Tuesday 24 April 2012

நிசம் உணர்ந்தணிந்த நெருப்பாடை..

நீறாவாய் என அறிந்தே
நெருப்பாடை தனை அணிந்தாய்
மாறாமல் நீள்கின்ற
மண்ணின் விதி இதனால்
தேறி விடும் எம்
திசையெங்கும் ஒளி சுடரும்
பாறி அடியோடு
படுகுழியில் வீழ்ந்துள்ள
விடியல், உனையெரித்தால்
வெளிக்கும் என உணர்ந்தே
வாழ்வை வசந்தத்தை
வழிந்தூறும் காதலினை
ஊழ்வினை எனச் சொல்லி
ஒதுக்கி குழந்தைகட்காய்
தகிக்கும் என் அறிந்தும்
தரித்தா யிவ்வாடையினை

என்றோ ஓர் நாளில்
எமக்கான கிழக்குதிக்கும்
அன்றைக்கு, அதன் முன்னே
ஆருயிரை நீ துறந்து
சென்றிடலாம், வெற்றிச்
சிறப்பதனைக் காண்பதன் முன்
கண் மூடி உன் காலம்
காலம் ஆயிடலாம்
என்றறிந்தும் எதற்காக
இதைத் தரித்தாய்? மகிழ்வாக
ஓடைக் குளிர்மலரின்
உணர்வொத்த ஆடைகளை
உன்னுடைய சந்ததிகள்
உடுக்கட்டும் எனத்தானே!

காலி முகத்திடலின்
கடற்கரையில், பூங்காவில்
வேலிக்கரையோரத்தில்
வீட்டிற்குப் பின் புறத்தில்
காது மடலுரசி
கன்னத்தை நனைய வைத்து
பாதி விழி செருகப்
பார்த்து இரு விரலால்
முதுகூசி தன்னை
முனகலுக்குள் கழற்றி விட்டு
எதுவோ சாதித்த
இறுமாப்பில் பல்லிளித்து
சுதி வாழ்வை உந்தனுக்கும்
சுகித்துவிடத் தெரியாதா?

வெடித்த குண்டுகளின்
வீச்சில் சிதறிப் போய்
துடித்துக் கொண்டிருக்கும்
துண்டுத் தசைகளிடை
சாதியினை மட்டும்
சரியாகப் பிரித்தெடுத்து
நாலு சொல்லு
பெண்ணியத்தை அதற்குள்
பிரட்டிக் குழைத்து விட்டு
மாற்றுக் கருத்தாளன்
என்கின்ற மறைப்புக்குள்
மாற்றானின் திட்டத்தை
மறைத்து மேட்டிமையில்
ஏட்டில் சுரக்காயென்றெழுதி
இது எங்கள்
நாட்டுக்குரிய நல்ல கறி
என்று சொல்லி
ஓட்டத் தெரியாதா
உந்தனுக்கும் வாழ்வதனை?

வாழ்வதற்கு உனக்கிங்கே
வழி இருந்தும் அதற்கான
வாழும் முறை தெரிந்தும்
வளையாமல் உன் வாழ்வை
சுளையாக இம் மண்ணின்
சுக விடிவுக்காகவென்று
பிழைக்காய் என அறிந்தும்
பெருங்கொடையாய்த் தந்து சென்றாய்

கழுத்தில் நஞ்சணிந்த சிவனாய்
களத்தில் நீ
எழுதி விட்டுச் சென்றதிங்கே
ஏராளம், சுய விருப்பில்
நெருப்பாடை தன்னை
நீயணிந்து கொள்ளவில்லை
உருப்படா நீசர்கள்
உனையணிய வைத்தார்கள்
கொம்புக்கு மண்ணெடுக்கும்
குணமில்லை உந்தனுக்கு
அம்புக்கு எதிரம்பு
அடித்தாய் அவ்வளவே

உன்னுடைய காலத்துள்
உய்யும் என எண்ணி
உன்னாலியன்ற வரை
உழைத்தாய் ஆனாலும்
தன்னுடைய காலமின்னும்
தாண்டவில்லை காலத் தீ
அடுத்து வரும் சந்ததியின்
அழகொழுகும் மேனிகளில்
உடுத்தி விட நினைக்கிறது
உன் உடையை, அவர்களுக்கும்
அதையணிந்து செல்வதற்கு
ஆசையில்லை, எதிரிகளாய்
அதையணிய வைத்தால்
அவர்களுந்தான் என்ன செய்வார்...?

No comments:

Post a Comment