதற்கும் வாய்ப்பில்லை
எப்ப நான் அவளைப்
பிரிஞ்சேனோ, பிரியேக்கை
எப்படி உருவத்தில்
நான் அவளைக் கண்டேனோ
அப்படியே அவள் என் ஆயுள் முடியு மட்டும்
இளமை ததும்பிடவே வீற்றிருப்பாள்,
கோபங்கள், எதிர்பாராத் துரோகங்கள் எல்லாமே
காலத்தீப்பந்தில் கனன்றெரிந்து விடும்
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கென்றே
உணர்வு மட்டும்
வருகின்ற ஒருத்திக்காய் வாசலிலே காத்திருக்கும்.
உண்மையிலே
காதற் தோல்வி உற்றோர்
காதலியை எண்ணுதல் போல்
அவளுடைய மென் உணர்வை
மீட்டி உருகுதல் போல்
காதலிலே வெற்றி பெற்றோர்
நினைப்பதில்லை, வாய்ப்புமில்லை
'இருப்புணர்வு எப்பவுமே
எழுச்சியாய் இருப்பதில்லை
இல்லாமைதான் இருப்பைத்
தேடுதற்குத் தூண்டிலிடும்'
ஆதலினாற் காதல் வெற்றி எனல்
முடிச்சுள்ளே அடங்கி மணம் முடித்தல் அல்ல
அதற்கப்பால் பரிசுத்தமாய்
எந்தத் தழும்புமின்றி இறுதிவரை
'நினைந்துருகிப்போதல்'
என்பேன், என்னுடைய
வாழ்வின் அனுபவத்தில்
இது ஓர் வழித்துணைதான்.

உலகைப் புரிந்திடவும்,
உண்மை மனிசரினை
உய்த்தறிந்து வாழ்வில்
ஒதுங்கி நடந்திடவும்
வேலைத்தளம் தந்த
அனுபவங்கள் மிகப் பெரிது
வேடத்தால் தம் முடைய
முகம் மாற்றி, மனிதர்களாய்!,
நரிக ளெல்லாம் பணிபுரியும்
ஊடகமே என்னுடைய
முதற் தொழிலாய், முழி வளமாய்
அமைந்ததனால் அங்குள்ள
மனிசரினைப் படித்தால்
உலகத்தில் எங்கேயும்
எங்குள்ள வனையும் என்னால்
எடை போடா முடியு மென்ற
தாக்கப்பட்டறிவு
எனக்குண்டு.அதனைவிட
வாழ்வின் உச்சம்,வளமான உயர்பீடம்,
என்றெண்ணி இருந்தவர்கள்
எல்லோரும் தாமிருந்த
இடமே தெரியாமல்
வாயடைச்சு, மண்கவ்விப் போனகதை
நான் அறிவேன் ஆதலினால்
நான் பெரிசாய்
நிண்டு நிலைப்பனென்டோ
நெருப்பாற்றைக் கடப்பன் என்றோ
நீட்டி முழங்கிடவே மாட்டேன்.

என் கவிதை
அம்பது ஆண்டுகளோ!
அதற்குப் பின்னருமோ
பேசப்படும் என்றாரும்
வாய்தவறிச் சொன்னாலும்
'நிலைத்தல் பற்றி மிகைக்
கருத்து நிலை' எனக்கில்லை.
சாவீட்டில்
சரியில்லை' என்னு மொரு சாட்டிற்காய்,
கூடி வந்திருந்து வெற்றிலைக் குதப்பலிடை,
என் கவிதை பற்றி ஏதேனும் சில வரிகள்.
நீர் பேசிப் போவதற்குக்
கூடுந்தான், ஆனாலும்
இருக்கும் பொழுதே
நான் போக(ப்) பின்னாலே
ஆயிரம் குத்தற் கதைபேசிச் சிரித்தோர் நீர்!
இறந்த பிற கென்றால் விடுவீரோ?
நான் சாக
எதுவுமே மிஞ்சாது.அந்தியட்டி ஏவறையாய்
எல்லாம் போய் மறையும்
என்கின்றநிசத்தெளிவில்,
மனசாலும், உடலாலும் ஒடுங்கி,
ஒதுங்கிப்போய்,
யாருக்கும் வயிறெரிய
நடக்காமல், என்மனசும்
யாராலும் நோகாமற்
போவதற்கே விரும்புகிறேன்.
அத்தோடு
நான் நினைக்கும் அளவிற்கு
இவ் உலகின் சுழற்சிக்கு.
என்னுடைய தேவை கயிற்றரவே
நீண்டு செலும்
பாதைகளின் தூரம்,வளைவு, பள்ளங்கள்
ஏதும் அறியேன் நான்
ஆதலினாற் பயணத்தில்
என்னுடைய ஏற்பாட்டை
கவனத்தைச் செலுத்துகிறேன்,

ஒருவேளை
நானுருகிக் கும்பிட்ட
நல்லூரான் வழி வந்து
கை கொடுத்துதவக் கூடும்!
என நம்பி
நம்பி நடக்கின்றேன்..
நடப்பதனை யார் அறிவார்...?

ஏன் இறைவா ?

உணர்ச்சிக் குரியவளை நல்ல
உட்கிடை கொண்ட ஓர் உத்தமியை
புணர்ச்சிக் கென்று கட்டி, விழற்
பொன்னையன் கையிற் கொடுப்பதுவோ?

என்னை ஏன் நீ படைத்தாய்? உள்ளே
ஒரு சிறு சிந்தையை ஏன் அமைத்தாய் ?
திண்ணிய மனபலத்தைப் பல
திக்குகள் சொல்லினும் குனிவறியா
சென்னியை, முதுகடி எலும்பமைப்பை எனைச்
சிக்கலில் மாட்டிட ஏன் கொடுத்தாய்?

எனக்குல கீந்தவன் நீ, எனை
இவ்வளவு தூரமும் கொண்டுவந்து பலர்
கணக்கிலே வைத்தவன் நீ, அது
கல் எழுத்தாவணம் ஆகுமுன்பே
இடக்கிடை தடக்கமிடல், எனை
இழிந்தோர் கைகளால் அளவிடுதல்,
அடுக்குமோ உனக்கிறைவா? சுயம்
அமைத்தவா  தகுதியை அமுக்கிடுதல்
படைப்பிலே பாரிய குற்றமடா - 'திறன்
இருக்கு தென்றால் உடன் தீர்வுகொடு,
இல்லை யெனில் 'எனைத்தீர்த்துவிடு'.

Wednesday 15 February 2012

எப்படித்தான் மறப்பேன் இந்நாளை.. (மே 18)

எப்படி நான் மறப்பேன்
இந்நாளை என்னவளே..
உலகே சேர்ந்து நின்று
ஒருமித்து கொலைக்கரத்தால்
அப்படியே எம்மினத்தை
அமுக்கி நசுக்கியதை
எப்படித்தான் நான் மறப்பேன்
என்னவளே எண்ணிப்பார்..

வாழ முடிந்தும் வாழாமல்
மண்ணுக்காய்
மீளோம் என்றறிந்தும் மிரளாமல்
தோள் தந்த
வீரர்கள் விதையாகிப்போக
அவர் பிள்ளை
ஊரும் இன்றி உறவென்று
யாரும் இன்றி
வீதிகளில் நின்றபடி விம்முவதை
அப்பாலே

கால்கள் இழந்தும்
கண்கைகள் சிதைவடைந்தும்
சித்தம் குழம்பிப்போய்
சிரித்தும் அழுது கொண்டும்
ஊனமாய்ப் போய் விட்ட
ஒரு பெரும் சமுதாயம்
கத்தி அழுதபடி
காரிருளில் அங்குமிங்கும்
வாழ்ந்த மண்ணை
வாயினிலும் தலையினிலும்
அள்ளி எறிந்து
ஆவிகளாய் அலைந்தபடி
ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை
என் வாழ்வில்
எப்படித்தான் நான் மறப்பேன்
என் சகியே எண்ணிப்பார்..

குலை குலையாய்ச் சிதறும்
குண்டுகளின் நடுவினிலே
இளம் பிள்ளைத்தாய்ச்சி ஒருத்தி
ஒரு மடியில்
நெஞ்சில் வெடிபட்டு
நேத்திரங்கள் மூடுண்டு
கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்
குறைந்தோடிக் கொண்டிருக்கும்
மிஞ்சப்போகாத கணவனையும்
மறுமடியில்
குண்டின் அதிர்வும்
மன அதிர்வும் தாங்காது
கற்பக்கிரகம் தாண்டி
கசங்கிப்போய் இந்த
அற்பக்கிரகம் வரத்துடித்த
குழந்தையினை
தானே கையால் இழுத்தெடுத்து
போட்டபடி
கண்முன்னே கண்ணிரெண்டும்
கலங்குண்டு போவதனை
பெருங்குருதிப் பெருக்கோடு
பார்த்தாள்.., பிறகேனோ
வார்த்தைகள் இன்றி
வானை அண்ணாந்து பார்த்தபடி
நிற் சலனம் அடைந்த
நினைவை., சொல்லடி நீ
எப்படித்தான் நான் மறந்து
போவேன்..! இப்படியாய்
ஆயிரமாய்க் கதைகள்
ஆயிரமாய் ஆயிரமாய்
ஆருமில்லை இங்கே
கேட்பதற்கு
தட்டிக்கேட்பதற்கும் தான்

ஆனாலும்
ஒன்றாகச் சேர்தெம்மைக்
கொன்றோரே..! எண்ணாதீர்..
சிவப்பு இந்தியர்கள் கதைபோல
எம் வாழ்வும்
காட்டு வெளியினிலும்
கடற்கரையின் மீதினிலும் - வெறும்
பாட்டாக ஒலித்தோய்ந்து
போகுமென்று - எம் தாய்மார்
இனிச் சோறூட்டும் போதில்
இதைச் சொல்லித்தான்
வளர்ப்பார்கள்

தேரோடப்போகும் எம்முடைய
தெருக்களினால்
நீர் ஓடிப் போவீர் இது நிகழும்..!

கேளுங்கள்..!

கண்ணீரோடேதான் விதைத்தோம்
கம்பீரத்தோடேதான் அறுப்போம்..

யார்க் கெடுத்துரைப்போம்...? (சிறை)

மணி அடிக்கச் சாப்பாடு
மனசின்றி வாங்கி வந்தால்
பிணி பிடித்த உடல்களென
பெரும் நாற்றம் சோற்றுக்குள்

ஏதோ சொல்லவென
வாயெடுக்க அலகுடையும்,
குளம்புத்தூள் கண்ணைக்
குளமாக்கும், வேதனையில்
கை உதறி முனகி பல்கடித்தால்
தாடையில் நோ

தெய்வமே.! என நினைக்க
உச்சி வலி உயிரிழுக்கும்
பழைய நினைவோடும்
பார்க்கின்ற ஆவலொடும்
இளைய நினைவலைகள்
கம்பி எண்ண  இருளும்.

ஏன் நான் உள்ளே
எதற்காக..? என்ற மன
வீண்கேள்விகள் மட்டும்
விடை இன்றி ரா அடையும்,

இரவுச் சாப்பாடு வேறு விதம்
நான் தனியே
கரவான மனிதன் என்ற
கட்டுக்குள் அடைபட்டு
இருபது நகமும் இனியில்லை
என்பதனால்
அரு உருவமான அதற்குள்ளே
குண்டூசி விடையில்லை,
குதி,தோள் மூட்டு
குதத்தின் மேல் இடுப்பு
பதியாமற் தடமின்றி
தடியிறங்கும் பதிலில்லை,
சுட்ட கம்பிகொண்டு
சூடாறாக்குதத்துள்ளே
விட்டெடுக்க அம்மா..முருகா
அதைத்தவிர வரவில்லை
கட்டாயம் அறு சுவையும்
தட்டின் முன் என்பதனால்
வெட்டியபடி நாசி
மூக்குள்ளே பெற்றோல்
முனகல் தான்

எட்டி மிதித்துவிட்டு
அவர் போக எனக்குள் விடியும்
பட்டும் படாமல்
உயிரிருக்கும் அறிகுறிகள்
தெரியும்
எட்டாத உயரத்து
நிலைக்குத்துத் துவாரத்தால்
சொட்டுக்காத்து உள்ள வர
ரணம் குளிரும்

அண்ணாந்து பார்த்தேன்
வெண்புகார் நீலவான் குருவியும்
கண்ணும் நிலைகுத்தி
அசையாமல் ஊர் காணும்..

நெஞ்சம் மறக்குமோ..

பிழாவில் உடன் கள்ளு
கிடாய்ப் பங்கு, நுங்கு
ஆடிக்கூழ் கீரிமலை பாபநாச யாத்திரைகள்
தோடியில சீக்காய் நள்ளிரவு முழு நிலவு
வேலி எல்லாம் குளை நிரம்பி
பூவரசில் மசுக்குட்டி சோலி தான்
ஆனாலும் முட்கிழுவை
இலை தேச்சு சுடு சாம்பல் போட்டு
இழுக்கையில தோல் மீது
தடிச்சுக் கடிச்சாலும்
சொறியேக்கை தோன்றுகிற
சுகமான அனுபவங்கள்

பின்னேரம் யாழ் தேவி
பிடிச்சால மறுநாளே
அந்நேரம் கொழும்பால்
மீண்டூர் வருகின்ற
என்ன ஓர் வாழ்க்கை
இன்னும் எத்தனையோ
எத்தனையோ..
இழந்தாலும் நெஞ்சால்
இழக்கேலா ஞாபகங்கள்

எல்லாம் போயிப்ப
இருண்ட பெருவெளியாகி
சல்லடையாய் நம் தேசம்
சபித்தது போல்
இப்ப 
வஞ்சகம் அறியாத
எஞ்சிய பனை மரங்கள்
வட்டிழந்து,வடிவழிந்து
எம்மைப் போல் நிற்கிறது,
உடைந்து சிதறி
அத்திவாரம் மேல் வந்து
குடைந்த பெருங்குழியாய்
வீடெல்லாம்

அடிக்கடி அலறல்கள்
அனுதாப முணுமுணுப்பு
துடித்திறந்தும் உரிமை 
கேட்கேலா சில உடல்கள்,
இனம் புரியா ஓர் அமைதி
நாளுக்கு நாள் வேறுபடும்,
சனம் பழகி இதனைச்
சட்டை செய்யாதொதுங்கும்,
ஊரின் நிம்மதியோ
நிசப்தம் போற் பொருளில்லை
ஆனால்
வேரின் பக்கமென
விழுதான தியாகங்கள்
இன்றும் உரமாக
இருப்பறிந்த நிலையாலே
என்னைப் போலவே
உணர்வோடு..

காமம்..

உணர்வுகளின் உட் கிளர்ச்சி
உள்ளடக்க முடியாத
கண நேரக் கண்கட்டு
காற்றழுத்த மண்டலம் போல்
புணருணர்வைப் புதைக்கேலா
புதியவகைக் காட்டாறு 
நிண உடலின் தீப்பகுதி
நிஜம் தெரியா எரிமலை வாய்

பருவமற்ற காலநிலை
பண்பறியாப் பாற் குழந்தை
உருவமற்ற உள்ளீடு
உயிரவிக்கும் கொதி ஊற்று
எல்லாம் போய் எரிந்த பின்னர்
எழுகின்ற சா வெறுப்பின்
சொல்லேலாப் பெரு நரகம்
சுடலை வாழ் ஒரு ஞானி..!

தணிதல்..

இப்போதும் அடிக்கடி
உன் நினைவுகள் எழும்
சில் மிஷங்களும் பரிமாறல்களும்
என்னை அறியாமலேயே
உதட்டில்
புன்னகையைத் தோற்றுவிக்கும்
வீதியில் போகும் போது
நான் அடிக்கடி சிரிப்பதாக
தெரிந்தவர்கள் கூறுவார்கள்
காரணம் இதுவாகவும்
இருக்கலாம்,

நானும்
பலர் தன் பாட்டிற் சிரிப்பதை
வீதிகளில் கண்டிருக்கிறேன்
அவர்களுக்கும்
இது தான் காரணமோ தெரியவில்லை,
ஆனாலும்
கடந்த காலங்களைப்போல
அந்தச் சிரிப்புக்கு பின்னர்
எழுவதான
கண்ணீரும் மனச்சோர்வும்
இப்போது
இல்லை என்றே கூறுவேன்

ஆயினும்
உன் நினைவுகள் அடிக்கடி எழும்
ஏதோ எழுதுவேன் மெளனமாவேன்..

Saturday 11 February 2012

அந்தக் கணப்பொழுது..

கந்தகப்புகை நாற்றம்
காதுடையும் வெடிச்சத்தம்,
சொந்தமாய், பழகிப்போய்
சோர்வடையா ஓர் களத்தில்
இந்தாபிடி என்று
இழுத்திழுத்து அடி கொடுத்த
அந்த ஓர் கணத்தில் அழகான ஒரு பெடியன்
வந்திறங்கி வடிவாகத்
தனை உணர்ந்து கொள்ளுதற்குள்..
அந்தோ பரிதாபம் என் கையால்
அட நண்பா..!
உன்னை நான் சந்தித்த அந்தக்கணப் பொழுது
ஏன்ரா வேறிடமா இருந்திருக்கக் கூடாதா..?

கள்ளுக்கடை எண்டா கட்டாயம் நானுனக்கு
அள்ளி அஞ்சாறு போத்தால் வாத்திருப்பன்
விழுந்தாலும் தூக்கி விட்டிருப்பன்
வாந்தி எழுந்தாலும்
கையில் ஏந்தி எடுத்திருப்பன்,
உன்னை நான் சந்தித்த அந்தக் கணப்பொழுது
ஏன்ரா வேறிடமா இருந்திருகக் கூடாதா..?

கால்ப்பந்தாட்ட மைதானம் எண்டாலும்
கோல் போட்டா நீ
மனமுடைய மாட்டியெண்டால்
பட்டும் படாமல் பயிற்றுனரும் அறியாமல்
விட்டிருப்பன் ஒரு பந்தை
வீரனே..!

மனுசனை மனுசன் சந்தித்து உலகத்தில்
அனுசரிச்சுப் போக
எத்தனையோ இடங்கிடக்க
போர்க்களத்தில் தான் நாம்
சந்திக்க வேண்டுமென்று
ஆர் விதிச்சிருந்தானோ அறியேன் நான் சத்தியமா..

சுடாமல் விட்டிருப்பன்
சுந்தரனே நான் விட்டால்
படாரென்றெனக்கு வெடி
வச்சிருப்பாய் செத்திருப்பன்..!
உன்னை நான் விட்டால்
உயிர் வாழ்க்கை எனக்கில்லை
என்ன நான் செய்ய
போர்க்களத்து நண்பா சொல்..?

உன்னை நான் சந்தித்த அந்தக் கணப்பொழுது
ஏன்ரா வேறிடமா இருந்திருக்கக் கூடாதா..?

முடிவிலி..

திரண்டு அனுபவத்தால்
சிவப்படைந்து கூர்மையுற்ற
இரண்டு விழிகளையும்
அப்படி்யே கைகளினால்
களற்றி எடுத்து வான் நோக்கி
பால் வெளிக்குள்
களன்றேதும் சேதமின்றி எறிந்து விட்டேன்
போகிறது

வழி வழியே எத்தனையோ
தடங்கல்கள் சதி வலைகள்
எல்லாவற்றிலும் தப்பிப் போகோணும்
என் கண்கள்
நல்லதெண்டு நான் நினைச்ச
பால் வெளிக்கு போகோணும்..
அங்கே போய் புவியின்
கண்றாவிக் காட்சி எல்லாம்
மங்கலாய்க் கூடத் தெரியாமல்
புதனிருட்டில்
ஓழிஞ்சிருக்கோணும் ஓரிரு நினைவோடு,
இழிந்த பூமி அழிந்த பின்
என் விழி வேண்டும் அவளோடு

கவனம் பால் வெளியே
என் கண்கள் கண்மணிக்குள்
இறக்கேலா நினைவொடும்
என்னிதயத் துடிப்போடும்
மறக்கேலா உருவுள்ள
என் உயிரின் மனசாள்வாள்

சிவந்த கீழ்ச்சொண்டு
கயல் விழிகள் எனது மனம்
உவந்து தொடுகின்ற
கைவிரல்கள் கணுக்கால்
செல்லத்தில் சிணுங்கேக்கை
உயிர் பருகும் ஓர் வனப்பு
எல்லாம் இருக்கிறது
கண்ணுள்ளே, மிகக்கவனம்
என் முகத்திற் கண்ணிருக்க
உலகிற்கு தகுதி இல்லை
பின் நாளில் உலகு
திருந்தினால் நான் கேட்பேன்

பட்டருக்காய் “அவ எறிஞ்சு”
பெளர்ணமியாய் நின்ற நிலா
வெட்டுண்டு வெட்டுண்டு
தேஞ்சது போல் என் கண்கள்
சொட்டும் தேயாது
வாழும் முடிவிலியாய்...

இதே இரவில்..

நீண்ட மழை ஓய்வின் பின்னால்
இலைகளிலி்ருந்து சொட்டுகிற
துளியின் ஓசைகளை
என்னைப் போலவே சிலர்
இந்த ஜாமத்திலும்
கேட்டுக் கொண்டிருக்கக்கூடும்...

இதே இரவில்..
குடும்பமே படுத்துறங்குகிற
அகதிக் கூடாரத்துள்
அருகிலேயே கிடக்கின்ற
அம்மாவும் பிள்ளைகளும்
உறங்கியிருக்கலா மென்கிற
ஐயப்பாட்டுடன்
தன் இளம் மனைவியின் முடியை
கோதிக் கொண்டிருக்கிற கணவன்
தாயின் செருமலைக் கேட்டு
கையை இழுத்துக்கொள்வான்

இதே இரவில்..
தூங்கும் போது எப்போதுமே
கணவன் மீது கால் கை போடுகிற
பழக்கமுள்ள மனைவி
அவ்ன் காணாமல் போய்
காலாண்டாகியும், அதே பழக்கத்தில்
காலையும் கையையும் தலையணைமேல்
வீசிக்கொண்டிருப்பாள்..!
அதே வீட்டில்
கதவு தட்டப்படுவது போல் சத்தம் கேட்டு
கனவில் திடுக்கிட்டெழுந்த அவனது தாய்
ஒரு வேளை மகனாக இருக்கலாம்..?
என்கிற அப்பாவித்தனமான நம்பிக்கையில்
ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்ப்பாள்

இதே இரவில்..
வெளவால் போல் தலைகீழாக
வதை முகாம்களில் தூக்கப்பட்டிருக்கும்
எம்முடைய பிள்ளைகள்
தாங்கொணா வதைகளில் தளர்ந்துபோய்
உலர்ந்து் போகிற ஓலங்களை
எழுப்பிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்..
இப்போதைய குடாநாட்டின் இளைஞர்கள்
எதுவுமே நடந்துவிடவில்லை என்பதுவாய்
மது விருந்தில் திளைத்தபடி
ஊர்ப் பெண்ணொருத்தியை
நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்..
அடர்ந்த காட்டிற்குள்
விழுப்புண்களோடும் வேதனைகளோடும்
தோழர்கள்
வேகமாக நழுவிக்கொண்டிப்பார்கள்

இதே இரவில்..
கடவுளாலேயே கை விடப்பட்டவனான
நான்
இத்தனை வருடகால வி்லை கொடுப்பும்
ஒரு கனவினைப்போல்
இரவோடிரவாக முடிந்து விட்டதென்பதனை
நம்ப முடியாமலும் தாங்க முடியாமலும்
அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும்
ஏதோ ஓர் வைராக்கியத்தில்
வேதனையைத் தீர்க்க
வெற்றுத்தாளில்
வரைந்து கொண்டிருக்கிறேன்

சிதைகள் ஊன்றப் படுவதற்கான
காரணத்தையும்
விதைகள் முளைக்கப் போவதற்கான
காலத்தையும்...

மோனம்..

அறிவு தெரிந்த முதல்
இன்று வரை உலகத்தில்
என்னால் எவரும்
வருந்தி வயிறெரிந்ததில்லை
யாராலும் நானும் வருந்தவில்லை
என்கின்ற
முழுமை நினைவோடு
கால் நீட்டிப் படுத்து
மெல்ல மெல்லக் கண்மூடி
திருப்தியாய் மூச்சை
இழுத்துவிட்டு நினைவுகளை
நிதானமாய்ச் சுமந்தபடி
நீள் துயிலில் மூழ்குகையில்..

கணமேனும்
மனமுடைந்து போகாதே
கண் கலங்கி
கை கால் வேர்த்துதறக்
கடந்தவற்றை எண்ணாதே
என்னோடு நீ இருந்த
இமை படக்கும் வேளைகளை
உன் கணவன் இயல்போடு
ஒப்பிட்டுப் பார்க்காதே
வேர்வை மணம் தூண்டும்
விறைப்பான நினைவுகளை’
போர்வைக்கு(ள்) அவன் மார்பில்
புரிவதற்கு முயலாதே

உன் மகனை
என்னுருவாய்க் கண்டு
நெஞ்சோடு
இறுகப் பிடித்தணைத்து
செவி வருடி பாற்தனத்தால்
என்னில் நீ மொண்ட
சுவை நரம்புக் கவிதைகளை
முதல் முத்தச் சிலிர்போடு ஊட்டு
மனக்காயம்
ஆறித் தணியுமட்டும்
அழு
தெளிந்து சிரிப்பு வரும்
பழங்கதை
என்றெண்ணிச் சிரிக்காதே
அழுகை வரும்..

Friday 10 February 2012

வாழத்தெரியாதவன்..

ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்
ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்
அன்று நீ காணாமற் போனாய்..
சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்
சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்தது
நீ இறந்திருக்கலாமென
பலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்
காலமும் ஓடிப்போயிற்று
வழமை போலவே தியாகங்களும்
நினைவுகளும் எமக்குள்
மங்கிப்போயின..

சுரணை அற்ற வாழ்வுக்காக
தொலை தேசத்திற்கு நான்
வந்திருந்தபோது
பனிப் பொழிவினிடையே
உன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!
அது நிச்சயமாக நீதான்
அதே கூர் மூக்கு,தெத்திப்பல்
ஆயின்..
நீ இறக்கவில்லை..!
ஆனால் இறந்திருந்தாய்
நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்
காலைச் சவட்டியபடி,

கல்லூரிக் காலங்களில்
எப்படி எல்லாம் கலகலப்பாய்
இருந்தாய்..! இப்போதோ
பேச்சுக் கொடுத்தாலும்
பெரும் மெளனம் காக்கின்றாய்..
முட்கம்பிகள் உன் குதத்தைக்
கிழித்த போதும்
மின்சாரம் உன் குறியை
எரித்த போதும்
கேள்விகளாலும் கம்பிகளாலும் நீ
துளையிடப்பட்ட போதும்
நீ காட்டிய அதே மெளனம்
இது கூட நல்லது தான் நண்பனே

ஒருவேளை
வதையின் போது நீ
வாய் திறந்திருந்தால்
ஐம்பது குடும்பமாவது
அலறி இருக்காதா..?
தேவை அற்ற இடங்களில்
நீ அதிகம் பேசி இருந்தாலும்
தேவையான இடத்தில் நீ
மெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்
நல்லது
போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!

இனி நீ காணப்போகிற உலகும்
கடக்கப்போகிற மனிதர்களும்
ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்
இப்போது
பேசத்தொடங்கி இருப்பதைப் போலவே
உன்னைக் கடந்து செல்கின்ற போதும்
அவர்கள் பேசிக்கொள்வார்கள்

இவன்
வேறு வேலை அற்றவன்
வாழத் தெரியாதவன்
என்றும்...

Wednesday 8 February 2012

நானும் மகனும்,தொலைபேசி உரையாடல்..

அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..?

முடியாது மகனே..

ஏன் முடியாது..?

வந்தால் கொன்று விடுவார்கள்

ஏன் கொன்று விடுவார்கள்...?

நான் என் மக்களுக்காகப் பேசினேன்

ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..?

பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக,

ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..?

சமமாக வாழ நினைத்தபோது

ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..?

நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை

ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..?

அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக,

அவர்கள் பிழைத்தார்களா..?

பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள்

என்னவோ பிழைத்தார்கள் தானே..?

இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே..

சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..?

இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்..

ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..?

ஆம்  மகனே

ஒவ்வொரு மகனும் உன் போலவே

ஆயிரமாயிரம் கேள்விகளுடன்..

விடை கிடைக்குமா அப்பா..?

என்ன சொல்ல மகனே..!

விடுதலைப் போராட்டம் நெடிது தான்
ஆயினும்
என்னுடைய பிராத்தனை என்னவெனில்
உன்னுடைய காலத்திலும்
எங்கோ ஓர் மூலைக்குள்
என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க
உன் மகனும்
விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும்
வளர்ந்து விடக்கூடாது என்பதே...

வாழ்தலுக்கான ஆசை..

ஊரடங்கு பிறப்பித்த
உரத்த மெளனத்தைக் கலைத்தபடி
கந்தக வாசனை அடிக்கும்
எம் வளவுப் பதுங்குகுளிக்குள்
மறு பிறப்பை அண்மித்த
அலறலுக்கு மத்தியில்
அவன் பிறந்தான்,

வளர்ப்பதற்கென எமக்கு
வழங்கப்பட்டிருந்த சூழல்
மெல்லிய காற்று மேனியை வருட
ஏகாந்தமாய் இசையை முணுமுணுத்தபடி
கை வீசிச்செல்லும் காலமாய்
இருக்கவில்லை,

கிரந்தி எண்ணை சளித்தொல்லை என
ஒவ்வொரு வகுப்பாய்
பல்கலை வரைக்கும்
சும்மா அவனைக்கொண்டுவர
முடிந்ததில்லை

ஆட்டாத தலை பார்த்தும்
ஆட்கடத்தாத்தெரு பார்த்தும்
கோட்டைச் சமருள்ளும்
கொடிய இடப்பெயர்வுள்ளும்
மாட்டாது காப்பாற்றி வளர்த்து
அவன் வாழ்வு
மலர்கின்ற காலக்கனிவை
கொடுப்பனவை
தாகம் நிறைந்த தவிப்போடு
பார்த்திருக்க..
எங்கிருந்துவந்தீரோ வந்தீர்
மிக இயல்பாய்
பெயர் சொல்லிப் பிள்ளையினை
அழைத்து சிரித்தபடி
கன்னா மண்டையிலே வைத்து
விசை அழுத்திவிட்டு
என்ன பெரிதாய் நடந்து விட்டதென்பதுவாய்
உம் பாட்டில் போய்விட்டீர் கொடியவரே..

எங்கள் இத்தனை காலக்கனவுகளும்
காத்திருப்பும்
அணுஅணுவாய்ப்பார்த்து
ஆக்கிவைத்த அத்தனையும்
ஓர்குண்டில் உடைந்து சிதறி
பிடரி வழி
பெருங்குருதிப்பெருக்காக ஓட
கண் முன்னே
பிரண்டுகிடக்கிறான் பிள்ளை

வாழ்வின் ஒவ்வொரு அடியையும்
தூக்கி வைக்க
எத்துணை விலை கொடுத்தோம்
என்பது பற்றி
கொலை உணர்வை விரல் நுனியில்
வைத்திருக்கிற உமக்கு
எதுவுமே உறைத்துவிடப் போவதில்லைத்தான்
ஆயினும்
நெஞ்சால் ஒன்றும்மைக்கேட்கிறேன்

வாழ்தலுக்கான எங்களின்
இத்துணை ஆசையிலும்
மேலானதா
கொல்வதற்கான உங்களது
தேவை..?

தவம்..

வருகையை எதிர்பார்த்து
வரங்கேள்
உருகு உருகு
உயிர் மணம் வரட்டும்
அந்தக் கருகலில் என்னுடைய
அங்கங்கள் எல்லாமே
கர்வம் மேலோங்க
பதப்பட்டுயிர் கொள்ளும்,

கண்ட உடன் கை பிசை
விரலோடு விரல் கோர்த்து
தெண்டித்துச் சோம்பல் முறி
வியர்க்கட்டும்,
கிட்ட நான் வந்தோண்ணை
பட்டு நில்
மார்பெழுந்து இறங்கட்டும்
பெரு மூச்சு கன்னத்தை
உரசிய படி

கை மீது கை பற்று
உள்ளங்கை நீர்க்கசிவு
என்னுடைய கணச் சூட்டில்
வெந்து மீள் உயிர்க்கட்டும்
கால் மெல்ல முட்டு என்
கர்வங்கள் எல்லாமே
உன்னுடைய காலடியில்
உயிர்ப் பிச்சை கேட்கட்டும்,
பருவத்தில் பார்
பாதி கூட நானில்லை
சொல்
உருவமேனும் நானா
உண்மையா...?

பாவ மன்னிப்பு..

கறுப்பென்றால் எனக்கென்ன
கவர்ச்சியோ தெரியாது
உறுப்பாய் இருந்ததனால்
உயிர் கொடுத்து வளர்த்து வந்தேன்
சோறு கறி வச்சா பூமி
சுற்றுவதும் தெரியாமல்
கோவக்காரன் போல்
கூப்பிட்டும் கேக்காமல்
கடைசி அவிழ் முடியுமட்டும்
கண் திறக்காய் டேய் கறுப்பா..!

ஏன் நினைச்சம் அண்டைக்கு
இப்பிடி நடக்குமெண்டு,
உனக்குஞ் சொல்லாமல்
உற்றவளும் அறியாமல்
ஊரோட ஓடிப்போனம்
அஞ்சாம் நாள்
வீட்டிலுள்ள பொருள் பார்க்கும்
விடுப்பினில வந்தன் நான்
என்னைக் கண்டோண்ணை
அட ராசா..! ஓடி வந்து
கட்டிப் பிடித்தாய்
கண்டபடி முத்தமிட்டாய்
எட்டி எட்டி நான் போக
இன்னு மின்னும் இணைய வந்தாய்,

பசியாலே நீ வாடிப்போயிருந்தாய்
கையிலுள்ள பார்சல் தனைப் பறித்து
படபடன்று பிய்த்தெறிந்தாய்,
உந்தன் நிலை அறிந்தேன் நீ
உணவருந்தி முடிப்பதற்குள்
எந்த விதப்பட்டும் வர மாட்டாய்
என நினைத்து
மெல்லக் கழன்றேன் நான்
நடந்ததென்ன என் சொல்வேன்...

ஓடிப் போய்ச் சோற்றை
ஓர் பார்வை பார்ப்பதுவும்
தேடி எனைவந்து தீண்டுவதும்
இழுப்பதுவும்
உண்ணாமல் அங்குமிங்கும்
உருள்வதுமாய் எனைத் தடுத்தாய்,
நாளைக்கு வருவன் விடு
என மிரட்டிக் கம்பெடுக்க
வாடிப்போய்த் தள்ளி நின்றோர் பார்வை
பார்த்தாயே..
அந்தப் பார்வைக்கு
அர்த்தம் நான் சொல்வதென்றால்
எந்தச் சொல்லெடுப்பேன்..
எவரிடம் போய்ப் பொருள் கேட்பேன்?
என்ன தான் சொன்னாலும்
எவ்வளவு கதைச்சாலும்

சின்னச் சோத்துக்கு மடங்கிடுவாய்
என நினைத்த
பொன்னை மடையன் நான்
புழுத்தாலும் பாவமில்லை
கண்ணாலே நான் கண்ட கடவுளே
என் கறுப்பா..!
மண்டியிட்டுத் தொழுகிறேன்
மன்னிப்பாய்..


1994 இடப்பெயர்வின் போது நான் வளர்த்த கறுப்பனை எப்படியும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் கண்முன்னே விட்டுப்பிரிந்தேன் இன்றுவரை அவனைப் பார்க்கவே முடியவில்லை..

மெளனம்..

ஓசைப்படாமல் இருத்தலில்
உள்ளேயே
ஓராயிரம் கோடி
உணர்வுகளைச் சுமந்தபடி
ஆசைகளை எல்லாம்
அனுபவித்துப் பார்க்கையிலே
ஆண்டவனின் குணமே
மெளனமே..
உனக்கிணையாய்
எந்த ஒரு குருவும்
எச்சகத்தும் இல்லையப்பா..

இசையின் உறை நிலையே
இங்கிதத்தின் அடிப்படையே
எத்தனையோ உயிர் காத்த ஆயுதமே

மனமொன்றி
முத்தாய்க் கணச்சூட்டில்
வேர்வைப் பூ பிறப்பெடுக்க
அகன்ற விழி கவ்வுதலால்
அரை விழியாய் ஆகிவிட
எல்லா உணர்வுகளும்
ஓர் மையப் புள்ளிக்குள்
தியான நிலையடைய
திசை மறந்து ஒன்றாகும்
உச்சக் கலவியின் பின்
உள்ளாடும் ஓர் அமைதி
மூச்சை உரை பெயர்க்கும்
முழுமை நிறை வாழ்வியலை
எந்த மொழி உரைத்து விடக்கூடும்..?
என் நிம்மதியே

மீளேலாத் துயரெல்லாம்
விதி என்று தெருள்கின்ற
காரியத் தெளிவல்லவா நீ
கடவுளின் மொழியல்லவா..!

ஆழத்தின் உருவும் நீ
ஞானத்தின் தெளிவும் நீ
ஊழியின் முடிவல்லவா நீ
உண்மையின் வடிவல்லவா..!

யாரென்ன நொந்தாலும்
யாரென்ன செய்தாலும்
பக்குவம் தருவாயடா
பாவ மன்னிப்பாய் வரு(ம்)வாயடா..!

நீ இல்லா இடமெல்லாம்
நிச்சயமாய்ச் சுடுகாடே
அட கொஞ்சம் பொறுப்பாயடா நீ
அங்கே தான் பிறப்பாயடா..!

என்னுடைய சிரிப்புகள்..

யாழ் இந்துக்கல்லூரி
மைதானச் செம்பாட்டுள்
ஆழ்ந் தமிழ்ந்திருக்கின்ற
என்னுடைய நிசச்சிரிப்பே..!

உன்னை நான் கண்டேன்
உயிர் துளிர்த்தேன்..!
என்னுடலை
சன்னங்கள் துளைத்துச்
சா நெருங்கும் வேளையிலும்
உன் சிரிப்பை எண்ணித்தான்
உயிர்த்தெழுந்தேன்..

என் மகனே..!
கொஞ்சம் சிரி
குட்டி பாக்கோணும், ஏனென்றால்
இங்கே எவருமே
இதயத்தால் சிரிப்பதில்லை
பல்லால், உதட்டால்
பாவனையால் மட்டுந்தான்,

உன்னைப் போல்
நான் சிரித்து
உடை பட்டுத்திருந்தி விட்டேன்,
எனக்குள்ளே இப்பொழுது
ஏராளமாய் முகங்கள்..
வீட்டிற்குள், வெளியில்
விருந்தழைப்பில்,
காதலி முன்,
சாட்டிற்கு மதுக்கடையில்
என்பதுவாய் ஏராளம்..
அதற்கதற்குத் தக்கபடி
அச்சடித்த புன்னகையை
இடத்திற்கு ஏற்றபடி
இணைத்திடுவேன்
என் குருவே..!

கண்ணாடி முன் சிரித்தேன்
கண்றாவி சகிக்குதில்லை,
ஏன் முருகன்
ஆறு முகனானான்? என்பதுவும்
இப்போதுதான் எனக்கு
விளங்குதடா என்றாலும்
என்னுடைய சிறுவயசில்
எப்படி நான் சிரிச்சனெண்டு
இப்ப எனக்கொருக்காப்
பாக்கோணும், குருக் குட்டி ..!
இங்க வந்து சிரி
எங்க சிரி சிரி பாப்பம்...

சாவோடிவை போகும்..

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?
போ..

மண்ணளவும் கவலையில்லை!
மரித்தது போல் ஆனாலும்
எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.
வாழ்வோட்டம்
என்னை இரும்பாக மாற்றும்தான்
ஆனாலும்
கடல் பார்க்க, மரம் பார்க்க
நாம் போன இடம் பார்க்க,
சொன்ன கதை எல்லாம்
சுத்திவரும் போகட்டும்

மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு
எல்லாமே உன்னிடத்தில்
தினம் தினம் நான் சமர்ப்பித்து
திருப்தி அடைந்த சுகம்
இனியில்லை என்றாலும்,
எனக்கென்ன இது பெரிய
பனிப்போரா?
மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு?

விதி வந்துந்தி எமை
வேறாக்கி  இன்னொரு கை
உன் மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?
நான் பெரிசாய்
நொந்தொடிந்து போகேன்
நெகிழேன்,இருந்தாலும்

சின்னக் கண்கலக்கம்
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்
நெற்றிச் சுருக்கு விழும்
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்
பார்வைத்திரை நடுங்கும்
சற்றுக் காலத்தில் என்
சாவோடிவை போகும்

சிற்றின்பப் பிரிவில்லை
என அறிவேன். என்றாலும்
மற்ற மனிசரைப்போல்
கவலையுறேன்
நீ போடி..

காலம் பின்னிய வாழ்வு..

காலத்துகென்ன
கண்டபடி ஓடிவிடும்
சீலமாய்ச் சிறப்பாய்
இருந்த வரும் போய் விடுவார்,

ஏதோ ஒன்றிரெண்டு
வரலாறிழுபட்டு
’அம்பிட்ட பெயர்களென்று
ஆட்காட்டும்’ அது கூட
விமர்சகருக்கும் பேரனுக்கும்
வசதியன்றி
போனவருக்கெல்லாம் இது
தெரிந்திடவா போகிறது..?

இதற்குள்ளே எங்கள்
கல்வி முறைத்தேர்வை எய்த
இரவிரவாய் முழிச்சு
ஆசைகளை அடகு வச்சு
முச்சை கூட இல்லாப்
பட்டம் ஒன்றைப் பெற்றெடுத்து
வேலை தேடுவதை வேலை என்றாக்கி
கிடைச்சாலும் மேலை
உள்ளவன்ர மேம்போக்கால்
விரக்தியின்ர உச்ச
விளிம்புக்குச் சென்றாலும்
’சரி விடுவம்’ என்று
வழமையினை இயல்பாக்கி
உலகத்தில் வாழப்பழகி
மூச்சுவிட..
காதல் வயசெல்லாம் கடந்து விடும்
பின்னர்
கல்யாணம் எண்டும்
சொல்லேலா தென்பதனால்
சாட்டுக்கென்றொரு சடங்கு செய்வம்
பேந்தென்ன
சோத்துக்கும் சொதிக்கும்
சோரந்தான்,

இடக்கிடையில்
கரிச்சட்டி துடைக்காத
பேப்பரில ஏதேனும்
பேப்பருக்கெழுதிப்போட்டு விட்டு
ஒரு மாசம்
பெரியாளா நிமித்தித்திரிவம்
திடீரென்றோர் நாளில்
நினைவெல்லாம் மங்க
நிமிர்ந்த தெல்லாம்
படுத்துவிட
பேர் கூட இல்லாமற் பிணமாவோம்.

டேய் முருகா..!

இதுக்குப் பெயராடா
வாழ்க்கை..?

உயிர் போயும் மறப்பேனோ..

பொய்யாகக் கோவித்துப்
பின்னர் அணைத்து முத்தம்
மெய்யாக உன் உதட்டில்
மீட்டிவிட மாட்டேனோ..!

உதட்டோடு உதடு வைத்து
உயிர் வாங்கும் வேளையிலுன்
இதழ் மீது கடித்தெடுத்துன்
இதழ் ரசிக்க மாட்டேனோ..!

இறுக்கி எலும்புடைத்து
இன்னு மின்னும் உன்னிலெனை
அறுக்க முடியாமல்
அத்வைதம் அடையேனோ..!

உடல் வேர்த்துக் களைத்து
உன் மார்பிற் சாய்ந்திருக்க
இடறி வரும் மூச்சொன்றை
இழுக்காமல் போவேனோ..!

நீ ஆணாய் நான் பெண்ணாய்
இடம் மாறும் வேளையிலுன்
உண்மைக் குணம் பார்த்து
உதட்டோரம் சிரிக்கேனோ..!

கண்மை கரைந்தோடிக்
கடைசியில் நீ அழும் வேளை
பெண்மை இது என்று
பெரும் மெளனம் காக்கேனோ..!

விடிந்தெழுந்தென் முன்னால்
வெட்கி நீ தலை குனிந்து
ஒடித்து விடும் புன்னகையை என்
உயிர் போயும் மறப்பேனோ..!

நினைவுகளின் நெரிசல்..

கல்லூரி அரச மரம்
கனகதையள் சொன்ன மரம்
நில் என்று சொல்லி முந்தி
நிழல் நல்லாத்தந்த மரம்
அரச மரத்தடியில்
அன்பு விளை நிழற்பரப்பில்
பரவசமாய்ப் பந்தடிச்சு
நின்றோம் நினைவிருக்கா..?

குண்டலினி சக்தி
கிளம்பிடுமாம் எனச்சொல்ல கோயில்
மண்டபத்தில் ஆறேழு
மணி நேரம் அமர்ந்திருந்து
எதுவும் கிளம்பாமல்
இருந்திடவும் முடியாமல்
குண்டி நோவெடுக்கத்
திரிந்தோமே ஞாபகமா..?

சிறு நீர்கழிக்கையில
சின்னனில நாம் முந்தி
பொறு நில்,
போட்டி தொடங்கட்டும் எனச்சொல்லி
ஆர் தூரம் பெய்வமென
அளந்தளந்து பெய்து முதல்ப்
பேருனக்குத் தந்தேனே
பெம்மானே ஞாபகமா..?

பாலர் வகுப்பிருந்து
ஒன்றாவே கல்வி கற்றோம்
ஆலமரவிழுதாய்
அன்பைப் படரவிட்டோம்
பந்தை அடிக்கையிலும்
பல சண்டை செய்கையிலும்
முந்தியே ஒன்றாய்
முட்டி உதை கொடுத்தோம்
நல்லூரிற்கூட
நாம் ஒன்றாய்த்தான் உருள்வோம்
கல்லூரி மதிற்பாய்வா
கட்டாயம் ஒற்றுமைதான்,
ஒன்றாவே வாழ்ந்து
உயிர்விடுவோமென்கின்ற
திண்ணமுடன் நெஞ்சில்
தீ வளர்த்தோம் ஞாபகமா..?

விட்டில் கனவு கண்டா
விளக்கொன்றும் குளிர்வதில்லை
தொட்டில் செய்ததற்காய்
குழந்தைதான் பிறப்பதில்லை
சதி செய்யச் சரியான
சமயம் பாத்திருந்து
விதி வந்து எம்மை
வேறு திசை ஆக்கிரிச்சு,
ஏனோ இடம் மாறி
இரு வேறாய்த் தனி ஆனோம்
தேனாய் வெறும் அடையாய்
வெவ்வேறு திசையானோம்,
கூதற் பனிப்பொழுதில்
கும்மிருட்டில் நள்ளிரவில்
ஏதேதோ நீ
தொழில் என்று இப்பொழுது
உன் வேலை, உன் உழைப்பு
உன் குடும்பம் உன்பாடு..
துளியும் ஒவ்வாத
இடமொன்றில் நானும்
விழியைப் பிதுக்கி
விழித்திருந்தபடி இங்கு
என் வேலை, என் சோலி
என் பாஷை, என்பாடு,

காலமும் போயிரிச்சு
கடுகதியில் மாற்றவிசை
ஞாலப் பரப்பெங்கும்
நடந்திரிச்சு,

கல்லூரி அரசமரம்
கன கதையள்
சொன்ன மரம்
நில் என்று சொல்லி முன்பு
நிழல் நல்லாத் தந்தமரம்
போன வருஷத்துக்
கல்லூரி விஸ்தரிப்பில்
தானமாய்த் தன்னை
தந்து விட்டுச் சாஞ்சிரிச்சு..