Tuesday 11 December 2018

அதன் பிறகு..

அதன் பிறகு
குருத்து முளை விட்டு
பிஞ்சு பிடிக்கத் தொடங்கியது
மிடுக்கான அடர் பச்சையாகி
இலை அகன்று
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பழுத்து பொன் நிறமாகி
ஒவ்வொன்றாய் அவிழ்ந்து விழ
வார்த்தைகளில் வடிக்கவொண்ணா
அத்துணை வெறுமையாய்,

ஒவ்வோர் பொற்காலத்தின் பின்னும்
இருண்ட காலமொன்று
இருந்தே தான் ஆகுமென்பதன்
வடிவந்தான் இஃதோ..?

மேனி தளதளப்பாய் மினுங்க
மீண்டும் குருத்து, அதே வெறுமை.
சுழல்வது தெரிகிறது

இப்படி எத்தனை சுழற்சிகள் போயின,
கடந்து செல்லும் ஒவ்வோர்
கணத்தின் நிழலிலும்
அதன் பிறகான இங்கிதக் குளிர்மையை
இன்றுவரை என்னால்
எண்ணவே முடிவதில்லை..

Friday 9 November 2018

கணச்சூடு..

காலத்தின் கைபட்டுக்
கரைந்துவிடாப் பொருளேதும்
ஞாலத்தில் இருக்கிறதா? காயத்தில்
கணப்பாய் இருக்கின்ற வெப்பம் போல்
உலகிலுள்ள
அத்தனை பொருள்களிலும்
அதனளவுக்கேற்ற படி
பற்றி இருக்கிறதா வெப்பம்?
ஆயின் காலமெனல்
உள்ளேறி வெப்பம் வெளியேறும்
இடைவெளியா..?
தகிக்கிற தேகம் தணிகிற போது
முடிந்து விடுவதா காலம்?

கணச்சூடா காலத்தின் அளவு கோல்..?

எதுவுமில்லை கேளடா..

ஆண்டு என்பதேதடா
அடுத்த நாளும் ஏதடா
நீண்டு செல்லும் நினைவு என்னும்
நீளவீதி தன்னிலே
நேரம் காலம் அற்று வீழ
நித்தியம் பிறந்த பின்
மாண்டுபோதல் ஏதடா
மலர்ந்து தோன்றல் ஏதடா

வாழ்க்கை என்பதேதடா
வசந்தமென்பதேதடா
பாழும் காலம் பாதி நாளை
பற்றியே எரித்த பின்
மாளும் போதும் மனதுரைக்க
மனிதரற்றுப் போன பின்
நாளை என்பதேதடா
நடக்கும் என்பதேதடா..


வைரம்..

உருவாகும் வரை
மறைவாக இருக்கும் கரிமம்
வைரமாகும்..


தான் தோன்றி..

மகன்
மீனை மட்டுமே வரைந்தான்
கடல்
அதுவாகப் பெருகியது

அவன்
இலையை மட்டுமே வரைந்தான்
வனம்
தானாக வளர்ந்தது..

தேசத்தின் விதி..

உயிர்கொடுத்து முயன்றாலும் உரியநாள் வாராமல்
பயிர் நிலத்தைப் பிளக்காது - எயிலேறி
கொடியேற்றினாலும் குறித்துள்ள நாளுக்கே
விடியுமாம் தேசத்தின் விதி


ஏன் வாழ்தல் இன்னும்..?

கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனிலும் கொடிது
அன்புக்கேங்கல்
அதனிலும் கொடிது
அதை உறவெள்ளல்
அதனிலும் கொடிது
இழக்க எதுவுமே இல்லையென்றான பின்
இன்னும் மூச்செழுந்திறங்குதல் தானே..

பலம்..

பலமே உலகத்தின் ஒழுங்கும், நீதியுமாம்
பலமே ஓரினத்தின் வரலாறும், வெற்றியுமாம்
பலமே எமக்கான சூரியனாம், எழுகதிராம்
பலமே என்றைக்கும் எம்முடைய விடுதலையாம்..


உணர்த்தல்..

பூக்கள் நிறைந்த வனத்தையும்
இலைகள் உதிர்ந்த மரத்தையும்
பசுமை செழிக்கும் நிலத்தையும்
காய்ந்து வெடித்த குளத்தையும்
பார்வைக் கதிரில் பட்டுத் தெரியும்
உலகின் அத்தனை படைப்பையும்
எப்படிப் பார்ப்பது என்கிற படிப்பை
வாழ்க்கை அனுபவம் மட்டுமே அல்ல
ஓர் சிலவேளை
ஒற்றைக் கவிதையின் ஓரிரு வரிகளே
உணர்த்தி விட்டுச் செல்லுது நண்ப..

எழுதி வைக்கப்பட்டவை..

மேட்டிலும் பள்ளத்திலும்,
எழுந்திறங்கி வளைந்து செல்லும் விரைவோட்டத்திலும்,
எதுவுமே ஆகாமல்
நதியில் நீண்டு  பயணித்த நீர்க்குமிழி
ஓர் திருப்பத்தின் மூலையில்
மென்மையாய் வீசிய குளிர் தென்றலுக்கு
படாரென உடைந்து போவதில்லையா

அப்படித்தான் எல்லாமும்..


அடைவேன்..

கையில் மின்மினி
திசைதெரியா அடரிருட் காடு
ஓர்நாள் இலக்கடைவேன்..

புல்லாங்குழல்..

உதட்டில் உதட்டைப் பொருத்தி
நாத வளைவுகளில்
எங்கெங்கு எது தேவையோ
அங்கங்கு விரலை ஊர விட்டு
உயிர் மூச்சை ஊத
உன்மத்தமாகி உருகி
அமுத இசை சொட்டி சிலிர்க்கிறது

புல்லாங்குழல்..

Wednesday 3 October 2018

காணும் கொள்ளேன்..

விடைபெறும் வேளையென்ற
விதியதன் கால்களெந்தன்
உடலினுள் யானைபோல
ஓடுது, ஓசைகூடி

செவியிலே கேட்குமிந்தச்
சீவனின் வாழ்வு நீளம்
புவியினில் அதிகமில்லை
புரியுது, இருந்துமேன் தான்

எழுகுதோ எச்ச மூச்சு?
எதுவித பயனுமற்று
நழுவுதோ நாட்கள், காலா
நடைப்பிணவாடை எந்தன்

பிடரியில் தாக்கித் தாக்கி
பிய்க்குது, போதுமிந்த
உடற்கனம் தாங்கவொண்ணா
உபாதை, காணும் கொள்ளேன்..

Thursday 24 May 2018

எழும் காலம்..

தொடர் அடிகளால்
மூச்சுத் திணறிப் போயிருக்கும்
மக்களை நோக்கி
இதில் ஏதாவதொரு விரலை தொடுமாறு
கையை நீட்டியது அந்த மிருகம்

சென்றமுறைத் தெரிவுதான்
இன்றுவரையும் எம்மை இம்சை
செய்கின்றது என்றெண்ணி
அதற்கு முதல்முறை தெரிந்த விரலை
தொடுவதற்கு எண்ணிய போது
அதனைத் தெரிந்த ஐந்தாண்டுகளும்
பட்ட பாடு
அடிவயிற்றை முறுக்கி பிழிகிறது.

ஆயின் எந்த விரலைத் தொடுவது..?

எதைத் தொடினும்
விரல்கள் பிணைக்கப்பட்டிருக்கும்
கரம் யாருடையது?
எந்த மூளையின் உத்தரவுக்கு
அந்தக் கரம் இயங்கும்?

எமக்காய் இயங்கா மூளையின் கரங்கள்
எமக்காக இராது என்கின்ற போது
இதனுள் ஒன்றை எப்படித் தேர்வது?

இதற்குள் மட்டுமே உங்கள் தேர்வென
மிருகம் மூர்க்கமாய்
மிரட்டலாம், கொல்லலாம்

இவ்வளவு நாட்களாய்
எம்முடன் இருந்தாரா
என்றறியா எவரோ திடீரென
அந்த விரல்களை முறித்து
மக்களே
இதையெலாம் தாண்டும்
காலம் இது தான்
எழுக! என்றெழுவர்
அவருள் இருந்தே
நாம் தொடும் கரங்கள் உயரும்

நடக்கும்..

Thursday 17 May 2018

இந்த நாள் - மே 18

இறுதியில்
கூட்டாகக் குதித்து இழுத்திருக்கலாம்,
தூரத்தில் வானுயர வெடித்தெழுகிறது
தீப்பிளம்பு,
ஆழ ஊறிப்போயிருந்த
ஆத்ம விசுவாசத்தின் கண்களுக்கு
அந்த ஜோதியில் கலந்து
மேலெழும் ஆன்மாக்களைத் தெரிகிறது போல,

ஏதோ ஒன்றை புரிந்து விட்டதுவாய்
எஞ்சியிருந்த நம்பிக்கையும்
தன்னை மீறித் தகர்ந்துடைந்து
தொண்டை கட்டி நா வறள
கண்களால் வடிகிறது

செந் நாக்குகளாய் மேலெந்த உயிரோர்மம்
மெல்ல மெல்லக் கரும்புகையாகி
கண்முன்னே கலைந்து சென்ற நாளிது

நாள் மறுநாளாகி
வாரம், மாதங்களாகி
ஆண்டுகள் உருண்டோடியும்
வசந்தம் வரும்வரை
ஓரிழையில் தொங்கியபடி காத்திருக்கும்
ஏதோ ஓர் பறவையின் கூடாய்
எம் கனவும், வாழ்வும்..


Thursday 10 May 2018

மயான அமைதி..

கடற்கரையின் வல்வளையத்துள்
குடும்பம் கொன்றழிக்கப்பட்ட பின்
எஞ்சிப் போனவனின் அமைதியாய்

பசிப்பது வயிற்றுக்குப் பழகிப்போன
போரின் பின் புறக்கணிக்கப்படும்
போராளியின் அமைதியாய்

காணாமல் போனவரை
காண்பதற்காய்க் காத்திருந்து
ஏக்கம் மட்டுமே எஞ்சி
இறந்து போனோரின் அமைதியாய்

எறிகணையால் சிதறிப்போன கிராமத்தினது
தபால் பெட்டியின் அமைதியாய்

இன அழிப்பு செய்யப்பட்ட
தமிழினத்தின் நிலத்தில்
உருவாக்கப் பட்டிருக்கிறது அமைதி
மயான அமைதி


Wednesday 2 May 2018

பறப்பெனும் பரவசம்..

அரவமற்ற அகண்ட பெருவெளி,
உயரமாய் ஒற்றை மரம்
காட்சி உறைந்து பேயறைந்து போயிருக்கிறது.
இதுதான் சூனியமோ என
எண்ணி விடுவதற்குள்
எங்கிருந்தோ ஓர் பறவை
சிறகை அடித்து வெளியுள் நுளைய
உறைந்திருந்த காட்சி உயிர்த்து
இருக்கிறாளா என
தெரியாமலிருந்த காதலியை
எதிர்பாராமல் கண்டுயிர்த்த பரவசமாய்
உலகின் அழகிய காட்சிகளில்
ஒன்றானது.

எல்லைகள் அற்று
எவருக்கும் பதிலுரைக்க தேவையற்று
எங்கும் பறக்க முடிகின்ற
கட்டற்ற சுதந்திரத்தின் அழகில்
எல்லாமே உயிர்த்து விடுகிறது.

பறப்பைப் போல் பேரழகு
பாரினிலே இல்லையடி..


Wednesday 18 April 2018

இப்படியாகத்தான் தேசங்கள்..

பாறை படர்ந்துளதா
ஓங்கி அடி
ஓங்கி இன்னுமோங்கி
வெட்டிரும்புக் கூர் வெம்மையேறி
கூர் நெழியும், பதறாதே
இன்னும் வெம்மையேற்றி
கூராக்கு
மீண்டும் ஓங்கியடி
உன் காலத்தில் உடைத்தல்
நிகழாமல் போகலாம்
சந்ததியிலொருவன்
கையேற்பான் அந்தக் கடமையை,

ஓர்மத் தினவில்
அவன் மீண்டும் மீண்டும் ஓங்க
ஓர் நாள் பாறை பிளக்கும்

உலகெங்கணுமே இப்படிதான் உருவானது
பாதையும், பயிருமென
நிலத்தை பண்படுத்தி
தேசங்கள்.



Monday 2 April 2018

நீ மட்டுமே அல்ல..

வெகுகாலத்தின் பின் அந்தப் பாடலை
குளியலறையில் முணுமுணுத்த போது
கண்ணாடியில் படிந்த நீராவியின் மீது
எவனோ ஓர் ஓவியன்
உருவமொன்றை வரைந்திருந்தான்
ஓ.. அது நீயே தான்

அதே போலவே
விரல்களுக்குள் விரல் கோர்த்து
நெட்டி முறிக்கிறாய்
கள்ளலைகள் பாயும் அந்தக் கண்கள்
இமைக்கரத்தை நீட்டி எனை
இறுக அணைக்கிறது,
அதே தலை சரிப்பு, சிரிப்பு
தாளம்பூ நாகம் போல்
கன்னத்தில் சுருளும் கற்றை முடி

வெம்மைப் பெருமூச்சின்
வெக்கையை நான் உணராமல் இல்லை
மீசைப் பொன்முடிகளில் கோர்த்திருக்கும்
வியர்வை மணிகள் தான் எத்துணை அழகு
அதிலிருந்து அவிழ்ந்த ஓர் முத்து
படபடப்போசை பலமாய் கேட்கும்
மார்பில் விழ எத்தனிக்கிறது

நேரமாச்சு வெளியில் வா
குறுக்கிட்ட குரல் கேட்டு திடுக்குற்று
குழாய் நீரை நிறுத்தினேன்

இரெண்டு வினாடிக்குள் கரைந்து போகிறது
இரெண்டு தசாப்தங்கள்
பாடுவது நின்று போக
கண்ணாடியைப் பார்க்கிறேன்
கரைந்து கொண்டிருப்பது நீ மட்டுமே அல்ல..


Friday 30 March 2018

காலம் - சூடு

காலத்தின் கைபட்டுக்
கரைந்துவிடாப் பொருளேதும்
ஞாலத்தில் இருக்கிறதா? காயத்தில்
கணப்பாய் இருக்கின்ற வெப்பம் போல்
உலகிலுள்ள
அத்தனை பொருள்களிலும்
அதனளவுக்கேற்ற படி
பற்றி இருக்கிறதா வெப்பம்?
ஆயின் காலமெனல்
உள்ளேறி வெப்பம் வெளியேறும்
இடைவெளியா..?
தகிக்கிற தேகம் தணிகிற போது
முடிந்து விடுவதா காலம்?

கணச்சூடா காலத்தின் அளவு கோல்..?


Tuesday 20 March 2018

எதிரிக்கான மொழி..

கையறுநிலைக்கும் கையறுந்து
சிறையை நோக்கி
குழந்தை நடக்க தொடங்கிய போது
நிலம்
எப்படிப் பிளக்காமல் இருந்தது..?

அடி வயிறெரிந்த
அப்பாவித்தனத்தின் வெம்மை
கண்களில் இருந்து அவிழ்ந்து
நிலத்தில் உருண்டபோது
எரிமலையொன்று அவ்விடத்தில்
எழாமல் இருந்ததது எங்ஙனம்..?

அவ்வாறாய் நீ எண்ணுவையாகின்
அவிந்த எரிந்தமலை இல்லாத் தெருவே
எங்கள் மண்ணில் இல்லையே நண்ப

எத்தனை ஆண்டாய்
எத்தனை தடவைகள்
எத்தனை குழந்தைகள்
எத்தனை பெற்றோர்
இப்படி நடந்து களைத்துப் போயினர்..?
ஆயின்
என்னதான் முடிவு என்கிறாய்..?

எமது மண்ணின் அரசியற் தன்மைக்கு
வேட்டி அரசியல் என்பது
அதிகம் போனால்
இழவு வீட்டில் விளக்கு திரிக்கு
கிழிக்க பயனுறும்,
விளங்காதென்பதை அறிந்தே ஆயுதம்
துலங்கி மறைந்தது.
அதுவும் மறைந்ததா அடுத்தது என்ன..?

ஆயுதம் வரைந்த தேசத்தின் மாதிரி
ஆயுதம் வரைந்த அறிவின் நிச வழி
ஆயிற்று, எங்கள் மரபணு ஆயிற்று
ஆயுதம் என்பது ஆயுதம் அல்ல
ஆயுதம் என்பதும் அரசியல் தானே

ஆகையால் நான் சொல்வது எதுவெனில்

எந்த மொழியைக் கேட்டால்
எதிரியின் செவிக்கு
கேட்கும் சக்தி கிடைக்குமோ,
எந்த மொழியைக் கேட்டால் எம்மவர்
சொந்த மண்ணின் சூட்டை உணர்வரோ,
எந்த மொழியில் பலமாய் இருந்தால்
உலகை இயக்குவோர்
வந்து எங்கள் வாசலில் நிற்பரோ
அந்த மொழியே அடுத்தும் வழியென
அறிவோமாயினும் அவற்றுள் இருந்து
விட்ட தவறுகள் திருத்தி விரைவில்
விழித்துக் கொள்ள மறந்தோமென்றால்
நடக்கப் போகும் நாசம் பார்க்குமுன்
இன்றே செத்துப் போவது நன்று..


Monday 12 March 2018

உங்களை மன்னித்து அருளலாம்..

எங்கள் கனவு சுதந்திர வாழ்வு
உங்கள் ஆசை அகண்ட வேலி

வேலியை அகட்டும் வேலைக்கான
கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு
கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்
ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்
இருந்தும்
கனவின் தினவை கண்களில் ஏந்தியோர்
சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர்,

புராணகாலப் பொழுதில் இருந்தே
உமக்கு நாம் தான்
போரும் புகைச்சலும்

கடல் தாண்டி நீவிர்
கதியால் போட வந்தவேளை
மீண்டுமொருமுறை
எங்கள் பூஞ்சோலை
உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது
அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள்
ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம்
சிதைதலின் வலி எத்தகையதென்பதின்
நினைவூட்டல் அது,

அதன் பின் காலம் சுழன்று
நிழலின் பின்னே
நிசமாய் அரசு நிகழ்ந்தது

எத்தனை உயிர்களின்
எத்துணை வலிகளின்
எத்தனை ஆண்டுக் கனவது
திடுமென
கந்தகப் புகையாய் கடற்கரையொன்றில்
கரைந்து போனதன்
காரியம் மிக்க காரணப் பொருளாய்
நீரும் இருந்தீர்,

ஐந்தொகை இன்னும்
சமப்படவில்லை

வெள்ளையன் கட்டிய
உங்களின் தேசம்
சுள்ளி சுள்ளியாய் உடையும் வேளையில்
எங்கள் குழந்தைகள்
பெரிய மனதுடன்
உங்களை மன்னித்து அருளலாம்

அதுவரை..


Tuesday 6 March 2018

வளவொன்று வாசல் இரெண்டு..

ஓர் வளவில் குடியிருந்தோம்
எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே
பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்

உங்கள் ரகசிய நடமாட்டங்களின்
காலடிச் சத்தங்கள்
எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க
எதேச்சையாகத் தான் கவனித்தோம்
விசாரிக்கத் தொடங்கிய வேளை
அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது
எமை நீர் அறுப்பதற்கு தயாரான
ஆயிரம் தடையங்கள்

கிழக்கிலும் நீரெம்மை
கிழித்துத் தொங்கவிடும்
மரணத்தின் சாக்குரல்கள்
அடிவயிற்றில் புரளத் தொடங்க
வேறுவழியெதுவும் இருக்கவில்லை

கீறோ, கிழிதலோ இன்றி
அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய்
விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம்
அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது
குலை குலையாய் எமையழித்து
அதைக் கொண்டாடும் அளவுக்கு
நிகழ்த்திக் காட்டினீர்கள்
எதிரியிடம் கூடக் காணாத வன்மமது

ஆயினும்
இப்பாலிருந்து மன்னிப்பும் இணக்கமுமென
எத்தனை முறை, எத்தனை பேர்
பலமாயிருந்த போதுகூட பல தடவை கேட்டோம்

அப்பாலிருந்தோ
ஓர் வார்த்தை, ஓர் வருத்தம்
ஒப்புக்குக் கூட ஓர் சொல்தானும்
என்றும் எழுந்ததில்லை,
இருக்கட்டும்.

எமக்கிடையே விருட்சமாகி நிற்கும்
இந்த பெருமரத்தின் விதையில்
எவரால் குரோதம் பதியம் செய்யப்பட்டது..?
எங்கள் கனிகள் உங்களுக்கும்
உங்கள் கனிகள் எங்களுக்கும்
எப்படி விடமாகிப் போனது..?

இவ்வளவின் பின்னரும் கூட
பற்றி எரிவதைப் பார்க்கிற போது
ஓடி வந்து தோள் கொடுப்போமென்று
உன்னிய போது தான் தெரிந்தது
எதிரியுடன் சேர்ந்து
எங்கள் கால்களையும்
நீங்கள் முடமாக்கி விட்டீர்கள் என்பது..