Wednesday, 1 January 2025

நினைவின் நிலவியல்..

கால்களில் பனிக்கட்டி படிந்த இடத்தில்

இல்லாமையின் கணக்கீடுகளைத் தொகுக்கின்றேன்

ஒவ்வொரு படிகமும் இழப்பின் நிலையம்

ஒவ்வொரு மூச்சும்

பனிக்காலத்தின் மீதான எதிர்ப்பு

வயல்களில் எழும் நீராவியில்

பிழைத்தலின் வடிவியல் தன்னை எழுதுகிறது

இப்பனி ஆளும் நிலத்தில்

தனித்த வெப்பம்

-

என் ஆவணங்களைக் கேட்கின்றனர்

ஆனால் என் வீட்டின் குருமண் முற்றத்தில் ஊரும்

மழையின் மணத்தை எப்படி ஆவணப்படுத்துவேன்?

என் தாயகம் இருமச் சொற்களாய் கரைகிறது

குவாண்டம் நிச்சயமின்மை போல

இருப்பதும் இல்லாததுமாய்

இல்லாமையை மட்டுமே பிரதிபலிக்கும்

திரைகளில் சிதறிய துகள்களாய் வாழ்வு,

-

அலுவலர் கேட்கிறார், பிறந்த இடம்?

"பூவரசின் இதயம்,

பனங்கூடலுக்கிடையே உள்ள வெளி,

விடியலில் பழைய கோயில்களின் நிழல்" என்று

சொல்ல விரும்புகிறேன் ஆனால் அவர்களின்

அதிகாரப்பூர்வ வரைபடத்தில்

ஒரு புள்ளியைச் சுட்டிக்காட்டுகிறேன்.

-

காலம் அந்நிய நாணயங்களில் வர்த்தகம் செய்கிறது

கொடூரமான விகிதங்களில் பரிமாறப்படும் நினைவுகள்,

தூரத்தின் சந்தையில் தினமும் மதிப்பிழக்கும் அடையாளம்,

அந்நிய மண்ணில் பிடிவாதமான சமன்பாடு போல வளர்கிறேன்,

வீட்டின் மாறிலியைத் தேடி

என் வேர்கள் பழகிய எண்களை வரைகின்றன

-

நாடுகடத்தப்பட்ட இதயத்தைச் சுற்றி

வெளி வளைவதை ஐன்ஸ்டீன் கணக்கிடவில்லை,

தூரம் எப்படி ஏக்கத்தின்

ஒருபக்கப்பட்டையாக வளைகிறது

விடைபெறுதல் வருதலாகி மீண்டும் விடைபெறுதலாகிறது

ஒவ்வொரு பிரிவும் இயக்கவிதிகளை மீண்டும் எழுதுகிறது

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை

தென்றல் காற்றின் நினைவு.

-

நான் திரும்பி வரும்போது,

தொல்லியலாளர்கள் என் மார்புக்குழியில்

இல்லாமையின் அடுக்குகளை ஆய்வு செய்வார்கள்,

என் தனித்தமிழின் புதைபடிவங்களை

கரிம காலக்கணிப்பு செய்வார்கள்,

என் நிழலுக்கு முன்பே

ஆலமரங்கள் என்னை அடையாளம் காணும்

அவற்றின் வளையங்களில்

என் பிரிவின் ஆண்டுக்குறிப்புகள்,

அவற்றின் இலைகள்

செந்தமிழில் சலசலக்கின்றன.

-

கனவுகளில், சேர்தலின் புதிய வழிமுறைகளை

குறியீடாக்குகிறேன்,

நினைவின் மீள்செயல்பாடுகள்

அடையாளத்தின் முடிவில்லா சுழல்களை உருவாக்குகின்றன

என் முகம் ஆயிரம் கண்ணாடிகளில் சிதறுகிறது

-

என் இதயத்துடிப்புக்கும்

செந்நிலப்புலங்களின் துடிப்புக்கும்

இடையேயுள்ள தூரம் அவ்வெண் ஆகட்டும்

நாடுகடத்தலின் வளிமண்டலத்தை

வெட்டிச்செல்லும் குயிற்சிறகின் பாதை

இவ்வெண் ஆகட்டும்

வீட்டிற்கான தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்

நாளையின் சமன்பாட்டில்

பனை விதை போலப் புதைந்துள்ள மறை எண்

தமிழ் யாப்பின் பண்டைய கணிதவழி

முளைக்கக் காத்திருக்கிறது..