நெருப்பின் நாக்கில் கிளைத்த மொழியொன்று
மூதாதையரின் சாம்பலில் முளைத்த
வேரின் நினைவுகளை சுமக்கிறது
பழங்காலத்துக் கற்களில் செதுக்கிய
கதைகள் போல கனத்த வாழ்வை
கட்டமைத்த மக்கள் கூட்டம்
நிலத்தடி நீரோட்டமாய் பாய்ந்து
நினைவுகளை நீர்த்துளிகளாய் சுமந்து
படைப்பின் பாடல்களை
மண்ணின் வேர்களுக்கு ஊட்டுகிறது
-
அப்போதுதான்
இரும்புக் காலணிகள்
அமைதியின் பருவத்தை
வெட்டுக்கிளிகளாய் மிதித்து
வாழ்விடங்களைத் தூளாக்கி
மூச்சுக் காற்றின் நூலகங்களை எரித்து
பூந்தோட்டங்களில் சாம்பலை விதைத்தனர்
ஆனால் சாம்பலுக்கும்
தன் நெருப்பின் ஞாபகம் உண்டு
-
நிலம் திறந்து விதை முளைப்பதைப் போல
இந்த இருளில் இருந்து ஒருவன் எழுவான்
அவன் போர்க்குரல் விடியலைப் பிளக்கும்
இனத்தின் எலும்புச் சோற்றை தினவூட்டும்
அவன் பின்னே எழும்பும்
ஓர்மக் கடல்
எரியும் விண்மீன்களின் அலைபோல் பொங்கும்
அவர்களின் துடிப்பு பூமியின் எலும்புகளில் அதிரும்
அமைதியின் அடித்தளத்தை உலுக்கும்
அவர்கள் வளையும் நாணல்களாய் அல்ல
வானத்தை விழுங்கும் சுடர்களாய் எழுவார்கள்
-
பெயல் நீரை தாகம் தீர வரண்ட மண் குடிப்பதுபோல
வரலாற்றின் நீண்ட இரவில்
வீரர்களின் குருதியை நிலம் குடித்தது
அவர்கள் ஈகம் இப்போது நினைவுக்கும் அப்பால்
பிறக்காத குழந்தைகளின் எலும்புகளில் எரிகிறது
நாளைய புரட்சிக்கு நீர் பாய்ச்சுகிறது
-
வீணர்கள் கழுகுகளாய் வட்டமிடட்டும்
குளிர்காற்றின் கூர்மையோடு அவர்கள் சொற்களை வீசட்டும்
பூமியின் மையத்தில் உருகும் இரும்பாய்
இந்த மக்களின் ஊடே பாயும்
உறுதியின் மலையை அவர்களால் உடைக்க முடியாது
-
கேள்!
இதுதான் தாயகம்
வார்த்தை அல்ல, வரைபடம் அல்ல
இருளில் வழிகாட்டும் நெருப்பு
நரம்புகளில் தடித்தோடும் துடிப்பு
புயல்களில் சுமந்து செல்லும் வாக்குறுதி
இதுதான் நாம் தேர்ந்தெடுத்த பாதை
ஆயிரம் வழிகள் தேடியும்
கடலை நோக்கியோடும் நதிகள் போல
இறுதியில் இந்த உண்மை தான்
நம் குருதியில் ஓடுகிறது
-
அவன் நம்மிடையே இருந்தே வருவான்
நம் சதையின் சதை, எலும்பின் எலும்பு
நம் குரலை தன் எலும்புச் சோற்றில் சுமந்து
நம் சுமையை விலா எலும்புகளில் கட்டி
நம் உடைந்த வானங்களை
புனித சுருள்களாய் நெஞ்சில் பொதிந்து வருவான்,
அவன் அந்நிய விண்மீன்களில் இருந்து வந்த
தெய்வம் அல்ல அவன்
நம் மண்ணின் குழந்தை
அச்சம் தரும் இரவுகளில்
தோளோடு தோள் நின்றவன்
நம் கண்ணீரின் சுவையறிந்தவன்
நம் விலங்குகளின் கனம் உணர்ந்தவன்
நம் பசியின் ஆழம் அறிந்தவன்
-
ஒருநாள், நாம் எழுந்து அறிவிப்போம்
இந்த கார்முகில் நமக்கே
அதன் இடி, நம் இசை
அதன் மழை, நூற்றாண்டுகளின் தாகம் தணிப்பு
வானம் பிளந்து கொள்ளும்
விடியல் மழை அருளாய் பொழியும்
வறண்ட பூமியின் விலா எலும்புகளில் இருந்து
பசும் துளிர்கள் விழித்தெழும்
காலம் அவன் பெயரை
மலைகளின் பாறையில் செதுக்கும்
நமது வானத்திற்காக அவன் வடித்த முகில்
எதிர்ப்பின் காடுகளை கடந்து
வலிமை சேகரித்துக் கொள்ளும்
-
இந்த புயலின் கீழ் கைகோர்க்கும்போது
இடி இருளில் தீர்க்கதரிசனம் எழுதும்
மின்னல் நாளைய வரைபடங்கள் வரையும்
நாம் ஒன்றாய் மழையை குடிப்போம்
நூற்றாண்டுகளின் தூசியை
நம் நாவில், கண்களில், நினைவுகளில் இருந்து
கழுவ விடுவோம்
வயல்கள் மீண்டும் பசுமையாகும் போது
நம் கடந்த காலத்தின் வேர்கள்
நாளைய கனவுகளுக்கு தொட்டில் பின்னும் போது
நம் குழந்தைகள் நெருப்பின் மொழியில் பேசி
ஞாபகம் கொண்ட பாதங்களோடு நடனமாடும் போது
நாம் இந்த உண்மையை அறிவோம்
-
இது எப்போதுமே எழுதப்பட்டிருந்தது
காடுகளின் பச்சை மணத்தில்,
இலைகளின் நரம்புகளில்,
நம்பிக்கை துணிந்த
ஒவ்வொரு குழந்தையின் விழிகளில்
எப்போதுமே எழுதப்பட்டிருந்தது
-
இப்போது பார்
தன் ஓட்டை உடைக்கும் விதை போல
விலங்குகளை உடைக்கும் மக்கள் போல
கிழக்கு வானம் பிளக்கிறது..