Tuesday 20 March 2012

சாவினால் சுற்றிவளைக்கப்பட்டவர்கள்..

கடவுளும் கையினை உதற உலகமும்
கத்தியத் தீட்டிக் கையினிற் கொடுக்க
திடமாய் இருந்த வாழ்வின் விடுதலை
முடமாய்ப் போனது அன்பே..

இந்தக் கடல்தான் நாம்
எழுந்தன்று நின்ற கடல்
இந்தக் கடல்மடி தான்
எம் வாழ்வைச் சுமந்த மடி
இந்தக் கடற்கரை தான்
எம் வாழ்வின் இறுதி வரை
வந்து வழி அனுப்பி
வாய் விட்டு அழுத கரை
அன்றிந்தக் கடற்கரையில்
அடித்து வந்த அமைதி அலை
இன்றுந்தான் அடிக்கிறது
எவர் சொன்னார் இல்லையென்று..?
மா சனத்தின் மனதறுந்து வீழ்ந்து விட்ட
மண் மேலே
மயான அமைதி அலை தன் மார்பில் அடிக்கிறது
இன்றுந்தான் அடிக்கிறது
எவர் சொன்னார் இல்லையென்று..?
மயான அமைதி அலை தன் மார்பில் அடிக்கிறது..

பொன்னாய் இன்றும்
பொழிகின்ற இந் நிலவே
அந் நாளும் எம் முன்றில் நின்றதடி
இதைக் காட்டி
எத்தனை கதை கதையாய்
எமக்கெங்கள் தாய்மார்கள்
சத்துணவோடூட்டி
சதை பிடிக்க வைத்திருப்பார்
அத்தனை சதையும்
இதோ இந்த நிலா முன் தான்
பித்தளைக் குண்டறுக்கப்
பிய்ந்தறுந்து வீழ்ந்ததடி..

இப்போதும் இந் நிலவே
எம் வானில் நிற்கிறது
எடுத்தூட்டி விடுவதற்குத் தாயும்
ருசி பிடித்து
இன்னுமெனக் கேட்பதற்குக்
குழந்தைகளும் இல்லையடி
தாயும் குழந்தையுமாய்
தப்பித்து எங்கேனும்
தகரக் கொட்டைகயுள் வாழ்ந்தாலும்
நிலாக் காட்டி
ஆக்காட்டு என்று சொல்லி
ஊட்டுதற்கும் அதை ரசித்து
அன்பாகத் தலைதடவி விடுவதற்கும்
அவளிடத்தில்
தெம்பான வார்த்தை எல்லாம்
தீர்ந்தாலும் தீத்துகின்ற
அன்பொழுகும் கை கூட
அறுந்தெல்லோ போனதடி..

பதம் பார்த்துப் பறித்து உண்பதற்கு யாருமின்றி
பழமெல்லாம் கனிந்தழுகி வீழ்கிறது
மேனியிலே
இதமாய் ஏர் முனையை இழுப்பதற்குக் கைகளின்றி
எங்கும் நிலம் வெடித்துப் பிளக்கிறது
வீடழிந்து
காடெழுந்து படர்ந்து கனக்கிறது

பேச்சறுந்து
உலக வரைபடத்தில் இல்லாத நிலம் போல
ஒதுக்கப்பட்டுள்ள ஓர் நிலத்தில்
எஞ்சியுள்ள
இழக்க இனி ஏதும் இல்லாத மக்களையும்
இன்னும் ஏதுமங்கு மீந்திருந்தால்
இழக்க வைக்க
அந்நியன் மிகுந்த அவாவோடியங்குகிறான்
பன்னாட்டு நலனெம்மில்
பாய் விரித்துப் படுக்கிறது..

இத்தனை காலமாய் ஊட்டி வளர்த்த
அத்தனை உயிர்களின் ஆசையும் கனவும்
இத்தரை மீதுதான் வீழ்ந்தது உரமாய்
சத்தமே இன்றிக் கிடப்பினும் உள்ளே
சத்து நிறைந்து தான் கிடக்குது
பூமியில்
ஒவ்வொரு தேசம் விடிவதற்கென்றும்
ஒவ்வொரு காலம் உள்ளது, அன்று
எவ்வளவு இந்த உலகம் எம்மை
இறுக்கி அமுக்கி வைப்பினும் விதைகள்
அறுத்து விலங்கை உடைத்து நிமிர்ந்துமே
செழித்து வளர்ந்திடும் என்கிற
பூமியின்
அழிக்க முடியாத நியம உண்மையை
இன்னும் என் மனம் நம்புது அக்காலம்
என்னுடை வாழ்வுக் காலத்துலெழுந்தால்
எங்குதான் தேடுவேன் வார்த்தையை
அன்பே
இந்தப் பிறப்பின் பேறினைச் சொல்ல...

தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு..

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை
எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்

மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த
ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்
இந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்
தந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்
நாலு தங்கைகட்கு நீ தமையன் என்பதனால்
ஏலும் வரை யாரும் உன்னை விடுவதில்லை
இந்த முறை மட்டும் என்னை விடுங்களென
நொந்து நீ அழுது விம்மியதால் வழியின்றி

அன்றிரவே உனையனுப்பி வைத்தார்கள், மறுவாரம்
சென்ற வழித்தடத்தை சேகரித்த செய்திகளை
எங்கெல்லாம் ஏதிருக்கு உள் நுளைந்து எவ்வழியால்
அங்குள்ளே வந்து அடைந்திடலாம் என்பதனை
இங்கே நீ அனுப்பி வைத்திருந்தாய் அன்றிரவே
அங்கிருந்த உந்தன் தொடர்பறுந்து போயிற்று

நாட்கள் நாலைந்தைக் கடக்கிறது உள் வந்த
ஆட்கள் சிலருந்தன் அடையாளம் சொல்லுகிறார்
ஊருக்கும் உறவுக்கும் உரத்தென்றும் சொல்லேலா
வேராகிக் கிடக்கின்ற உன் வீரத் தியாகத்தை
உள்ளேயே நட்டு மனத்துள்ளே அழுது விட்டு
மெள்ள வெளியாலே போகையிலே உன் தந்தை

ஏன் நீங்கள் இண்டைக்குப் பொங்கேல்லை என்றபடி
தான் எமக்குக் கொண்டு வந்த பொங்கல் பழங்களினை
எங்கள் கையினிலே கொடுத்து விட்டு மெதுவாக
எங்க என்ரை பெடி எனச்சிரித்துக் கேட்கையிலே
அங்கஞ் சிதறி ஆயிரமாய்க் கண் கொண்டு
ஓங்கி வெடித்துள்ளே உலுப்பி அழுததடா!

எப்படியோ அன்றைக்கு ஏதோ சமாளித்து
அப்பா அடுத்த முறை, எனச் சொல்லி அனுப்பி வைத்தோம்
அதன் பிறகு வந்த ஆண்டுகளில் வருகின்ற
புதுவருசம், பொங்கல்,உன் பிறந்த நாட்களென
உனைப்பார்க்க வந்து அலுத்துப் போய் மனஞ்சோர்ந்து
எனக்குண்மை சொல்லுங்க தம்பி! என அழவும்

இனிமேலும் மறைக்க இயலாமல் அவர் தோளை
கனிவாக அணைத்துள்ளே சென்று சுவர் மேலே
துணிவின் தோற்றமாய்த் தொங்குகின்ற உன் படத்தை
துணிவறுந்து முகம் தூக்கிக் காட்டியதும் அதிலேயே
குந்தி இருந்து குளறி அழுத படி
எந்த நினைவுமற்று வீழ்ந்து விட்டார் எழும்பிய பின்

வார்த்தைகள் ஏதுமற்று வனாந்தரமாயிருந்த
பார்வைகள் மட்டும் நிலம் பார்க்கும் அறை விட்டு
ஏதும் சொல்லாமல் எழுந்து சென்றார் வாசல் வரை
ஏதும் பேசுதற்கு இயலாமல் நாம் தொடர்ந்தோம்
வாசலிலே வைத்து மனமிறுக்கி மெதுவாக
கூசி நா தடக்க சொன்னோம் நாம் இதை எல்லாம்

வீட்டுக்குச் சொல்லிவிட வேண்டாம் தெரிந்தாலோ
காடே கலங்கி விட அழுவார்கள் அவரழுதால்
ஊரே அறிந்துவிடும் ஒரு செய்தி ஆகி விடும்
உங்காலும் அங்காலும் தெரியவரும் எனச் சொல்ல
தலை மட்டும் ஆட்டிவிட்டுப் போனார் அதன் பிறகு
வருசம், பொங்கலுக்கு வருவதில்லை வீட்டினிலே

என்ன தான் சொல்லி இருந்தாரோ ஆனாலும்
உன் பிறந்த நாளுக்குத் தவறாமல் வந்திடுவார்
ஏதும் பேசாமல் இருந்துள்ளே அழுது விட்டு
மெதுவாக எழுந்து போய் விடுவார் இப்படியே
ஆண்டுகள் உருண்டோடிப் போயிற்று அன்றைக்கு
ஆஸ்பத்திரிக்கேதோ அலுவலுக்குப் போயிருந்தேன்

அங்கே உன் அம்மாவும் தங்கைகளும் நின்றிருந்தார்
அப்பாக்குச் சுகமில்லை என்றார்கள் நானும் போய்
என்னப்பா என்று கேட்டிடவும் கை பிடித்து
இன்னும் நான் எதையும் சொல்லேல்லை இவையளுக்கு
என்னாலும் தாங்க முடியவில்லை ஆனாலும்
உண்ணாணை எதுவும் சொல்லவில்லை தம்பி என்றார்

உலகின் சோகங்கள் எல்லாமே ஒருமித்து
உயிரின் இதயத்தை உதைப்பது போலிருந்ததடா
பெருமிதமும் சோகப் பெருஞ்சுமையும் கண்ணாலே
பீறிட்டுப் பாய்ந்து பொழிவதற்குள் சமாளித்து
கையெடுத்துக் கும்பிட்டு, தலை தடவி, தலையாட்டி
மெய் நடுங்க மெல்ல விடை பெற்றேன், மறு நாளே

அவரிறந்து போனாராம் அறிந்தோம், சா வீட்டில்
எவரும் நீ எங்கே என்பதனைக் கேட்பதற்கு
தவறியும் விடவில்லை உன் குடும்பம், போம் பொழுதில்
அவனெங்கோ தூர நிற்கின்றான் வர மாட்டான், தம்பிகளை
அவனெங்கே எனக்கேட்டு அழுத்தத்தைக் கொடுக்காதீர்
எனச் சொல்லிப் போனாராம் உன்னப்பா.., அதன் பின்னே

ஏதேதோ நடந்து போனதடா என் நண்பா
இனியேனும் சொல்லி விடுவதற்கு அங்கேயும்
உன் குடும்பத் தொடர்போ தோழர்களோ இல்லையடா!
ஒரு வேளை
உயிரோடிருந்தால் உன் அம்மாவும் தங்கைகளும்
ஒவ்வோர் முகாம்களிலும், எப்பேனும் இருந்துவிட்டு
ஒட்டப்படுகின்ற பட்டியலின் பெயர்களிலும்
உயிரை உலுக்குகின்ற ஒளிப்படங்கள் தன்னிலுமாய்
உனைத் தேடிக் கொண்டிருப்பார்கள்
இப்பொழுதும்...

நீருக்கும் புரியாத நிழலாய் வாழ்வு..

சூரியனார் கண்ணுறங்க அலைப்பாய் போட்டு
சோ சோ நீ கண்ணுறங்கு எனத்தாலாட்டும்
வீரியத்தாய் கடலன்னை வீசும் காற்றில்
விம்முகிற தெங்கிள நீர் சுமக்கும் தென்னை
வேறேது சொல் கடலை விடப் பெரிதாம் என்று
வினவிக் கேள்விக் குறியாய் தானே நிற்கும்

ஊர் தூக்கப் போர்வைக்குள் போகும் போது
ஊரிமணல் மீதெங்கள் பாதம் போகும்
நீருக்கும் புரியாத நெடிய வாழ்வில்
நிம்மதி தான் நிசப்தம் போல் பொருளே இல்லை
வெண்ணிலவு தானெமது குப்பிலாம்பு
வேறொருத்தி வீடு சென்று மீண்டும் வந்து
தன் கணவன் அணைப்பதனை உதறும் பெண் போல்
தங்க மணற் கடற்கரை தானெங்கள் மெத்தை

நடுக்கடலைத் தொடமுடியாதெனவோர் சட்டம்
நம் வயிற்றில் அடிக்கிறது மீண்டும் முன்போல்
திடுக்கிடவே சுழன்றடிக்கும் சுழிக்காற்றெம்மை
தீனாக்கி மீன்களுக்குப் போடும் மேலும்
நடக்கின்ற கடற் சமர்கள் நடுவில் நாமும்
நசி பட்டு மிதக்கின்ற கோரமுண்டு
சுடச் சுடவே மீன் குழம்பு ருசிக்க நாங்கள்
சுடச் சுடவே கடலேறிப் போவோம் நாளை

வங்கத்துத் தாளமுக்கம் வாடைக் காற்று
வலித்தெழுப்பும் அலைச் சீற்றம் மின்னற் கீற்று
தன் கூடக் கொண்டுவரும் இடி பேய்ச் சூறை
தலை தூக்கும் முதலை சுறாத் திருக்கை வால்கள்
கண் கெட்ட செல் சிதறல் என்று நூறு
காலருக்கு மத்தியிலும் பயணம் நீளும்

விடையில்லா எம் வாழ்வைச் சோகம் கவ்வ
விரிந்தெரியும் மனசோடு உடலும் சோர
உடை எல்லாம் பொத்தல்களான பிள்ளை
உடை என்று கேட்டழுத எண்ணம் வந்து
திடமேற்றும் எம் கரத்தை துடுப்பைத் தள்ள
திருக்கை சுறாக் கனவுகளை உள்ளம் காணும்

இரவிரவாய் உருக்குகின்ற உதிரச் சக்தி
ஒழுகிக் கீழ் வழிந்தோடும் வியர்வையாகி
எம் துயரைப் பார்த்தழுத கடலில் வீழ்ந்து
உப்பாகக் கரிக்கிறது..? உழைத்த மீனும்
சம்மாட்டி கைகளிலே கொட்டுப் பட்டு
சரிந்துதிரும் செதில் மட்டும் எமக்கென்றாகும்
விரிந்துள்ள இப்பெரிய கடலில் வீசும்
வெறுங்காற்றே எங்களுக்கு மீதமாகும்
பெருந்துயரம் எம் முன்னே உப்புக் காற்றாய்
பீறிடுமோர் ஊழையிலே வாழ்வு நீழும்..

திருகும் மனமும் கருகும் நானும்..

எடுத்ததற்கெல்லாம் இப்போ
இடிந்துடைந்து நெகிழ்ந்துருகும்
குழந்தைத் தனமான மனசே கேள்..!
பூவுலகில்
ஓடும் நீர் மேலே ஒரு முறைதான் மிதிக்கேலும்
வாடும் மனசெனினும் வழி நீள பழகி விடும்

காலம் சிரஞ்சீவி மலை கையில் வைத்தபடி
ஞாலம் முழுவதுமேன் நடந்தோடித் திரியுதடி..?
ஞாபக மறதிக்கும் நம் வலிக்குப் பூசுதற்கும்
தாபத்தில் துடிக்கும்
தளிர் மனசை விறைக்க வைத்து
கிடைத்ததனில் வாழப் பழக்குதற்கும்
அது கையில்
விடையென்றில்லாத
விடை மருந்தை வைத்திருக்கு
விடையிதுவா இல்லை,
வீண் பேச்சு எனச் சொன்னால்
உடை மாற்றிப் போவது போல்
உடம்பு, அதற்கென்ன
விடைத்தெரிவு வேறு கிடக்கிறது..?

என் கையில்
உன் வாழ்வுக்கெனத் தந்த
ஓர் பத்து விடைகளிலே
நன்றாகப் பார்த்து
நல்லதனைத் தேர்ந்தெடுத்தே
உன் கையிற் தந்தேன் உருப்படியாய்
இது பற்றி
என்னிடத்தில் ஏதும் கேட்காதே
விடைச் செடியின்
விதை என்றோ வந்து வீழ்ந்ததென்னில்
அதன் தன்மை
சதைப்பிடிப்பு, வளர்ச்சி, சாதுரியம்
என்பதெல்லாம்
விழும் விதையினுள்ளிருந்து
வந்தது தான் நானாக
எழும் செடியில்
ஏதும் மாற்றத்தைச் செய்யவில்லை
உழுது நீர் பாய்ச்சி
உரமிட்ட மண்ணொன்றில்
விழுந்தாய் விதையாக எங்கிருந்தோ
மண் தன்மை
செழித்தெழும்பும் செடியின்
சிற் சிறிய இயல்புகளில்
ஒழிக்கேலா உருவத்தை ஊற்றி விடும்
அது கூட
காலமோ அந்தக் கரு மண்ணோ
வடித்ததல்ல
தூலமாய் இருக்கும் துவக்கத்தின்
கையொன்றே
ஞாலப் பரப்பின் நடை முறையை
தன் விருப்பில்
காலமாய் மாற்றி வைத்துளது
மற்றபடி

விதைசெய்தல் விதைக்குள்ளே
வேண்டியதைப் பூட்டி வைத்து
பொதி செய்தல்
என்பதெல்லாமதன் வேலை
விதை வீழ
அதற்குள்ளே அழகாக ஆழச்செதுக்கியுள்ள
அவ்வவ் விதைகளகது
ஆற்றல்களுக் கேற்றபடி
அவற்றை வழி நடத்திச் செல்வதுதான்
என் வேலை
இவற்றை விட ஒன்றும் நானறியேன்
இன்னொன்று,
நிலாவைப் பார்த்தபடி
நீ நடக்க அது உந்தன்
கலாபக் காதலியாய்
கை நீட்டித் தொடர்ந்து வரும்,
என்றைக்கும் அது உந்தன்
பின்னாலே வருவதில்லை
எண்ணுகிறாய் உன் மனத்தால் அப்படியாய்
அது போல
நானும் ஒரு போதும் நகர்வதில்லை
என் மனசைக்
கோண ஒரு போதும் விடுவதில்லை
என்னிருப்பில்
இருந்த படியே தான் உங்களினை
இயக்குகிறேன்
வருந்தி நீவீர் தான் போகின்றீர்
வருகின்றீர்

காலம் நான்
என்றும் கடுகளவும் அசைவதில்லை
கருமச் சிரத்தையினால்
கண் கூட இமைப்பதில்லை
ஆதனினாலென்
முன்னால் அழுதழுது
கேள்விகளை அடுத்தடுத்துக் கேட்காதே
என்ற படி
தலை கோதிப் போனதடி காலம்
என் செய்வேன்

உலை கொதிக்கும் கேள்விகளை
எப்போதும் கேட்கின்ற
மனமே என் மனையாளே மாதரசே
உன்னுடைய, மனையாளென்கின்ற
பெயற் குணத்துக்கேற்றபடி
எனையாள நினைக்காதே ஒரு போதும்
எடுத்ததற்கும்
என் மேலே பாய்ந்து எரியாதே உன்னாலே
கேட்க முடியுமெனில்
துவக்கத்தை தொடக்கி வைத்த
அந்தத் தூலத்தின்
அலகுடைத்து கை முறுக்கி
நாலு கேட்டுக் கொள் நாள் முழுக்க
அதை விடுத்து
உள்ளேயே முடங்கிக் கிடந்த படி
முடியாமல் மூச்சிழுத்து விடுவதற்கே
முக்குகிற என்னிடமேன்..?

எத்தனை கேள்வி விசாரணைக்கென்று தான்
என்னாலே பதில் சொல்ல இயலும்..?
கண்ணைப்பார்..
கட்டிச் சிவப்பாகக் கலங்கிப் போய்க்கிடக்கிறது
விட்டு விடு என்னை
வீண் கேள்வி தினம் கேட்டு
பொட்டென்று போவதற்கு வைக்காதே
என் தோளை
கட்டிப் பிடித்தழுது கொல்லாதே
போ மனமே..
விட்டு விடு என்னை ..

Tuesday 13 March 2012

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள்..

உந்த வேடுவரின் கற்களுக்கு
எப்பேனும்
இந்த மாதிரியாய் தேன் கூடு
வரலாற்றில்
வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோ
தேனீக்கள்
நொந்து வீழ்ந்தாலும்
நூறொன்றாய்ச் செத்தாலும்
சந்து பொந்துகளில்
மறைந்திருந்த வேடரது
சங்குகளிற் போட்டுக் கலைக்காமல்
விட்டதுண்டோ..!

எந்தக்காலத்தில்
இப்படியாய்த் தேனீக்கள்
கையுயர்த்திக் கால் மடங்க
வீழ்ந்ததுண்டு..?இதன் பின்னால்
கல்லில் எரி நெருப்பை
கண் செருகும் ஓர் மருந்தை
பூசி அதை வீசும் பக்குவத்தை
எறி வீச்சை
யாசித்து யாசித்து
உலகெல்லாம் கையேந்தி
கூசாமல் ஓர் குலத்தை
அழித்தார்கள், இதையுலகு
பேசாமல் பார்த்துவிட்டு
இருந்ததுடன் அதன் மேலால்
யோசனையும் சொல்லிக்
கொடுத்ததடி, தேன் கூட்டில்

உலகினெரி கற்களெலாம்
ஒருமித்துப் பட்டதனால்
திலகம் போலிருந்த
தேன் கூடு திக்கிழந்து
தீயினெரி நாக்குகளிற்
தீய்ந்ததடி மற்றபடி
வேடுவரால் எந்தவொரு
விரல் நுனியும் வீழவில்லை
ஆனாலும்

அடைக்கதவாய் இருந்து
அர்ப்பணித்த தேனீக்கள்
விடைபெற்ற நாளிருந்து
வீட்டடையிற் கதவில்லை
வேண்டியவன் வந்துவிட்டும்
போகின்றான், தேனீக்கள்
கொடுக்கெடுத்துக் கொத்திக்
கலைக்காது என்கின்ற
தடித்திமிர் வேடனுக்கு
இருக்கட்டும், வீட்டுள்ளே

குழந்தைத் தேனீக்கள் தூங்குகிறார்
அவர் மேலே
காற்றோ அடைமழையோ
கடிக்கின்ற விஷயந்தோ
தோற்ற மன நிலையின்
துளியோ படாமலுக்கு
கீற்றுகளைக் கிழித்துப் பின்னி
ஓர் கதவை
மாற்றம் வரும் வரையில்
மறைத்திடுங்கள், அவர் வளர்ந்து
தோற்றம் பெற்றவுடன் திறப்பார்
கை உதறேல்..!

தேனாய் இருந்த வளம்
திருட்டுப் போய் விட்டாலும்
ஊனை உருக்கி
உயிர் கொடுத்து அதனுள்ளே
தேனைத் துளித்துளியாய்
தேடி வைத்த தேனீக்கள்
இறந்தும் இருளுள்ளும்
எங்கெங்கோ மறைந்தாலும்
பறந்தும் அதற்குள்ளால்
பாதைகளை ஊடறுத்த
சிறந்த மனத்தேனீக்கள்
சிலவுண்டு அவை மீண்டும்
பிறந்து வருவது போல்
வரக்கூடும்..!, ஏனென்றால்

ஏதோவோர் நூலிளையில்
இன்னும் அடை இருக்கு
பாதைகளில் எங்கும்
பரவிக் கிடக்கின்ற
விடியாத கனவில்
விழுந்திறந்த தேனீயின்
மடியாத வீர உரமுண்டு
அதன் மேலே
செடி ஒன்று வைக்க மாட்டாரோ..!
செழித்ததுவும்
விடியல் மணமுள்ள
பூப் பூவாய் வழி எங்கும்
கொடி போல பூத்துவிட மாட்டாதோ..!
அதன் வேரால்
உரமான தேனீயின்
உர மான எண்ணங்கள்
தரமான தேனாகத் தவளாதோ
பூவுக்குள்..!

விரைவாக இல்லை என்றாலும்
அக்காலம்
உருவாகும் மெதுவாக மெதுவாக
தேனீக்கள்
சிறிதாகச் சிறிதாகப் பெரிதாகி
அத்தேனை
வறிதான அடைவாயில் வார்க்கும்
பருவத்தில்
அடைமாறித் தேன் கூடாய் ஆகும்
இதற்காக

எது செய்யப் போகின்றீர் நீவீர்..?
உம் கையில்
செடியுண்டு நீருண்டு
நட்டூற்ற மனமுண்டோ..?
இடம் கொஞ்சம்
மனத்துண்டு ஆயின் இப்போதே
உரத்துக்கு மேலொன்றை
ஊன்றி விட்டுச் செல்லுங்கள்
ஆடு கடிக்காமல் அவதானமாகவுந்தான்
உரத்துக்கு மேலொன்றை
ஊன்றி விட்டுச் செல்லுங்கள்...

வாழும் நாட்களில் நீளும் நாட்கள்..

நரம்புக்குள் இழையாயும்
நாடிக்குள் துடிப்பாயும்
வரம்புடைத்து மேவிப் பாய்ந்தோடி
வழிகின்ற
வெள்ளத்துள் வெள்ளம் போல்
விழுந்தோடிப் புரண்டுருண்ட
பிள்ளை மனம் போன்ற
பெருங்காமத் தீவொன்றில்
கொள்ளை இன்பத்தைக்
குடித்தாடி வெறியுற்ற
கள்ளின் மண எண்ணக்
கன நினைவு கசிந்தின்று
மெள்ள என் நாசிக் குழிகளிலே
மீள்கிறது..

இன்று நத்தை போல்
இயங்காமற் கூட்டுக்குள்
சென்று நகராமற் கிடக்கின்ற
நெடு நாளே..!
அன்றின் இரவுகளில்
அவள் கரத்தைத் தொடுவதற்குள்
சென்று கூவென்று
சேவலினை அனுப்பி விட்டு
கன்றொன்றை விரைவாய்க்
கையினிலே தந்து விட்டு
நின்று நிதானித்து
நிசமான வாழ்க்கையினை
நன்று உறவாட
நான் நினைத்து முடிப்பதற்குள்
சென்று காற்றாகச்
சிதறிப் பறந்து விட்ட
என்றும் என் வாழ்வின்
இனிய நாட் பொழுதுகளே..
கன்றை அதன் தாயைக்
காணாமற் பிரிந்துள்ள
இன்றில் மட்டும் ஏன்
இமயம் போற் கிடக்கின்றீர்..?

ஒரு கூட்டுள் இருந்தங்கே
உறவாடும் நேரத்தில்
உருவத்தைப் போலிருந்த
ஓராண்டுக் காலத்தை
அருவத்தின் சாயை போல்
அரை நொடியில் கடத்தி விட்டு
அரை நொடியை இன்றேன் நீர்
ஆண்டாண்டாய் நீட்டுகிறீர்..?

எனக்கு அவள் சொல்லும்
எதிர்காலக் கீதையினை
நினைத்து ஏதோ நான்
நீட்டிக் கிடந்திடுவேன்
நான் சொல்லும் நாலைந்து
நாளைகளின் வார்த்தைகளில்
என் செய்வோம் எனச் சொல்லி
எப்படியோ இருந்திடுவாள்!
பட்டு அடிபட்டு
பதப்பட்ட மனசுகளோ
தட்டுத் தடுமாறித்
தங்களுக்குள் வார்த்தைகளை
கொட்டி இறைத்தேனும்
குளிர் காயும், தாபமுடன்

பேச்சுக் கேட்காமல்
பெருங் குழப்பம் செய்தபடி
தலை கீழாய் நிற்கின்ற
கருஞ்சுடரும், விறைத்தபடி
முற்கோபக்காரன் போல்
முட்டிவிட எத்தனிக்கும்
பால் மணம் மாறாமல்
படுத்தி சிணுங்குகிற
பரிதியின் கணப்புள்ள பனிவிரலும்
நாட் பிரமா..!
எப்படித்தான் தாங்கும்
இனியுமிந்தப் பிரிவுகளை
செப்படி வித்தையினிப் போதுமடா
சேர்த்து விடு..

சாகாமல் இருப்பதற்கே..

சாகாமல் இருக்கவே நான்
சத்தியமாய் எழுதுகிறேன்
வேறெதுவும் எண்ணம்
கிடையாது என்னுடைய
விற்பனத்தை விறைப்பாய்க்
காட்டுதற்கோ உள்ளாடும்
கவிஞனாய்ச் சாதல் என்ற
கனவினையோ என்னாலே
கற்பிதம் பண்ண இப்போ
முடிவதில்லை சந்தையிலே
சாப்பிடுதற்கென்று நான்
வாங்குவது மருந்தொன்றே
சதமளவும் வேறு
வாங்கி வர நினைத்ததில்லை

உடலுள்ளே ஸ்கான் காட்டும்
உட் காயப்பகுதிகளின்
இடத்துக்கு ஏற்ற மருந்திட்டும்
இன்று வரை
இன்னும் ஸ்கானுக்குத் தெரியாத
மன நோவின்
அடி காயம் இன்னும் யாருக்கும்
தெரியவில்லை
நாள் முழுக்கத் தூங்கி
நாளை மற அது உந்தன்
ஆழ் மனதை ஆட்டுமென
அவர் தந்த மருந்தாலும்

தூக்கத்தின் உள்ளே
தொடர்கின்ற கனவுகளை
தொண்ணூறு மணி நேரம்
நான் தொலைந்து போனதனை
விறைக்கும் குளிருள்ளும்
வியர்த்தூத்திக் கொட்டுவதை
வீரிட்டு நான் கதறி
விழுந்துருண்டு போவதனை
இடுப்பின் பூட்டிருந்து
எழுந்து வரும் தண்டூடு
எழுந்தலையாய் வருகின்ற
மின்சாரம் பிடரியிலே
அடித்தடித்து ஆட்ட
ஆற்றாமல் நாக்கினை நான்
அழுத்திப் பற்களிடை
கடிப்பதனை, கத்தியினால்
இழுத்தெங்கும் கிழித்து விட்டு
இளைத்துப் போயிருக்கும்
எனையறியாதென்னை, நான்
இயல்பறுந்து தண்டிக்கும்

இந்த மனக்காய வலியின்
அடிகாயம்
எந்த இடத்திற் தான்
இருக்குதென்றும் இதற்கினிமேல்
என்ன மருந்தைத் தான்
கொடுப்பதென்றும் தெரியாமல்
இந்த மருத்துவர்கள் திணறுகிறார்
என் மகனே..!
நீ தான் மருந்தென்று
நெடித்துயர்ந்து வளர்ந்துள்ள
நீள் மூஞ்சி வெள்ளைக்குப் புரியவில்லை
உன்னுடன் நான்

ஓடி விளையாடி உப்பேத்தி எறிஞ்சேந்தி
உள் வந்து பள்ளியிலே
விட்டு விட்டு ஒழிஞ்சிருந்து
உன் பள்ளி விளையாட்டை
உயிர் சுவைத்துப் பார்ப்பதற்கே
உயிரை இழுத்தின்னும்
நானிருக்கேன்,உயிர் நூலும்
அறுந்திப்போ வீழாமல்
இருப்பதற்கு எனக்கிப்போ
தெரிந்த வழி ஏதோ
எழுதுதல் தான், இதை விடவும்
தற்காலிகமாயுயிரைத்
தக்க வைக்க வேறு வழி
எனக்குத் தெரியவில்லை இப்போது

என் மகனே..!
இதற்காக மட்டும் தான்
இப்பொழுது எழுதுகிறேன்
எனக்கு வேறு வழி
தெரியவில்லை உனைச்சேர

எனக்கு வேறு வழி
தெரியவில்லை உனைச்சேர
இதற்காக மட்டும் தான்
இப்பொழுது எழுதுகிறேன்..

Tuesday 6 March 2012

மெல்லக் கொல்கின்ற நோய்..

பருவம் வந்துள்ளே
பாதையினைத் திறந்து விட
பாவாடை இதழ் மூடி
பட படப்பில் தேனூறி
இடையாடிக் கொண்டிருக்கும்
இளைய பூ ஒன்றுக்கு
உடையுள்ளே நுளைந்து
உறிஞ்சித் தேன் குடித்து
மூழ்கி அதிலாடி
முடியும் வரை உறவாடி
காதல் செய்தபடி
கரு வண்டும்..

மூங்கிலதன்
நீளுடம்பில் நிறைந்திருக்கும்
நெடுங்காதல் இசையுணர்ந்த
காற்று அதன் மீது மோதும்
அனு தினமும்
மோத அதனுள்ளே
பொங்கி எழும் காதலிசை
போக வழி தேடி ஓடும்
பொறுக்காமல்
இதயச் சுவருடைந்து வீழும்
அதனூடு
உள் நுளைந்த காற்று உறவாட
காடெங்கும்
காதலிசை வழிந்து பாயும்
சலிக்காமல்
வளைந்தும் நெளிந்தும் தலையசைத்தும்
குளைந்த படி
மோக இசை எழும்பும்
மூங்கிலதும் காதலுற
முட்டி உரசுகின்ற காற்றும்..

பார்வையதன்
எட்டும் புலக்காட்சி இறுதியிலே
வான் மார்பை
கட்டித் தழுவுகின்ற போதில்
கடற் பெண்ணின்
உள்ளெழுமோர் மன அலைதான்
ஓடி வரும் கடலலையோ!
வான், கடலின் கலவியிலே
வழிந்தோடிப் போனவைகள்
கரைகளிலே வெண் நுரையாய்க்
கிடக்கிறதே!, நாளாந்தம்
கரைகளிலே நுரைகளினைத்
தள்ளியெனை வெறுப்பேற்றும்
கடலுக்கும் சுகித்திருக்க
வானிருக்கான்..

அதிகாலை
வேலைக் கென்றவனும்
வெளிக்கிட்டுப் போனவுடன்
ஊரெல்லாம் சுற்றி வரும் பகலும்
அந்தியிலே
அந்தக் கரையிலவன் வரும் போது
மெதுவாக
ஓடிச் சென்றவனை அணைத்துச்
சிறு நொடியில்
அவனாய் இரவாக ஆகிடுவாள்..

தனைச் சுற்றி
ஆயிரம் பேரிருந்து
அன்புருகப் பார்த்தபடி
காதல் மயக்கத்தில்
கண்களினை மின்னுவதால்
நினைப்பேறித் திரிகிறது நிலவும்

இதை எல்லாம்
பார்த்துப் பெருமூச்செறிந்து
படுக்கையிலே சுருளுகையில்
அடர்ந்த இருளோடும்
ஆழ் மெளனம் குலவுவதை
உடைந்தெரியும் மனதோடு
பார்க்கின்றேன்
இப்படியாய்..

எனைச் சுற்றி ஓடுகிற
இச் சிறிய உலகத்தில்
ஏதோ ஓர் துணைக் கரத்தில்
இறுக்கிக் கை கோர்த்தபடி
எல்லாமே சுற்றி வாழ்ந்தபடி
கடக்கிறது, எனக்கு மட்டும்
நாலு சுவரும்
நண்பரற்ற பனிக்குளிரும்
இறந்தாலும் தெரியாத இருப்பிடமும்
முன்னே ஓர்
என்னோடு நான் பேசும்
கண்ணாடி, கவிதையென
இவை தவிர எனக்கொன்றும்
இல்லையடி, இப்போதில்

மெல்ல எனைக் கொல்லும்
தனிமையெனும் ஓர் பெரு நோய்
வெறுமையினை என்னுள் விதைத்து
என் உயிரின்
மூளையினை உரித்துரித்துத் தின்கிறதே
நார் நாராய்
மூளையினை உரித்துரித்துத் தின்கிறதே..

ஆவி உயிர்ப்பாக..

கைப்பிடி அளவு காற்றுச் சுழல்கிற
மெய்யெனும் மெய்யிலா
மேனியுள் அடிக்கடி
பெய்கின்ற எண்ணப் பெருமழையில்
மிதந்தபடி
கை தொட்டுக் காட்சிகள்
கடக்கிறது அருகிருந்த

புல்லில் காலையிலே
பூப்போல மலர்ந்திருந்த
வெள்ளைப் பனித்துளி இன்றி
இப்போதில்
வெறுமிலையாய்க் கிடக்கிறது புல்லும்
மதியத்தில்
எறித்த காலக் கதிரில் அது வாழ்வை
அறுத்துப் போயிருக்கும் வானுக்கு
ஒரு வேளை
கறுத்த மேகத்திரளிருந்து மீண்டுமது

தெறித்திங்கே வீழ்ந்திடலாம் ஆனாலும்
வீழுமிடம்
கறுத்த நெடுங்கடலோ கற்பாறை இடுக்குகளோ
அடர்ந்த பெருங்காடோ ஆர் அறிவார்..?
வீழுகிற
இடமறியா ஓர் நிலைதான்
இவ்வுலகின் பெரும் விதியோ..?

கடலில் வீழ்ந்திருந்தால்
கலந்ததுவாய்ப் போயிருக்கும்
கற்பாறை இடுக்கென்றால் காணேலா
காடெனினும் அதுவே..!

அடையாளம் தெரிய
அவதரித்தல் என்பதெல்லாம்
உடையோனின் கையில் தான் இருக்கிறதோ..?
இல்லையெனில்
இடையிட்ட ஏதேனும் ஏற்பாடோ..?
நாமாக
உடை மாற்றிக் கொள்வது போலொன்றோ..?
எதுவேனும்

என் கண்ணிற் பட்டிறந்த
ஏதோவோர் பனித்துளி போல்
என் வாழ்வும் இன்றெங்கோ தெரிந்து
பெயர் சொல்லும்
ஏதோவோர் பொருளாக இழுத்தோடி
இவ்வளவும்
காலங் கடத்திவிட்ட களைப்பில்
முன்னுள்ள

கண்ணாடி தன்னில்
என் கண்ணைப் பார்க்கின்றேன்
கரைதெரியா தொடுவானக் கடலும்
அதன் மேலே
பொங்கி அடிக்கின்ற நினைவலையும்
அதனூடு
கதிர் நுனிகள் எழுவதுவும் தெரிகிறது,
அதிலிருந்து
ஆட்காட்டிப் பறவை ஒன்று
எனை நோக்கிப் பறக்கிறது
புரிகிறது..

காலைப் பனித்துளியின் காலத்தை
முடிவு செய்த
காலக் கதிரின்று எனைநோக்கி வருகிறது
இமை சுருக்கிக் கண்கள்
எதையோ நினைத்திடவும்
எனையறியாமல் என்
முழந்தாளில் இருந்தபடி
அகலக் கை விரித்து
ஆறுதலாய் மூச்சிழுத்து
அண்ணாந்து நாடியினை நிமிர்த்துகிறேன்..

அடுத்த முறை
மீண்டும் அவதரித்தால் இதுபோல
அடையாளம் நிறைத்தென்னை
விழுத்திங்கே என்றபடி
அடை ஆழம்
நிறைத்தென்னை விழுத்திங்கே
என்றபடி..

நிறுத்தமற்ற பயணம்..

என்னை எதிர்த் திசையில்
இயல்பாகக் கடந்தபடி
மலை ஆறு மின்கம்பம் மரநிரைகள்
மனிதர்கள்
ஓடிப் போய்க்கொண்டே இருக்கின்றார்
ஓய்வின்றி

உயிர் வாழ்தல் என்கின்ற
ஒற்றை வரத்துக்காய்
நான் ஓடிக் கொண்டெங்கோ
போவது போல் எதிர் கடப்போர்
தாமும் போய்க் கொண்டே இருக்காரோ..

என் பயணம்
வீட்டைக் கடந்து வீதியை கடந்து
சாவைக் கடந்து சந்தியைக் கடந்து
ஊரைக் கடந்து நாட்டைக் கடந்து
உலகினில் உள்ள
பெரிய சிறைகளின் கம்பிகள் கடந்து
குறுகி அழுதும் குலைந்து சிதைந்தும்
வெறியாய் உள்ளே எரிகிற ஒன்றில்
தெரியா வீதி திசைகள் கடந்தும்
புரியா நிலைமை முன்னே புதிராய்
எரியும் போதிலும் இத்தனை காலமாய்
வந்த பயண வீதிகள் எல்லாம்
வரண்டு வெடித்துச் சிதைந்தது கண்டும்
திரும்பிப் போனால் வந்த அப்பாதை
இருந்த இடமே இல்லையாய் ஆயினும்
தொடக்கப் புள்ளியை
சுற்றும் உலகின் சுழலும் வழிகளால்
எப்படியேனும் அடைவேன் என்று
ஏதோ உள்ளே மனசு சொல்வதால்
இன்னும் பயணம் நீளுது..

என்னுடன்
ஒன்றாய்ப் பயணம் வந்தவர் இடையே
ஒவ்வொன்றாகக் கழன்று போவதும்
விதியின் வழியில் புதியோர் சில பேர்
எதுவோ டென்னோடிணைவதும்
போவதும்
ஒவ்வொரு கண்டத் தகட்டிலும்
எத்தனை எத்தனை தோழர்
என்னுடன் சேர்ந்து
ஒன்றாய்ப் பயணம் செய்தார்
இடையில்
எந்தத் தொடர்புமே இன்றி
அவரவர்
தன் தன் பாட்டிலே போயினார்
பறக்கையில்
எதிரே தாண்டும் பறவை ஒன்றை
இன்னொரு பறவை ஏதோ மொழியில்
சின்ன வார்த்தை சொல்லிப் பறப்பதாய்
எந்தன் பயணம் செல்லுது..

எத்தனை பாதை எத்தனை பயணம்
எத்தனை மனிதர் ஆயினும் இன்னும்
எந்தன் பயணம் முடியுதே இல்லை
அந்தத் தொடக்கப் புள்ளியை
அடையுமுன்
எந்தன் மூச்சு நிற்குமோ என்ற
எண்ணமும் இடையிடை எழுகுது
ஆயினும்
சொந்த விருப்பம் கேட்டா உலகைச்
சுற்றிச் சுற்றிப் பாதைகள் நீளுது..?

எந்தன் கவலை இதுதான்
இத்தனை
பட்டுச் சிதைந்து பாதியாய்க் கரைந்து
திட்டுத் திட்டாய் உறவும் பிரிந்து
சொட்டுச் சொட்டாய் இறந்து
இறுதியில்
சொட்டாதிருக்குமோர்
சொட்டு உயிருடன்
தட்டித் தடவி அந்தப் புள்ளியை
அடைந்தேன் என்று வைப்பினும்
இத்தனை
பட்டுக் கரிந்த வலியின்
பாதியில்
பாதிக்காவது ஈடாய் அந்த
எண்ணப் புள்ளியும் இருக்குமோ என்ற
எண்ணம் என்னுள் இறகாய்
முளைத்தும்
ஏதும் நிறுத்தம் இன்றிப் பயணம்
நீளம் நீளமாய் நீளுது
நீளுது...

ஊடுருவும் பேருறவு..

இரவு எப்போதுமே
உடுக்காய் ஆகி விடுகிறது
அதன் தோலாய்
என்னிதயத் தசை நார்கள்
உன்னினைவு விரல்கள் அதில்
உருள உருள நீ
அருகிருந்த காலங்களின்
வாசனை
மனசை உருவேற்றுகிறது

நல்லூர் மணி ஒலியின்
நாதம் போல்
உன் வாயின் வெண்கல நாசியில்
மேலும் கீழும் நாவு தட்ட
எழும் அதிர்வலையால்
உதடு பிரிந்தவிழ்ந்த
நேசத்தின் சொற்கள்
தூரத்திருந்தாலும்
ஒவ்வொரு மயிர்த்துளை வழியும்
ஓங்கார ஒலிப் பிழம்பாய்
ஊடுருவி உள் நெஞ்சுள்
அதிர்கிறது

என் பாசத்தைப் பலி கொடுக்கும்
உன் மடியாம் பலி பீடம்
ஆசைகள் ததும்பி வர
அவிழ்க்கும் கணச்சூடு
ஆண்டுகளை ஊடறுத்தும்
ஆயிரமாய் மைல் கடந்தும்
ஊசிக் குளிர்தன்னை
உட் குடைந்தும்
ஏகாந்த மன வெளியில்
இருக்கும் என்னுடைய
கழுத்தாங் குத்தியினில்
கண கணென்று படுகிறது

உன் நினைவின் நிழலில்
இழை எடுத்து
தன்னை வனைந்துள்ள இவ்விரவில்
நானும் ஓர் நூலாய்
உள் நுழையப் பார்க்கின்றேன்
நிசத்தோடு கலந்து விடும்
நிமிடங்கள் வருமட்டும்
நிழலோடு கலந்து விட நினைத்து
நானும் ஓர் நூலாய்
உள் நுழையப் பார்க்கின்றேன்

ஓராடை தன்னுக்குள்
உயிரிரெண்டும் ஒன்றாகி
நீராடி நனைந்த நினைவை
நிழலோடு
போராடிப் பெற்று விடப் பார்க்கின்றேன்

நின் நிழலே இரவாக
நீளிரவே உடுக்காக
அந் நிலையில் நான் மூழ்கி
ஆழிருட்டில் ஒளி கண்டு
அதற்குள்ளே நானிறங்கி ஆட
அறை முழுதும்
தும் தும் துதும் தும் தும் துதும்
தும் தும் துதும் தும்...

கால வல்லரசின் கையில்..

உன் மத்தம் தலைக்கேறி
உயிர் கொதித்து உடல் முழுதும்
என்னென்று சொல்லேலா
இதமெழவும் கவி விந்து
வீசிப் பறக்கும்
விதிக் காலவெளியினிலே
ஓசைப் படாமல் ஒன்று மட்டும்
உள்ளிறங்கி
கால வாசகப் பெண்
கருவினிலே உரு ஆகும்

மற்றைவைகள்
கால் வழிந்தும் கழுவுண்டும்
போகிறது ஆனாலோ
அவைக்கும் உயிருளது
ஆயினும் ஏன் காலப் பெண்
தெரிந்தெடுத்துச் சிலவற்றைச்
சுமக்கிறது மற்றவற்றில்
உயிர்த் துடிப்புகண்டும்
உள்ளெடுத்துச் சுமந்துயர்த்தி
வியப்பாக வெளியுலகில்
காட்டாமல் வெறுக்கிறது

தன்னிடத்தில்
முந்தி வந்து முட்டியுள்ளே
பாய்ந்தவை தான் ஊழியதன்
அந்தம் வரை செல்லும்
அசைக்கேலா உயர்வென்றும்
மற்றவைகள்
ஆயிரத்தில் ஒன்றாக
அவரவரின் விருப்புக்கு
பாயிரமாய்த் தெரியும் என்கிறதே..
அவற்றுள்ளும்
காலம் தான் பெரிதாய்க்
காட்டுகிற கவியைவிட
காத்திரமாய்ப் பல இருக்கு
ஆனாலும் ஏன் காலம்
ஒன்றிரெண்டை மட்டும்
உயர்த்திப் பிடிக்கிறது?

ஆழ்ந்த பொருட் சுவையும்
அழகான நுண்ணுணர்வும்
சீர்ந்த ஓசைத் தெளிவும்
கூருணர்வும் சேர்ந்தபடி
தேர்ந்த கவிதந்த
எத்தனையோ பேர் இன்று
மெல்லப் பின்னாலே
மிதந்து வந்த விந்தைப் போல்
அள்ளிக் கழுவுண்டு போய் விட்டார்
சுழியன்கள்
அந்தளவோ இல்லை
அதன் கீழோ எழுதிடினும்
உலகில் கவியாகத் திரிகின்றார்
ஆயின் அரசியலில்
கெட்டித்தனமுள்ள கவி விந்தா
இவ்வுலகை
தட்டித் தன் முகத்தைக் காட்டும்
இல்லையெனில்

கால வல்லரசு
திட்டமிட்டுத் தன்னுடைய
கோளப் பிராந்திய நலன்களுக்கு ஏற்றபடி
ஆளைத் தேர்ந்தெடுத்து
அடையாளம் காட்டிடுமோ..?

ஐநூறாய் ஆயிரமாய்க்
கவிஞர்கள் உலகிருந்தும்
பத்துப் பதினைந்தே
உலகத்தின் கண் முன்னே
உயரக் கொடியாகப் பறக்கின்றார்
பின்னுள்ள
ஆயிரத்துள் இருக்கும் ஐம்பது பேர்
முன்னுள்ள
பத்துப் பதினைந்தின் தோளொக்கும்
ஆனாலும்
கல்லில் பொறித்தது போல்
காலம் தான் சில பேரை
நில் என்று முன்னே
நிறுத்தி வைத்துப் போகிறது

வில்லங்கமான
கால வில்லின் நாணொலியில்
சொல்லங்கமாகச்
சுடர் மிளிருமிடம் பிடிக்க
பல்லங்கமாகப் பிரிந்து செலும்
பாதைகளில்
சொல்லுங்கள் எது தான்
சோதி மிக்க வழி என்று.?

நினைவின் கனவு நீள்கிறது..

குளிரின் அம்புக் கதிர் உடலை
குத்தித் துளைக்கா திருக்கவென

அறையுள் ஏகும் காற்று வழி
அனைத்தும் இறுக்கி அடைத்து விட்டு

பஞ்சுப் போர்வைக் குளிருக்குள்
பதுங்கிப் படுத்து உடல் மூட

நெஞ்சாங்குழியின் அடியிருந்து
நீளும் மூச்சாய் நாசி வழி

மண்ணின் மணமும் நினைவுகளும்
மதர்த்து எழுந்து அறை நிறைந்து

எங்கும் போக முடியாமல்
இறுகி அடர்ந்து என் கனவுள்

நினைவாய் ஏற மண்ணவளே
நீளும் பிரிவுக் காதலெனுள்

உன்னில் ஓடி விளையாடி
உருண்டு திரிந்து உன்னுடலின்

பொன்னின் துகள்களெனில் ஒட்ட
போற்ற வாழ்ந்த வாழ்க்கையினை

எண்ணக் கண்ணின் நரம்பெல்லாம்
இதயச் சிவப்பாய் மாறுதடி!

உன்னில் பிறந்து உனில் வளர்ந்து
ஒன்றாய்க் குலவிக் களிக்கையிலே

உந்தன் காதல் புரியவில்லை
ஒன்றும் பெரிதாய்த் தெரியவில்லை

உன்னை உரைந்து வானூர்த்தி
உயரப் பறக்கத் தொடங்கையிலே

ஜன்னல் வழியால் உனைப் பார்க்க
யாரை நோவேன்? உன் உருவம்

சின்னக் குட்டிப் பொருளாக
சிதறச் சிதற என் அன்பே

உன்னைப் பிரியும் நினைப்பெனக்கு
உறுத்திக் கொல்லத் தொடங்கிற்று

தூரத் தூரப் போகத்தான்
தொடுமோ அன்பு துளைத்திடுமோ!

பார்க்க ஏலாப் பொழுதிற்தான்
பாசம் மேலும் வளர்ந்திடுமோ!

தேசப் பளிங்கே திசை முகமே
தெவிட்டாக் காதற் தேன் குடமே

உன்னோடிருந்தே உன் மடியில்
உயிரை விடவே நான் நினைத்தேன்

என்னால் முடிந்த மட்டிலெல்லாம்
இதற்காய் முயன்று நானுழைத்தேன்

வேசைக் காலம் விளங்காமல்
விலக்கி இழுத்து எனைப் பிரித்து

ஓசை அற்ற ஒரு காட்டில்
உறையும் பனியில் எறிந்துளது

உழன்று திரிந்து இம்மண்ணில்
உயர வளர்ந்து நிமிர்ந்தாலும்

உந்தன் மடியின் ஓர் கரையில்
ஒதுங்கிச் செடியாய் வாழுகிற

சொந்தச் சுவையின் கொடுப்பனவு
வந்த இடத்தில் வருமோடி?

என்றோ ஒரு நாள் எனக்கான
இயங்கும் தளமும் உருவாக

காட்டை வானைக் கிழித்தோடி
கடலை மேவி வருவேன் நான்

போகும் போதில் சிற்சிறிதாய்
போனாய் மீண்டு வரும் போதோ

அகன்று விரிந்து அழகாக
அணைப்பாய் என்னை,ஏறுகையில்

ஓடு தளத்தின் இரு கரையும்
ஓடி என்னை எதிர்த் திசையில்

தாண்டிப் போன மரங்களெல்லாம்
மீண்டும் இறங்கி வரும் போது

கடைசிக் காட்சி தந்தமரம்
கையைக் காட்டும் முதல் நின்று

உன்னில் உரஞ்சிப் பொறி பறக்க
ஓடி இறங்கும் நாளதனை

எண்ணி எண்ணி ஒவ்வொன்றாய்
இழுத்து மூச்சை விடுகின்றேன்

கனவின் நினைவுக் கண்களுக்குள்
நினைவின் கனவு நீள்கிறது...