Tuesday 10 April 2012

பனிப்புகை மனசுக்குள் படர்கிறது..

புகையாய்ப் பனி படர்ந்து
பூத்திருந்த காலையதன்
மிகையான குளிரலையில்
மேனிபட்டு வெடவெடக்க
சதையைக் குறைக்கவெனச்
சகித்தபடி மெதுவாக
நதிக்கரை ஓரத்தால்
நான் நடந்து கொண்டிருந்தேன்

அப்போதவிழந்த மொட்டின்
அங்கத் தளதளப்பில்
எப்போதும் தெவிட்டாத
இளவேனில் ரூபத்தில்
பனிப்புகையைக் கிழித்தபடி
பெளவியத்தின் உடல் மொழியில்
இனிக்கின்ற தென்னை
இளம்பாளைச் சிரிப்போடு
எனைக்கடந்து போனாள்
இங்கொருத்தி, அவளுடலைத்
தொட்ட பனிப்புகையின்
தோற்றம் அவளகன்று
விட்டுப் போயிடினும்
விலகாமல் என்முன்னே
அப்படியே அவளுவாய்
ஆகி, பார்த்ததெனை!

ஆசியப் பெண்களது
அழகான முகவெட்டில்
பூசிய செந்தளிரின்
பூரிப்பாய் முகம் மின்ன
கன்னத்தில்
தாளம்பூ நாகம் போல்
தவள்கின்ற முடிதன்னை
கோலமிடும் விரல்களினால்
கோர்த்து மேல் செருகி
மச்சாளின் கண்களெனை
மருட்டுகின்ற பார்வையினால்
உச்சித் துடிப்புணரவைத்து
உள் விழுங்கி், காந்த அலை
வீசும் இமைச் சாமரத்தை
வீசி எனை அழைத்தாள்
அதிலிருந்து
அடித்த அனற்காற்றில்
அடியோடென் நிகழ்காலம்
உடைந்து எனைத் தூக்கி
எறிய முன் சென்று
வாலிபத்தின் வசந்தத்
தொட்டிலிலே வீழ்ந்து விட்டேன்!.

பனிப்புகையாய் நிற்கின்ற
பருவப் பவித்திரமே
எனையும் ஓராளாக
எண்ணி இம் மண்ணில்
ஏறெடுத்துப் பார்த்த
இங்கிதமே முதல்ப் பெண்ணே!
நீ என்னை அழைத்த
நினைப்பில் இப்போது

விறைத்த குளிர் விலகி
வியர்கத் தொடங்குதடி
சிறை மீண்ட பறவைச்
சிறகு மன உடலில்
அடித்துப் பறந்தெழுந்து
ஆர்ப்பரிக்க, மிகக் கூடித்
துடித்த இதயத்துள்
தூலத் தீ பற்றுதடி!

பேரறிஞன் என்றாலும்
பெரும் வீரன் என்றாலும்
ஊரே போற்றுகிற
உத்தமனே என்றாலும்
நேரே அவர் முன்னால்
நிலைகுலைக்கும் அழகோடு
ஈர மொழி பேசும்
இளம் பெண் வந்து நின்றால்
மூழ்காதோ அவர்களுடை
முழுத்திறனும் அவள் கடலில்!
ஓர் நொடியேனும்
உள்ளே மனந்தடக்கி
பேர் பெருமை இல்லாத
பிண்டம் போலாகாரோ!
அழகான பெண் முகத்தின்
அசைவுக்கு ஓர் கப்பல்
விலகித் துறை விடுத்து
வேறு திசை போகுமென்றால்
பேரழகி நீ உன்
பெரு மூச்சுப் பட்டாலே
போர்க் கப்பற் தளமே
புறப்பட்டு வாராதோ!
கப்பல்களுக்கே இந்தக்
கதி என்றால் எண்ணிப்பார்
அப்பாவிக் கவிஞன் நான்
ஆடிவிட மாட்டேனா!

போதும் பனிப் பெண்ணே
போய் விடு நீ கலைந்து விடு
ஏதோ என்பாட்டில்
இருந்து விட்டுப் போகின்றேன்
இனியும் நீ போகாமல்
இப்படியே நின்றிருந்தால்
கனிந்து மனமுருகி
நானேதும் கதைத்து விட
வெள்ளைக்காரியோடும்
வெளிக்கிட்டான் என்றெந்தன்
உள்ளக் கமலம் ஊரில்
ஒப்பாரி வைப்பதற்குள்
பனியோடு பனியாகப்
படந்திடு நீ, மீண்டொரு நாள்

நாவறண்ட தாகத்தில்
நான் நடக்கும் பாதை ஒன்றில்
ஓடி வரும் நதி நீரில்
உன்னைக் கரைத்து விடு
தேடி அதற்குள் நான்
தீர்த்தமாய் உனை மட்டும்
அள்ளி என் கையில் எடுத்து
அப்படியே
ஆன்ம தாகத் தீ
அடங்கக் குடிக்கின்றேன்..

No comments:

Post a Comment