Tuesday 7 February 2012

விடுதலைக்கான பாடல்

செவிடு படுத்தும் ஒலியுடன்
சீறிவரும் விமானங்களை
எமக்கு முன்னரேயே
உணர்ந்து விடுகிறது
நாய்,
வாலை மடக்கிய படி
ஈனஸ்வரத்தில் அது உணர்த்தும்
அபாய அறிவிப்பின்படி
பதுங்கு குழிக்குள் பாய்வதில்
நாயை முந்தி விடுகிறோம்
நாம்.
வசிக்கிற காலம்
வீட்டினும் அதிகம் என்பதால்
எப்போதுமே அணையாது ஒளிர்கிறது
பதுங்கு குழிக்குள் ஒற்றை விள்க்கு,
வாழ்வு பற்றியதான
தொலை தூரப்பார்வை
புகை மண்டிய பதுங்குகுழி போலவே
எங்கும் இருளாக இருப்பினும்
எரிகின்ற விளக்கின்
சிறிய ஒளி போன்றதான
தென்தெட்டு நம்பிக்கைகளே
சுவாசம் முழுவதிலும்
துயர் நிறைந்திருப்பினும்
துணிவையும் நிறைத்து வைத்திருக்கிறது.

எதற்கென்றறியாது
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளுகையில்
கண்களில் பிரதிபலிக்கும்
மஞ்சள் ஒளிக்கொழுந்து
ஆழக்கிணறு தோண்டுகிற
குண்டின் அதிர்வுகளால்
விளக்கில் மட்டுமல்ல
கண்களிலும் நடுங்குகிறது,
இதனிடையே, நாம் வாங்குகின்ற
உள் மூச்சும், வெளி மூச்சும்
லயப்பிடிப்பொன்றில்
விடுதலைகான ராகமொன்றை
தயார் செய்கின்றன,

இது உலகெங்கணும்
உரத்துப்பாடப்படும் நாட்களில்
ஒருவேளை
இசைதந்த அனைவருமே
இல்லாதிருக்கலாம்....
ஆனால் இதுதான்
உலகின் விடுதலைக்கான பாடல்
உணர்வின் உன்னதத்துக்கான பாடல்.

No comments:

Post a Comment