Wednesday 4 July 2012

பித்தனின் காதற் பிறை..

இல்லாதவற்றால் எழுந்து
இருக்கின்ற வானம் போல்
சொல்லிவிடாக் காதலதன்
சுமை நிறைந்த வார்த்தையைப் போல்
எல்லையைக் கடந்துருவாய்
எங்கோ நீ இருந்தாலும்
சில்லுக்குள் சில்லாக
சிறகடித்துச் சுற்றி என் முன்
படிமமாய் உரு ஆகிப்
படர்கின்றாய் என் மேலே

துடிப்பின்னும் தொடர்ந்தாலும்
துவண்டுவரும் நாடியதன்
பிடிப்பற்றுப் போகின்ற
பேதமுறு ஒலியைப் போல்
மெதுமெதுவாய் மெளனத்தை
மிகை நீட்டி உயிருறவு
அதுவாக அறுந்து விழ
ஆனவரை முயலுகிறாய்

எக்கி என்னுள்ளே வைத்திருக்கும் உன் நினைவு
திக்கு முக்காடித் திணறுதடி முடியாமல்

விக்கினால் தும்மினால் வேதனை விம்மினால்
அக்கறையோடு எண்ணுறாய் என்று தான்
இக்கணம் வரை நான் நம்புறேன், நம்பியே
எக்கனம் தலையிலே ஏறினும் மீண்டு நான்
சிக்கலை அறுத்துச் சினம் தணிந்தடங்குறேன்

எத்துணை தொலைவிலே நீ இருந்தாலும்
எத்துணை அருகிலே இருக்கிறாய் என்பதை
இத்துணை வார்த்தைகள் சொல்லுதோ அறிகிலேன்
செத்தெனைச் சொல்லவும் சித்தமாயிருக்கிறேன்
பித்தனின் காதற் பிறைதனை அன்பொடு
முத்தத்தோடுனில் சூட்டிட மாட்டியோ..

No comments:

Post a Comment