Saturday 17 May 2014

புதுவை இரத்தினதுரை - எங்கள் கவிஞன்

பூவரசம் வேலிகளைப்
புலுணிகளைப் பற்றியெல்லாம்
நாவரசன் ஒருவன்
நம்மிடையே பாடி வந்தான்

கதியாற் கால்மரத்தைக்
கல்மதில்கள் தின்றது போல்
அதிலிருந்த பறவையெல்லாம்
அலமலந்து எங்கேயோ
விதியை நொந்தபடி
வேறுதிசை சென்றது போல்
ஈரலிப்பைப் பேணி நின்ற
எத்தனையோ குளங்களினை
கோரமாய்க் கட்டடங்கள்
குதறிவிட்டு எழுந்தது போல்

எம் வளத்தைப் பாடி நின்ற
எம்முடைய பாடகனின்
உம்மென்ற குரல் கூட
உலகிற்குக் கேட்காமல்
இல்லாத கடவுளரின்
இருப்பைப் போலவன் நிலையை
பொல்லாத காலத்தோர்
புதைத்தெங்கோ வைத்து விட்டார்

கறுப்பன் நெல்லினத்தைக்
கலப்பினங்கள் வந்திறங்கி
அறுத்தழித்து மெல்ல மெல்ல
ஆக்கிரமித்திருப்பது போல்

இயற்கையுரச் செழிப்புதனை
இன்று வந்த செயற்கையுரம்
பயன்பாடு அழகென்ற
பகட்டாற் தள்ளி விட்டு
விளைநிலத்தை, நல்
விதை முளைக்காத் தரிசாக்கி
களைநிலமாய் மாற்றியெங்கள்
கனவுகளை அழித்தது போல்

எமக்குவக்கும் மண்மொழியில்
எம்முடைய கனவுகளை
அமைத்தெமக்காய் ஆக்கி வைத்த
அற்புதப் பாடகனை
பருவப்பிழை பொழிந்த
பாழான சூறையொன்று
தெருவில் பலர் பார்க்கத்
தேடியள்ளி இன்று வரை
உருவமே தெரியாமல்
உள்ளிருட்டில் எங்கேயோ
கருகி உயிர் கசிகின்ற
கம்பிகளுள் வைத்துளது?

கண்ணாலே பாடகனைக்
காண்கின்ற வரமெமக்கு
எந்நாளில் வாய்த்திடுமோ?
என் செய்வோம்? அது வரையில்
முன்னாலே இருக்கின்ற
முற்றத்தில் வளவுகளில்
அவன் நினைவில் மரமொன்றை
அன்போடு நட்டிடுங்கள்
ஒவ்வொரு கெட்டும்
ஒவ்வொரு கவியாக வந்து
பச்சைப் பசேலென்ற
பசுங்குளிரில் அவன் பெயரை
இச்செகமெங்கும் வீசி எழுதட்டும்
அவன் வாழ்வான்..

அழுவதற்கேனும் அனுமதியுங்கள்..

ஆண்டுகளாய் நாமின்னும்
அடக்கியுள்ளே வைத்துள்ள
மீண்டெழுந்து விடமுடியாச் சோகத்தை
தொண்டைவரை
குமுறி உள்ளேயே குமைந்தெரிந்து கிடக்கின்ற
வார்த்தைகளுள் அடக்கேலா வலியை
வாய் விட்டு
கத்தி அழுதெங்கள் கண்ணீரைப் பூவாகச்
செத்தழிந்து எம் சனங்கள்
சிதைவடைந்த மண்மீது
பெய்து எம் மனசின்
பெரு நெருப்பைத் தணிப்பதற்கு
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்

நிழற்படங்கள் இல்லையிங்கே
நினைத்தவுடன் பார்ப்பதற்கு
நினைவிடமும் இல்லையெங்கள்
நெஞ்சிறக்கி வைப்பதற்கு
கண்முன்னே அவர் வீழந்த
கதை சுமக்கும் நிலமொன்றே
இன்னும் கிடக்கிறது ஏதிலியாய்
அதன் மேலே
ஒரே ஓர் மெழுகுவர்த்தி
ஊன்றி, ஊர் கூடி
உள்நெஞ்சக் கதையெல்லாம்
ஊற்றி, மனம் தணிக்க
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்

வயிற்றிற் சுமந்தபடி
வாய்க்கால்கள் ஒவ்வொன்றாய்
உயிரைக் கை பிடித்தபடி ஓடி
பெற்றெடுத்து
ஆசையாய்ப் பெயரிட்டு
அவர்கள் போய் விட்டார்கள்
என்ன பெயர் வைத்திருப்பார்
எமக்கென்று தினம் கேட்டுக்
குடைகின்ற இந்தக்
குழந்தைகட்கு உம் பெற்றொர்
கடைசியாய் உம்மோடு வாழ்ந்ததென
வாய்க்காலை
கைகாட்டி விடலன்றிக் காத்திரமாய் எம்மாலே
என்ன தான் பதில் சொல்ல இயலும்?

அவரார்வம்
மண்ணைப் பிளந்தேனும்
மறைந்துள்ள தம் பெயரைக்
கண்ணிற் கண்டுவிடும்
காட்டாறாய் இருக்கிறது
கரையை அது உடைக்கும்
காலமிப்போ உம் கையில்,
திரைபோட்டுக் கிடக்கின்ற
தீராத வெஞ்சினத்தின்
வேகத்தைக் குறைப்பதற்கு
வேறுவழியில்லை அதால்
நாமழிந்து போன மண்ணில்
நடந்துருண்டு அழுவதற்கு
ஓர் வாய்ப்புக் கொடுமென்றே
உம்மை நாம் கேட்கின்றோம்..

Thursday 15 May 2014

செத்துயிர்த்துச் சாதல்..

ஒதுக்குப் புறமாயேனும்
ஒரு பூ?
இதற்குப் பின்னணியில் எவருள்ளார்?
எச்சரிக்கை.

என்பிள்ளை, என் அப்பா
என் குடும்பம், என் நண்பன்
ஒற்றைச் சுடரேற்ற
ஓர் வாய்ப்பு?
புரட்சி உருவாக்கும் புதுயுக்தி
பிடித்தடைப்போம்

விம்மல்?
முடியாது
விசும்பல்?
கூடாது
துக்கம் தொண்டையோடிருக்கட்டும்

ஒன்றாக வாழ்ந்தவரை எண்ணி
ஒருதுளி கண்ணீர்?
விழியிருந்து துழியவிழ்ந்து விழுவதா!
விபரீதம்
அண்ணாந்து கண்களுக்குள்
அடக்கு
கலங்கிய கண்கள் கூடக்
கண்காணிக்கப்படுகின்றன

பெருமூச்சேனும்?
பின்னாளில் பெருத்துப் புயலாகும்
ஆபத்து
மெதுவாக இன்னும் மெதுவாக

இப்படியே அழுத்தழுத்தி
எப்படியுமும் கரத்தில்
துப்பாக்கி வடிவொன்றைத்
தொங்க வைப்போம்
அது வெடிக்கும்
சத்தமொன்று போதாதா உலகுக்கு
பிறகென்ன
அடுத்த பத்தாண்டும் அரசியலில்
நாம் வாழ்வோம்..

Thursday 1 May 2014

யாசகம்..

விரக்திப் பாலைவன வெம்மை
நிம்மதியை
துரத்தி அலைக்கழித்து
துவண்டுவிழத் துவண்டு விழ
அரக்கத்தனமாக அடிக்க
இதன்மேலும்
இரக்கங்காட்டாயோ எனக்கேட்டும்
பதிலின்றேல்
அறுத்தென்னைக் கொல்வதற்கு ஆணையிடு
அல்லவெனில்
கருக்கென் உணர்வெல்லாம்
களி வாழ்வை எதிர்பாரா
பருப்பொருளாயென்னைப் படை..

தனித்த கோடை

என்றாவதொரு நாள்
வசந்தம் வருமென்ற நம்பிக்கையில்
பருவம் மாறாத பல கோடைகளை
தனியனாகத் தாக்குப் பிடித்த அந்த மரத்துக்கு
இனியொருபோதும் உனக்கு வசந்தமில்லை
வறள் காற்று நிறைந்த
தனித்த கோடைதானெனும் செய்தியை
காற்றுச் சொல்லிப் போனது,
வேரறுந்து வீழும் வரத்தை இறைஞ்சுவதன்றி
வேறென்ன செய்யும் மரம்..

எமக்குமொரு சூரியன்

ஒன்றிரெண்டு பாதை விட்டோடி
எரிகல்லானதென்னவோ உண்மை தான்
ஆயினும்
அந்தச் சூரியனின் ஈர்ப்பிற் தான்
அத்தனை கோள்களும் ஒழுங்கு மாறாமல்
ஓடிக்கொண்டிருந்தன
திட்டமிட்டிணைந்து உருப்பெருத்த கருந்துளை
அன்றிந்தச் சூரியனை விழுங்கிற்று
உடன்போக்கை வரித்தன ஒன்றாயிருந்த கோள்கள்
எஞ்சியவை ஈர்ப்பின்றி
இங்கொன்றும் அங்கொன்றுமாக
முட்டி மோதியபடி,
பால்வெளியில் என்றோ ஒருநாள்
இன்னுமொரு பவித்திரச் சூரியன் எழும்வரை
இப்படித்தான் எல்லாமும் அங்கிங்காய்,
அந்த நாளும் வரும்..