Saturday 26 July 2014

சிறையை வேண்டும் பறவை..

மழையும் நிசப்தமும் கூடியிருந்த
ஆழ்ந்த இரவொன்றில்
கூட்டை நெருங்கிய வேடுவர்
அந்தப் பறவையைப் பிடித்துச் சென்றனர்
ஒவ்வொரு இறகாக, ஒவ்வொரு நகமாக
ரசித்து, ருசித்து
தேர்ந்த கலாரசனை மிக்கவராய்,
விதை சிதையும் வாதைதானெனினும்
இணையும், குஞ்சும் நினைவிலாட
தன்னையது மாய்த்துக் கொள்ளவில்லை

எப்படியோ குற்றுயிராய்
அண்டைக் கடல் தாண்ட அங்கேயும்,
நாட்களோட
வதை வழமையானதாகிப்
பழகிப் போயிற்றுப் பறவைக்கு
குஞ்சும், இணையும்
இணையும் நினைவும்
அத்தனை ரணங்களுக்கும்
ஒளடதமாய்

கடல்கள், மலைகள் தாண்டிக்
கண்டம் கடந்தும்
கூண்டு வாழ்வே அதன்
குறித்துவைத்த விதி போல!
வதைக்காமல் சிதைக்கும்
வல்லமை மிக்கோராய் வெள்ளையர்
குளிரும் தனிமையும் குதறிச் சிதைக்க
கால நீட்சியும் தான்,

சிறகடிப்பதையும் பறப்பதையும் கூட
மறந்து போயிருந்த இருட் பொழுதில்
திடீரென ஒருநாள் அவர்கள்
கூண்டைத் திறந்து விட்டார்கள்

வெளியே வந்த போது
உலகு வேறுமாதிரி இருந்தது
திக்குமுக்காடிப் போனது பறவை
வாழத் தெரியவில்லை, வாழ முடியவில்லை

எனினும்
ஆயிரம் ஆசைகளோடு
இதையும் மேவி எழுவேன்
இனியெலாம் சுகமே வாவென
இணையிடம் சொன்ன போதுதான்
தான் மிகவும் தாமதித்து விட்டேன்பது
பறவைக்குப் புரிந்தது

இப்போதில்
தன்னை மீண்டும்
கூண்டுள் அடைக்குமாறு
அவர்களிடம் வேண்டிக் கோரியிருக்கிறது
பறவை..